மீனவர் படுகொலை - சீனா - சமச்சீர் கல்வி - நிகரன் விடைகள்
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் அக்டோபர் 2009 மாத இதழிலிருந்து)
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா காஞ்சிபுரத்தில் எப்படி?
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவா? அண்ணா விருதுபெற்ற கலைஞர் கருணாநிதி குடும்ப விழா அல்லவா அது! பாராட்டு மழை கருணாநிதியைக் குளிப்பாட்டும்போது சில துளிகள் அண்ணாவின் மீதும் தெறித்தன.
தமிழகத்தில் தங்கியுள்ள ஈழத்தமிழர் ஏதிலியர்க்கு நிரந்தரக் குடியுரிமை தரவேண்டும் என்று 26.09.2009 -இல் காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தி.மு.க., தீர்மானம் போட்டிருப்பது பற்றி?
வரவேற்க வேண்டிய தீர்மானம். 12.07.2009 அன்று திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய “தமிழ்த்தேசியம் - சிறப்பு மாநாட்டில” மூன்றாண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் தங்கியுள்ள ஈழத்தமிழர்களுக்கு இங்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று தீர்மானம் போட்டோம். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 26.08.2009 அன்று தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடந்த “தமிழ்த்தேசிய எழுச்சிநாள்”; ஆர்ப்பாட்டங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தினோம்.
அரசமைப்புச்சட்டத்திருத்தம் தேவைப் படாமலேயே இத்தீர்மானத்தை நிறைவேற்ற வாய்ப்பிருக்கிறது. “இதை நிறைவேற்றவில்லை என்றால் என்னை நானே ஏமாளி ஆக்கிக் கொண்டதாகப் பொருள்” என்று கருணாநிதி சூளுரைத்துள்ளார். ஈழத்தில் இந்தியப் பங்களிப்புடன் சிங்கள அரசு இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றொழித்த போரை நிறுத்த, தமிழகம் கொதித்து எழுந்தபோது, கருணாநிதி இதுபோல் பல சூளுரைகளைக் கூறினார். தமிழர்கள் ஏமாளிகள் ஆயினர். அந்த வரிசையில் இந்தத் தீர்மானம் அடக்கம் ஆகாமல், நிறைவேற்றப்பட்டால் ஈழத்தமிழர்களுக்குப் பேருதவியாய் இருக்கும்.
திருச்சி மாநாட்டில், ஈழத்தமிழ் ஏதிலியர்க்கு வழங்கப்படும் மாத உதவித்தொகையை ஆண், பெண் வேறுபாடில்லாமல் வயது வந்த அனைவர்க்கும் தலைக்கு ரூபாய் ஆயிரமாக உயர்த்தவேண்டும் என்று தீர்மானம் போட்டோம். அதையும் தி.மு.க.அரசு நிறைவேற்றினால் சிறப்பாக இருக்கும்.
ஈழ விடுதலைப் போரை முறியடித்து விட்டோம், விடுதலைப்புலிகளை ஒழித்து விட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் இலங்கை அரசு இன்னும் தமிழக மீனவர்களைச் சுடுவதும், அம்மணப்படுத்தி இழிவுப்படுத்துவதும் ஏன்? இந்தியக் கடலோரக் காவல்படை என்ன செய்துகொண்டிருக்கிறது?
இந்திய இலங்கை அரசுகளின் அடுத்த இலக்கு தமிழ்நாட்டுத் தமிழர்களை சிதைத்து சின்னாபின்னப்படுத்துவதுதான். சிங்கள நாஜிகளுக்கும் தில்லி ஏகாதிபத்தியத்திற்கும் தமிழ் இனம் பொது எதிரிதானே? தமிழ்நாட்டுக்குரிய கடல்பகுதியிலும் பன்னாட்டுக்கடல் பகுதியிலும் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை முற்றாகத் தடுத்து அப்பகுதிகளை சிங்களப்படையின் ஆதிக்கத்தின் கீழ் விடுவது என்ற முடிவை இந்திய அரசு கமுக்கமாக நிறைவேற்றுகிறது என்றே தெரிகிறது.
இந்தியக் கடலோரக் காவல்படை அப்பகுதியில் சுற்றுக் காவல் வருவது தமிழக மீனவர்களின் நடமாட்டத்தை சிங்களக் கப்பல் படைக்குத் துப்புச் சொல்வதற்காக எனத் தெரிகிறது. ஒரு தடவைகூட இந்தியக் திலிளீ;ரீ tஜீஷீலீ கடலோரக் காவல்படை சிங்களக் கப்பற்படையினரின் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தவில்லையே. அத்துடன், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிப்போனால் சிங்களப்படை சுட்டுக் கொல்லத்தான் செய்யும் என்று இந்தியக் கப்பற்படைத்தளபதியே கூறியுள்ளார்.
சிங்கள மீனவர்கள் சென்னை மற்றும் ஆந்திரப்பிரதேசக் கடலோரங்களில் மீன் பிடித்து அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்துவதில்லை. அவர்களை அம்மணப்படுத்தி அவர்கள் முகத்தில் காரித் துப்புவதில்லை. அம்மணமாக நிற்கவைத்து தலையில் பனிக்கட்டிகளை சுமக்கவைப்பதில்லை. சிங்கள மீனவர்களைக் கவுரமாக அழைத்து வந்து சென்னை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கிறார்கள்.
அங்கு சிங்கள மீனவர்களுக்குப் பிரியாணி உணவு உள்ளிட்டு விருந்தோம்பல் நடக்கிறது. ஒரு நாள் புழல் சிறையில் அடைப்பார்கள். அதற்குள், தமிழக அரசின் பொதுத் துறைச்செயலாளர் ஜோதி ஜெகராசன் அலுவலகத்திலிருந்து தொலைபேசிக்கு மேல் தொலைபேசி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் போகும். “இலங்கை மீனவர்களை இன்னும் ஏன் விடுதலை செய்யவில்லை” என்று கேட்டுத் துளைத்தெடுப்பார்கள். சிங்கள மீனவர்களை அழைத்துச் செல்ல சிங்கள முகவர்கள் சென்னை வந்து மாவட்ட ஆட்சியரைப் பந்தாவாக ஹிμம்வார்கள். அழைத்துச் செல்வார்கள். ஜோதிகெஜராசன் உள்ளிட்டு தமிழக அதிகாரி யாரையும் குறைசொல்ல முடியாது.
இந்திய அரசும் தமிழக அரசும் தான் தமிழக - இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடிக்கும் சிங்கள மீனவர்களை மருமகன்களைப் போல் நடத்தி அனுப்புகின்றன. சிங்கள மீனவர்களுக்கு சொந்த நாடு இருக்கிறது; சொந்த நாட்டுப்படை இருக்கிறது. தமிழகம் இந்தியாவுக்கு அடிமையாகத்தானே இருக்கிறது.இந்தியக் கப்பற்படைக்கு சிங்கள மீனவர்கள் பங்காளி இனத்தவர்;; தமிழக மீனவர்கள் பகையாளி இனத்தவர்கள். தமிழர்களுக்குரிய கடல் சிங்களக் கப்பல்படையின் கண்காணிப்பில் இருப்பதையே இந்தியா விரும்புகிறது.
தமிழக மீனவர்களுக்கு எந்திரத் துப்பாக்கி கொடுத்தால் தங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள் என்று தமிழகத் தலைவர்கள் சிலர் கூறுகின்றனரே?
எதிரிநாட்டின் கப்பல்படையுடன், படகுக்கொரு துப்பாக்கியை வைத்துக்கொண்டு சாதாரணப் பொதுமக்கள் போரிட்டு வெற்றிபெற முடியுமா? இந்தியக் கப்பல்படை தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்துச் செல்லவேண்டும். சிங்களக் கப்பற்படை தமிழக மீனவர்களைச் சுட்டால் இந்தியக்கப்பற்படை சிங்களக்கப்பற்படையைத் திருப்பிச் சுடவேண்டும். அப்படியெல்லாம் இந்தியக் கப்பற்படை தமிழக மீனவர்களைக் காப்பாற்றாது என்றால், தமிழகத்திற்கென்று தனியே கப்பற்படையை உருவாக்கவேண்டும்.அதற்கு இந்திய அரசு அனுமதி தராது என்றால், இந்தியாவுடன் தமிழ்நாடு இருந்து அழிவதா அல்லது தன்மக்களைப் பாதுகாக்கத் தமிழ்நாடு தனிநாடாவதா என்பதைத் தமிழர்கள் முடிவு செய்ய வேண்டும். இந்தப்பக்கமும் தமிழர் நாடு அந்தப்பக்கமும் தமிழர்நாடு இந்தப் பாக் நீரிணை என்பது தமிழர் கடல். இதில் சிங்களநாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் என்ன வேலை?
தமிழ்நாடு தனிநாடானால் சீனா போன்ற அயல்நாடுகள் தமிழ் நாட்டை ஆக்கிரமிக்காதா?
இப்போது தமிழ்நாட்டை அயலார் ஆக்கிரமிக்கவில்லையா? காவிரி உரிமையைக் கன்னடர் ஆக்கிரமித்துக் கொண்டு, ஒகேனக்கல், ஓசூர் போன்ற நிலப்பகுதியையும் ஆக்கிரமிக்க வருகிறார்கள். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைத் தடுக்கிறார்கள். முல்லைப்பெரியாறு அணையை மலையாளிகள் ஆக்கிரமிக்கிறார்கள். தமிழர் கடல் பகுதியைச் சிங்களர்கள் ஆக்கிரமித்துள்ளார்கள். தமிழக வேலைவாய்ப்புகளை வடநாட்டவரும், மலையாளிகள் போன்ற அயலாரும் ஆக்கிரமித்துள்ளார்கள். தொழில் வணிகம் அனைத்தையும் மார்வாரி குஜராத்தி சேட்டுகள் ஆக்கிரமித்துள்ளார்கள். தமிழகத்தின் நிலங்களை மார்வாரி குஜராத்தி சேட்டுகள், மலையாளிகள், பன்னாட்டு முதலாளிகள் வாங்கி வளைத்துப்போட்டுள்ளார்கள்.
தமிழக மக்கள் தொகையில் தமிழர்களை 50 விழுக்காடாகக் குறைத்து அயலார் மக்கள் தொகையை 50 விழுக்காடாக உயர்த்தி, தமிழ்நாட்டைக் கலப்பின மாநிலமாக மாற்றும் சதி வேகமாக அரங்கேறுகிறது. இவையெல்லாம் அயலார் ஆக்கிரமிப்புகள் கிடையாதா?
தமிழ்நாடு தனியானால் சீனா போன்ற நாடுகள் தமிழ் நாட்டுடன் நட்புறவு கொண்டாலும் கொள்ளலாம். உலக நிலை எப்படி மாறும் என்று இப்பொழுதே சொல்ல முடியாது. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். ஒரு கோடிக்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட நாடுகள் ஒரு நூறு இருக்கின்றன.
சமச்சீர் கல்வி குறித்து?
பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, பரிந்துரைத்தது, சமச்சீர்க்கல்வித்திட்டம் தமிழ்நாட்டில் இப்பொழுது மாநில அரசுப் பாடத்திட்டம், மெட்ரிகுலேசன் பாடத்திட்டம், ஓரியண்டல் பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியப்பாடத்திட்டம் என நான்கு வகைப்பாடத்திட்டங்கள் பள்ளிக் கல்விக்கு இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் கொண்டுவரவேண்டும் குறிப்பாகத் தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதே முத்துக்குமரன் குழுப் பரிந்துரையின் முகாமையான கூறுகள். எந்தப்பள்ளியும் அப்பள்ளியை ஒட்டிய பகுதிகளில் வாழும் மாணவர்களுக்குக் கட்டாயம் 25 விழுக்காடு சேர்க்கை தர வேண்டும் என்பது இன்னொரு பரிந்துரை.
தமிழக அரசு இதில் விதிவிலக்குகள் அளிக்க முன்வந்துள்ளது. பயிற்றுமொழி தமிழ் என்பதில் விதிவிலக்கு. பிறகென்ன சமச்சீர்க் கல்வி? எந்த நல்ல ஒன்றைத் தொட்டாலும் தி.மு.க. தன் கையால் அதை அழுக்குப் படுத்திவிடும்!
செயலலிதா தேர்தல்காலம் தவிர மற்ற நேரங்களில் மக்களைச் சந்திப்பதில்லையே ஏன்?
இது செயலலிதாவின் சோதிடரைக் கேட்க வேண்டிய வினா. கடந்த 2 ஆண்டுகளாக ‘சனிபகவான்’ செயலலிதாவுக்குரிய சிம்மராசியில் “குடியிருந்துவிட்டு” 26.09.2009 அன்றுதான் இடம் பெயர்ந்து கன்னிராசிக்குப் போயுள்ளாராம். அதனால் அம்மா வெளியே போனால் ஆபத்து என்று சோதிடர்கள் சொல்லிவைத்தார்கள். சனி வெளியேறிய பின்னும் இன்னும் சில மாதங்களுக்கு மலைமேல் இருக்கவேண்டிய தேவை இருக்கிறதாம். அதனால் கொடநாட்டில் தான் இருப்பாராம். செயலலிதா தமது ராசியை மட்டும் பார்ப்பதில்லை. கருணாநிதி ராசிக்கும் சோதிடம் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரது ரிசப ராசிக்கு சனி எப்போது போகும் என்று பார்த்துக்கொண்டுள்ளார்.
செயலலிதா மக்களைச் சட்டை செய்வதில்லை. மந்திரவாதிகளைத் தான் மதிக்கிறார். ரசியாவில் ஜார் மன்னன் குடும்பம் ஒரு சோதிடனை நம்பி அட்டூழியம் செய்து அழிந்தது. அ.இ.அ.தி.மு.க.வை அந்தக் கதிக்கு செயலலிதா கொண்டு வந்தாலும் கொண்டுவருவார்.
இலஞ்சம் வாங்கும் அதிகாரிகள், பலரைப் பிடிக்கிறார்கள். விரைவில் இலஞ்ச - ஊழல் ஒழிந்துவிடும்போல் தெரிகிறதே?
இலஞ்சம் வாங்கும் பிரதமர்கள், நடுவண் அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நடுவண் மற்றும் மாநில தலைமைச் செயலகத் துறைகளின் செயலாளர்கள், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள், படைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட இமயமலைகளில் இருந்து வற்றாத இலஞ்ச - ஊழல் கங்கையாகப் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. அப்படி ஓடிவரும் இலஞ்சக் கங்கையில் வழியில் உள்ளோர் கொஞ்சம் குடத்தில் மொண்டு கொள்கிறார்கள். அவர்களைப் பிடிப்பதால் இலஞ்ச -ஊழல் நின்று போகாது. அவர்களைப் பிடிப்பதை வரவேற்போம். ஆனால் ஊழல் உற்பத்தியாளர்களைச் சிறையிலடைக்க ஒரு புரட்சி தேவை.
வன்னி வதை முகாம்களில் அல்லற்படும் தமிழர்களை மீட்க என்ன செய்யவேண்டும்?
இந்தியாவைப் பணிய வைக்க என்ன செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் செய்யவேண்டும். ஐரோப்பிய ஒன்றியநாடுகள் இந்தியாவைத்தான் காரணம் காட்டுகின்றன. தெற்காசிய மண்டலத்தின் பேட்டைத்தலைவனாக இந்தியா உள்ளது. அதைப் பகைத்துக்கொண்டு, ஈழத்தில் மனித உரிமைகளுக்குக் குரல் கொடுக்க முடியாது என்று அவை கூறுகின்றன.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் அக்டோபர் 2009 மாத இதழிலிருந்து)
Leave a Comment