[பொங்கல் மலர் கட்டுரைகள்] - தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி முன்னேற்றமா? ஏமாற்றமா?
க. அருணபாரதி
கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பணிகள் சார்ந்த துறைகளில் இந்தியாவும் தமிழகமும் முன்னேறி வருவதாகவும், இந்த வளர்ச்சி நீடித்தால் இந்தியா வல்லரசாகிவிடும் என்றும், தமிழகம் வளமடைந்துவிடும் என்றும் உலகமயத்தின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டு வரும் இந்திய ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். இதனை உலகமயத்தின் பாதுகாப்பு அரண்களாக உள்ள ஏகாதிபத்திய அரசுகளும் கூறுகின்றன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருள் துறையில் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் மாற்றங்கள் முதன்மையாகப் பயன்பட்டது பன்னாட்டு பணமுதலைகளுக்குத் தான் என்பது வெட்ட வெளிச்சம். அதன் முன்னேற்றத்தால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அடித்தட்டு மக்களுக்கு பயன் இல்லை.
முதலாளியம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் என்று மார்க்சிய ஆசான்கள் வரையறுத்துள்ளதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போதைய உலக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. உள்நாட்டு முதலாளிகள் லாபவெறி தலைக்கேறி மற்ற நாடுகளையும் கொள்ளையிடுவதற்குத் தோதாக உருவாக்கப்பட்ட உலகமயக் கொள்கை அதனை நிறைவேற்றியும் வருகின்றது.
கணினி மென்பொருட்களின் தோற்றம்
1990 களில் உலகமய பொருளாதாரக் கொள்கைகள் அமலான பொழுது, பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை மற்ற நாடுகளில் விரிவு படுத்துகிறோம் என்ற பெயரில் தீவிரமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. இந்த கால கட்டங்களில் உள்நாட்டில் செயல்பட்டு வந்த பல்வேறு நிறுவனங்கள் பெரும் மூலதனத்தோடு வந்த பன்னாட்டு நிறுவனங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி வீழ்ந்தன. இவ்வாறு அயல் நாடுகளுக்கு சென்று அந்நாட்டு நிறுவனங்களை தனதாக்கிக் கொண்டு அல்லது அழித்து விடும் அளவிற்கு பன்னாட்டு நிறுவனங்கள் சக்தியுடன் வளர்ந்தன. லாபத்தை மட்டுமே குறியாக வைத்து நடத்தபடும் இது போன்ற நிறுவனங்கள் மனிதர்களின் உழைப்பை விட பல மடங்கு உழைக்கும் கணினிகளை அலுவலக பயன்பாட்டுக்கு கொண்டு வந்தன. தொடர்ந்து 8 மணி நேரத்துக்கு மேல் பணியாளர்களின் உழைப்பை சுரண்ட முடியாமல் திணறிய முதலாளிகளுக்கு,கட்டுப்பாடின்றி உழைக்கக்கூடிய கணினி உள்ளிட்ட கருவிகள் வரப்பிரசாதமாய் அமைந்தன. பின்னர் கணினி உள்ளிட்ட மின்னனுக் கருவிகளுக்கான தேவைகள் பணிகளின் தரநிர்ணயம் என்ற பெயரில் வலிந்து உலகமயக் கொள்கைகளால் வகுக்கப்பட்டன.
பெரும்பாலும், அலுவலக பணிகளை எளிமைபடுத்தவும் பணியின் வேகத்தையும் நேரத்தையும் அதிகரித்து மேலும் லாபம் சம்பாதிக்கவுமே கணினிகள் பயன்படுத்தப்பட்டன. அலுவலக பணிகளை கண்காணிக்கவும், மேலாண்மை செய்திடவும் கணினி மென்பொருட்கள் (Computer Softwares) எழுதப்பட்டன. இவ்வாறு எழுதப்படும் மென்பொருட்களை பல நிறுவனங்கள் லாப நோக்கோடு பல்வெறு பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்தன. இவ்வாறு தான் கணினி மென்பொருள் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய கணினி நிறுவனங்கள் வழங்கும் மென்பொருட்கள் மட்டுமே உபயோகிக்கும் அடிமைக் கணினிகளாக மாற்றிவிட்டன. இதனை எதிர்கொள்ள மற்ற போட்டி நிறுவனங்கள் ''ஓபன் சோர்ஸ்'' எனப்படும் திறந்த மென்பொருட்களை இலவசமாகக் கூட வெளியிட்டன.
கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த பணிகள் அறிவியல் வளர்ச்சியின் முன்னேற்றம் தான் எனினும் அவற்றை உலகமய சக்திகள் தனதாக்கிக் கொண்டது இவ்விதமே. தனது தேவைகளுக்கு ஏற்ற வகையில் இது போன்ற மென்பொருட்களை உருவாக்கும் நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்கள் பின்னர் தாமே உருவாக்கிக் கொண்டன. இது போன்ற மென்பொருட்களை தயாரித்து அவற்றை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் கிடைக்கும் அந்நிய செலவாணி ஒன்று தான் இத்துறையின் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருமானமாகும். அந்த வருமானத்தைக் கூட மத்திய அரசு தனக்கு வைத்துக் கொண்டு செலவிடுமே ஒழிய தமிழகத்திற்கு தருவதில்லை.
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்
தமிழகத்திற்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வருவதற்குக் காரணம், நாட்டிலேயே ஆண்டுதோறும் அதிக பட்டதாரிகளை நாம் உருவாக்குகிறோம் என்பது மட்டுமல்ல, இங்கு தான் தன் இனத்தையே விற்று வயிறு வளர்க்கும் இனவிற்பனையாளர்களான தேர்தல் அரசியல்வாதிகள் ஏராளம் என்பதும் கூட ஏனெனில், மற்ற துறைகளில் வேலை பார்க்கும் பணியாளர்களை போல தகவல் தொழில்நுட்ப துறை பணியாளர்கள் செயல்படுவதில்லை. பன்னனாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் யாவும் அதிக சம்பளம் கொடுத்து பணியாளர்களை தம் அடிமைகளாகவே வைத்துக் கொள்கின்றன. தனது நாட்டில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் புகுந்து லாபம் சம்பாதித்து ஆக்கிரமிப்பில் ஈடுபடும் பெரும்பாலான பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் லாபத்தின் சிறு பகுதியைக் கொண்டே கை நிறைய சம்பளம் கொடுப்பதால், தங்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் கூட இவர்கள் வெளிப்படையாக சொல்ல விருப்பப்படாமல் இருக்கிறார்கள். மற்ற துறைகளை போல முதலாளிகளை எதிர்த்து போரிடும் அளவிற்கு போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்க படையாக திரள இவர்களுக்கு மனமில்லை. தங்களை முதலாளிகளுடன் இணைத்துக் கொள்ளவே இவர்கள் விரும்புகிறார்கள். இவர்கள் மேட்டிமை உழைப்பாளர்கள் ஆவர்.
பெரும்பாலான தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் உலகமயத்தின் பிரச்சாரகர்களாகவும், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய சக்திகளின் அடிவருடிகளாகவும் இருக்கவே விருப்பப்படுகிறார்கள். இத்துறையில் இளைஞர்களை அதிகம் ஈடுபடுத்துவதன் மூலம் அரசியலில் தமக்கு எதிராக இளைஞர்கள் செயல்பட மாட்டார்கள் என்பதும் கூட அரசியல்கட்சிகள் இந்நிறுவனங்களை தொழில் தொடங்க அழைப்பதற்கு காரணமாக இருக்கலாம்.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வேலை பார்க்கும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் நன்கு கவனம் செலுத்தி மேம்படுத்தாமல், அதை விட குறைவான பணியாளர்களையும் வேலைவாய்ப்பு விகிதத்தையும் கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, மற்ற துறைகளை முந்திக் கொண்டு இலவச நிலம், பணியாளர்களுக்கென சொகுசு பேருந்துகள் உள்ளிட்ட பல சலுகைகளை தாராளமாக வழங்குகிறது ஆளும் தமிழக அரசு. இதன் காரணமாக மற்ற துறைகளின் மீது இளைஞர்களுக்கு இருந்த ஈர்ப்பு குறைந்தும் வருகிறது. ''அறிவியல் துறையில் இளைஞர்களுக்கு இருந்த ஆர்வத்தை தகவல் தொழில்நுட்பத்துறை மங்க செய்துவிட்டது. இதன் காரணமாக அடிப்படை அறிவியலில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் பாதிப்படையும்'' என்றும் பெங்களூரில் நடந்த நானோ 2007 அறிவியல் மாநாட்டில் அறிவியல் அறிஞர் சி.என்.ஆர்.ராவ் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார். ''படித்த இளைஞர்கள் அனைவரும் தகவல் தொழில்நுட்பப் பணிகளை நோக்கியே பயணித்தால் இன்னும் சில ஆண்டுகளில் இந்நாடு அடிமை நாடாகிவிடும்'' என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னால் துணை வேந்தர் முனைவர் அனந்தகிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் இதனை தெளிவாகவேக் குறிப்பிட்டார்.
வேலைவாய்ப்பும் தகவல் தொழில்நுட்பத்துறையும்
கணிப்பொறி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் என்பவை தற்பொழுது படித்த இளைஞர்கள் பெரும்பாலானவர்கள் பணி புரிய விரும்பும் பணியாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அதில் கொடுக்கப்படும் அதிகப்படியான சம்பளமாகும். இரவு நேரத்தில் பணியை முடித்து விட்டு திரும்பும் பெண் கணினி ஊழியர்கள் சிலர் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் பெங்களூரிலும், புனேவிலும் நடந்தன. கணினி மென்பொருளாளர்களை குறி வைத்து திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களும் கூட நடந்தன. இவையெல்லாம் கணினி மென்பொருளாளர்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஏற்றத் தாழ்வுகளின் விளைவாகவும் நடக்கிறது. பி.பி.ஓ நிறுவனங்களுக்கு பெரும்பாலானவர்கள் செல்வதை தவிர்த்தே வருகின்றனர்.
மிக சொற்ப அளவே இத்துறையில் பணியிடங்கள் உள்ளன என்றாலும் இப்பணிக்காக தமிழகத்தின் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு வந்து வேலை தேடும் இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனை கணக்கில் கொண்டு அவர்களை கணினி நிறுவனங்களில் பணியமவர்த்துவதாக சொல்லி பணம் பறிக்கும் ''கன்சல்டன்சி'' நிறுவனங்களும், மோசடி நபர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். இது போன்ற மோசடிகளாலும், மன விரக்திகளாலும் கிராமப்புற இளைஞர்கள் தவறான வழிகளில் ஈடுபடுவதும் நடக்கிறது. தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் அதிகம் பணம் சம்பாதிப்பதால் மிக ஆடம்பரமாக செலவு செய்வதும் அதனால் விலைவாசி உயர்வதாலும், இத்துறை பணியாளர்கள் மீது அடித்தட்டு மக்களுக்கு கடும் வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக அவுட்லுக் வார ஏடு எடுத்த ஆய்வு ஒன்று சொல்கிறது. (அவுட்லுக் இந்தியா திசம்பர் 2007).
வெளியார் ஆதிக்கம்
தமிழகத்தில் தற்பொழுது செயல்பட்டு வரும் தகவலை தொழில்நுட்ப பணிகளில் பெரும்பாலானவை பி.பி.ஓ எனப்படும் வெளிப்பணியேற்ற நிறுவனங்கள் தாம். வெளிப்பணியேற்றம் எனப்படும் பி.பி.ஓ பணிகள் நடைபெறும் நிறுவனங்கள் என்பவை அயல் நாட்டு வேலைகளை நம் நாட்டில் குறைந்த தொகைக்கு செய்திட நிறுவப்பட்ட மையங்களாகும். (தற்பொழுது இது போன்ற வேலைகளை வேறு நாடுகளுக்கு அனுப்புவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறி அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் அந்தந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் போராடியும் வருகின்றனர்) இதன் நிறுவனர் அயல் நாட்டில் எங்கோ ஒரு மூலையில் இருப்பார். இங்கிருப்பவர் ஒர் மேற்பார்வையாளராக இருந்து இங்கு நடைபெறும் பணிகளை கவனித்து அவருக்கு தெரிவிப்பார். இது போன்ற கட்டளையிடும் பணிகளை அயல் நாட்டு அதிகாரிகளே அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். எஞ்சியிருக்கும் மேற்பார்வையாளர் பணிகளிலும் மண்ணின் மைந்தர்களாகிய தமிழர்கள் இல்லை என்பதும் கவனத்துக்குரிய செய்தியாகும். பெரும்பாலும் இம்மேற்பாவையாளர் பணிகளில், வெளி மாநிலத்தவர்களையும் மற்றும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் மேல்தட்டு வர்க்க தமிழர்கள் சிலரையுமே காண முடிகிறது. இந்நிலை, தமிழகத்தில் மட்டுமல்லாமல் பெங்களூர் உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் நீடிக்கிறது.
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் அந்தந்த பகுதி மக்களுக்கு வேலை வழங்கப்படும் என்ற தமிழக அரசின் முழக்கம் அந்நிறுவனங்களால் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. என்பதனை தமிழக அரசே உணர்ந்திருக்கிறது. அதனால் தான் கடந்த 16 அக்டோபர் 2007 அன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கினால் மேலும் சலுகைகள் தருவதாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்தார். அவரது வேண்டுகோளை ஒரு நிறுவனமும் மதித்ததாகத் தெரியவில்லை. அரசையே விலை பேச துடிக்கும் நிறுவனங்களிடம் பேரம் பேசவா முடியும்? மக்களை ஏமாற்ற அரசியல் அதிகாரத்தின் வழியாகவும் பிரச்சாரம் செய்யும் தேர்தல் அரசியல்வாதிகளை மக்கள் இதன் மூலம் இனங்கண்டு கொள்ள வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலானவை எந்த மண்ணில் அவை காலூன்றி நிற்கின்றனவோ அந்த மண்ணின் மக்களுக்கு வேலை அளிப்பதை விரும்பவில்லை என்ற கொள்கையை மறைமுகமாக கையாளுகின்றன. தன் மொழி, பண்பாடு, வாழ்விடம் என அனைத்தையும் விட்டுவிட்டு தேசிய இன உணர்வை புறந்தள்ளி வாழ்பவர்களையே பணியில் அமர்த்துவதன் மூலம் எளிதில் அவர்களை உலகமய பண்பாட்டிற்கு எளிதில் இழுத்து சென்றிட முடியும் என அந்நிறுவனங்கள் நம்புகின்றன.
பணியமர்வின் தரம்
மனிதர்களின் தனி மனித வாழ்வைவிட நிறுவனத்தின் லாபமே முக்கியம் என செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள், பணி அமர்த்துவதில் காட்டும் நடைமுறைகள் ஆராய்வதற்குரியவை. பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் அதன் நிறுவனங்களுக்கு பணியாற்ற நிரந்தர பணியாளரை பணியமர்த்துவதில்லை. முதலில், அவர்களை பயிற்சியாளராகப் பணியமர்த்திவிட்டு பின்னர் துரத்தும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. ஒருவருக்கு பணி நிரந்தரம் என்பது அவரது வாழ்வாதாரத்தை உறுதி செய்வதாகும். அவ்வாறு நிரந்தர பணியில் அமர்த்தப்படும் பணியாளருக்கு குறிப்பிட்ட தொகையை போனசாக அளிக்கவும், குறிப்பிட்ட நாட்கள் விடுமுறை வழங்கவும். வேலையிலிருந்து நீக்குமுன் அவரது கருத்து கேட்கவும், அவரது வயதான காலத்தில் உதவும் ஈட்டுத் தொகைகள் வழங்கவும் மற்ற சலுகைகளும் உரிமைகளாக உள்ளன. அதனை வலியுறுத்தி தொழிலாளர் நல சட்டங்களும் உள்ளன. ஆனால், வாடகை பணியாராக பணியாற்றும் ஊழியர்களுக்கோ இச்சட்டங்களும் உரிமைகளும் பொருந்தா. அதனை கருத்தில் கொண்டு பெரும்பாலான நிறுவனங்கள், பணியாளர்களை ஒப்பந்த ஊழியர்களாகவோ அல்லது பயிற்சி ஊழியர்களாகவோ பணியமர்த்துவதை விரும்புகின்றன. இம்முறையில் பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு கிடைக்கும் சட்டப்படியான உரிமைகள் குறைவு என்பதாலும், இவர்களை எப்பொழுது வேண்டுமானாலும் பணியிலிருந்து நீக்கிக் கொள்ளலாம் என்கிறபடியால் இவர்களை போன்ற ஊழியர்களையே இந்நிறுவனங்கள் பெரிதும் விரும்புகின்றன.
இம்முறையை அமர்த்து - துரத்து (Hire and Fire) என்கிற புதிய பணியமர்வு முறையாக அந்நிறுவனங்கள் தாமே உருவாக்கி வைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து மத்திய மாநில அரசுகள் வாய் திறக்காமலும், கண்டும் காணாததுமாகவே உள்ளன. இத்துறையில் நடைபெறும். இது போன்ற உரிமை ஏய்ப்பு நடவடிக்கைகளை தட்டிக் கேட்டு போராடிட தொழிற்சங்கம் அமைப்பும் இதில் இல்லை. மேற்குவங்க மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது சார்பு அமைப்பான சி.ஐ.டி.யுவின் முயற்சியால் கணினி பணியாளர்களுக்கென தொழிற்சங்கம் ஒன்றை அமைத்தது. ஆனால், அது போராடும் அமைப்பு இல்லை என்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் சங்கம் (அசோசியேசன்) என்றும் அறிவித்துக் கொண்டது. தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் குழந்தைகளை பராமரிப்பதிலும், அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்களுக்கு விடை காண்பதிலும் தான் அந்த ''சங்கம்'' செயல்படும் என்றும் அதன் தலைவர் மேலும் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போலி உலகமய எதிர்ப்பு அரசியலும், மற்ற முதலாளியக் கட்சிகளை போலவே தாங்களும் என அவர்கள் சொல்லாமலேயே அறித்தும் கொண்டனர்.
பணியின் தரமும் பணியாளர்களின் பாதிப்புகளும்
தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணிப்பொறி சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு நேரும் உள் பாதிப்புகள் பற்றி பல ஆண்டுகளுக்கு பின் தான் உறுதியான தகவல்கள் தர முடியும் என்று ஆய்வுகள் கூறினாலும், சில ஆய்வுகள் அதன் வெள்ளோட்டமாக வெளிவந்து கொண்டுள்ளன. வெளிப்பணித்துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு, மன உளைச்சல் உள்ளிட்ட பாதிப்புகள், குடும்பத்தில் இருந்து விலகி நிற்கும்படியான மன பாதிப்புகள், சிறு வயதிலேயே இதயம் பலவீனமாவதற்கான வாய்ப்புகள், தூக்கமின்மை, போன்றவை இது வரை வெளிவந்துள்ள ஆய்வுகளில் வெளிப்பட்டவைகளாகும். கணினி மென்பொருளாளர்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படும் சென்னையிலும் பெங்களூரிலும் பணியில் மன அழுத்தம் காரணமாக தற்கொலையில் ஈடுபடுவது, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியிலிருக்கும் திருமணமான தம்பதிகளிடம் விவாகரத்து அதிகரிப்பது போன்றவையும் இதில் அடஙகும்.
இஸ்ரேலே சேர்ந்த டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணர் ஒருவர் இணையதளத்தை தொடர்ந்து உபயோகிப்பதால் மன உளைச்சல் ஏற்படும் என்றும் இதுவும் ஒர் அடிமை நோய் தான் என்றும் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 10 சதவீகிதம் பேர் இணையதளத்திற்கு அடிமைகளாக உள்ளனர் என்றும் தம் ஆய்வில் தெரிவித்திருக்கிறார். இது போன்ற மன உளைச்சல் மற்றும் அடிமை மனநிலைக்கு செல்லும் இளைஞர்கள், பலர் போதை மருந்து உட்கொள்வது உள்ளிட்ட தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களே அதன் உலகமய பண்பாட்டை வளர்க்க அது போன்ற போதை விருந்துகள் கொடுப்பதும், கடந்த காலங்களில் அம்பலமானது. அது மட்டுமில்லாமல் இணையதளங்களில் விளம்பரம் கொடுத்து விபச்சாரம் செய்யும் குழுக்கள் அதிகம் பணம் சம்பாதிக்கும் கணினி மென்பொருளாளர்கள் பலரை குறிவைத்து ஏமாற்றியதும் அது குறித்து புகார் செய்ய தயங்கியதால் பல லட்சங்களை மோசடிக் கும்பல்கள் சுருட்டியதும் பின்னர் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
பணமிருந்தால் எதுவும் செய்யலாம் என்ற தவறான கோட்பாட்டிற்கு இளைஞர்களை இத்துறை எளிதில் அழைத்துச் செல்கிறது. ஆண்டுதோறும் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் உணவகங்களிலும், தங்கும் விடுதிகளிலும் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் போதை மருந்து உட்கொள்வது, ஆபாச நடனமிடுவது உள்ளிட்ட கலாச்சார žரழிவுகளிலும் ஈடுபடுவதும் அதிகரித்துக் கொண்டுள்ளது. இவ்வருடத்தின் தொடக்கத்தில் கூட இது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்ட வடநாட்டு கணினி மென்பொறியாளர் ஒருவர் சென்னை கேளிக்கை விடுதியொன்றில் போதையில் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் போது மேடை சரிந்ததால் பலியானார் என்பதும் நினைவிருக்கலாம்.
8 மணி நேர வேலைக் கோட்பாடு இத்துறையில் இல்லாதிருப்பதும் இவற்றுக்கெல்லாம் ஓர் காரணமாகும். இந்நிறுவனங்களுக்கு பொருந்தக் கூடிய தொழிலாளர் நல சட்டங்களை சரியாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்கவும், அயல் பண்பாட்டை புகுத்தும் நடிவடிக்கைகளில் இந்நிறுவனங்கள் ஈடுபட்டால் அதனை தடுத்திடவும் தண்டிக்கவும் அரசு வழிவகை செய்திட வேண்டும்.
மாற்றங்களை எதிர் நோக்கி....
மக்களுக்கான அரசமைந்தால் தான் உலகமயத்தின் பிடியிலிருந்து முழுமையாக இத்துறையை விடுவிக்க முடியும். தற்பொழுது ஒருவர் செய்யும் வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை பலருக்கு பகிர்ந்தளித்து புதிய வேலை வாய்ப்புகளை அரசே இத்துறையில் உருவாக்கலாம். மண்ணின் மக்களுக்கே வேலை, இடஒதுக்கீடு, உள்ளிட்ட மக்களுக்கான வேலை, இடஒதுக்கீடு உள்ளிட்ட மக்களுக்கான சலுகைகளை வழங்க முடியும். ஆனால், இவற்றை எல்லாம் செய்ய வேண்டிய அரசு மக்களோடு இல்லாமல் உலகமயத்தின் பிடியில் சிக்கி கொண்டிருக்கிறது. உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் சொல்லும் கட்டளைகளுக்கு தலையாட்டும் பொம்மைகளாகவே உள்ள அரசுகளால் இப்பணிகளை செய்திடவே முடியாது. பல்வேறு வளர்ச்சிகளை தகவல் தொழில்நுட்பத்துறையால் நிகழ்த்தினோம் என்று பிரச்சாரம் செய்யும் எந்த அரசும் விவசாயிகளின் தற்கொலையை ஏன் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி தடுத்து நிறுத்தவில்லை? போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமல் விழித்துக் கொண்டுள்ளது. ஆடம்பர பொருட்களின் விலை ஏறுவதாலும் குறைவதாலும் கவலைபடுபவர்களை விட அரிசி, பருப்பு, உள்ளிட்ட அன்றாட அத்தியாவசிய பொருட்களில் விலை ஏறுவதால் அவதிப்படும் மக்களே இச்சமூகத்தில் அதிகம். அது குறித்து அக்கறை படாமல் சிறுபான்மைக் கூட்டத்தின் வளர்ச்சியை பெரும்பான்மைக் கூட்டத்தின் வளர்ச்சியாக பிரச்சாரம் செய்வது மோசடியாகும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய வருமானவரி துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார். ''வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கும் மற்ற சாரார் மக்களுக்கு இருக்கும் வருமானவரி இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன் தாக்கம் எதிர்காலத்தில் ஓர் சமுதாயப் புரட்சியிலும் முடியலாம்'' எனறார். அவர் கூறியது உண்மை தான். மக்களுக்குள் ஏற்படும் வர்க்க பிரிவினையை அவர் தம் பாணியில் குறிப்பிட்டார். அவர் சொன்ன சமுதாய புரட்சி நிச்சயம் நடக்கும். மண்ணின் மக்கள் வேலை கேட்பதையும், மண்ணின் மக்கள் அதிகாரத்தை நோக்கி கேள்விக் கேட்பதையும் சம்பவங்களாக குறிப்பிட முடியாது. அவை வரலாறாக பதியப்படும். அந்த வரலாற்றை நோக்கிய பாதையில் நாம் பயணிக்க வேண்டும். அதன் தொடக்கமும் முடிவும் மண்ணின் மக்களாகிய தமிழர்களிடமே உள்ளது.
Leave a Comment