ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“உழவர்களே வெளியேறுங்கள்” ஒரு பொருளாதார அடியாளின் கூச்சல்! – கி.வெங்கட்ராமன்.

manmohan-singh-not-soft-man_26
“உழவர்கள் வேளாண்மையை விட்டு வெளியேறிவிட வேண்டும். இவ்வளவு பெருந் தொகையான மக்கள் வேளாண்மையில் இருப்பது கூடாது. அவர்களெல்லாம் வேறு வேலை வாய்ப்பைத் தேடிக் கொள்ளவேண்டும். ஏனெனில், வேளாண்மை இலாபகரமான தொழில் அல்ல. விளை பொருள்களுக்கு இலாபமான விலையின்மை, இடுபொருள் விலையேற்றம், பருவ மழை ஏற்றத்தாழ்வு போன்ற பல சிக்கல்களுக்கிடையில் வேளாண்மையை இலாபமான தொழிலாக நடத்த முடியாது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளமுடியாது.””

இவ்வாறு கருத்துக் கூறியவர் வேறு யாரும் அல்லர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தான். 27-12-2012 அன்று தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் நிறைவுரை ஆற்றியபோது மேற்கண்டவாறு மன்மோகன் சிங் பேசினார்.

வேளாண்மையை இலாபகரமான தொழிலாக ஆக்காமல் தடுத்துக் கொண்டிருப்பதே இந்திய ஆட்சியாளர்கள் தாம். அதிலும் பன்னாட்டு முதலாளிகளின் பொருளாதார அடியாள் மன்மோகன் சிங் உழவர்களை வேண்டாத மக்கள் பிரிவினராக வெறுக்கிறார்.

உரம், பூச்சிக்கொல்லி, மின்சாரம், ஆற்று நீர், வேளாண் சந்தை, இலாப விலை ஆகிய அனைத்தையும் மறுத்து உழவர்களை நசுக்கிக் கொண்டிருக்கும் இந்திய ஆட்சித் தலைவரே அதே சிக்கல்களைக் காரணமாகக் கூறி உழவர்களை வெளியேறச் சொல்வது கொடுமையானது.
இச் சிக்கல்களெல்லாம் இவருக்குத் தொடர்பே இல்லாமல் ஏற்பட்டுவிட்டது போலவும் , தம்மால் இனி எதுவும் செய்யமுடியாதது போலவும், மோசடியாக பேசுகிறார் மன்மோகன் சிங்.
மன்மோகன் சிங் அரசின் வணிகக் கொள்கையின் உண்மையான நோக்கம் சில்லரை வணிகத்திலிருந்து மண்ணின் வணிகர்களை வெளியேற்றுவது. இவ்வரசின் தொழில் கொள்கையின் உண்மையான நோக்கம் தொழில் துறையிலிருந்து சிறு, நடுத்தர தொழில் முனைவோரை வெளியேற்றுவது. இந்திய அரசின் கடல்சார் கொள்கையின் உண்மையான நோக்கம் மண்ணின் மீனவர்களைக் கடற் பகுதியிலிருந்து வெளியேற்றுது. இந்திய அரசின் பொருளியல் கொள்கையின் உண்மை நோக்கம் அரசுத்துறையை ஒழித்துவிட்டு, பன்னாட்டு, வட நாட்டு முதலாளிகளை கோலோச்ச வைப்பது. அதே போல் இவ்வரசின் வேளாண் கொள்கையின் உண்மையான நோக்கம் வேளாண்மையை விட்டு உழவர்களை வெளியேற்றுவது.

இப்போது மட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே மன்மோகன் சிங் இக்கருத்தை மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்.

திட்டமிட்ட முறையில் உர மானியத்தை வேகமாகக் குறைத்து விரைவான எதிர் காலத்தில் சந்தையின் உயர் விலைக்கு உரங்களை உழவர்கள் வாங்கிக் கொள்ளும்படி நிர்பந்திப்பதே இந்திய அரசின் தொடர் செயல்பாடாக உள்ளது. விலையின்றியோ, மானிய விலையிலோ வேளாண்மைக்கு மின்சாரம் வழங்குவதை விரைவில் நிறுத்திவிடப் போகிறோம் என ஏற்கெனவே மன்மோகன்சிங் அறிவித்துவிட்டார்.


இப்போதே பஞ்சாப், அரியானா, ஆந்திரா, கர்நாடகா அரிசி தமிழ் நாட்டுச் சந்தையை ஆக்கிரமித்து உழவர்களை நசுக்கி வருகிறது. இனி உணவு தானிய தாராள இறக்குமதிக்கு இந்திய துணைக்கண்டச் சந்தையை மொத்தமாகத் திறந்து விடப் போகிறார் மன்மோகன் சிங்.
சாகுபடி செலவுக்கே ஈடுகட்டி வராத விலையைத்தான் அடிப்படை ஆதரவு விலையாக வேளாண் விளைபொருளுக்கு இந்திய அரசு அறிவித்து வருகிறது. சாகுபடிச் செலவை விடக் கூடுதலாக குறைந்தது 50 விழுக்காடு இலாபம் கிடைக்கும் வகையில் அடிப்படை ஆதரவு விலையை அரசு அறிவிக்க வேண்டும் என அரசு நியமித்த தேசிய உழவர் ஆணையம் ( national farmers Commnisstion) பரிந்துரை வழங்கி ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. இன்னும் அதனை இந்திய அரசு செயல்படுத்தவில்லை. வேளாண் விளை பொருள்களுக்கு இலாப விலை கிடைக்காமல் தடுத்து வருகிறது தில்லி அரசு.

இதே தேசிய உழவர் ஆணையம் உழவர்களுக்கு நேரடி வருவாய் வழங்குவது குறித்து தீர்மானிக்க உழவர் வருவாய் ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூறியது. உழவர்களுக்கு அரசு நேரடியாக குறிப்பிட்ட தொகை வழங்கி அவர்களது வருவாயை உறுதி செய்ய வேண்டும் எனக் கொள்கையளவில் இந்த ஆணையம் பரிந்துரைத்தது.

இவ்வாறு உழவர்களுக்கு நேரடி வருவாய் வழங்கும் முறை பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும் பிலிப்பைன்ஸ் போன்ற பின்தங்கிய நாடுகளிலும் செயல் பட்டுவருகிறது. எடுத்துக்காட்டாக பிரிட்டனில் எலிசபெத் இராணி பெறுகிற நேரடி வேளாண் வருவாய் 7 இலட்சத்து 67 ஆயிரம் பவுண்டு, அதாவது 6 கோடியே 15 இலட்சம் ரூபாய். அமெரிக்கப் பருத்தி உற்பத்தியாளர்கள் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பருத்தியை விளைவித்துக் கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக 17,550 கோடி ரூபாய் வேளாண் மானியமாகப் பெற்றுக்கொள்கிறார்கள். அதாவது அவர்களது உற்பத்தியின் சந்தை விலையை விட அவர்கள் பெறுகிற மானியம் மட்டுமே அதை விடக் கூடுதலானது. அதற்கு மேல் இவர்களது பருத்தியை விற்றுக் கிடைக்கிற தொகை வேறு.

மேலை நாடுகளில் பல்லாயிரம் ஏக்கர் நிலவுடைமை பெற்றுள்ள நில முதலாளிகளே அதிகம். அங்கெல்லாம் நூறு ஏக்கருக்குக் கீழ் நிலம் உள்ளவர்கள் அரிது. ஆனால் தமிழ்நாட்டின் சராசரி நிலவுடைமை 2 ஏக்கர்தான். 15 ஏக்கருக்கும் கீழ் நிலம் உள்ளவர்கள்தான் இங்கு பெரும்பாலோர்.
பல நாடுகளில் உள்ளது போல், தேசிய உழவர் ஆணையம் கொள்கை அளவில் ஏற்றுகொண்டது போல், இங்கும் உழவர் வருவாய் ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் நேரடி வருவாய் அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தேசிய உழவர் ஆணையம் பரிந்துரைத்தபடியும் உலக நாடுகளில் உள்ளபடியும் உழவர் ஆணையம் அமைக்கவோ உழவர்களுக்கு நேரடியாக வருவாய் வழங்கவோ தில்லி அரசு மறுத்துவருகிறது.

காவிரி, முல்லைப் பெரியாறு அணை சிக்கல்களில் தமிழகத்தை வஞ்சித்துப் பாசன நீர் கிடைக்காமல் வேளாண்மையை இந்திய அரசு அழித்து வருவதைத் தமிழகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இப்போது இந்திய அரசு அறிவித்துள்ள தேசிய நீர்க் கொள்கை ஆற்று நீருக்கும், ஊற்று நீருக்கும் விலை வைக்கிறது.

இவ்வாறு திட்டமிட்ட முறையில் வேளாண்மையை நசுக்கி வரும் இந்திய அரசின் பிரதமரே வேளாண்மை இலாபமாக் இல்லை என நீலிக்கண்ணீர் வடிப்பது உழவர்களது துயரத்தை தீர்ப்பதற்காக அல்ல. அதையே காரணமாகக் கூறி நிலத்தை விட்டு உழவர்களை வெளியேற்றுவதற்காக!.

நிலத்தை விட்டு உழவர்களை வெளியேற்றிவிட்டு அந்த நிலத்தை இந்திய மற்றும் பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்கு கொடுப்பதே தில்லி அரசின் நோக்கம். உழவர்களிடமிருந்து பறித்த நிலத்தில் முதலாளிகள் தங்களது தொழில் நிறுவனங்களையும், அடுக்குமாடிக் குடியிருப்புகளையும், நட்சத்திர விடுதிகளையும், கேளிக்கைப் பூங்காக்களையும், பெரும் பண்ணைகளையும் நிறுவிக்கொள்ள வேண்டும் என்பதே தில்லி அரசு பின்பற்றும் வளர்ச்சிப் பாதையில் நிகழக்கூடியவை.

நில வெளியேற்றத் திட்டத்தை இந்திய ஏகாதிபத்திய அரசு இரண்டு வழிகளில் நிறை வேற்றிக்கொள்கிறது. ஒன்று, பழங்குடியினர் வாழும் கனிமவளம் உள்ள நிலங்களைப் பறிக்க நேரடி அடக்குமுறையை ஏவுகிறது. அம்மக்கள் தற்காப்புக்குப் போராடினால் அதனை பயங்கரவாத முத்திரை குத்தி கண்மண் தெரியாத அடக்குமுறையை ஏவி குருதிச் சேற்றில் புதைக்க முனைகிறது.

சமவெளிப் பகுதியில் இவ்வாறான நேரடி அடக்குமுறையை அதிக அளவில் பயன்படுத்த முடியாது. எனவே, அதற்கு இரண்டாவது வழியை, அதாவது பொருளியல் வழியை கைக்கொள்ளுகிறது. வேளாண்மையை இலாபமற்றத் தொழிலாக மாற்றி, உழவர்கள் தாமாகவே நிலத்தை விற்றுவிட்டு வெளியேறும்படிச் செய்வது என்பதே இந்த இரண்டாவது வழி.

இதையேதான் தனது அறிவுரையின் மூலம் வலியுறுத்துகிறார் மன்மோகன் சிங்.
இவ்வாறு பெரும்பாலான உழவர்களை வெளியேற்றிவிட்டால் நாட்டின் உணவுத் தேவையை நிறைவு செய்வது எப்படி என்ற கேள்வி எழும். இதற்கும் தனது கொள்கை வழியில் ஒரு தீர்வை வைத்திருக்கிறார். உணவு தானிய இறக்குமதி என்பதே அது.


இதற்கு ஏற்றாற் போல் இந்திய அரசின் ஆதரவோடு, இந்திய அரசு வங்கிகளின் கடன் உதவியோடு பல பெருமுதலாளி நிறுவனங்கள் வறிய ஆப்பிரிக்க நாடுகளில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளன. அங்கு மிகப் பெரும் வேளாண் பண்ணைகளை அமைத்து விளைவிக்கும் உணவு தானியங்களை டன் டன்னாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய இருக்கின்றன. அதற்கும் இந்திய அரசு இறக்குமதி மானியம் வழங்கப் போகிறது.

எடுத்துக்காட்டாக கர்நாடகாவைச் சேர்ந்த சாய் இராமகிருஷ்ணா கருத்தூரி என்ற பெரு முதலாளியின் கருத்தூரி குளோபல் லிமிடட் நிறுவனம் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் மட்டும் 8 இலட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கி பெரும் பெரும் பண்ணைகளை அமைத்துள்ளது. எத்தியோப்பியாவின் வறுமையைப் பயன்படுத்தி அங்குள்ள உழவர்களிடம் ஏக்கருக்கு வெறும் 380 ரூபாயிலிருந்து 500 ரூபாய்வரை கொடுத்து கொள்ளை கொள்ளையாக நிலக் கொள்முதல் செய்துள்ளது.

அந்நாட்டு ஆட்சியாளர்களுக்குக் கையூட்டை வாரி வழங்கி சட்டங்களை வளைத்துள்ளது. கருத்தூரி நிறுவனம் இவ்வாறு நிலக்கொள்முதல் செய்வதற்கு மானியமாகவும், குறைந்த வட்டிக் கடனாகவும் பல நூறு கோடி ரூபாயை இந்திய அரசு வழங்கியுள்ளது.

கருத்தூரி மட்டுமின்றி பிர்லா, அம்பானி, டாடா போன்ற பெருமுதலாளிகளும் வருண் இன்டர்நேஷ்னல், ஸ்டெர்லிங் குழுமம் போன்றவையும் மடகாஸ்கர், கானா, மொசாம்பிக், சூடான், டான்சானியா போன்ற பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் இலட்சக் கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டுள்ளன.


இந் நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்து நாட்டின் உணவுத் தேவையை சந்தித்துக் கொள்ளலாம் என்பதே இந்திய ஆட்சியாளர்களின் திட்டம் ஆகும்.
வேளாண்மையை நசுக்கி, கிராமங்களை அழித்து உருவாகும் தொழில் வளர்ச்சி சார்ந்த நகர்மயமாக்கல் மக்களுக்கு நன்மைகளை கொடுப்பதைவிட அதிகமாக தீமைகளையே உருவாக்கும்.

உழவர்கள் வேளாண்மையை விட்டு விட்டு வேறு வேலைகளை நாட வேண்டுமென்று மன்மோகன் சிங் அறிவுறுத்துகிறார். ஆனால் வேறு வேலை எங்கே இருக்கிறது என்பதை மட்டும் காட்ட மறுக்கிறார்.

இப்போது கிராமங்களிலிருந்து வெளியேறும் உழவர்கள் தொழில் நிறுவனங்களில் தொழிலாளி களாக அல்லது ஊழியர்களாக சேர முடிவதில்லை. ஏனெனில், உருவாகிற தொழிற் சாலைகளெல்லாம் பெரிதும் தானியங்கி மயமானவை, கணினிகளால் இயங்குபவை.
கிராமங்களிலிருந்து நகரங்களுக்குச் செல்வோர் சிறு வணிகம் போன்ற தன் தொழிலில்தான் (சுய தொழில்) இறங்குகின்றனர். அல்லது இரவுக் காவலர்கள் போன்ற குறைவூதிய வேலை வாய்ப்பை நாடுகின்றனர். தொழிற்சாலைப் பணிகளுக்கு செல்லும் சிலரும் குறைவூதியத்திலேயே அல்லல் படுகின்றனர். இதைத்தான் மாற்று வேலை போல காட்டுகிறார் மன்மோகன் சிங்.

மன்மோகன் சிங் சொல்லும் நகர்மய வளர்ச்சி முறை பல கேடுகளுக்கு இட்டுச் செல்லும்.
கிராமங்களில் வாழ்பவர்கள் பெரும்பாலும் சொந்தக் குடியிருப்புகளில் வாழ்கின்றனர். ஆனால், இம் மக்கள் நகரத்திற்குத் துரத்தப்பட்டால் அங்கு வாடகை வீடுகளிலும், நடை பாதைகளிலும் வாழ வேண்டிய நெருக்கடி ஏற்படும். சுகாதாரமான குடி நீருக்குக் கூட காசுகொடுக்க வேண்டிய அவலம் ஏற்படும்.


சுற்றம், நட்போடு வாழ்ந்த மக்கள் நகர வீதிகளில் உதிரிகளாக வீசப்படுவார்கள். சமூக வாழ்க்கையை இழப்பார்கள்.

நகர் மயமாக்கல் என்பது குற்றமயமாக்கலோடு இணைந்தே வளருகிறது. இன்றுள்ள பெருநகரங்களே இதற்குச் சான்று. இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் அச்சமின்றி நடமாட முடியாது என்ற நிலையே பெரும்பாலான பெருநகரங்களில் நிலவுகிறது.

குற்றங்களை எதிர்கொள்வது என்ற பெயரால் அரசானது மேலும் மேலும் காக்கி மயமாகிறது. அரசின் கண்காணிப்புக்கு உட்பட்ட குற்றவாளிகளாக மக்கள் மேலும் மேலும் உட்படுத்தப்படுகிறார்கள்.

நீரும் நிலமும் காற்றும் மீட்க முடியாதபடி மாசுபாடு அடைகின்றன. புதிய புதிய உடல் நோய்களும், மன அழுத்தங்களும் நகர்மய வாழ்க்கையில் மக்களை வாட்டுகின்றன. மனித உடல் மீது பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் ஆக்கிரமிப்பும், நட்சத்திர மருத்துவமனைகளின் ஆதிக்கமும் அதிகரிக்கின்றன. உளவியல் நெருக்கடியில் சிக்கிகொள்ளும் நகர்ப்புற மனிதர்களை கார்ப்பொரேட் சாமியார்கள் கவ்விக் கொள்கிறார்கள்.

பணத்தைத் தேடிக் களைத்து, வாழ்க்கையைத் தொலைக்கும் பாதையையே மன்மோகன் சிங் காட்டுகிறார். இந்திய அரசின் கொள்கைகளும் இதற்கு ஏற்பவே உருவாக்கப் படுகின்றன. தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் அவர் வழங்கியிருப்பது மக்களை வாழவைக்கும் அறிவுரை அல்ல. கம்பெனிகளை கோலோச்சவைக்கும் சூதுரை ஆகும்.

“வேளாண்மையை விட்டு வெளியேறுங்கள் ” என்று மன்மோகன் சிங் கூறுவது பொறுப்பான ஆட்சியாளரின் அறிவுரை அல்ல. ஒரு சமூக விரோதியின் வெறிக் கூச்சல் போல் உள்ளது.
பேரழிவை உண்டாக்கும் இந்தப் பாதையை தமிழக மக்கள் எதிர்க்க வேண்டும்.
இப்போதுள்ள தொழில் வளர்ச்சியானது மேலிருந்து திணிக்கப்பட்ட ஏகாதிபத்திய வளர்ச்சி முறை ஆகும். இதில் ஏற்படுவது உண்மையில் தொழில் வளர்ச்சி அல்ல. தொழில் வீக்கம் ஆகும். இந்த வீக்கம் ஆரோக்கியத்தின் அறிகுறி அல்ல. இது மக்களை தொற்றிவரும் நோயின் குறி ஆகும்.

வேளாண்மையை வலுப்படுத்துவதும், அதனை ஒரு இலாபகரமான தொழிலாக நிலை நிறுத்தி, கிராமங்களைப் பாதுகாப்பதும் தான் நீடித்த வளர்ச்சிக்கு வழியமைக்கும். கிராமப் புற உபரியைப் பயன்படுத்தி உருவாகும் தொழில் வளர்ச்சியும் விரிவாகும் நகர வளர்ச்சியும் தான் இயல்பானது. வலுவான வேளாண் பொருளியலில் ஊன்றி நின்று, சிறு தொழில் உற்பத்தியை விரிவாக்கி வளரும் மாற்றுப் பாதையே இன்றைய தேவை. இந்தப் பொருளியல் வளர்ச்சிப் பாதை அதிகாரம் மையப்படுவதை எதிர்க்கும். ஆட்சிமுறை பரவலாவதை ஏற்கும். அது இப்போது மேலோங்கியுள்ள மேற்கத்திய மயத்தை அதனுடன் கைகோத்து வரும் இந்திய மயத்தை எதிர்த்து முன்னேறுவதில் இருக்கிறது.

உணவு, நுகர்வு உள்ளிட்ட அனைத்திலும் மண்ணின் பண்பாட்டில் ஊன்றி நிற்பதே இந்த மாற்றுப் பொருளியல் பாதைக்கு அரண் சேர்க்கும். அது தான் சுற்றுச் சூழலை பாதுகாத்து ஆரோக்கியமான வளங்குன்றா வளர்ச்சிக்கு வழிகோலும்.

இதுவே உலக மயத்தை – இந்திய மயத்தை நிராகரித்த தமிழ்த் தேசிய வளர்ச்சிப் பாதை.
இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2013 பொங்கல் மலரில் வெளிவந்தது. கட்டுரையாளர் கி.வெங்கட்ராமன் இதழின் இணை ஆசிரியர் மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.