மீனவர் போராட்டம் தொழிற்சங்கப் போராட்டமல்ல இனப்போராட்டம் - தமிழ்த்தேசியன்
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
தமிழக மீனவர்களை சிங்களக் கப்பற்படை சுட்டுக் கொல்வதும், அடிப்பதும், அம்மணப்படுத்துவதும், பிடித்த மீன்களை அழிப்பதும், படகுகளை நாசப்படுத்தவதும் மீனவர் சிக்கல் மட்டுமல்ல. அது ஒரு இனச்சிக்கல். அது ஒரு பொருளியல் சிக்கல் மட்டுமல்ல் அது ஓர் அரசியல் சிக்கல். எனவே இதற்கு முடிவு காண தொழிற்சங்கப் போராட்டம் மட்டும் போதாது. அரசியல் சார்ந்த தமிழினப் போராட்டம் தேவை. சின்னஞ்சிறு சிங்கள அரசு இதுவரை தமிழக மீனவர்கள் 400 பேரை சுட்டுக் கொன்றது. காணாமல் போன மீனவர்களின் கணக்கு தனியே உள்ளது. விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதாக மார்தட்டிக் கொள்கிறது இலங்கை. அதற்காக சிங்களத்தின் மார்பில் சந்தனம் பூசி மகிழ்கிறது இந்தியா. ஆனால் அதன்பிறகும், தமிழக மீனவர்களைத் தாக்குகிறது சிங்களப்படை.
தமிழக மீனவர்களைச் சிறைபிடிக்கிறது; படகுகளை நாசப் படுத்துகிறது; பிடித்த மீன்களைக் கடலில் கொட்டி அழிக்கிறது; மீனவர்களின் ஆடைகளைக் களைந்து அம்மணமாக அனுப்புகிறது. சிங்கள அரசுக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது? இந்தியாவிடமிருந்து வந்தது. ஆறரைக் கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு ஒன்றரைக் கோடி மக்கள் தொகை கொண்ட சிங்கள நாட்டிடம் அடிபட்டு சாவதும், அவமானப்படுவதும் ஏன்? தமிழ்நாடு இந்தியாவின் காலனியாக இருக்கிறது.
தமிழ்நாட்டிற்குத் தனிப்படை கிடையாது. அதனால் எதிரிநாட்டுப் படையின் தாக்குதலை முறியடிக்க நமது நாட்டுப் படையை அனுப்ப முடியவில்லை. தன்னை நம்பியுள்ள தனது காலனி மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவிடம் உள்ளது. ஆனால் அப்பொறுப்பை நிறைவேற்ற இந்தியா மறுக்கிறது.
“இந்தியா என் நாடு. இந்தியர் அனைவருமே என் சகோதரர்கள்..” என்று மழலையிலிருந்து மரணம் வரை ஒவ்வொரு தமிழனையும் தமிழச்சியையும் உருப்போடச் சொல்லும் இந்தியா, இந்தியக் “குடிமக்களாக” உள்ள தமிழர்களை அடுத்த நாட்டுக்காரன் அத்துமீறி வந்து சுட்டுக் கொன்றாலும் அடித்துத் துன்புறுத்தினாலும் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று அதட்டிக் கேட்பதுமில்லை.
தடுத்து நிறுத்துவதுமில்லை. தமிழக மீனவர்களை அம்மணப்படுத்திய சிங்களப் படையாட்கள் அம்மீனவர்களின் படகுகளில் பறந்த இந்திய அரசுக் கொடியைக் கழற்றிக் கோவணமாகக் கட்டிக் கொண்டு போகும்படி கட்டாயப் படுத்தியுள்ளனர். அது பற்றி இந்திய அரசுக்கு அவமானமில்லை. அவ்விடத்தில் அவமானப் படுத்தப்படுவது தமிழன் தான் என்ற புரிதல் இந்திய அரசுக்கு உள்ளது. தமிழனை அவமானப்படுத்த அந்நேரத்தில் இந்திய அரசுக்கொடி பயன்பட்டுள்ளது என்ற அளவில் மட்டுமே இந்தியா அந்நிகழ்வைப் பார்க்கிறது. தமிழக மீனவர்கள் சிங்களப் படையால் தாக்கப்படுவது குறித்து மக்களவையில் அண்மையில் விவாதம் நடந்தது.
அப்போது தமிழக உறுப்பினர்கள் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும் என்று கோரினர். அதற்கு விடையளித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இறையாண்மையுள்ள இருநாடுகள் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் அது.
அவ்வொப்பந்தத்தை நீக்கிக் கொள்வதற்கு காரணம் எதுவுமில்லை” என்றார். நானூறு தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு காரணமாக இந்திய அரசுக்குப் படவில்லை. ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டிலும், துப்பாக்கிக் கட்டைத் தாக்குதலிலும் படுகாயமுற்றது ஒரு பொருட்டாக இந்திய அரசுக்குத் தெரியவில்லை. கச்சத்தீவு அருகேயுள்ள தண்ணீரை அனுபவிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை உண்டு என்று இலங்கையுடன் இந்திய அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுவது ஒரு காரணமாகத் தெரியவில்லை. சிங்களர்களின் தொடர் தாக்குதலால் காரைக்காலிலிருந்து கன்னியாகுமரி வரை இலட்சக் கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டிருப்பது ஒரு காரணமாகத் தெரியவில்லை.
அத்தனை இழப்புகளும் தமிழர்களுக்குத்தானே தவிர இந்தியாவுக்கு அல்ல என்று இந்திய அரசு கருதுகிறது. இதுபோல் மேற்கு வங்க மீனவர்களுக்கோ மராட்டிய-குஜராத்தி மீனவர்களுக்கோ அயல்நாட்டுக் கப்பல் படையினரால் அழிவு நேர்ந்திருந்தால் இந்தியா அந்நாடுகளின் மீது போர் தொடுத்திருக்கும். தமிழர்கள் மீது இனப்பகை கொண்டிருப்பது இலங்கை மட்டுமல்ல, இந்தியாவும்தான்.
இந்தியப் பெருங்கடலில் சுற்றிவரும் கடலோரக் காவல்படை ஒரு தடவைகூட சிங்களர் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை. அப்படி ஒரு தாக்குதல் நடைபெறும்போது மட்டும் கண்ணுக்குத் தெரியாத தொலைவில் இந்தியக் கடலோரக் காவல்படை ஓடிவிடும் போலும்! தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க வருகிறார்களென்று சிங்களப்படைக்குத் துப்பு சொல்வதே இந்தியக் கடலோரக் காவல்படைதானோ என்ற ஐயமும் இருக்கிறது. இதற்கு நேர்மாறான இன்னொரு காட்சியைப் பார்க்கலாம். சிங்கள மீனவர்கள் சென்னை கடலோரத்தில் மீன்பிடிக்க வருகிறார்கள்.
விசாகப்பட்டினம் கடலோரத்திலும் மீன்பிடிக்க வருகிறார்கள். சில நேரங்களில் அவர்களை இந்தியக் கடலோரக் காவல்படையினர் தளைப்படுத்துகின்றனர். அவ்வாறு தளைப்படுத்தப்படும் சிங்கள மீனவர்கள் தமிழ்நாட்டில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது கவனத்திற்குரியது. சென்னை கடலோரத்தில் தளைப்படுத்தப்படும் சிங்கள மீனவர்களைக் கடலோரக் காவல்படையினர் ‘வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை’ போல் மரியாதையாக நடத்துகிறார்கள். அவர்களை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கிறார்கள். அவர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டுமென்றும் விரைவில் விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டுமென்றும் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அறிவுறுத்தல் வருகிறது.
அவ்வாறே கண்ணியமாக நடத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஓரிரு நாட்களில் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். ஆந்திரப் பிரதேச கடலோரத்தில் தளைப்படுத்தப்படும் சிங்கள மீனவர்களைக் கூட கடலோரக் காவல்படையினர் சென்னை மாவட்ட ஆட்சியரிடம்தான் ஒப்படைக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் ஒப்படைத்தால் அங்கு ஒரு மீனவருக்கு ஒரு இலட்ச ரூபாய் வரை தண்டத்தொகை விதிக்கிறார்களாம். அந்தச் சுமையைத் தவிர்த்து சிங்கள மீனவர்களுக்கு உதவுவதற்காகக் கடலோரக் காவல்படையினர் ஆந்திரப்பிரதேச எல்லையில் தளைப்படுத்தப்படும் சிங்கள மீனவர்களையும் தமிழ்நாட்டில் ஒப்படைக்கிறார்கள்.
அந்தளவுக்கு இந்திய அரசின் கடலோர காவல் படையினருக்கும் சிங்கள மீனவர்களுக்குமிடையே நல்லுறவு நிலவுகிறது. தமிழகத்திலுள்ள இனத்துரோக அரசு எந்த அளவுக்கு சிங்களர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இந்திய அரசு தமிழர்களைத் தனது இனப் பகைவர்களாகவே கருதிச் செயல்படுகிறது.
தமிழகத்திலுள்ள இனத் துரோக அரசு இந்திய அரசின் இனப்பகைச் செயலுக்குத் துணை போகிறது. எனவே தமிழக மீனவர் சிக்கல் என்பது ஓர் இனச் சிக்கலாகும்.
இதனை இன அடிப்படையிலும் ஆளும் ஆட்சியாளர்களுக்கெதிரான அரசியல் அடிப்படையிலும் எதிர் கொண்டால்தான் தமிழக மீனவர்கள் உரிமைகளை எதிர்காலத்திலாவது பாதுகாக்க முடியும். ஒரு தொழிற்சங்க நடவடிக்கையாக மட்டும் இப்போராட்டத்தை மீனவர் அமைப்புகள் நடத்தி வருகின்றன. அத்தொழிற்சங்கங்கள் இனவழிப்பட்ட அரசியல் போராட்டமாக இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
சரியாகச் சொன்னால், இது தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். தமிழ்நாட்டின் இதரப் பகுதிகளிலுள்ள தமிழர்கள் மற்றும் அவர்கள் உறுப்பு வகிக்கும் அமைப்புகள் தமிழக மீனவர் சிக்கலுக்குத் தீர்வு காண இனவழிப்பட்ட அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டும். அரசியல் போராட்டம் என்றால் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அரசியல் என்று கருதக் கூடாது. இனப் பகை கொண்டு சிங்களர் மூலம் தமிழர்கள் மீது ஒரு போரை ஏவி விட்டிருக்கும் இந்திய அரசை எதிர்த்து அதன் அலுவலகங்களும், நிறுவனங்களும் தமிழ்நாட்டில் செயல்பட முடியாமல் முடங்கிப் போகும் அளவிற்குப் போராட்டம் நடத்த வேண்டும். அதே போல் தமிழகக் கங்காணி அரசுக்கு எதிராகவும் போராட்டம் நடத்த வேண்டும்.
தில்லியிலும் சென்னையிலும் எந்தக் கட்சி ஆட்சியிலிருக்கிறது என்பது நமக்கு முக்கியமன்று. இந்த ஆட்சிகள் தமிழக மீனவர்களுக்கு எதிராக இருக்கின்றன. அவற்றை முடக்கிப் பணியவைத்து மீனவர் வாழ்வுரிமையை மீட்க வேண்டும்’ என்பது மட்டுமே நமக்கு இலக்காக இருக்க வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை நீக்கும்வரை இப்போராட்டம் தொடரவேண்டும்.
தமிழ்நாட்டு மீனவர்களுக்கும், ஈழநாட்டு மீனவர்களுக்கும் இக்கடல்பரப்பு பொதுவானதாக வேண்டும். மேற்கண்ட இலக்குகளை முன்வைத்து கடலோரங்களில் மட்டுமின்றி தமிழகமெங்கும் போராட வேண்டும். நெய்தல் நில மக்கள் மட்டுமின்றி குறிஞ்சி, முல்லை, மருதம் நில மக்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
Leave a Comment