அடக்குமுறை - தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்ட் 2010 இதழின் தலையங்கம்
அடக்குமுறை
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்ட் 2010 இதழின் தலையங்கம்
வீரமில்லா அரசனுக்கு வீராப்பு அதிகமிருக்கும். அயல் இன மன்னனுக்கு அடிமைப் பட்டு அவனுக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருக்கும் சிற்றரசன் தன் குடிமக்கள் மீது கொடுங்கோல் ஓச்சுவான். இது ஓர் அடிமை உளவியல். இந்த உளவியலின் சனநாயகக் காலச் சின்னமாக விளங்குகிறார் கருணாநிதி.
தமிழ், தமிழினம் தொடர்பாக உரிமைக் குரல் எழும்போதெல்லாம், கருணாநிதி காயம்பட்டுப் போகிறார். இவை தமது அரசியல் பிழைப்பிற்கு ஆப்பு வைக்கும் குரல்கள் என்று கருதி ஆத்திரப்படுகிறார். அவர் தமிழை வர்ணித்து வாழ்பவரே தவிர தமிழுக்குப் புதிய வரலாறு படைப்பவர் அல்லர்.
அது மட்டுமின்றி, இந்த உரிமைக் குரல்கள் தமது இன இரண்டகத்தை - மொழி இரண்டகத்தை இடித்துக் காட்டவே எழுப்பப்படுகின்றன என்று அவர் மனம் குறுகுறுக்கிறது; குமுறுகிறது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது அவரும் அவரது ஏவல் துறையும் நடத்திய அடக்குமுறை ஆட்டம் மேற்கண்ட அடிமை உளவியலின் வெளிப்பாடுதான்.
செம்மொழி மாநாடு தொடங்குவதற்கு ஒரு கிழமைக்கு முன்பிருந்தே அடக்குமுறையை ஏவி விட்டார்கள். தமிழ்மொழி, தமிழ் இன உரிமைகள் தொடர்பாகக் கூட்டம் நடத்த அனுமதி மறுத்தார்கள். தமிழ் வாழ இன்னின்ன செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சுவரொட்டி ஒட்டியவர்களைத் தளைப்படுத்தினார்கள். சிங்கள இனவெறி அரசு இந்தியாவின் துணையோடும், கருணாநிதியின் மறைமுக ஆதரவோடும் ஈழத்தமிழர்களை ஆயிரம் ஆயிரமாய் இனப்படுகொலை செய்து அழித்ததைக் கண்டித்துச் சுவரொட்டி ஒட்டியோர், துண்டறிக்கை கொடுத்தோர் பலரையும் சிறையில் தள்ளினர். கருணாநிதியின் இரண்டகங்களைக் கைபேசிக் குறுஞ்செய்திகளாக அனுப்பியோரையும் தளைப்படுத்தினார்கள்.
விழுப்புரம் தண்டவாளத்தில் வெடி குண்டு வெடித்தது என்றார்கள். அப்பகுதி இன உணர்வாளர்களை அள்ளிக் கொண்டு போய் காவல் நிலையங்களில் வைத்து அச்சுறுத்தினார்கள். உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்த பின் அந்த அப்பாவிகளை விடுவித்தார்கள்.
விழுப்புரத்தில் வெடிகுண்டு வைத்தவர்கள் யாரென்று இதுவரை கண்டு பிடிக்கப்பட வில்லை. அது செம்மொழி மாநாட்டு வெடி குண்டாக இருக்குமோ?
செம்மொழி மாநாடு நடக்கும் போது அம்மாநாடு குறித்தத் திறனாய்வுகளைத் துண்டறிக்கை, சுவரொட்டி, பொதுக்கூட்டம், குறுஞ்செய்தி போன்ற வடிவங்களில் வெளிப்படுத்துவது குற்றமா?
அந்த மாநாடு தொடங்குவதற்கு முன்னும், நடைபெறும் போதும் அரசமைப்புச் சட்டத்தின் விதி 19 நிறுத்தி வைக்கப்பட்டதா? கருத்துரிமைகள் தடை செய்யப்பட்டனவா? அதற்கான அதிகாரம் தமிழகத்தின் கங்காணி அரசுக்கு இருக்கிறதா? இல்லை. இல்லை.
கங்காணி அரசிடம் உள்ள காவல்துறையின் முரட்டு வலிமையை வைத்துக் கருணாநிதி சர்வாதிகாரத்தைச் சாதித்துக் கொள்கிறார். இவ்வகைச் சர்வாதிகாரம் இந்திய ஏகாதிபத்தியத்திற்கு மிகவும் இனிப்பானது. தனது கங்காணி, தமிழ் இன உரிமைக் குரலை நசுக்கத் தடி எடுப்பதைக் கண்டு இந்திய ஏகாதிபத்தியம் ஓசை வராமல் உள்ளுக்குள் சிரித்து மகிழும்! துக்ளக் சோ, இந்து ராம், சுப்பிரமணிய சாமி போன்ற ஆரியப்பிரதிநிதிகள், ‘இது ஓர் அரை குறை அடக்குமுறை’ என்று அரை குறைக் களிப்பெய்துவர்.
கோவைச் செம்மொழி மாநாட்டில் (23.06.2010 - 27.06.2010) இலட்சக் கணக்கில் மக்கள் கூடினர். (மாநாடு குறித்த நமது திறனாய்வுகள் இருக்கின்றன. அது குறித்த கட்டுரை இவ்விதழில் வந்துள்ளது). இலட்சக் கணக்கான தமிழர்களை ஈர்க்கும் ஆற்றல் தமிழுக்கிருக்கிறது என்பதை மறுபடியும் தமிழ் மெய்ப்பித்துள்ளது. அண்மைக் காலமாக தமிழ் உணர்ச்சி பெருகியுள்ளது என்று அம்மாநாட்டின் தொடக்க விழாவில் பேசிய போது கருணாநிதி குறிப்பிட்டார். அக்கூற்றை மாநாட்டு நிறைவு விழாவில் பேசிய பிரணாப் முகர்ஜி வழி மொழிந்தார்.
வளர்ந்து வரும் தமிழ்ப் புத்தெழுச்சியை எப்படிக் கையாள்வது, எவ்வாறு கையடக்கப் படுத்துவது என்ற கவலையில் கருணாநிதி, செயலலிதா உள்ளிட்ட தமிழகக் கங்காணித் தலைவர்கள் பலரும் மூழ்கியுள்ளனர்.
தமிழ்ப் புத்தெழுச்சியைத் தடம் மாற்றிவிடத் தமிழகத் தேர்தல் கட்சித் தலைவர்கள் இருக்கும்போது, தான் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை என்று தில்லி ஏகாதிபத்தியம் தெம்பாக இருக்கிறது.
செம்மொழி மாநாட்டில் வெள்ளம் போல் கூடிய மக்கள் கூட்டமும், அங்கு பழந்தமிழர் பண்பாட்டை விளக்கிடும் வகையில் நடந்த “இனியவை நாற்பது” என்ற காட்சி ஊர்வலமும், தமிழர்களின் வரலாற்றுப் பெருமிதத்தையும், பன்முகச் சிறப்புகளையும் வெளிப்படுத்திய கண்காட்சி போன்றவையும் தமிழ்ப் பொது மக்களின் மனதில் தமிழிய உணர்ச்சியைத் தூண்டியுள்ளன.
தமிழ் ஏடுகள் பலவும், ஆங்கில ஏடுகள் சிலவும் விரிவாக மாநாட்டுச் செய்திகளைக் கொடுத்தன. கருணாநிதி புகழ் பாடின. சார்ந்து வாழும் தகைமையாளர்களாக வலம் வரும் காக்கைக் கல்வியாளர்கள், காக்கைப்பாடிகள் பலரும் கருணாநிதியை நாத்தழும்பேறப் புகழ்ந்தனர்.
இவை அனைத்தும் சேர்ந்து, தமிழ்ப் புத்தெழுச்சியைத் தமது புத்தெழுச்சியாகக் கருதிக் கொள்ளும் மயக்கத்தைக் கருணாநிதிக்கு அளித்தன. தமிழும் தாமும் வேறு வேறு அன்று என்று அவர் எண்ணிக் கொண்டார்.
இனி தமிழ் மொழி உணர்வாளர்களையும் தமிழ் இன உணர்வாளர்களையும் தாக்கி ஒடுக்கினால் தமது இரண்டகத்தை யாரும் இனம் காண மாட்டார்கள் என்று நம்பிக்கை கொண்டார்.
தமிழ் மொழிக்காவலர் என்ற தமது புனைவுப் படிமம் அந்தளவுக்குப் பெருத்துள்ளது என்று தவறாகக் கணித்துக் கொண்டார்.
இந்தத் தெம்பில் அமைச்சர் துரைமுருகனை ஏவி தமது அடக்குமுறை அறிவிப்பை வெளியிடச் செய்தார். சென்னை உயர்நீதிமன்ற நிகழ்வொன்றில் 10.07.2010 அன்று பேசிய துரைமுருகன், “சில சிறுசிறு குழுவினர் இந்திய ஒருமைப் பாட்டிற்கெதிராகவும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலும் பேசி வருகிறார்கள். இவர்கள் ‘பேச்சுரிமை’ என்பதன் கீழ் ஒளிந்து கொள்கிறார்கள். இனி இவர்களை விடமாட்டோம். இப்பொழுதுள்ள சட்டங்கள் படியும் நடவடிக்கை எடுப்போம். தேவைப்பட்டால் இதற்காகப் புதிய சட்டங்களை இயற்றியும் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
இப்பேச்சின் உடனடி விளைவாக, நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமானைச் சிறைப்படுத்தி வேலூரில் அடைத்தனர். அதன்பிறகு, ஓராண்டுக்குப் பிணையில் வெளிவரமுடியாதபடி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தையும் அவர்மீது பாய்ச்சினர்.
என்ன குற்றம் செய்தார் சீமான்? 7.7.2010 இரவு வேதாரணியம் அருகிலுள்ள கோடியக்கரைக்கும் தோப்புத்துறைக்கும் இடையே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த செல்லப்பனைச் சிங்களக் கடற்படையினர் அடித்தே கொன்றனர். அவருடன் இருபடகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களை அடித்துத் துன்புறுத்தி அவர்களின் ஆடைகளைக் களைந்து கடலில் வீசினர். அவர்களின் மீன் வலைகளை அறுத்தெறிந்தனர். அவர்கள் பிடித்துவைத்திருந்த மீன்களையும், அவர்களின் உணவுப்பொருட்களையும் கடலில் வீசினர். ஒரு படகில் இருந்த நால்வரை அம்மணமாகத் திருப்பி அனுப்பினர்.
சிங்களர் நடத்தும் இவ்வாறான இனப்படு கொலைகள் 450க்குமேல் நடந்துள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடவைகள் தமிழக மீனவர்களைச் சிங்களப் படையினர் தமிழகக் கடல் எல்லைக்குள் வந்தும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும் தாக்கியுள்ளனர்.
இக்கொடுஞ் செயலைக் கண்டித்திட 10.07.2010 அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது நாம் தமிழர் இயக்கம். அதில் பேசிய சீமான் “சிங்களர்கள் தமிழக மீனவர்களைக் கொலை செய்வதும் தாக்குவதும் தொடர்ந்தால், தமிழகத்தில் உள்ள சிங்களர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
இதற்காக, இரண்டு இனங்களுக்கிடையே நிலவும் நல்லிணக்கத்தைக் கெடுத்துப் பகை உண்டாக்கினார் என்று குற்றம் சாட்டி சீமானைத் தளைப்படுத்தினர். தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே என்ன நல்லிணக்கம் நிலவுகிறது? சிங்களர்கள் ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றார்கள். தமிழ் நாட்டில் 450க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொன்றார்கள். இப்படிப்பட்ட தமிழர் - சிங்களர் நல்லிணக்கத்தைத்தான் கருணாநிதி விரும்புகிறாரா?
இந்த ஒருதலைச் சார்பு நல்லிணக்கம் முறிந்து தமிழர்கள் சிங்களர்களுக்குப் பதிலடி கொடுக்கும் நிலை வந்துவிடக் கூடாது என்று கருதுகிறாரா?
உலகில் பகை நாடுகளுக்கிடையே கடலும் மீன்பிடித் தொழிலும் இல்லையா? அங்கெல்லாம் அடுத்த நாட்டு மீனவரைச் சுட்டுக் கொல்கிறார்களா? பாகிஸ்தானும் இந்தியாவும் எல்லை தாண்டும் மீனவர்களைச் சிறைப் பிடிக்கின்றனவே தவிர, சுட்டுக் கொல்வதில்லையே? எல்லை தாண்டி வந்து சென்னை அருகேயும் ஆந்திரக் கடல் பகுதியிலும் மீன் பிடிக்கும் சிங்கள மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல்படை தளைப் படுத்துகிறதே தவிர, சுட்டுக் கொல்வதில்லை.
இந்திய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும், கருணாநிதி, செயலலிதா உள்ளிட்டத் தமிழகக் கங்காணி ஆட்சியாளர்களும் கொடுக்கும் ஆதரவால்தான் சிங்களப் படை தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்கிறது.
இந்த இனப்படு கொலையைத் தடுத்து நிறுத்த வலுவான முயற்சிகள் எடுக்காத கருணாநிதி தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்குக் குரல் கொடுப்போரைச் சிறையில் தள்ளுகிறார்.
தமிழக மீனவர் மீது சிங்களர் நடத்தும் இனப்படு கொலையைக் கண்டித்தும் ஐ.நா. மன்றப் பொதுச் செயலர் பான்-கீ-மூன் அமைத்துள்ள இலங்கைப் போர்க்குற்ற விசாரணைக் குழுவை அனுமதிக்காத இலங்கை அரசைக் கண்டித்தும் 14.07.2010 அன்று சென்னையில் இலங்கைத் தூதரகத்தை மூடக்கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அவ்வமைப்பின் தலைவர்களான திரு. பழ.நெடுமாறன், திரு. வைகோ உள்ளிட்ட முந்நூறு பேரைச் சிறையிலடைத்தார் கருணாநிதி.
தமிழர் - சிங்களர் நல்லிணக்கத்தைக் கெடுத்தார்கள், இரு இனத்திற்கும் இடையே பகை மூட்டினார்கள் என்ற அதே குற்றச்சாட்டைக் (153அ) கூறித்தான், அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திய இவர்களையும் சிறையிலடைத்தார்கள்.
தமிழ் இன உணர்வாளர்களை அச்சுறுத்தவும் தமிழ்த் தேசிய அமைப்புகளை மிரட்டவும் இந்த அடக்கு முறைகளை ஏவுகிறார் கருணாநிதி.
தமிழ்நாட்டில் தமிழினத்திற்கெதிரான அடக்குமுறை என்பது கருணாநிதியோடு மட்டும் தொடர்புடையதன்று.
செயலலிதாவும் தமிழினத்திற்கெதிராகக் கடும் அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவரே, அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ள ம.தி.மு.க. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் இலங்கைத் தூதரக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன. அக்கட்சிகளின் தோழர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். அக் கைதைச் செயலலிதா கண்டிக்கவில்லை. தமிழின உணர்ச்சி மீது அவருக்குள்ள வெறுப்பு மாறவே இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் சிங்களப் படையால் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை தான் எதிர்க்கவில்லை என்றும், சரணடைந்த மக்கள் கொல்லப்பட்டதைத்தான் கண்டிப்பதாகவும் அண்மையில் கருணாநிதிக்குப் பதில் அளித்து செயலலிதா அறிக்கை வெளியிட்டார். “ஈழம் அமைத்துத் தருவேன்” என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் செயலலிதா வாக்குறுதி கொடுத்தது நயவஞ்சக நாடகம் என்பது இப்பொழுது அவர் அறிக்கை மூலமே உறுதிப்பட்டு விட்டது. இப்பொழுது, முள்வேலி முகாமுக்குள் இருக்கும் தமிழர்களுக்காக அவர் பரிந்து பேசுவதும் தேர்தல் நெருங்கி வருவதால் ஏற்பட்ட “நெருக்கம்” தவிர வேறல்ல!
தமிழ் இன உணர்வாளர்களிடையே எழும் கருணாநிதி எதிர்ப்பு, செயலலிதா ஆதரவாக மாறக் கூடாது. அச்செயல் கருணாவை எதிர்த்து டக்ளஸ் தேவானந்தாவுடன் சேர்ந்து கொள்வது போன்றதாகும்.
தேர்தல் கட்சிகள் கருணாநிதியுடனும் செயலலிதாவுடனும் மாறி மாறிச் சேரக் காரணம் இலட்சிய நோக்க மன்று; நாற்காலி நோக்கம் மட்டுமே! உண்மையான இலட்சியவாதிகளுக்கும் - தமிழ்த்தேசியர்களுக்கும் இலட்சிய நோக்கம் தவிர நாற்காலி நோக்கம் இருக்கவே முடியாது.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதைத் தான் எதிர்க்கவில்லை என்று செயலலிதா கூறிய கூற்றை ம.தி.மு.க.வும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
நாற்காலி நோக்கர்கள் தமிழ்த் தேசியர்களைக் குழப்பிவிட “ராஜதந்திரம்” என்றும் “வியூகம்” என்றும் “குறைந்த அபாயம் உள்ளவர்” என்றும் “எதிரியையும் பயன்படுத்திக் கொள்ளும் உத்தி” என்றும் ஏதேதோ மாய்மாலப் பேச்சு பேசி, கருணாநிதி - செயலலிதா இடையே ஊஞ்சல் விளையாட்டு (பார்)விளையாடுவார்கள். அந்தச் சொல் வலைகளுக்குள் தமிழ் இன உணர்வாளர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது.
தேர்தலைப் புறக்கணிப்பதிலும் தேர்தல் கூட்டணிகளை மறுப்பதிலும்தான் தமிழ்த்தேசிய வளர்ச்சி இருக்கிறது. தேர்தலில் பங்கெடுப்பதும் தேர்தல் கூட்டணி ஒன்றை ஆதரிப்பதும் தனிமனித வளர்ச்சிக்குப் பயன்படலாம். தமிழ்த் தேசிய வளர்ச்சிக்குப் பயன்படாது. தேர்தல் என்பது எதிரியின் களம்; நம் களம் அன்று.
எதிரியின் அம்பு மழைக்கிடையே உட்புகுந்து முன்னேறித் தாக்கும் புறநானூற்றுப் பொருநனைப் போல அடக்குமுறையின் ஊடாகத் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்போம்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்ட் 2010 இதழின் தலையங்கம்)
Leave a Comment