லிபியா: கொதிக்கும் எண்ணெயிலிருந்து எரியும் அடுப்புக்குள்


சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்க விளையாட்டில் சிக்கிவிட்டதற்கு லிபியா ஒரு எடுத்துக்காட்டாகிவிட்டது.

லிபியத் தலைவர் மும்மர் கடாபி 2011 அக்டோபர் 20 அன்று லிபியாவின் சிர்த்தே நகரில் குண்டடிபட்டு ஒரு கழிவுநீர்க் குழாயில் பதுங்கியிருந்தபோது, அவரை வெளியே இழத்து வந்து இரத்தம் சொட்ட சொட்ட சித்திரவதை செய்து அடித்தேக் கொன்றுவிட்டனர், அந்நாட்டின் இடைக்கால அரசின் படையாட்கள்.

கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்ற வகையில் கடந்த 2011 பிப்ரவரி 17 முதல், பெங்காசி நகரில் தொடங்கிய மக்கள் போராட்டம் விரைவிலேயே பிரித்தானிய, பிரஞ்சு, அமெரிக்க வல்லரசுகளின் பகடைக்காயாக மாறிப் போனது.

தனது ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை வழக்கம் போல் கடுமையான அடக்குமுறைகளை ஏவி ஒடுக்கினார் கடாபி. லிபியாவின் எண்ணெய் வளத்தின் மீது கண்ணாக இருந்த வல்லரசுகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டன. தாங்கள் தலையிடுவதற்கு ஏற்றாற்போல் மேற்கத்திய ஊடகங்கள் வழியாக வதந்திகளைப் பரப்பின. அப்பாவி மக்கள் மீது கடாபி அரசு வான்தாக்குதல் நடத்துவதாகவும், தனக்கு எதிராகப் போராடும் பழங்குடி இனப்பெண்கள் மீது பாலியல் வல்லுறவுத் தாக்குதல் நடத்துவதற்காக லிபியப்படை வீரர்களுக்கு வயாக்ரா மாத்திரை வாங்கி கடாபி அரசு விநியோகித்ததாகவும் கதைகட்டி விட்டனர்.

இதைத் தொடர்ந்து வான் முற்றுகையிடுவது என ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டனர். லிபிய வான்பரப்பில் கடாபியின் போர் விமானங்களைத் தடுப்பது என்ற பெயரால் நேட்டோ படைகள், முழுவீச்சிலான ஆக்கிரமிப்புப் போரை தொடங்கினர். கலகப்படையினருக்கு ஏராளமான ஆயுதங்கள் வழங்கின.

நேட்டோவின் ஆதரவோடு, கலகப்படையினர் நடத்திய கடும் தாக்குதலில் கடந்த ஆகஸ்ட் 19 அன்று லிபியத் தலைநகர் திரிபோலி வீழ்ந்தது. அதைத் தெடர்ந்து கடாபி இனி லிபியாவின் அதிபரல்ல என உலக நாடுகள் அறிவித்தன. லிபியாவின் தேசிய இடைக்கால ஆட்சிக்குழு லிபியாவின் பிரதிநிதியாக கடந்த செப்டம்பர் 16இல் ஐ.நா.வில் ஏற்கப்பட்டது.

கண்மூடித்தனமான வான்தாக்குதலில் கருப்பின ஆப்ரிக்கர்கள் மீதான இனக்கொலைத் தாக்குதலும் தொடர்ந்தன. பின்வாங்கி ஓடிய கடாபியும், அவரது படையினரும் கடைசியில் கடாபி பிறந்த ஊரான சிர்த்தேயில் சிக்கினர். அக்டோபர் தொடக்கத்திலிருந்தே சிர்த்தே நகரம் நேட்டோ வான்தாக்குதலில் தரை மட்டமானது. அக்டோபர் 20 அன்று ஒரு சிறியப் படைக்குழுவினருடன் பின்வாங்கிச் சென்று கொண்டிருந்த கடாபி அணியினர் மீது நேட்டோ நடத்திய வான் தாக்குதலில் நூற்றுக்கணக்கான படையினர் உடல் சிதறி மாண்டனர். கால்களில் குண்டுக் காயங்களோடு கடாபியும் அவரது மகன் முட்டாசின் கடாபியும் சிக்கினர். அவர்களை லிபிய இடைக்கால அரசப் படையினர் அடித்தேக் கொன்றனர்.

லிபியாவின் புதிய ஆட்சி போர்க்குற்றங்களோடு இணைந்தே உருவாகியிருக்கிறது. இசுலாமிய சட்டங்கள் வழி இனி லிபியாவின் ஆட்சி நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. உலக வல்லரசுகளின் படை உதவியோடும், அரசியல் ஆதரவோடும், தூக்கி நிறுத்தப்பட்டுள்ள லிபியாவின் புதிய ஆட்சி லிபிய மக்கள் சார்ந்த ஆட்சியாக இருக்குமா என்பது ஐயமே.

எண்ணெய் வளத்தைக் கொண்டு, லிபியாவின் முகத்தோற்றத்தையே மாற்றியவர் கடாபி. மிகவும் வறுமைப்பட்டிருந்த அந்நாட்டில் கடாபி ஆட்சியில் கல்வியற்றவர்களோ, வீடற்றவர்களோ, அடிப்படை வசதியற்றவர்களோ யாருமில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில், எகிப்தியத் தலைவர் நாசரைப் போல், தற்சார்பான ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையில் இருந்த மும்மர் கடாபி 2001க்குப் பிறகு மேற்கத்திய நாடுகளின் நண்பரானார். ஆயினும், அவரது புதிய நண்பர்களே அவரது வீழ்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தனர்.

நாம் ஏற்கெனவே 2011 மார்ச்16-31 ஆசிரிய உரையில் சுட்டிக்காட்டியது போல் லிபியா கொதிக்கும் எண்ணெயிலிருந்து தப்பித்து எரியும் அடுப்புக்குள் வீழ்ந்திருக்கிறது. லிபிய மக்கள் விழிப்புணர்வு பெற்று தற்சார்பான சனநாயக ஆட்சியை நிறுவிக் கொள்ளத்  தொடர்ந்து போராட வேண்டியது தேவையாகிவிட்டது.

Related

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 3149005417438585035

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item