ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பெண்ணியத்தின் திசைவழி - க.காந்திமதி

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மே 2010 இதழில் வெளியான கட்டுரை)
ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் கடந்த மார்ச் 8ஆம் நாளன்று பன்னாட்டு மகளிர் நாள் உலகெங்கிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கொண்டாடப்பட்டிருப்பது 100ஆவது மகளிர் நாள் என்பது கூடுதல் சிறப்பு. 1911ல் தொடங்கி கடந்த 100 ஆண்டுகளாக உலகெங்கிலும் உள்ள நாடுகளில் அந்தந்த நாட்டுப் பெண்களின் தேவைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் ஏற்றாற் போல் மகளிர் உரிமை கோரும் நாளாக இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து 1789ஆம் ஆண்டு சூன் 14ஆம் நாள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராகப் பெண்கள் உரிமைகள் பெறவேண்டும் என்றும், எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம், பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் ஆயுதங்களோடு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டு பெண்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஊர்வலத்தில் கலந்துகொண்டு அனைவரும் அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன்” என்றும், “என் அதிகாரம் கொண்டு அடக்குவேன்” என்றும் அந்நாட்டு அரசன் லூயி பிலிப் அறிவித்தான். அந்த நேரத்தில் அரசனின் இரண்டு மெய்க்காப்பாளர்களையும் கூட்டத்தினர் திடீரெனப் பாய்ந்து தாக்கி கொன்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அரசன் “உங்கள் கோரிக்கைகளைக் கண்டிப்பாகப் பரிசீலிப்பேன்; உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன்” என்று ஆர்ப்பாட்டக்காரர்களைச் சமாதானப்படுத்தினான். ஆனால் இந்த வாக்குறுதியை அந்த அரசனால் நிறைவேற்ற இயலாமல் போகவே முடிதுறந்தான்.

தொடர் போராட்டங்களின் விளைவாக பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயி பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். இந்த ஒப்புதல் அளிக்கப்பட்ட நாள் 1848ஆம் ஆண்டு மார்ச் 8 ஆகும்.

இன்னொருபுறம், அக் காலத்தில் அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகரமான நியூயார்க்கில் நெசவுத் தொழிலில் பெண்கள் பெருமளவில் ஈடுபட்டி ருந்தனர். ஒரு நாளைக்குப் பதினாறுமணிநேரம் வேலை செய்தும் மிகக் குறைவான ஊதியத்தையே அந்தப் பெண்கள் பெற்றுவந்தனர். அந்தக் குறைவான ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கியாக வேண்டும் என்ற சூழல் அங்கு இருந்தது. மேலும் பெண்களுக்கென்று தனியான கழிப்பறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அந்தத் தொழிற்சாலைகளில் செய்து தரப்படவில்லை.

1857ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி மேற்சொன்ன பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர். இதன் விளைவாக பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908இல் வாக்குரிமை கேட்டுப் போராடினர். அப்போதைய குடியரசுத் தலைவர் தியோடர் ரூஸ்வெல்ட்டே இந்தப் போராட்டங் களின் தாக்கத்தைக் கண்டு அதிர்ந்தார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் உள்ள பெண் களிடத்தில் கிளர்ந்தெழத் தொடங்கியது. இதன் விளைவாக 1910ல் கோபன்ஹேகனில் அனைத்து லகப் பெண்கள் நாள் மாநாடு கிளாராசெட்கின் தலைமையில் கூடி, சர்வதேச மகளிர் அமைப்பு தோற்று விக்கப்பட்டது.

அனைத்து நாட்டு மகளிர் நாள் நிறுவனர் என்ற பெருமை கிளாரா செட்கினுக்கே உண்டு. கிளாரா செட்கினுக்கும் லெனினுக்கு மான பெண்ணியம் குறித்த உரை யாடல் கருத்தாழ மிக்கதாக இன்றும் உலகளவில் மதிக்கப் படுகிறது.

சர்வதேச மகளிர் அமைப்பின் சார்பில் 1911ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் நாள் செர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து மகளிர் பிரதிநிதிகள் கலந்து கொண்டு முதல் பன்னாட்டு மகளிர் நாள் கொண்டாடப்பட்டது. இந்தக் கூட்டத்தில்தான் ஆண்டு தோறும் பன்னாட்டு மகளிர் நாள் கடைப்பிடிப்பது என்று முடிவெ டுக்கப்பட்டது.

பிரெஞ்சு அரசன் லூயி பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ஐ நினைவில் கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் (பன்னாட்டு மகளிர் நாள்) கடைப்பிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (1911ல் நடந்த மாநாட்டில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் 1975ல்தான் ஐ.நா. மன்றம் இந்த நாளை “பன்னாட்டு பெண்கள் நாளாக” ஏற்றுக்கொண்டது என்பது கவனத்திற்குரியது)

இந்த மாநாடு நடைபெற்ற அதே வாரத்தில் மார்ச் 25ஆம் நாளன்று நியூயார்க்கில் ஒரு கட்டிடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 140க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல்கருகி உயிரி ழந்தார்கள். இவர்களில் பெரும் பாலானவர்கள் இத்தாலி மற்றும் பாலஸ்தீனத்தில் இருந்து வந்தவர்கள். இந்த நிகழ்வே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டு வர மிக முக்கியக் காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுதொடங்கி உலகெங் கிலும் உள்ள பெண்கள் பொதுவாகத் தங்களுக்கு மறுக்கப்படும் உரிமை களுக்காகக் கோரிக்கை வைப்பதையும் ஒன்று கூடிப் போராடுவதையும் இந்த நாளைக் கொண்டு அடையாளப் படுத்தத் தொடங்கினர்.

பெண்கள் வாக்குரிமைப் போராட்டம்

பெண்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக பெண்கள் வாக்குரிமைப் போ ராட்டம் 18ஆம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு நாடுகளில் தொ டர்ந்து நடைபெறுகிறது. மேற்கு நாடுகளிலேயே 1900ஆண்டுக்கு பின்னரே பெரும்பான்மை நாடுகளில் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். 1902ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வில், 1920களில் ஐக்கிய அமெரிக்காவில், 1928ல் ஐக்கிய அரசாட்சியில் அதாவது பிரிட்டன் (யுனைட்டடு கிங்டம்), பெண் களுக்கு வாக்குரிமை வழங்கப் பட்டது. சவூதியில் இன்றுவரை பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப் படவில்லை.

தமிழ்ச் சூழலில் பெண்களின் நிலை

தமிழ்ச் சமூகச் சூழலில் பெண்களின் நிலையை நோக்கினால் மரபு, மதம், பண்பாடு, பழக்கம், என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லிப் பெண்களின் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.

பெண்களின் அடிப்படை பிரச்சினைகளாக வரதட்சிணைக் கொடுமை, பாலியல் கொடுமை, அரசுப் பதவிகளில் உரிய வாய்ப்பின்மை, பெண்குழந்தைக் கொலை, குடும்பம் மற்றும் சமூகத்தில் பெண்களுக்கென்று ஒரு பொதுவெளி யின்மை போன்ற வற்றைக் கூறலாம். பெண் கல்வியறிவு பெறுவாளாயின் இந்த அத்தனைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக் கூடிய தெளிவும் துணிச்சலும் பெண்ணுக்கே கிடைத்து விடும் என்ற அடிப்படையில் பெண் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று ஏறத்தாழ 20 ஆண்டுகளாக அரசாங்கம் பிரச்சாரம் செய்தது.

1991ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான பெண்கள் கல்வியறிவு பெற்றிருக்கவில்லை. ஒரு பெண் பெறுகின்ற கல்வி அவளுக்கு மட்டுமானதன்று; அவள் குடும்பத்தின் நல்வாழ்வையும், குழந்தைகளைத் தரமான முறையில் வளர்த்து செழிப்பான எதிர்காலச் சமுதாயத்தை உருவாக்குவதையும் அவள் பெறும் கல்வியே தீர்மானிக்கின்றது. இவ்வகையில் பெண்கல்வியின் முக்கியத்துவத்தை உலகம் பார்க்கத் தொடங்கியது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் கல்வி பெறும் உரிமையை மனிதர்களின் அடிப்படை உரிமையென அறிவித்தி ருப்பதோடு இனம், பால், சமூக, பொருளாதார வேறுபாடுகள் கடந்து அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள் வழங்கப் பரிந்துரைத்துள்ளது.

வாய்ப்பு கிடைக்கப்பெற்று கல்வி கற்கும் பெண்களுக்கும் இன்றைய கல்விமுறை தெளிவையும், துணிச்சலையும் ஏற்படுத்துவதாக இல்லை என்பதையே நடைமுறை யில் காணமுடிகிறது. மதிப்பெண் களைக் குறிவைத்து பாடங்களை மனப்பாடம் செய்வதில் பெண்களை முதன்மையானவர்களாக ஆக்கி யிருப்பதே இன்றைய கல்வியின் சாதனையாக இருக்கிறது. “பல்லா யிரம் நூல்களை மட்டும் வாசிப்பது கல்வியாகாது. பாடங்களை நெட்டுருச் செய்து தேர்வில் வெற்றி யடைந்து, பட்டம் பெறுவதும் கல்வியாகாது.” என்று சொல்லும் திரு.வி.க. கல்வி என்றால் என்ன என்பதற்குக் கீழ்க்காணுமாறு விளக்கம் தருகிறார். “கல்வி என்பது வாழ்வில் இரண்டறக் கலந்து வாழ்வுக்குரிய பயனை அளிப்பது. அறிவையும், ஒழுக்கத்தையும் வாழ்விற்கு வழங்குவது.”

ஆண்களைப் போலவே எல்லாப் பாடப்பிரிவுகளிலும் கல்வி கிடைக்கப்பெற்றும், எல்லாத் துறைகளிலும் வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற்றும் ஆண்களுக்கு இணையாக சில இடங்களில் ஆண்களைவிடவும் அதிகமாக சம்பாதிக்கும் அளவுக்குப் பெண்கள் நிலை இன்று மேம்பட்டிருக்கும் போதிலும் பெண்களின் அடிப்படை பிரச்சினைகளான வரதட்சிணைக் கொடுமையோ, பாலியல் கொடுமை யோ இன்றளவும் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை.

அரசுப் பதவிகளில் பெண் களுக்கு இடம் கிடைத் திருப்பினும் அப்பெண்களால் முழுசுதந்திரத்தோடு தங்கள் அதிகாரத்தைப் பயன் படுத்தவோ, பொறுப்பு களை நிறைவேற்றவோ இயலாத நிலையே இன்றளவும் உள்ளது.

குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்கள் தற்சார்புடையவர்களாக இல்லாமல் தந்தை, கணவன், சகோதரன், மகன், நண்பன், உயரதிகாரி - என்று யாரோ ஒரு ஆணின் சார்பிலேயே வாழவேண்டிய சூழல் தவிர்க்க முடியாததாகத்தான் இருக்கிறது. சரியான முறையில் தனித்துச் சிந்திக்கவோ செயல் படவோ அவர்கள் பெற்ற கல்வி அவர்களை வழிநடத்தத் தவறி வருகிறது என்பதையே இதிலிருந்து தெரிந்து கொள்ளமுடிகிறது.

பெண்ணுரிமை

பெண்ணுக்கு யாரிடத்திலிருந்து விடுதலை கோரப்படுகிறது. ஆணிடமிருந்தா? அல்லது இந்த சமூகத்திடமிருந்தா? முழுமையான விடுதலை கிடைக்கப்பெற்று பெண் மட்டும் தனித்து வாழ்தல் சாத்தியமா? மாறாக, ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை, அடிமைத்தனத்துக்குப் பழகிப்போன பெண்ணின் மனநிலை யிலிருந்து விடுதலை தேவைப் படுகிறது. ஆணும் பெண்ணும் இணைந்தது வாழ்வதுதான் ஒரு சமூகமாக முடியும்.

“உரிமை என்பது ஒருவர் கொடுப்பதுமன்று; மற்றொருவர் வாங்குவதுமன்று. அஃது எவரி டத்தும் எல்லாவிடத்தும் இயல்பாய் அமைந்து கிடப்பது. ...எவ்வுயிர் உரிமைக்கும் எவரும் கேடு நிகழ்த்தலாகாதென்பது பொது அறம். ...ஆண்மகன் பெண்மகளைத் தனக் குரிய காமப் பொருளாகவும், பணியா ளாகவும் கொண்ட நாள் தொட்டுப் பெண்மகள் உரிமையை இழக்க லானாள்.”(பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை -திரு.வி.க.பாவை பப்ளிகேஷன்ஸ்)

அண்மைக் காலமாகப் “பெண்ணுரிமை” என்று பேசும் சில பெண்ணியவாதிகள் ஆண்களோடு போட்டி போடுவதையும், ஆண்களை எதிரிகளாகப் பார்ப்பதையுமே பெண்ணுரிமை என்ற தவறுதலான புரிதலைப் புகுத்தி வருகிறார்கள். அதாவது பெண்ணுரிமை என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமான முரண் என்ற அளவில் மட்டும் பார்க்கப் படுகிறது. மேலோட்டமாகப் பார்க் கையில் இது சரியெனத் தோன்றி னாலும் உண்மையல்ல.

உற்பத்தி முறை, உற்பத்தி உறவு ஆகியவையே சமூகத்தின் அனைத்து உறவுகளுக்குமான நிலை யைத் தீர்மானிக்கிறது. இதைப் புரிந்து கொள்ள, வேளாண் தொழிலை எடுத்துக் கொள்வோம்.

நிலவுடைமைச் சமூக அமைப்பில், நிலவுடைமையாளர் - உழைப்பாளர் ஆகிய இருவரும் முரண்பட்ட நிலையில் உள்ளனர். அதாவது, நிலவுடைமையாளர் உழைப்பாளரின் உழைப்பைச் சுரண்டு கிறார். இதனால், முரண் வளர்கிறது.

இவர்களுக்கு அடுத்த நிலையில், வணிகர் இருக்கிறார். இவர் நிலவுடைமையாளரையும் சுரண்டுகிறார். முதலாளியக் கட்ட மைப்பு பெருகி, நிலவுடைமையின் அதிகாரம் முதலாளிகளுக்கு மாற்றப்படும்போது, நிலவுடைமை யாளர் முதலாளியால் சுரண்டப் படுகிறார். இந்நிலையில் முரண் மாறுபட்டு,

முதலாளி எதிர் நிலவுடைமையாளர்

நிலவுடைமையாளர் எதிர் வணிகர்

நிலவுடைமையாளர் எதிர் உழைப்பாளர்

உழைப்பாளர் எதிர் முதலாளி, வணிகர் - என்றாகிறது.

இதே போல்தான், ஆண் - பெண் உறவுநிலையும். இது எப்போதும் ஒரேவிதமாக இருந்ததே இல்லை. தாய்வழிச் சமூகம், தாயுரிமைச் சமூகம், ஆணாதிக்கச் சமூகம் என மாறி வந்துள்ளது. இந்த மாறுதல்கள் அனைத்தும் ‘ஆண் - பெண் சண்டைகளின் விளைவுகள் அல்ல’. மாறாக, அவ்வப்போது நிலவிய உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகளில் நிகழ்ந்த மாற்றங்களின் விளைவுகள் ஆகும்.

இந்தப் புரிதல் இல்லாமல், பெண்ணுரிமை பேசுவது ஆண் - பெண் முரணை மட்டும் அதிகரித்து இருபாலரும் இணைந்தே வாழ இயலாத சூழலையே உருவாக்கும். இவ்வாறு செய்வதுதான் முதலாளியச் சக்திகளின் நோக்கம். குடும்ப அமைப்பைச் சிதைப்பது முதலாளி யத்தின் - உலகமயத்தின் பேராசை ஆகும். உலகமயம் எந்தளவு வளர் கிறதோ அந்தளவு, குடும்பம் சிதை வதைக் காணலாம். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இச்சூழல் அதிகரித்து வருகிறது. ஒரே கூரைக்குள் இணக்கமாக, இருக்க வியலாத ஆணும் பெண்ணும் சமூக மாற்றங்களுக்காகப் போராடுவது சாத்தியமில்லை! இதைத்தான் உலக மயம் விரும்புகிறது.

பெண்ணுக்கு ஏற்படும் சிக்கல்கள் அனைத்திற்கும், ஆண் மட்டுமே காரணம் என்று கூறுவதன் வாயிலாக, சமூகத்தின் உற்பத்தி முறையில் நடக்கும் சீரழிவுகள் மறைக்கப்படுகின்றன.

ஆண்கள் தங்களது ஆதிக்கப் பண்பாட்டை மாற்றி பெண்களுடன் சமத்துவ உறவு கொள்ள வேண்டும். நிலவும் சமூகச் சுரண்டலுக்கெதிராக இவ்விருவரும் இணைந்து போராடி நிரந்தர விடுதலையைப் பெற வேண்டும்.

“பெண்ணுரிமை என்பது ஆண் மக்களைப் பகைத்து, அவர்கள் பதவிகளைப் பெற மூர்க்க நெறியில் நின்று, அவர்களைத் தாக்குவதன்று. மேல்நாட்டுப் பெண் மக்கள் உரிமை என்னும் பெயரால் வாழ்வையே குலைத்து வருகிறார்கள். பெண்ணு ரிமை என்பது ஆணுடன் போர் புரிவதன்று. ஆணுடன் வாழ்ந்து அன்பை வளர்ப்பது பெண்ணின் உரிமைக் கடன். ...பெண்ணுலகு ஆணுலகோடு போர் புரிவதால் பெண்ணுக்குரிய அமைதி கெடும்; உலகு அழியும்.” (பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை -திரு.வி.க.பாவை பப்ளி கேஷன்ஸ்)

பெண்ணுரிமை கோரு பவர்களுக்கு ஆண்கள் எதிரிகள் அல்லர். ஆண்களை எதிர்ப்பதோ, அவர்களோடு சண்டையிடுவதோ, போட்டி போடுவதோ பெண்ணு ரிமைக்கு வழிவகுக்காது என்பதில் முதலில் தெளிவான புரிதல் வரவேண்டும். “...ஆண்மக்களுடன் போராடுவது மட்டும் பெண்ணுரிமை ஆகாது” (பெண்ணின் பெருமை -திரு.வி.க.பாவை பப்ளிகே‘ன்ஸ்)

தங்களது விருப்பங்களை வெளிக்காட்டவோ நிறைவேற்றிக் கொள்ளவோ தடை ஏற்படுத்தும் அல்லது மறுக்கும் அல்லது எதிர்க்கும் ஆதிக்க மனப்பான்மையைத்தான் பெண்கள் எதிர்க்க வேண்டும். இந்த ஆதிக்க மனப்பான்மை ஆண்களி டத்தில் இருந்தாலும் சரி, பெண்களிடத்தில் இருந்தாலும் சரி.

“பெண்மக்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, இடுக்கணு மின்றிப் பிறப்புரிமை இன்பத்தை எங்கே நுகர்கிறார்களோ, அங்கே யுள்ள ஆண்மக்கள் நாகரிக நுட்ப முணர்ந்தவர்களாகிறார்கள். அந் நாடே நாகரிகம் பெற்றதாகும்.” (பெண்ணின் பெருமை -திரு.வி.க. பாவை பப்ளிகேஷன்ஸ்)

இந்த வகையில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக கோரிக்கை வைத்துப் போராட ஒன்றுகூடும் விதமான அடையாளத்திற்காக உருவாக்கப்பட்ட மார்ச் 8 மகளிர் நாள் கடந்த 100 ஆண்டுகளில் ஒரு கொண்டாட்டத்திற்குரிய நாளாகத் திரிந்துபோய்விட்டது. முழுமையான சுதந்திரம் பெற்றுவிட்ட நாளைத் தானே கொண்டாட முடியும். பெண்களுக்கெதிரான வன்முறை, பாலியல் கொடுமை, அகம்-புறம் என்று அனைத்துச் சூழல்களிலும் அடிமைத்தனத்தில் பெண்கள் அழுந்திக்கிடக்கும் போது கொண் டாட்டத்திற்குரிய நாளாக மார்ச் 8ஐ எப்படிச் சொல்லமுடியும்? என்ற கேள்வி எழுகிறது.

மகளிர் இயக்கங்கள்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இருபதாம் நூற்றாண்டு தொடங்கி நான்கு வழிகளில் மகளிர் இயக்கங்கள் செயல்பட்டு வந்திருக் கின்றன.

முதலாவதாகக் காந்தியக் கொள்கைப்படி கள்ளுக்கடை மறியல், கதர் உடுத்துதல், சுதேசி பொருட்கள் பயன்பாடு என்ற வகையில் சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் ஈடு பட்டனர். இவ்வகையில் வரம்பைத் தாண்டாமல், இந்து மதத்திற் குட்பட்ட உரிமைகள் மட்டுமே கையாளப்பட்டன.

இரண்டாவதாக பெரியாரிய கொள்கைப்படி இந்துமத சடங்குகளின் வழியான பெண்கள் ஒடுக்கு முறையை எதிர்த்தல், தாலி மறுப்பு, விதவைகள் தலைமை யில் திருமணம், சொத்துரிமை, கருத்தரிக்கும் உரிமை உள்ளிட்ட போராட்டங்களில் பெண் கள் ஈடுபட்டனர். பெண்ணுரிமை பற்றிய விழிப்பை ஏற்படுத்திய போதும் இவ்வகையில் மேற்கத்திய மயமாக்கல் மேலோங்கி இருந்தது. கிராப் வெட்டுவது, முழுக்கைச் சட்டை அணிவது போன்ற மேற்கத்திய வாழ்க்கை முறையே பெண்ணுரிமை அளிக்கும் என்பதே சிறந்த எடுத்துக் காட்டாகச் சொல்லப்பட்டது.

மூன்றாவதாக கம்யூனிச அமைப்புகளின் மகளிர் இயக்கங்கள் விலைவாசி பிரச்சினை, வரதட்சிணை போன்ற பொது அரசியல் வெளியில் மகளிரைக் கொண்டு வந்தன. போராட்டக்களங்களில் பெண் களைப் பங்கேற்க வைத்ததில் இது சிறந்த செயலாற்றியது. ஆயினும் ஒரு பெண் என்கிற வகையில் தனிப்பட்ட அவளது உரிமைப் பிரச்சினைகளை இந்த அமைப்பு கைக்கொள்ளத் தவறிவிட்டது.

நான்காவதாக உதிரிப் பெண்ணியவாதிகள். பெண்ணுரிமை பேசுவதாக நினைத்துக் கொண்டு ஆண்களை எதிரிகளாக்கிப் பெண்ணை உடலுக்குள்ளேயே ஒடுக்கி வைத்து, பெண்ணின் உடலை ஒரு சரக்காக மாற்றி குடும்பத்தை நிராகரிப்பது, அழகு தோற்றம் இவற்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பது, போன்ற பண்பாட்டை அறிமுகப்படுத்தி விட்டனர்.

பின் நவீனத்துவச் சிந்தனை மரபு பெண்ணியத்தை வெறும் பாலியல் நுகர்வுக் கருத்தியலாக மாற்றிவிட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. வரம்பு இல்லாத பாலியல் துய்ப்பு என்பதுதான் பெண்ணியத்தின் அடிப்படை என்பது இக்கோட்பாட்டின் அடிப்படையாக உள்ளது. உலகமயப் படையெடுப்பின் அங்கமாக இக்கோட்பாடு இன்று செயல்பட்டு வருகின்றது.

வரம்பற்ற பாலியல் துய்ப்பினால் ஏற்படும் துன்பங்களும் சுமைகளும் பெண்களுக்கே அதிகம் என்பதுதான் உண்மை. ‘கற்புநிலை என வந்தால் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்’ என்ற பாரதியாரின் முழக்கம் சரியானது. கற்பு என்ற கருத்தே தேவையில்லை என்று முழங்குவோர் வரம்பில்லாமல் பாலியலைத் துய்க்க விரும்பு வோராகவே இருக்க முடியும். அல்லது இம்முழக்கத்தின் உண்மைப் பொருளை அறியாமலும் இருக்கலாம்.

இவை அனைத்திற்கும் மாற்றாக நம் தமிழ் மண்ணுக்குரிய மரபு சார்ந்த தமிழ்ப் பெண்ணியமே பெண் அடிமைத்தனத்திலிருந்து பெண்களை மீட்கும் தீர்வாக அமைய முடியும். தமிழ்ப் பெண்ணியம் குறித்து வேறோரு வாய்ப்பில் விரிவாகக் காணலாம்.

‘ஆங்கிலத்தில் குடும்பம் என்ற பொருள்படும் family எனும் சொல்லின் வேர்ச்சொல்லான familus ‘அடிமைகளின் தொகுப்பு’ என்ற பொருள் கொண்டது. அதாவது கிரேக்கத்தில் குடும்பம் என்றாலே அது அடிமைகளின் கூட்டம்தான். அந்த அடிமைகள் பெண்கள்!’ இந்தக் கருத்தை மார்க்சிய மாமேதை எங்கெல்ஸ் தனது ‘குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் குறித்து’ எனும் நூலில் பதிவு செய்துள்ளார்.

‘ஆங்கிலம் இன்றும் இந்தச் சொல்லையே குடும்பத்தைக் குறிக்கப் பயன்படுத்துகிறது. தமிழர்கள் இல்வாழ்க்கையை ‘அறம்’ (இல்லறம்) என்றனர். தமிழர்களைப் பொறுத்தவரை குடும்பம் என்பது அறம் புரியும் அலகு. ஆண்-பெண் இணைந்து வாழ்வதுதான் குடும்பம் எனும் அறம் புரியும் அலகின் கரு!’ (நிலம் பெண்ணுடல் நிறுவனமயம் - ம.செந்தமிழன், பன்மைவெளி வெளியீடு)

ஆகவே, பெண்ணியம், பெண்ணுரிமை ஆகியவை நமது தமிழர் மரபில் சீர்தூக்கிப் பார்த்துப் புரிந்து கொள்ளத்தக்கவையே தவிர, அவை நம் மரபிற்கு எதிரானவை அல்ல!

அதே வேளை பழம் பெருமை பேசிக் கொண்டிராமல், இன்றைய தமிழ்ப் பெண்களின் அடிமைத் தளைகளை அறுத்தெறிய வேண்டும்.

தமிழ்ப் பெண்ணியத்தை நோக்கிய பயணத்தில் தமிழ்த் தேசியர்கள் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். ஆரிய - ஆங்கில தாக்கத்தால் தமிழர்க்கிடையே ஏற்பட்டுள்ள ஆணாதிக்கக் கருத்துகளை மாற்றி, உண்மையான பெண்விடுதலையை நோக்கிப் பயணிப்போம்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மே 2010 இதழில் வெளியான கட்டுரை)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.