ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உலகத் தமிழ் மாநாடு - இது நேரமல்ல : அக்டோபர் 2009 இதழ் தலையங்கம்


தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
அக்டோபர் 2009 இதழ் தலையங்கம்

இது நேரமல்ல

கலைஞரின் கற்றறிந்த ரசிகர்களுக்கும், பாமர ரசிகர்களுக்கும் பரவசமூட்டும் ஒரு திருவிழா ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் பெயர் உலகத் தமிழ் மாநாடு.

போராட்டத்தைக் கூட கொண்டாட்டமாகவே நடத்தி ஒரு சார் மக்களை அதற்கேற்ப பழக்கப்படுத்தியுள்ளது தி.மு.க. தி.மு.க.வுக்கு எப்பொழுதுமே கண்காட்சிகள்தாம் முதன்மை கருத்துகள் முதன்மை அல்ல. பொருட்செறிவை விடவும் சொல்லடுக்குகளே அதற்குத் தேவை. உள்ளடக்கத்தை விடவும் உருவம் முக்கியம். உடல்நலத்தை விடவும் உடல் மீதான ஒப்பனையே அதன்குறி. மூளைக்குப் பணி செய்வதே நாக்கின் வேலை. ஆனால் தி.மு.க.விற்கோ நாக்கிற்குப் பணி செய்வதே மூளையின் வேலை!

இனம், மொழி, தேசம் என்ற மூன்றிலும் எந்த இலட்சியமும் இல்லாமல் இம் மூன்றையும் சொல்லி பெரிய அளவில் ஓர் அரசியல் இயக்கத்தை நடத்த முடியும் என்றால் அதற்கு அரிய தந்திரங்களும், உளவியல் போர் முறையும் தேவை. இந்தச் சிறப்புத் தகுதிகள் தி.மு.க.விற்கே சொந்தம்.

இப்பொழுது திடீரென்று 9 ஆவது உலகத்தமிழ் மாநாடு நடத்த முற்பட்டிருப்பது ஏன்? இதுவும் ஓர் உளவியல் போர் முறைதான். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் உத்தியை இதில் கலைஞர் கருணாநிதி கையாள்கிறார்.

ஈழத்தில் தமிழினத்தவரை இலட்சக்கணக்கில் கொன்று, விடுதலைப்புலிகள் என்ற மிகச்சிறந்த விடுதலை இயக்கத்தை வீழ்த்தி இந்திய - சீன - இலங்கை அரசுகள் போர் அட்டூழியங்கள் புரிந்தன. இதனால் காயம்பட்ட உள்ளத்தோடு, தமிழனத் தற்காப்புணர்வு கொழுந்து விட்டெரியக் குமுறிக்கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டு தமிழர்கள். உலகத் தமிழ் மாநாட்டைக் காட்டி அவர்களைத்தம்பக்கம் ஈர்ப்பது ஒரு முயற்சி. ஈழம் இந்த அளவு அழிந்ததற்கு, கருணாநிதியின் துரோகமும் முகாமைக்காரணங்களுள் ஒன்று. அதை மக்கள் மறந்து போகச் செய்வதற்கும் அவர்களின் கவனத்தை மாற்றுவதற்கும் தமிழ்மொழி குறித்த ஆரவாரங்களைச் செய்வது இன்னொரு முயற்சி.

இவ்வளவு அவசரமாக முடிவு செய்து, 2010 சனவரி 21 முதல் 24 வரை கோயம்புத்தூரில் ஒன்பதாவது உலகத் தமிழ்மாநாட்டை நடத்துவதற்குத் திட்டமிடுவது ஏன்? 2011-இல் நடைபெற வேண்டிய சட்டப்பேரவைத் தேர்தலை 2010- லேயே நடத்திவிட முதலமைச்சர் முனைகிறாரோ என்ற ஐயமும் எழுகிறது. உலகத் தமிழ் மாநாடு என்பது தமிழ்மொழி ஆராய்ச்சி மாநாடு. அதை நடத்தும் பொறுப்பு, பன்னாட்டுத் தமிழராய்ச்சி மன்றத்திற்கே உண்டு. அம்மன்றம் முடிவு செய்தால்தான் அம்மாநாட்டை நடத்த முடியும். ஆனால் அம்மன்றம் இதுவரை 9 ஆவது மாநாடு பற்றி எதுவும் கூறவில்லை.
அம்மன்றத்தின் தலைவர் நொபுரு கராசிமா சப்பானில் இருக்கிறார். அம்மன்ற உறுப்பினர்கள் பலநாடுகளில் உள்ளனர்.அம்மன்றம்தான் மாநாடு நடைபெறும் இடத்தையும் காலத்தையும் அறிவிக்கவேண்டும்.
ஆனால் கலைஞர் கருணாநிதி மாநாடுபற்றி அறிவித்துள்ளார். 1969- முதல் ஐந்துமுறை முதலமைச்சர் பதவியை ஏற்ற கலைஞர் கருணாநிதி இதுவரை ஒரு தடவை கூட உலகத்தமிழ் மாநாடு நடத்தியதில்லை. இப்பொழுது ஈழத்தமிழர் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டு, பல லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் தவிப்பதால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்தில் சிக்கித் தவிக்கும் நேரத்திலா இந்த மாநாடு நடத்தவேண்டும்.

ஒரு வீட்டில் ஒருவர் செத்துவிட்டால் ஓராண்டு கழித்துதான் அவ்வீட்டிலும் அவ்வீட்டாரின் உடன்பங்காளிகள் இல்லத்திலும் மணவிழா உள்ளிட்ட மகிழ்வு நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். தமிழினத்தை இவ்வளவு பெரிய சோகம் கவ்வியுள்ள இந்த நேரத்தில் உலகத் தமிழ் மாநாடு நடத்தாமல் 2011-இல் நடத்தினால் என்ன?

கலைஞர் கருணாநிதியைப் பொறுத்தவரை, அவருக்குத் துக்கமில்லை. இனப்பேரழிவு நடந்த இரண்டு மூன்று நாட்களிலேயே 2009 மே மாதம் புறநானூற்றுப் பாடலொன்றை எழுதி துக்கமும் மகிழ்ச்சியும் அந்தந்தத் தனி நபர்களுக்குத் தானே தவிர ஒட்டுமொத்த சமூகத்திற்கு இல்லை என்ற பொருளில் விளக்கம் கூறினார்.

ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற, அப்பண்பிலாளன்
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோதாரே

- பக்குடுக்கை நன்கணியார்

ஒரு வீட்டில் சாவுப்பறை முழங்க , இன்னொரு வீட்டில் திருமண முழவு ஒலிக்கும். ஒரு வீட்டில் இளம் தலைவனும் தலைவியும் கூடி மகிழ்வர், இன்னொரு வீட்டில் கணவனைப்பிரிந்த மனைவி கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பாள். இவ்வாறு இரண்டு வகையாக உலகைப் படைத்துவிட்டான் பண்பில்லாதவன். துன்பம் நிறைந்த இந்த உலகில் இன்னாதவற்றை சிந்தை செய்யாது இனியனவற்றை மட்டுமே கண்டு மகிழ் என்பது இச்செய்யுளின் பொருள். இப்பாடலை விளக்கி ஒரு கட்டுரை எழுதி இதழ்களில் வெளியிட்டார் கருணாநிதி.
அப்போது அவர் கட்சி மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தது. தம் மகன், மகள் , பேரன் ஆகியோர்க்கு அமைச்சர் பதவிக்குப் பேச்சு நடத்திக்கொண்டிருந்தார். அதாவது அவர் வீட்டில் திருமணப் பறைபோல் மகிழ்ச்சி ஒலி ஒலித்துக்கொண்டிருந்த காலம். தமிழ்நாட்டுத் தமிழர்கள் பலர் வீடுகளில் சோகம் குடி கொண்டநேரம். தம் குடும்பத்தின் கொண்டாட்டத்தை ஞாயப்படுத்த மேற்படிப் புறநானூற்றுப் பாடலை எடுத்துப்போட்டார்.

இப்பொழுதும் அதே பாடல் கருத்தைக் கூறி உலகத்தமிழ் மாநாடு நடத்துவதை அவர் ஞாயப்படுத்தலாம். ஆனால் தமிழ் கூறும் நல்லுலகம் அவரது சப்பைக்கட்டை ஏற்காது. தமிழர்களின் தொன்மைத்தாயகம் இரண்டு. ஒன்று தமிழ்நாடு, இன்னொன்று ஈழம். ஈழத்திலிருந்து ஆராய்ச்சி அறிஞர்களும்,தமிழ் மக்களும் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடிய சூழ்நிலையா இப்போது நிலவுகிறது? இல்லை. ஈழத் தமிழர்களின் துக்கத்தை - அவலத்தைப் புறக்கணித்துவிட்டு, அவர்களின் வருகையையும் புறக்கணித்துவிட்டு நாம் மாநாடு நடத்தலாமா? கூடாது.

கலைஞர் கருணாநிதிக்கு மனதின் ஓர் ஓரத்தில் ஈரம் இருந்தால், எண்ணிப்பார்த்து மாநாட்டை ஓர் ஆண்டு தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.