கத்தி பட ஒலிக்குறுந்தகடு வெளியீட்டுக்கு எதிர்ப்பு! 350க்கும் மேற்பட்டோர் கைது!
கத்தி பட ஒலிக்குறுந்தகடு வெளியீட்டுக்கு எதிர்ப்பு! 350க்கும் மேற்பட்டோர் கைது!
இலங்கை மீது பொருளியல் தடை விதிக்க வேண்டுமென்ற தமிழக அரசின் சட்டப்பேரவைத் தீர்மானத்திற்கு எதிராக, தமிழகத்தில் திரைத்துறையிலேயே இராசபக்சே உறவினர்கள் முதலீட்டுடன் தயாரிக்கப்படும் 'கத்தி' திரைப்படத்தின், ஒலிக்குறுந்தகடு வெளியீட்டு விழாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழின உணர்வாளர்கள் 350க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிங்கள இனவெறி அதிபர் ராசபக்சேவின் கூட்டாளியான லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தக் கத்தி திரைப்படத்திற்கு எதிராக, நேற்று(18.09.2014) மாலை 5 மணியளவில், தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில், எம்.ஆர்.சி. நகர் லீலா பேலஸ் உணவகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி.வேல்முருகன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புரட்சி பாரதம் தலைவர் திரு. பூவை ஜெகன் மூர்த்தி, தமிழக மீனவர் கழகத் தலைவர் திரு. கோ.சி.மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன், தமிழர் முன்னேற்றப் படை தமிழின கி.வீரலட்சுமி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், தமிழ்நாடு மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் அருண்சோரி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிக்குமரன், தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. இரா.அதியமான், தொழிலாளர் சீரமைப்பு இயக்க அமைப்பாளர் தோழர் ம.சேகர், தமிழர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட திரளான அமைப்புத் தலைவர்களும் தோழர்களும் தமிழீழ விடுதலைக்காகப் போராடிய தமிழக மாணவர்கள் செம்பியன், பிரபாகரன் உள்ளிட்ட திரளான மாணவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி உள்ளிட்ட தோழர்கள், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுக் கைதாகினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, அங்கு வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜய் படத்துடன் கூடிய கத்திப் பட விளம்பரம் பதாதைகள் அடித்து நொறுக்கப்பட்டு, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Leave a Comment