கூடங்குளத்தில் அமிலம் கலந்த கழிவு நீரை கடலில் விடுகிறார்கள்?
அணு உலையில் இருந்து அமிலம் கலந்த கழிவு நீரை கடலில் விடுகிறார்கள். அது கடல் நிறத்தை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் பயங்கர ரசாயன வாடையும் அடிக்கிறது என்று அணுசக்தி எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்:
நெல்லையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி நாராயணசாமி, கூடங்குளம் அணு உலையை பொறுத்தவரை மக்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம் என்று கூறியிருக்கிறார். அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கொடுத்துள்ள கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்றும் பணிகள் நடந்து வரும் காரணத்தால்தான் மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்று அவர் கூறியிருக்கிறார். அப்படி என்றால் கூடங்குளம் அணுஉலை இதுவரை பாதுகாப்பாக இல்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அணு உலை பாதுகாப்பாக இருக்கிறது என்று அப்துல் கலாம், எம்.ஆர்.சீனிவாசன், இனியன் குழு, முத்துநாயகம் குழு ஆகியோர் கூறினர். அவர்கள் அனைவரும் இந்த அணுஉலை உலகத்தரம் வாய்ந்தது என்றும், 3-ம் தலைமுறைக்கான தொழில் நுட்பம் சேர்த்திருக்கும் என்றும் மார் தட்டி மக்களிடம் பொய் சொன்னார்கள். அதற்கு பிறகு அணு உலையில் கசிவாகி விட்டதாக கூறுகிறார்கள்.
3-ம் தலைமுறைக்கான அணு உலை என்றால் பொருத்திய உடன் சரியானதாக இருக்க வேண்டும். கசிவு ஏற்பட்டு விட்டது என்பதால் முதல் நிலை ஆய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் உண்மைக்கு மாறாக மக்களின் பாதுகாப்பு என மத்திய மந்திரி நாராயணசாமி கூறியிருக்கிறார். அணு உலை பற்றிய உண்மையை சொல்லா விட்டால் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
அணு உலையில் இருந்து அமிலம் கலந்த கழிவு நீரை கடலில் விடுகிறார்கள். அது கடல் நிறத்தை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் பயங்கர ரசாயன வாடையும் அடிக்கிறது. இதனால் அந்த பகுதியில் யாரும் மீன்பிடிக்க செல்ல முடிவதில்லை. அணு உலை செயல்படாத நிலையிலேயே கழிவை கடலில் கலக்கிறார்கள். இதனால் கடல் வளம் கண்டிப்பாக அழிந்து போகும். ஆகவே உண்மையை மறைக்காமல் அணு உலை பற்றிய செய்திகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.
Leave a Comment