திராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்! தோழர் பெ. மணியரசன்.
திராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்! தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள் திராவிடத்திற்குப் புத்துயிர் ஊட்ட புதிய உளிகளோடு கிளம்பியுள்ளார்கள். சொந்தத் தத்துவமோ, சொந்த சித்தாந்தமோ இல்லாதவை திராவிடக் கழகங்கள். அதனால் அவர்கள் தங்கள் தலைவர்களை சாக்ரடீஸ், இங்கர்சால் என்று அயல்நாட்டுத் தலைவர்கள் பெயரில் அழைத்துக் கொள்கிறார்கள்.
திராவிடத்திற்கென்று என்றுமே தனித்துவமான தத்துவமோ, சித்தாந்தாமோ இருந்ததில்லை! அதில் கொஞ்சம் – இதில் கொஞ்சம் எடுத்துக் கொள்வார்கள். தமிழறிஞர்கள் முன்வைத்த தமிழ் இன - மொழி கருத்துகள், மேற்கத்திய நாத்திகவாதம், காங்கிரசார் - கம்யூனிஸ்ட்டுகள் சொல்லும் கொள்கைகள் முதலியவற்றில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் பஞ்சாமிர்தத் தத்துவம் பேசுவார்கள். “மாஸ்கோவுக்குப் போவேன், மாலங்கோவைப் பார்ப்பேன்; நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட் என்பேன்” என்று பேசினார் அண்ணா.
திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகளே, உங்கள் கழகங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குச் செய்த சாதனைகள் என்ன? உங்கள் திராவிடக் கட்சிகள் உருவாகவில்லை என்றால் தமிழர்கள் – உங்கள் பெரியார் சொன்னதுபோல் காட்டுமிராண்டிகளாக – நாடோடிக் கூட்டமாக அலைந்து திரிந்திருப்பார்களா? உங்களுக்கு அறைகூவல் (சவால்) விடுக்கிறோம். எந்தக் காலத்தில் – எந்த நூற்றாண்டில் தமிழர்களைவிட வட இந்தியர்கள் முன்னேறி இருந்தார்கள்? எதில் முன்னேறி இருந்தார்கள்?
எந்தக் காலத்தில் தமிழர்கள் பின்தங்கியிருந்தார்கள்?
கடந்த ஐயாயிரம் ஆண்டு வரலாற்றை எடுத்துக் கொண்டு விவாதிப்போம்! எந்தக் காலத்தில் உ.பி., ம.பி., பீகார், இராசஸ்தான்காரர்களை விடத் தமிழர்கள் எதில் பின் தங்கி இருந்தார்கள்? வங்காளிகளும், மராத்தியரும் தமிழர்களைவிட முன்னேறி இருந்தார்களா?
சங்க காலத்திலும் அதற்கு முன்னரும் நடந்த மன்னராட்சியில் தமிழர்கள்தாம், தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில், குறிப்பாக வணிகத்தில் – கல்வியில் – கலைகளில் முன்னேறி இருந்தனர். பூம்புகார், கொற்கை, முசிறி இவையெல்லாம் தமிழர் வணிகத்தின் பன்னாட்டுத் துறைமுகங்கள். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் வேட்டையாடப் போன தமிழன் கூடத் தன் பெயரை கோடரி போன்ற வேட்டைக் கருவிகளில் தமிழில் பொறித்து வைத்திருந்தான். தமிழ்நாட்டில் கல்வி அவ்வளவு வளர்ச்சி பெற்றிருந்தது என்று ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கூறுகிறார். (செம்பியன் கண்டியூர் கற்கோடரியில் பெயர் பொறித்திருந்ததைப் பார்த்த போது).
திராவிடத் தலைவர்கள் அவதாரம் எடுக்கவில்லையென்றால் தமிழர்கள் படித்திருக்க மாட்டார்கள்; மாடு மேய்த்துக் கொண்டிருப்பார்கள் என்று தமிழ் இனத்தை ஏகடியம் பேசுகின்றீர்கள். ஆடுமாடு மேய்த்த தமிழனும், தமிழச்சியும் கல்வி கற்று விட்டுத்தான் அந்த வேலையைச் செய்தார்கள். படிக்காத காட்டுமிராண்டிச் சமூகத்தில்தான் 3,500 ஆண்டுகளுக்கு முன் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் எழுதப்பட்டனவா?
படிக்காத தமிழ்ச்சமூகம்தான் மூன்று தமிழ்ச் சங்கங்களை உருவாக்கி, அதில் புலவர்கள் படைப்புகளை அரங்கேற்ற வேண்டும் என்று ஏற்பாடு செய்ததா? எண்ணற்ற பெண்பாற் புலவர்களை உருவாக்கியதா?
படிக்காத காட்டுமிராண்டித் தமிழ்ச்சமூகம்தான் ஆதிச்சநல்லூர் – கீழடி – அரப்பா வரையிலான ஐயாயிரம் ஆண்டு நாகரிகச் சின்னங்களை வைத்திருக்கிறதா?
ஆங்கிலேய ஆட்சி வருவதற்கு முன்பே இரும்பு உருக்குத் தொழில் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் சிறப்பாக இருந்தது என்று மேற்கத்திய ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் வட இந்தியாவைவிட பெருளாதாரத்திலும் கல்வியிலும் தமிழ்நாடுதான் முன்னேறி இருந்தது.
இந்திய விடுதலைக்குப் பின் நடந்த காங்கிரசு ஆட்சியிலும், வட இந்திய மாநிலங்களை விடத் தமிழ்நாடுதான் கல்வியில் முன்னணியில் இருந்தது. படித்தோர் எண்ணிக்கை (Literacy Rate) வட இந்தியாவை விடத் தமிழ்நாட்டில்தான் அதிகம்!
மன்னராட்சியிலேயே 2,000 ஆண்டுகளுக்கு முன் கல்லணை கட்டிய இனம் தமிழினம்! பொறியியல் துறையின் மிகப்பெரிய சாதனையாக 1,000 ஆண்டுகளுக்கு முன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய இனம் தமிழினம்! வெள்ளைக்காரன்தான் மேட்டூர் அணை, முல்லைப் பெரியாறு அணை போன்றவற்றைக் கட்டினான். பிறகு காங்கிரசு ஆட்சியில் பவானி சாகர் உள்ளிட்ட பல அணைகள் கட்டப்பட்டன.
பெரிய ரெயில்வே தொழிலகங்களைத் தமிழ்நாட்டில் வெள்ளைக்காரன் நிறுவினான். காங்கிரசு ஆட்சியில் ஆவடி, திருச்சி படைக்கலத் தொழிற்சாலைகள், பி.எச்.இ.எல்., நெய்வேலி தொழிற்சாலைகள் கட்டப்பட்டன. திராவிட ஆட்சிகளும் வேறு சில திட்டங்களை நிறைவேற்றின. ஓர் ஆட்சியின் அடிப்படை அது!
பாழாய்க் கிடந்த – நாடோடிக் கும்பலைக் கொண்டிருந்த தமிழ்நாட்டில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கல்வியைக் கொண்டு வந்தன; தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தன என்பன போன்ற கட்டுக்கதைகளை இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள் – திராவிடச் சிற்பிகளே!
சுரண்ட வந்த வெள்ளைக்காரன்கூட ஆட்சி நிர்வாகம் அமைத்த பின், கல்வி – வேலை – தொழில் – வேளாண்மை – பொதுநலம் எனப் பல துறைகளில் பல முன்னேற்றங்களை உண்டாக்கினான். வெள்ளைக்காரனுக்கு மாறாக சோழர் – பாண்டியர் ஆட்சியின் நீட்சியாக சனநாயக மலர்ச்சி ஏற்பட்டு தமிழர் ஆட்சி தொடர்ந்திருந்தால், 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட முன்னேற்றங்களை விட அதிக முன்னேற்றத்தைத் தமிழ்நாடு அடைந்திருக்கும்! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராசேந்திரச்சோழன் வைத்திருந்த கப்பற்படைக்கு நிகராக உலகத்தில் எந்த ஆட்சியும் வைத்திருக்கவில்லை என்பதை நினைவில் வையுங்கள்.
இந்தியாவின் காலனி
அன்று இங்கிலாந்தின் காலனியாக இருந்தது தமிழ்நாடு; இன்று இந்தியாவின் காலனியாக இருக்கின்றது தமிழ்நாடு! இந்த வரையறுப்பை இன்றைக்கு சொல்ல தி.க. தயாரா? தி.மு.க. தயாரா? இந்திய ஏகாதிபத்தியக் காலனியத்தை எதிர்த்துப் போராடத் திட்டம் வெளியிடத் தயாரா? உங்கள் பெரியார்தான் சொன்னார், 1947 ஆகத்து விடுதலை தமிழ்நாட்டிற்கு இல்லையென்று! அப்படிச் சொன்னவர்தான் பின்னர், காங்கிரசுக்குக் காவடி தூக்கினார்.
தமிழ்நாடும் தமிழரும் அடிமையாய் உள்ளார்கள் – மெய்யான விடுதலை பெற வேண்டும் என்ற உண்மையை தொடக்கக் காலத்தில் சொன்னதால்தானே தி.க.வையும் தி.மு.க.வையும் தமிழர்கள் ஏற்றார்கள்; காங்கிரசைக் கைவிட்டார்கள். தனிநாடு பேசித்தானே தி.க.வும், தி.மு.க.வும் தமிழ்நாட்டில் வளர்ந்தன. வளர்ந்த பின் தி.க.வும், தி.மு.க.வும் செய்ததென்ன? பச்சைத்துரோகம்! தமிழினத்துக்குத் துரோகம் செய்து, தில்லிக்குக் காவடி தூக்கின!
1954லிருந்து இந்திய ஏகாதிபத்தியக் கட்சியான காங்கிரசுக்கு பிரச்சார பீரங்கியானார் பெரியார். 1967இல் காங்கிரசு தோற்று தி.மு.க. தமிழ்நாடு ஆட்சியைப் பிடிக்கும் வரை காங்கிரசுக்கு – சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஓட்டுக் கேட்டு ஊர் ஊராகப் போனவர் பெரியார். “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று தமது ஏட்டில் எழுதிக் கொள்வார் – அவ்வப்போது தமிழ்நாடு தனியாக வேண்டும் என்று கூறிக் கொள்வார் – ஆனால் காங்கிரசின் பிரச்சார பீரங்கியாக முழங்கி வருவார். அக்கட்சிக்கு ஓட்டு கேட்பார். எப்படிப்பட்ட “விடுதலை வீரர்” பெரியார்!
அண்ணாவை வீழ்த்துவதே பெரியாரின் நோக்கம்
யாரைத் தோற்கடிக்க, காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்டார் பெரியார்? தி.மு.க.வைத் தோற்கடிக்க! திராவிட சித்தாந்தத்தின் சிறப்பே சிறப்பு! திராவிடச் சிந்தனைச் சிற்பிகள் சொல்லுவார்கள் – காமராசருக்காக – காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்டார் பெரியார் என்று! அதன் பொருள் என்ன? அண்ணாவைத் தோற்கடிக்கத் தானே காமராசருக்கு ஓட்டுக் கேட்டார் பெரியார்? என்னே திராவிடத் தந்தை, என்னே திராவிட மகன்! என்னே திராவிடத் தத்துவ ஆற்றல்!
தனிநபர் பகை அரசியல்
எப்போதுமே தனிநபர் பகைதான் திராவிட அரசியலில் முதன்மை வகிக்கும்! அண்ணாவையும், தி.மு.க.வையும் ஒழித்துக் கட்டுவதற்காக காங்கிரசை ஆதரித்தார் பெரியார். வேறென்ன?
அண்ணாவும் அவர் தம்பிகளும் தி.க.விலிருந்து ஏன் பிரிந்தார்கள்? பெரியார் மணியம்மையாரை தம் 70 ஆம் அகவையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதுதான் தி.மு.க. பிரிந்ததற்கான முதன்மைக் காரணம்! இக்காரணத்தைத்தான் தி.மு.க.வினர் வெளியே சொன்னார்கள்.
கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட தனிநபர் பகையில் தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க. உருவானது. அ.தி.மு.க.வுக்கு செயலலிதா தலைமை உருவான பின் கருணாநிதிக்கும் அம்மையாருக்குமான தனிநபர் பகை அசிங்கமானது; அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டது.
கருணாநிதி முதல்வராக இருந்தால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் செயலலிதா சட்டப்பேரவைக்குப் போவதில்லை. தி.மு.க.வினர் தன்னை இழிவுபடுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக! அப்படி ஒரு நிகழ்வு 1989இல் நடந்தது. செயலலிதா முதல்வராக இருந்தால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் கருணாநிதி சட்டப்பேரவைக்குப் போவதில்லை. ஏன்? அ.இ.அ.தி.மு.க.வினர் தன்னை இழிவுபடுத்தி விடுவார்கள் என்று அஞ்சி அவர் போவதில்லை. திராவிடம் வளர்த்த பண்பைப் பாருங்கள் – நாகரிகத்தைப் பாருங்கள் – சனநாயகத்தைப் பாருங்கள்! “கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு” காக்கும் திராவிடப் பாரம்பரியத்தைப் பாருங்கள்!
சட்டப்பேரவையில் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாக உட்கார முடியாத கேவலம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா? தமிழ்நாட்டின் நாகரிகத்திற்கும் தமிழர்களின் பண்பிற்கும் கேடு உண்டாக்கிய கட்சிகள் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்!
கருணாநிதிக்கும் வைகோவுக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பகையினால்தான் ம.தி.மு.க. உருவானது. எந்தப் புதிய தத்துவத்திற்காக – இலட்சியத்திற்காக ம.தி.மு.க. உருவானது? எதுவுமில்லை!
வைகோ மீது கருணாநிதி சாட்டிய குற்றச்சாட்டு சாதாரணமானதல்ல. “விடுதலைப்புலிகளோடு சேர்ந்து கொண்டு வைகோ என்னைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்” என்று கூறினார் கலைஞர். நடுவண் அரசின் உளவுத்துறை ஆதாரங்கள் இருக்கின்றன என்றார்.
கருணாநிதி இந்தக் கொலைக் குற்றச்சாட்டை தமது “பிதாமகர்” பெரியார் வழியைப் பின்பற்றித்தான் வைத்தார். திராவிடர் கழகத்தில் பிளவு உண்டானபோது அண்ணா தன்னைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுகிறார் என்று, தமது ஏட்டில் பெரியார் எழுதினார். அண்ணா பெரியாரை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்தத் தந்தையின் பாணியைத்தான் தனையன் கருணாநிதி பின்பற்றினார்! திராவிடத்தின் தந்தை மகன் பாசம் – அண்ணன் தம்பி பாசம், அடடா.. அடடா..!
ஏன் வந்தது திராவிடம்?
திராவிடக் கட்சி என்பது 1944-இல் பிறக்கும்போதே போலியாகப் பிறந்த கட்சி என்பதற்கு “திராவிடர் கழகம்” என்ற பெயரே சான்று!
தமிழர்களுக்காக மட்டுமின்றி, தெலுங்கர் – கன்னடர் – மலையாளி ஆகியோருக்காகவும் தமிழ்நாட்டில் கட்சி தொடங்கியவர் பெரியார். தமிழர் என்று சொன்னால், தெலுங்கர் – கன்னடர் – மலையாளி ஆகியோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், எனவேதான் “திராவிடர்” என்று சொல்கிறேன் என்றார் பெரியார். ஆனால், ஆந்திர – கர்நாடக – கேரள மாநிலங்களிலுள்ள தெலுங்கர் – கன்னடர் – மலையாளிகள் தங்கள் மண்ணில் திராவிடர் கழகத்தை ஏற்கவில்லை.
அந்த உண்மை தெரிந்த பின்னும் 1949இல் தி.க.விலிருந்து பிரிந்து தி.மு.க.வை உருவாக்கியபோது, அண்ணாவும் மற்ற தலைவர்களும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களையும் இந்தியாவிலிருந்து விடுதலை செய்வதற்காகப் புதிய கழகம் உருவாக்கப்படுகிறது என்றார்கள். எவ்வளவு பெரிய பொய்!
தி.மு.க.வுக்கு மற்ற மூன்று மாநிலங்களில் தமிழர்களைத் தவிர பிறரிடம் கிளைகள் இல்லை; அத்துடன் அம்மாநிலங்களில் தனிநாட்டுக் கோரிக்கை எவராலும் வைக்கப்படவில்லை. உண்மையான தனிநாட்டு விடுதலை வீரர்களாக இருந்தால் – இப்படித் தொடர்பில்லாத மற்ற தேசிய இனங்களுக்கும் சேர்த்து விடுதலைக் கோரிக்கையை வைப்பார்களா? பிறக்கும்போதே போலித்தனம்! “நாங்கள் உண்மையான விடுதலை கோரவில்லை” என்று தில்லி ஏகாதிபத்தியத்திற்கு உணர்த்தும் உத்தி!
தி.க.வும் தி.மு.க.வும் தமிழர்களுக்குச் செய்த துரோகங்களின் சிகரம் எது? “தமிழர்” என்ற வரலாற்று வழிப்பட்ட நம் இனப்பெயரை நீக்கி நமக்கு “திராவிடர்” என்று புதிதாக ஒரு இனப்பெயரைச் சூட்டியதுதான் மன்னிக்க முடியாத துரோகம்! ஓர் இனத்தின் இயற்கையான பெயரை மாற்ற இவர்களுகளுக்கென்ன அதிகாரம் இருக்கிறது? அப்படித்தான் இவர்களுக்கென்ன வரலாற்று அறிவு இருந்தது? திராவிடம் என்பதற்கு சமற்கிருதச் சான்றுகளைத்தான் அண்ணா காட்டினார்.
அடுத்து, தமிழர் மானிடவியலைக் கற்காத – அரைகுறை தமிழ்ப் பண்டிதர் கால்டுவெல் “திராவிடர்” என்று கூறியதை சான்று காட்டினார்கள். “சாண் ஏறினால் முழம் சறுக்குபவர் கால்டுவெல்” என்றார் பாவாணர்.
திராவிடர் என்பதில் பிராமணர் இல்லையா?
“திராவிட“ என்பது ஆரியப் பிராமணர்கள் உருவாக்கிய சொல். வடக்கே இருந்து தெற்கே புலம் பெயர்ந்து சென்ற பிராமணர்களைக் குறிக்கப் பிராமணர்களால் உருவாக்கப்பட்ட சொல். இன்றைக்கும் பல பிராமண சங்கங்கள் “திராவிட” அடையாளத்தோடு செயல்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டு – புதூரு திராவிட பிராமண சங்கம், சவுத் கனரா திராவிட பிராமண சங்கம் (http://www.skdbassociation.com).
குசராத், மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்ற பிராமணர்களைக் குறிக்க “பஞ்சதிராவிடர்கள்” என்றார்கள். (பஞ்ச – ஐந்து. அப்போது மலையாள மொழி உருவாகவில்லை). வடக்கே கங்கைச் சமவெளி நோக்கி இமயமலைவரை சென்ற பிராமணர்களுக்கு “கௌட பிராமணர்கள்” என்று பெயர் சூட்டினர். தமிழர்களைக் குறிக்க “திராவிடர்” என்ற சொல்லை அவர்கள் உருவாக்கவில்லை.
கால்டுவெல் “திராவிட” என்ற சொல்லை மனுஸ்மிரிதி மற்றும் குமாரிலபட்டரின் “தந்த்ர வார்த்திகா” ஆகிய சமற்கிருத நூல்களிலிருந்து எடுத்ததாகக் குறிப்பிடுகிறார் (திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்). சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்திக்கால இலக்கியம், சித்தர் இலக்கியம் எதிலும் தமிழில் “திராவிட” என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. அக்காலத்தில் தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக்கொள்வதை இழிவாகக் கருதினார்கள்.
தமிழர் இன அடையாளத்தை மறைப்பதற்காகத் திட்டமிட்டு பெரியாரால் பரப்பப்பட்ட சொல் திராவிடம். “தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ்ப் படிக்காதீர்கள்; ஆங்கிலத்தைப் படியுங்கள், வீட்டில் மனைவியிடம் வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்திலேயே பேசிப் பழகுங்கள்” என்று 1968 – 1969 இல் கூட திரும்பத் திரும்ப எழுதியவர், பேசியவர் பெரியார்.
தமிழ் இனத்தின் மீது - தமிழ் மொழி மீது அவ்வளவு பெரிய காழ்ப்புணர்ச்சி ஏற்படும்படி தமிழர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? பெரியாருக்கு என்ன அநீதி இழைத்தார்கள்?
பெரியாரின் தாய்மொழி கன்னடம் என்பதற்காக அவரைத் தமிழர்கள் அயலாராகக் கருதவில்லை. நாம் பெரியாரை விமர்சிப்பது, அவர் அயல் இனத்தார் என்ற பொருளில் அன்று! சம உரிமையுள்ள தமிழ்நாட்டு மண்ணின் மகன் பெரியார் என்ற புரிதல்தான் தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு இருக்கிறது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று வழியில் தமிழ்நாட்டில் குடியேறி வாழ்ந்து வரும் தெலுங்கு – கன்னடம் – சௌராட்டிரம் – உருது – மராத்தி போன்ற மொழிகள் பேசும் அனைவரையும் சம உரிமையுள்ள மண்ணின் மக்களாகவே நாங்கள் வரையறுக்கிறோம். ஆனால், பெரியாருக்குத்தான் தன் இனம் குறித்து ஏதோவொரு ஐயுறவு ஏற்பட்டு “தமிழர்” என்ற இனப்பெயரை நீக்கி, “திராவிடர்” என்ற ஆரியப்பெயரைத் திணித்தார்.
“திராவிடர்” என்று சொன்னால் அதில் பிராமணர்கள் சேர மாட்டார்கள் என்று ஒரு கட்டுக்கதையை பெரியார் உருவாக்கினார். தி.மு.க.வில் பிராமணர்கள் பலர் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு கன்னடப் பிராமணப் பெண் தலைவி ஆனார். அந்த செயலலிதாவுக்கு “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் கொடுத்தார் ஆசிரியர் வீரமணி.
பிராமணிய எதிர்ப்பு மரபு
சங்க காலத்திலிருந்து பிராமணியத்தை எதிர்த்து வரும் இனம் தமிழினம். ஆரியர்களை அடக்கி அவர்கள் தலையில் கல்லை ஏற்றி வந்த தமிழன் கதை கூறும் நூல் சிலப்பதிகாரம். பக்திக்காலம் - சித்தர்கள் காலம் தொட்டு வள்ளலார் காலம் – மறைமலையடிகள் காலம் வரை பிராமணிய எதிர்ப்பும், சமற்கிருத எதிர்ப்பும் தமிழினத்தின் குருதியில் கலந்தது. தமிழினத்திற்கு மரபு வழியில் ஆரிய - பிராமணிய எதிர்ப்பு தொடர்ந்து இருந்துவந்த காரணத்தால்தான், பெரியாரின் பிராமண ஆதிக்க எதிர்ப்பு இங்கு மக்களைத் திரட்டித் தந்தது.
தமிழ்நாட்டில் வெகுமக்கள் ஆதரவோடு நடந்த பிராமணிய எதிர்ப்புப் போராட்டம் போல் இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எந்த மாநிலத்தில் நடந்தது? அந்த மாநிலங்களிலெல்லாம் வர்ணாசிரம தர்மம் இல்லையா? பிராமண ஆதிக்கம் இல்லையா? ஏகலைவன் கட்டை விரல் வாங்கிய கதை, தவமிருந்த சம்பூகன் தலை வெட்டிய கதை எல்லாம் வடநாட்டில்தானே நடந்தது! ஏன் அம்மாநிலங்களில் தமிழ்நாட்டைப் போல் பிராமண எதிர்ப்பு வெகுமக்கள் ஆதரவைப் பெறவில்லை?
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்றும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றும் 2,500 ஆண்டுகளுக்கு மேல் மனித சமத்துவம் பேசி வரும் இனம் – தமிழினம்! ஆரியத்தின் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்துவரும் இனம் – தமிழினம்!
“பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால், போர் கொண்ட மன்னர்க்கு பொல்லாத நோயாம்” என்று திருமூலர் பாடினார். அவரேதான் “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன், தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே” என்றார். ”வேதாகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்! வேதாகமங்களின் விளைவறியீர்! சூதாகச் சொன்னவலால், உண்மைநிலை தோன்ற உரைக்கவில்லை” என்றார் வள்ளலார். பல தெய்வ சிலை வணக்கத்தை மறுத்து, அனைவருக்கும் பொதுவான ஒளி வணக்கத்தை அறிமுகப்படுத்தினார். சாதி – மதம், ஆண் – பெண் வேறுபாடின்றி அனைவரும் உறுப்பு வகிக்கக் கூடிய “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” என்ற பொதுநிலைக் கழகத்தை 1865இல் தொடங்கி நடத்தியவர் வள்ளலார். இது எங்கள் மரபு!
இந்த மரபு பெரியாருக்கு வாய்ப்பளித்தது. பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார். அதற்கு நன்றி பாராட்டுகிறோம்! அதற்காக, எங்கள் இனத்தின் பெயரை நீக்குவதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? எங்கள் தாய்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றும், எங்கள் இனத்திற்கு நாகரிக வரலாறு இல்லை என்றும், எங்கள் இனத்தில் சரியான அறிவாளி யாருமே இல்லை என்றும் பேசி தமிழினத்தை இழிவுபடுத்தியதைத் தமிழர்கள் சகித்துக் கொள்ள வேண்டுமா? தமிழை “நீச பாஷை” என்றார்கள் பிராமணர்கள்; தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார். இவருடைய பிராமண எதிர்ப்பு, பாதிக் கிணறு தாண்டுவதாக இருக்கிறதே!
திராவிடத்துக்குப் புத்துயிரூட்டப் புறப்பட்டிருக்கும் சிந்தனைச் சிற்பிகளே, அதற்காகத் தமிழ்த்தேசியத்தைத் தாக்காதீர்கள். தமிழ்த்தேசியத்தை இழிவுபடுத்தாதீர்கள். தமிழர்களாகப் பிறந்த நீங்கள் தமிழ்த்தேசியத்தை இழிவுபடுத்துவது, கொச்சைப்படுத்துவது நீங்கள் குடித்த தாய்ப்பாலுக்குத் துரோகம் செய்வது போன்ற வேலை! “மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலியறுக்க வேண்டும்” என்று கொடுமைக்கார மாமனார் – மாமியார் நினைத்ததாக ஒரு பழமொழி உண்டு. அப்படி, தமிழ்த்தேசியத்தை அழிப்பதற்காக நீங்கள் பிறந்த தமிழினத்திற்கு துரோகம் செய்யாதீர்கள்.
இனப்பெயர் நாமாகத் தேர்வுசெய்வதன்று. வரலாற்று வழியில் – மரபு வழியில் இயற்கையாக உருவாவது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் நம் இனப்பெயர் தமிழர் தான். இன்றும் நம் தேசிய இனப்பெயர் தமிழர்தான். மரபு இனப்பெயரும் (Race) தேசிய இனப்பெயரும் (Nationality) ஒன்றாக இருப்பது உலகத்தில் சில இனங்களுக்கு மட்டுமே இருக்கிறது. அதில் மூத்த இனம் தமிழினம்! அந்தப் பெயரை “திராவிடர்” என மாற்றிப் பிறந்த இனத்துக்குத் துரோகம் செய்யாதீர்கள்.
கொள்ளுப்பேரன் தலைமைதான் திராவிட விசுவாசமா?
திராவிடச் சிந்தனைச் சிற்பிகளே, கருணாநிதி தலைமையை ஏற்றுக் கொண்டு, அவர் மகன் தலைமையை ஏற்றுக் கொண்டு, அவர் பேரன் தலைமையை ஏற்றுக் கொண்டு, அதன் பின் கலைஞரின் கொள்ளுப்பேரன் தலைமையை ஏற்றுக்கொள்வதுதான் “திராவிட விசுவாசம்” என்று கருத்தியல் உருவாக்கி - இனப்பற்றை “கலைஞர் வாரிசுகள் பற்று” என்று கொச்சைப்படுத்திக் கொள்ளாதீர்கள்!
தமிழ் இழப்பு – உரிமைகள் பறிப்பு
தமிழ்நாட்டில் 50 ஆண்டுகாலத் திராவிட ஆட்சி தமிழ்மொழிக் கல்வியே இல்லாத நிலையை உருவாக்கும் திசைநோக்கிச் செல்கிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லை; தனியார் பள்ளிகளில் தமிழ் இல்லை. அண்டை மாநிலங்களில் இப்படியான நிலை இல்லை. கேரளத்தைப் பாருங்கள். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் நிரம்பி இருக்கிறார்கள்; மலையாளம் கற்கிறார்கள்.
ஐம்பது ஆண்டுகாலத் திராவிட ஆட்சியில்தான் கச்சதீவை இழந்தோம்; கடலில் மீன்பிடி உரிமை இழந்தோம்; காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆகிய ஆறுகளை இழந்தோம். கல்வி உரிமை மாநிலத்திடமிருந்து நடுவண் அதிகாரத்திற்கு போனது. மாநில அரசு வணிக வரி வசூலிக்கும் உரிமையை இழந்தோம். ஜி.எஸ்.டி வந்தது. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் உரிமைகளைத் தமிழ்நாடு இழந்தது. தில்லியின் நீட் தேர்வு வந்தது.
ஐட்ரோகார்பன் வந்து வேளாண் நிலங்களை அழிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை மனித உயிர்களைப் பறிக்கிறது. அடுக்கடுக்காய் அணு உலைகள், நியூட்ரினோ ஆலை, எட்டுவழிச் சாலை, வேளாண் நிலங்களின் குறுக்கே கெயில் குழாய்கள், உயர் மின் அழுத்த கோபுரங்கள் - எத்தனை சீரழிவுகள்; எத்தனை வகையில் வாழ்வுரிமைப் பறிப்புகள்!
வெளி மாநிலத்தார் குவிப்பு
தமிழர்களுக்கான தாயகமாகத் தமிழ்நாடு இன்னும் எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்ற பேரச்சம் ஏற்பட்டுள்ளது. பார்க்கும் இடமெல்லாம் வெள்ளமென இந்திக்காரர்கள் கூட்டம் – வெளி மாநிலத்தார் கும்பல்! தமிழ்நாட்டின் இந்திய அரசு நிறுவனங்களில், அலுவலகங்களில் இந்திக்காரர்களையும் வெளி மாநிலத்தவர்களையும் மிக அதிக அளவில் வேலையில் சேர்கிறார்கள். சொந்தத் தாயகத்திலேயே தமிழர்களுக்கு எதிராக இன ஒதுக்கல் கொள்கையை இந்திய அரசு செயல்படுத்துகிறது.
மேற்கண்ட அத்தனை உரிமைப் பறிப்புகளையும் தாயகப் பறிப்புகளையும் செய்யும் காங்கிரசு, பா.ச.க.வுடன்தான் திராவிடக் கட்சிகள் எப்போதும் கூட்டணி!
திராவிட அரசியல் என்பது இரண்டு சக்கரங்கள் மீது இயங்குகிறது. ஒரு சக்கரம் - தலைவர்கள் ஆதாயம், இன்னொரு சக்கரம் திராவிடத் தலைவர்களிடையே பகை! பயணம் முழுவதும் ஊழலோ – ஊழல்!
தமிழ்த்தேசியர்களே,
தேர்தல் என்பது ஒரு சனநாயக வழிமுறை! அதேவேளை, அதற்கான எல்லைகளை இந்திய அரசு வரையறுத்து வைத்துள்ளது. தேர்தல் மூலம் – தமிழ்நாட்டு ஆட்சியைப் பிடித்து தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டுவிடலாம் என்று எண்ணாதீர்கள்! அவ்வளவு எளிதாக இந்திய ஏகாதிபத்தியம் - தான் பறித்த உரிமைகளை விட்டுக் கொடுக்காது. இந்திய ஏகாதிபத்தியத்தின் இருபெரும் கட்சிகள் பா.ச.க.வும் காங்கிரசும்! இவை “பாரதமாதா”வின் பிள்ளைகள்; தமிழன்னையின் பகைவர்கள்.
தமிழ்த்தேசிய உரிமைகள் மீட்பு – கோடிக்கணக்கான தமிழர்களின் எழுச்சியில்தான் கைகூடும்! அதற்குத் தமிழ்த்தேசியம் என்றால் என்ன, இழந்த உரிமைகள் எவை, அவற்றை எப்படி மீட்பது, அதற்கான வெகுமக்கள் போராட்ட உத்திகள் யாவை என்பவற்றையெல்லாம் தலைவர்களும், முன்னணிச் செயல்பாட்டாளர்களும் கற்றறிய வேண்டும். அவற்றை மக்களின் குரலாக மாற்ற வேண்டும்.
தத்துவம், அரசியல், பொருளியல், பண்பியல், சூழலியல் என அனைத்துத் துறையிலும் தமிழ்த்தேசிய உரிமைப் போராட்டங்கள், வெகுமக்கள் போராட்டங்களாக – சனநாயகப் போராட்டங்களாக வீச்சுப் பெற வேண்டும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment