தழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்!
இந்திய – சிங்கள அரசுகள் கூட்டாக நடத்திய தமிழீழ இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி, 2009 சனவரி 29 அன்று, சென்னையிலுள்ள இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் முன் தீக்குளித்து உயிரீகம் செய்த மாவீரன் முத்துக்குமாரின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் 29.01.2013 அன்று தமிழகமெங்கும் கடைபிடிக்கப்படுகின்றது.
அந்நாள், தமிழீழ இன அழிப்புப் போரை தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழீழ விடுதலை வேண்டியும் உயிரீகம் செய்த ஈகியர் அனைவரையும் நினைவு கூரும் நாளாகவும் கடைபிடிக்கப்படுகின்றது.
தஞ்சை
தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நேற்று(28.01.2013) மாலை, தழல் ஈகி முத்துக்குமாரின் நான்காம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் சாணூரப்பட்டியில் நடைபெற்றது.
தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நேற்று(28.01.2013) மாலை, தழல் ஈகி முத்துக்குமாரின் நான்காம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் சாணூரப்பட்டியில் நடைபெற்றது.
முன்னதாக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அமைத்துள்ள ஈகி முத்துக்குமாரின் சிலைக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு பழ.நெடுமாறன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர், சாணூரப்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பேரணியாக சென்றனர்.
பொதுக்கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையேற்றார். ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு. நந்தகுமார் முன்னிலை வகித்தார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு பழ.நெடுமாறன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் வீரவணக்க உரை வழங்கினர்.
எழுச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, ம.தி.மு.க., தமிழர் தேசிய இயக்கம், அன்னை தெய்வானை இரத்தினசாமி நினைவு அறக்கட்டளை ஆகிய அமைப்புகளின் சார்பில் ஏற்பாடுகள் செய்திருந்தன.
சென்னை
சென்னையில் தழல் ஈகி முத்துக்குமாரின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தமிழீழ விடுதலைக்காக உயிரீஈகம் செய்த 22 ஈகியரின் நினைவைப் போற்றும் வகையில், 22 அடி ஈகியர் நினைவுத் தூண் சென்னை கொளத்தூரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை 9.30 மணயளவில், ஈகி முத்துக்குமாரின் தங்கை திருமதி தமிழரசி குடும்பத்தார் உள்ளிட்ட பல ஈகியரின் குடும்பத்தினர் திரண்டிருந்தனர். காஞ்சி மக்கள் மன்றம் சாபில், தோழர்கள் மகேசு – ஜெசி ஆகியோர் தலைமையில் கொண்டு வரப்பட்ட ஈகியர் நினைவுச்சுடர் அங்கு ஏற்றப்பட்டது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு தி.வேல்முருகன், இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி முன்னணித் தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு வன்னியரசு, தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு அதியமான், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் தமிழின உணர்வாளர்களும் அங்கு வீரவணக்கம் செலுத்தினர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, சென்னை நகர த.இ.மு. செயலாளர் தோழர் வினோத் உள்ளிட்ட தோழர்கள் இதில் பங்கேற்றனர். இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து ஒருங்கிணைத்திருந்தார்.
தஞ்சை நகரம்
தஞ்சையில் தழல் ஈகி முத்துகுமாரின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தஞ்சை அண்ணா நகரில் இன்று (29.01.2013)காலை 9.00 மணியளவில் வீரவணக்க நிகழ்வுக்கு மு.செல்வம் (திரவிட கழகம்) தலைமையேற்றார்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் இராசு.முணியாண்டி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், விடுதலை வேந்தான் (ம.தி.மு.க.தலைமைக் கழக பேச்சாளர்), பாசுகர் (ம.தி.மு.க.ஒன்றிய செயலாளர்) வீரவணக்க உரை நிகழ்த்தினர். செல்வம் (ம.தி.மு.க)நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து ஒருங்கிணைத்திருந்தார்.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு
Leave a Comment