சைவப்பூனைகளின் பாசாங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பும் - தலையங்கம்
சைவப்பூனைகளின் பாசாங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பும் - தலையங்கம்
சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினால், சமூகம் பிளவுபட்டு விடும் என்று பார்ப்பனிய ஊடகங்களும், பார்ப்பனியச் சிந்தனையாளர்களும் அலறுகிறார்கள்.
சாதி வேறுபாடுகள் அப்படியே நிலைக்க வேண்டும், நீடிக்க வேண்டும் என்று விரும்புவோர்க்கு, சாதி ஊனத்தின் அடிப்படையில் அரசு உதவி செய்யும் பொழுதெல்லாம் ஓர் அச்சம் ஏற்படுகிறது. சமத்துவம் கோரி தலை நிமிர்த்த ஆற்றல் இல்லாதவர்கள், அரசு தரும் இட ஒதுக்கீடு போன்றவற்றால், வலிவு பெற்று, சமத்துவம் கோர வந்து விடுவார்களோ என்ற அச்சம்தான் அது.
இப்பொழுது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கி உள்ளது. இதில் ஒவ்வொருவர் சாதியையும் கேட்டுப் பதிய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று இந்திய அரசும் அதற்கு இசைவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து 26.05.2010 அன்று விவாதித்த இந்திய அமைச்சரவை முடிவேதும் எடுக்க முடியாமல் கருத்து வேறுபாடுகளால் இழுபறியில் சிக்கியது. இது குறித்து முடிவெடுக்க பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சரவைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1931ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு எடுத்த மக்கள் தொகை கணக்கில் சாதியையும் கேட்டுப் பதிவு செய்தார்கள். அதன்பிறகு 1941 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் சிக்கி பிரித்தானிய வல்லரசு சீரழிந்ததால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உரியவாறு நடைபெறவில்லை.
விடுதலை பெற்ற இந்தியாவில் ஆட்சியாளர்களிடம் பார்ப்பனியக் கருத்து மேலோங்கி இருந்ததால் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கவில்லை.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு மட்டும் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இதைப் பார்ப்பனிய மேலாதிக்க வாதிகள் ஏற்றுக் கொள்ளக் காரணம், ஒடுக்கு முறையில் அடித்தட்டு நிலையில் உள்ள அம்மக்கள், மேலெழுந்து தங்களுக்குப் போட்டியாக வந்திட மாட்டார்கள் என்ற நம்பிக்கையே!
ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசு உதவிகள் கிடைத்தால் தங்களின் ஆதிக்கத்திற்குப் போட்டியாக வந்துவிடுவார்கள் என்ற அச்சம் வர்ண-சாதி ஆதிக்க வாதிகளுக்கு என்றென்றும் இருந்து கொண்டே உள்ளது. அதனால் நல்லவர்கள் போல் நடித்து பல்வேறு கதைகளைக் கட்டி விடுகிறார்கள்.
கல்விக் கூடங்களில் சாதி கேட்பதால்தான் சாதி இன்னும் நீடிக்கிறது என்பது அதிலே ஒரு கதை, படிக்காதவர்களிடம் சாதி இல்லை என்பது போலவும் படித்தவர்களிடம் மட்டுமே சாதி இருக்கிறது என்பது போலவுமான ஒரு கட்டுக் கதை இது. ஆதிக்க சாதி சைவப் பூனைகள் சாதி பார்க்காதவர்கள் போல் பாசாங்கு செய்கிறார்கள்.
குழந்தைகளுக்கு சாதியை அறிமுகப்படுத்தி அன்றாடம் நினைவூட்டுவோர் தாய், தந்தை மற்றும் சுற்றத்தார் - தெருவில் உள்ளோர் ஆகியோர் ஆவர். பள்ளியில் சேரும்போது சாதி கேட்பது அதன்பிறகே வருகிறது. வீட்டில், தெருவில், ஊரில் உள்ள சாதிப் பிளவுகள்தாம் கல்வி நிலையங்களில் பிரதிபலிக்கின்றன.
வீட்டில், வீதியில், ஊரில் சாதி நீடிக்கக் காரணம் சொந்த சாதித் திருமணம் மற்றும் பிறப்பு வழிப்பட்ட தொழில்கள். இவை இரண்டையும் மாற்றி அமைக்க - சாதிப் பிளவை வெறுப்பது போல் இட ஒதுக்கீடு வழங்கும் போது மட்டும் நடிக்கும் - மேல்சாதியினர் முன்வருவதில்லை.
சாதி அடிப்படையில் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லையானால் பிறப்பால் ஒதுக்கப்பட்டு கீழ்நிலையில் கிடக்கும் சாதி மக்கள் - தங்கள் உரிமைகளைக் கோர, தாங்கள் யாருக்கும் கீழானவர்கள் இல்லை என்பதை வலியுறுத்த உளவியல் தெம்பும் உறுதியும் பெற்றிருக்க மாட்டார்கள்.
மண்டல் குழு, இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் போதாது, சாதி அடிப்படையில் பின் தள்ளப்பட்டுள்ள மக்களைக் கைதூக்கிவிட வங்கிக் கடன், தொழில் தொடங்க ஊக்கங்கள் போன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்கிறது.
இவற்றையெல்லாம் பெறத் தகுதி உள்ள மக்களின் தொகை எவ்வளவு என்ற கணக்கு அரசுக்கு வேண்டும். இரண்டாவதாக, பிற்படுத்தப்பட்ட சாதி ஒவ்வொன்றின் மக்கள் தொகை எவ்வளவு என்று தெரிய வேண்டும். முன்னேறிய சாதிகளின் மக்கள் தொகை எவ்வளவு என்று தெரிய வேண்டும். கைவினைஞர்கள், சேவைத் துறை சாதிகள் என்று சொல்லப்படும் பிரிவுகளின் மக்கள் தொகை ஒப்பீட்டளவில் சிறுபான்மையாக இருப்பது பற்றிக் கவலைப்படத் தேவை இல்லை. அவை மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்குள் வந்துவிடும்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் மொத்த மக்கள் தொகையை மிகவும் குறைத்துக் காட்ட ஆதிக்க சாதியினர் இடையறாது முயல்கின்றனர். அதே வேளை பிற்படுத்தப்பட்ட சாதி ஒன்றை அடித்தளமாக வைத்து உருவாகிவிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் சாதி மக்கள் தொகையை மிகையாகக் காட்டி அரசியல் ஆதாயம் பெற முனைகின்றன.
இந்த இரண்டு வகைத் தவறுகளிலிருந்து விடுபட உண்மையான சாதி வாரி மக்கள் தொகை தெரிய வேண்டும்.
கணக்கெடுப்பு அலுவலர்கள் மக்களிடம் அவர்களின் சாதியைக் கேட்கும் போது பெரும்பாலும் யாரும் தன் சாதியை மாற்றிச் சொல்ல மாட்டார்கள். கணக்கெடுக்கும் அலுவலர்களில் சிலர் தன் சாதி எண்ணிக்கையை உயர்த்திக் காட்ட தவறுகள் செய்யலாம். அவ்வாறு தவறு நிகழாமல் தடுக்க கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் அவ்வளவே.
ஒரு மாநிலத்தில் பின்தங்கியப் பட்டியலில் உள்ள சாதி, இன்னொரு மாநிலத்தில் பழங்குடி பட்டியலில் உள்ளது என்கிறார்கள். எடுத்துக்காட்டாக மீனா என்ற சாதி ராஜஸ்தானில் பழங்குடிப் பட்டியலில் இருக்கிறது. அதே மீனா சாதி மத்தியப்பிரதேசத்தில் பின்தங்கியோர் பட்டியலில் இருக்கிறது. இதை எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது என்று ப.சிதம்பரம் கேட்கிறார்.
சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அந்தந்த மாநிலத்தை அடிப்படை அலகாக வைத்துத்தான் எடுக்க வேண்டும். அந்தந்த மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர், முன்னேறியவர்கள் என்று மட்டுமே கணக்கெடுக்க வேண்டும். அனைத்திந்தியாவை ஓர் அலகாகக் கொள்ளக் கூடாது. மாநிலத்தைத்தான் ஓர் அலகாகக் கொள்ள வேண்டும்.
மாநிலங்களில் வரும் பட்டியலின் கூட்டுத் தொகையைத்தான் அனைத்திந்தியக் கூட்டுத் தொகையாகக் கணக்கிட வேண்டும். அதே போல் இட ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தும் போது அனைத்திந்தியப் பணியாக இருந்தாலும் மாநில வாரியாகத்தான் ஒதுக்கீட்டு விகிதத்தை வழங்க வேண்டும்.
நடுவண் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய போது, ப.சிதம்பரம் “இந்திய விடுதலைக்குப் பின், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரைத் தவிர பிற சாதிகள் பற்றிய தகவல்களைத் திரட்டக் கூடாது என்பது கொள்கையாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார். (இந்தியா டுடே-மே 26,2010). கடைசியாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இவர்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பைக் கடுமையாக எதிர்த்தார்.
அப்படி ஒரு கொள்கையைக் கடைபிடிக்கக் காரணம் பார்ப்பனர்கள் மற்றும் மேல் சாதியினர் ஆதிக்கத்தைப் பாதுகாப்பது தவிர வேறென்னவாக இருக்க முடியும்? பார்ப்பனர்கள் தங்கள் மக்கள் தொகை விகிதத்தைவிடப் பல மடங்கு வேலை வாய்ப்புகளையும் பிற வசதிகளையும் பெற்றுள்ளனர். கணக்கெடுப்பில் அவர்களின் எண்ணிக்கை தெரிந்துவிட்டால் அவர்களின் ஆதிக்க நிலைக்கு ஆபத்து என்று அச்சப்படுகிறார்கள். பார்ப்பனர்களை ஒத்த பிற மேல் சாதியினருக்கும் அதே அச்சம் தான்!
சாதி ஆதிக்கத்தைக் குறைக்க தாழ்த்தப்பட்ட மக்களைக் கை தூக்கிவிட சாதிவாரிக் கணக்கெடுப்பு கட்டாயத் தேவை. ஆதிக்க சாதியினர் சாதிப்பிளவு அதிகரிக்கும் என்று கட்டிவிடும் புரளியை முறியடிப்பது அனைத்து சாதிகளிலும் உள்ள சனநாயக ஆற்றல்களின் கடமை!
சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தேவை என்பதை 1990லிருந்தே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தி வருகிறது.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சூன் 2010 மாத இதழின் தலையங்கம்)
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment