தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட முடியாது ; காவிரி கண்காணிப்புக்குழு
தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய காவிரி நீரில் கடைசியாக வெறும் 12 டிஎம்சி தண்ணீரையாவது தர வேண்டும் என்று கேட்டு மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஜனவரி முதல் வாரத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது பற்றி ஜனவரி 31-ஆம் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என்றும், 11-ஆம் தேதிக்குள் கண்காணிப்புக்குழு கூட்டத்தைக் கூட்டி தண்ணீர் தேவை குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி காவிரி கண்காணிப்புக்குழு கூட்டம், குழுவின் தலைவர் துருவ் விஜய் சிங் தலைமையில் டெல்லியில் கடந்த 10-ஆம் தேதி நடந்தது. அப்போது தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்ற தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், டெல்டா பகுதிகளில் கருகி வரும் சம்பா பயிர்களை காப்பாற்றுவதற்கு 18 டிஎம்சி தண்ணீர் உடனடியாக தேவை என்பதை சுட்டிக்காட்டி, தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் கர்நாடக அணைகளில் 16 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும், அது தங்கள் தேவைக்கே போதுமானதல்ல என்றும் கர்நாடகா வாதிட்டது. இதனை பரிசீலித்த கண்காணிப்புக்குழு தலைவர் துருவ் விஜய் சிங், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட முடியாது என்று அறிவித்தார்.
இதையடுத்து தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெறுவதற்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழ்நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டது. அதன்படி, தமிழகம் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட முடியாது என்று கண்காணிப்பு குழு கூறியுள்ளது. எனினும் கருகி வரும் சம்பா பயிர்களை காப்பாற்ற வேண்டுமென்றால் உடனடியாக 12 டிஎம்சி தண்ணீர் தேவை. அந்த நீரை உடனடியாக திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Comment