டாஸ்மாக் மதுக்கடை மூடும்போராட்டம் சிதம்பரத்தில் தமிழக இளைஞர் முன்னணியினர் மீது தடியடி
சிதம்பரத்தில் தமிழக இளைஞர் முன்னணியினர் மீது தடியடி
இளைஞர்களை சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டத்தை தமிழகமெங்கும் இன்று (4.1.2013) தமிழக இளைஞர் முன்னணி நடத்தியது. இப்போராட்டத்தின் போது சிதம்பரம் நகரக் காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமானத் தடியடியில் த.இ.மு. துணைப்பொதுச்செயலாளர் தோழர் ஆ.குபேரன் உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் முருகன் குடியில் நடைபெற்ற பெருந்திரள் போராட்டத்தில் காவல்துறையி னருக்கும் த.இமு. தோழர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்னை:
சென்னை பல்லாவரம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை இழுத்து மூடும் போராட்டத்தை தமிழக இளைஞர் முன்னணி நடத்தியது. த.இ.மு. பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்கினார். போராட்டத்தில் பங்கேற்ற 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரத்தில் தடியடி:
சிதம்பரத்தில் மேலவீதி, பெரியார் சிலை அருகிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடத்தப்பெறுமென முன்கூட்டியே காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு பொது மக்களிடையேயும் விரிவாகப் பரப்புரை செய்யப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக திரண்டுவந்த த.இ.மு. தோழர்களை நடுவழியிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தள்ளு முள்ளு ஏற்பட்டது. திடீரென காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதில் போராட்ட தலைவர், த.இ.மு. துணைப்பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பளார் தோழர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.
இதற்கிடையில் டாஸ்மாக் கடையின் சட்டர் கதவை இழுத்து கடையை மூடினர்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற 4 பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப் பட்டனர். பெண்களைத் தவிர பிற தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முருகன் குடியில் தள்ளுமுள்ளு:
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பகுதி முருகன் குடியில் டாஸ்மாக் மதுக்கடை இழுத்துப் பூட்டும் போராட்டம் பெருந்திரள் மக்கள் பங்கேற்போடு எழுச்சியாக நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மக்கள் ஆண்களும் பெண்களுமாய் கூடி தமிழக இளைஞர் முன்னணியின் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் தடுத்து தாக்க முயன்றனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் டாஸ்மாக் கடையின் கதவை இழுத்து மதுக்கடையை மூடினர். சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். போராட்டத்தில் பங்கேற்ற கிராமப்பெண்கள் மதுவின் சீரிழிந்த விளைவுகளை கோபத்தோடு எடுத்துக்கூறி அரசையும் காவல்துறையினரையும் திட்டித் தீர்த்தனர்.
21 பெண்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்திற்கு த.இ.மு. மையக்குழு உறுப்பினர் தோழர் பிரகாசு தலைமை தாங்கினார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் கிளை உறுப்பினர், தோழர் பெரியார் செல்வம், மகளிர் ஆயம் பொறுப்பாளர்கள் தோழர்கள் வித்யா, எழிலரசி, வளர்மதி, உள்ளிட்டு பொதுமக்களும் கைதாகி உள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பழைய பேருந்து நிலையம், அருகிலுள்ள டாஸ்மாக் கடையை இழுத்துப்பூட்டும் போராட்டம் 4.1.2013 காலை 11 மணியளவில் நடைபெற்றது. த.இ.மு. துணைத்தலைவர் தோழர் கெ. செந்தில்குமார் தலைமை தாங்கினார். மையக்குழு உறுப்பினர் செந்திறல், த.இ.மு. நகரத் தலைவர் தோழர் இலெ. இராமசாமி, த.தே.பொ.க. பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் க. காமராசு நகரத் துணைச் செயலாளர் தோழர் தமிழ்ச் செல்வன், மகளிர் ஆயம் பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் தோழர் மீனா தோழர்கள் உமா, கெளசல்யா, உள்ளிட்ட 31 பேர் கைது.
ஓசூர்:
ஓசூர் ஒஇராம் நகரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டம் த.இமு. தலைவர் தோழர் கோ. மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. திரளானோர் பங்கேற்றனர். த.தே.பொ.க. கிளைச்செயலாளர்கள் தோழர் இரமேசு, தோழர் சுப்பிரமணியம், மகளிர் ஆயத் தோழர் அபிராமி, தமிழக உழவர் முன்னணி இராயக்கோட்டை செயலாளர் தூர் வாசர் உள்ளிட்ட 17 பேர் கைதாயினர்.
கிள்ளுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோயில் ஒன்றியம் கிள்ளுக்கோட்டை நகரிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை இழுத்துப்பூட்டும் போராட்டம் த.இ.மு. ஒன்றியத் தலைவர் தோழர் இலட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. த.இ.மு. பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் தேவதாசு மற்றும் த.இ.மு. நிர்வாகிகள் உள்ளிட்ட 55 பேர் கைது. இதில் 7 பேர் பெண்கள்.
சாமிமலை:
தஞ்சை மாவட்டம், சாமிமலை அரசு மேநிலைப்பள்ளி அருகிலுள்ள மதுக்கடைய
இழுத்து பூட்டும் போராட்டம் த.இ.மு. கிளைச்செயலாளர் தோழர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. தோழர் இளவரசி உள்ளிட்ட 10 பெண்களும், திரளானோரும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச் சுடர் கட்சியின் கிளைச்செயலாளர் தோழர் ம.முரளி த.இமு. தேவராயன் பேட்டை செயலாளர் தோழர் இரா. பிரபாகரன் உள்ளிட்ட 21 பேர் கைதாயினர்.
கிருட்டிணகிரி:
கிருட்டிணகிரி மாவட்டம், வரட்டணப்பள்ளியில் டாஸ்மாக் மதுக்கடை பூட்டும் போராட்டம் த.இ.மு. நடுவண்குழு உறுப்பினர் தோழர் ஈசுவரன் தலைமையில் நடைபெற்றது. 20 பேர் கைதாயினர்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment