ஆனந்த விகடனின் ஆரிய வெறி - வில்லவன்
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2009 நவம்பர் மாத இதழில் வெளிவந்த கட்டுரை)
ஆனந்த விகடன், ‘பொக்கிஷம்’ என்ற தலைப்பின் கீழ் ஓவ்வொரு இதழிலும் அது பழைய காலத்தில் வெளியிட்ட செய்திகள் சிலவற்றை மறுபதிப்பு செய்து வருகிறது. 21-10-2009 நாளிட்ட இதழில் 29-1-1939-இல் வெளியிட்ட ஓரு செய்திக் ‘காலப்பெட்டகம்’ என்ற தலைப்பில் வந்துள்ளது.
”தமிழ்நாடு தமிழர்களுக்கே என அக்காலத்தில் ஓரு கோசம் எழுந்தது. இந்த விபரீதப் போக்கைக் கண்டித்து 29-1-1939 இதழில் எலிவளை எலிகளுக்கே என்னும் தலைப்பில் ஏழுபக்கக் கட்டுரை தீட்டியது விகடன். அதிலிருந்து ஓரு துளி.. ” என்ற முன்னுரையுடன் இப்போது வெளியிட்டுள்ளது. “வீட்டில் எலிகளின் கூச்சல் அதிகமாய் போயிற்று. எலிவளை எலிகளுக்கே என்று கோசம் போட்டுக் கொண்டே இருந்தன.
வீட்டின் எஜமான் ஓரு கொத்தனை அழைத்து எலிவளை களையெல்லாம் சிமெண்டு போட்டு மூடச்செய்ததால் எலிவளைகள் எலிகளுக்குகே ஆயின. ஓரு பைத்தியக்கார இயக்கத்துக்கு உபமானம் சொல்லவேணுமானால், உபமானமும் பைத்தியாக் காரத்தனமாகத்தானே இருந்தாக வேண்டும்”.
ஆனந்த விகடன் அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லை என்பதை இம்மீள் பதிப்பும் அதற்கான இன்றைய முன்னுரையும் உறுதி செய்கின்றன. பூணூல் என்பது வெறும் நூல் அல்ல.
அது பார்ப்பனர்களின் வர்ணத்திமிருக்கான நரம்பு என்பது மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது.
1938 இல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தந்தை பெரியார் தலைமையில் பேரெழுச்சியாய் நடந்தது. அப்போது பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் திருச்சியிலிருந்து இந்தி எதிர்ப்புப் பரப்புரைப் பேரணி நடைப்பயணமாக சென்னை வந்தது, அவ்வணியினரை சென்னை கடற்கரையில் வரவேற்று மாபெரும் மக்கள் எழுச்சி பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பெரியார், மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க்காவலர் கி.இ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட தலைவர்களும் தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் தந்தைபெரியார் எழுப்பிய முழுக்கமே ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது. அதன்பிறகு பெரியார் தமிழர்கள் ஓவ்வொருவரும் தங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பச்சை குத்திக்கொள்ளவேண்டும் என்றும், தங்கள் வீடுகளில் அம்முழுக்கத்தைக் கல்வெட்டில் பதிக்கவேண்டும் என்றும் அறிக்கை கொடுத்தார். அம்முழக்கத்தை மக்கள் ஆதரித்து முழங்கினர்.
அப்போது ஆரிய ஏடான ஆனந்தவிகடனுக்குப் பைத்தியமே பிடித்து விட்டது. அதனால் ‘எலிவளை ஏலிகளுக்கே ’ எனத் தத்துவம் உதித்தது. தமிழ்நாடு எலிவளையாகவே இருக்கட்டும். அந்த எலிவளை தமிழர்களுக்குச் சொந்தமானது. ஆரியப் பார்ப்பனர்களே, உங்களுக்குச் சொந்தமான எலிவளை எங்கே இருக்கிறது?
உங்களுக்கு இங்கே என்ன வேலை? வளைகளை வாழ்விடமாகக்கொண்டுள்ள எலிகள் தம் வளைகளின் மீதான உரிமையைப் பெறக் குரல் கொடுப்பது இயல்பானதுதான். ஆனந்த விகடனே, உன் பூர்வீகம் எது? எங்கள் தோளில் உட்கார்ந்து கொண்டு எங்கள் செவியைக் கடிக்கிறாய்.
கல்பிளந்து, மலைபிளந்து, கழனியெல்லாம் ஊருவாக்கி சொந்த மண்ணை வளமாக்கி சொந்த அரசை உருவாக்கி நாடாண்ட தமிழினத்தை என்றும், தமிழர் தாய்நாட்டை எலிவளை என்றும் இன்றைக்கும் கொச்சைபடுத்தும் ஆனந்த விகடனே, 1938-இல் எழுந்த ”தமிழ்நாடு தமிழர்களுக்கே” என்ற முழக்கம் முடிந்துவிடவில்லை. இன்று மீண்டும் வீச்சோடு எழுகிறது! ”தமிழ்த்தேசத் குடியரசே தமிழர்களின் இலட்சியம்!
Leave a Comment