ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“தனிநாயகம் அடிகளார் மிகச்சிறந்த ஆய்வறிஞராக மட்டுமின்றி, அவரே ஒரு நிறுவனமாகவும் செயல்பட்டவர் ஆவார்” – தோழர் கி.வெங்கட்ராமன் புகழாரம்!


“தனிநாயகம் அடிகளார் மிகச்சிறந்த ஆய்வறிஞராக மட்டுமின்றி, அவரே ஒரு நிறுவனமாகவும் செயல்பட்டவர் ஆவார்”

தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவில் தோழர் கி.வெங்கட்ராமன் புகழாரம்!

திருச்சியில், தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா நவம்பர் 28, 29 ஆகிய இரு நாட்களில் தூய பவுல் இறையியல் கல்லூரியில் சிறப்புற நடைபெற்றது.

பல்வேறு அமர்வுகளாக இரு நாட்கள் நடைபெற்று வந்த ஆய்வரங்கங்களில், பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள் கருத்துரையாற்றினர்.

28.11.2013 அன்று நடைபெற்ற இரண்டாம் அமர்வில், மதியம் 3.00 மணிக்கு தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டத்தின் இணை ஆசிரியரும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளருமான தோழர் கி.வெங்கட்ராமன், “தனிநாயகம் அடிகளாரது படைப்புப் பின்புலத்தில் தமிழகச் சூழல் அன்றும், இன்றும்” என்ற தலைப்பில் உரையாற்றினர். அவரது உரையின் எழுத்து வடிவம்:

தலைச் சிறந்த ஆய்வறிஞர்கள் நிறுவனர்களாக அமைவது அரிது. கடந்த 02.08.1913-ல் தோன்றி 04.09.1980-ல் மறைந்த ஆய்வறிஞர் முனைவர் சேவியர் தனிநாயகம் அடிகள் மிகச்சிறந்த ஆய்வறிஞராகவும், அவரே ஒரு நிறுவனமாகவும், ஆய்வு நிறுவனங்களின் அமைப்பாளராகவும் பன்முக ஆற்றல்களோடு விளங்கியவர் ஆவார்.

வீரமாமுனிவர், ஜி.யு.போப், கால்டுவெல் போன்றோர் போலவே கிறித்துவ மதப் பரப்புனராக வந்து வரலாற்றில் நின்று நிலைக்கத்தக்க தமிழ்ப்பணி ஆற்றியவர் தனிநாயகம் அடிகளார் அவர்கள்.

ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், இத்தாலி, ரஷ்யன், சிங்களம், சமஸ்கிருதம், உள்ளிட்ட 14 மொழிகளில்; தேர்ச்சி பெற்றிருந்த அடிகளார் ரோமாபுரியில் கிருத்துவக் கல்வி பயிலுங்கால் தமிழின் பெருமையை உணர்ந்தார்.

‘அயல்நாடு செல்லும் தமிழ் மாணவர் தமிழ்ப்பயிற்சி மிக்குளரேல் எத்துணை உயரியத் தமிழ்த்தொண்டு இயற்றுதல் கூடும் என்பது இனிது உணர்ந்தேன்” என்று கூறும் தனிநாயகம் அடிகளார் தமது வாழ்க்கை முழுவதும் இதே உணர்வோடு தமிழ்த் தொண்டாற்றி தமிழின் பெருமையை, தமிழ் இனத்தின் அகன்று ஆழ்ந்த அறிவை உலகறியச்செய்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் தமிழ் பயின்றது பெருவீச்சோடு ஆய்வுலகில் பறந்து விரிந்து செல்ல அடித்தளம் இட்டது. முனைவர் அ.சிதம்பரநாதன் அவர்கள் வழிகாட்டுதலில் அண்ணாமலைப் பல்கலைக் கழத்தில் அடிகளார் அளித்த ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை” (Nature in ancient tamil poetry) என்ற ஆய்வுத்தாள் உலகின் பிற இலக்கியங்களோடு தமிழ் இலக்கியத்தை ஒப்புமைப்படுத்தி முன்வைத்துள்ள மிகச்சிறந்த ஆய்வுரை ஆகும். பல தளங்களில் இத்துறையில் ஆய்வுகள் விரிவடைய இது வழிசமைத்தது எனலாம்.

பின்னாளில் தமிழ் ஆய்வில் அடிகளார் வீறுகொண்டு விரிந்த போது அவரது ஆய்வு சமூகவியல், பண்பாட்டியல், மானுடவியல், நிலவியல், மொழியியல், ஒப்பியல், உளவியல், வரலாறு என பல துறைகளின் பின்புலத்தோடு தமிழ் ஆய்வை நிகழ்த்துவதற்கு வலுவான முன்னோடியாக அமைந்தது. அடிகளார் நடத்திய Tamil Culture என்ற காலாண்டிதழ் இத்திசையில் பெரும் பணியாற்றியது. தனிநாயகம் அடிகளார் தனி ஆய்வாளராக மட்டும் இன்றி அவரே ஒரு நிறுவனமாக செயல்பட்டதை இவ்விதழ் பறைசாற்றியது.

ரோமில் ‘வீரமாமுனிவர் கழகம்’ நிறுவிய அடிகளார் பின்னாளில் 1964-ல் உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் அதனை ஒட்டி உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ் மாநாடுகள் ஆகியவை மூலம் நிலைக்கத்தக்க பணிகளை மேற்கொண்டார். இதற்காக பொதுவாக ஆய்வுலகமும், குறிப்பாக தமிழினமும் தனிநாயகம் அடிகளார் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது.

திருச்சி, தூய பவுல் இறையியல் கல்லூரி நண்பர்களும், தமிழகத்தின் பிற பகுதிகளில் தமிழின உணர்வாளர்களும்; நடத்தும் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா ஆய்வரங்கங்கள் இவ்வகையில் சிறப்பான பணிகளாகும்.

மொழி, இனம் குறித்த ஆய்வுகள் சில குறிப்பிட்ட அரசியல் பின்புலத்திலேயே நிகழ்கின்றன. ஏனெனில் வரலாறு நெடுகிலும் அரசு என்பதும் அது சார்ந்த அரசியல் என்பதும் ஒருவர்க்கப் பின்னணியோடு மட்டும் இன்றி ஒரு மொழி, இனப் பின்னணியோடும் இணைந்து தான் நடக்கின்றன.

தனிநாயகம் அடிகளார் தமிழ் ஆய்வில் இறங்கிய போது நிலவிய இந்திய, தமிழக அரசியல் பின்னணி கவனம் கொள்ளத்தக்கது.

அது ஆங்கிலேய ஆட்சியின் இறுதிக்காலமும், சுதந்திர இந்தியாவின் தொடக்கக் காலமும் ஆகும்.

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் தாங்கள் நிலைத்து ஆட்சிபுரிய இந்திய சமூகத்தைப் புரிந்துக் கொள்ள முயன்றனர். அம்முயற்சியில் அவர்களுக்கு கண்களும், செவிகளுமாக இருந்தவர்கள் பெரிதும் வடபுலத்து பார்ப்பன அறிஞர்களே ஆவர்.

குறிப்பாக ஆங்கிலேயர்களின், பொதுவாக ஐரோப்பியர்களின் இம்முயற்சியில் தோன்றியது தான் கீழைத்தேயவியல் (Orientalism) என்ற துறையாகும்.

சர்வில்லியம் ஜோன்ஸ் (1746-1794) கல்கத்தாவில் 1784-ல் நிறுவிய ஆசியவியல் கழகம் இத்துறையில் முக்கிய பங்காற்றியது.

பெரும்பாலும் கீழைத்தேயவியல் பன்னாட்டு மாநாடுகள் இந்தியாவிற்கு வெளியிலேயே நடைபெற்றன. முதல் மாநாடு பாரிசில் 1873-ல் நடைபெற்றது. பன்னாட்டு மாநாடுகளுக்கு தொடர்பில்லாமல் இந்தியாவிலும் கீழைத்தேயவியல் மாநாடுகள் பின்னாளில் நடைபெற்றன.

இம்மாநாடுகள் அனைத்திலும் சமஸ்கிருதமே முதன்மை பெற்றது. சமஸ்கிருத இலக்கியங்களே இந்திய இலக்கியங்கள் எனக் கொள்ளப்பட்டன. மொழியியல் என்றால் சமஸ்கிருதம் குறித்த மொழியியல், பண்பாடு என்றால் வடஇந்திய- ஆரியப்பண்பாடு, இந்தியா என்றாலே கங்கைச்சமவெளி என்ற புரிதலோடுதான் இம்மாநாடுகள் நடைபெற்றன.

1946-ல் பேராசிரியர் வையாபுரி பிள்ளை தலைமையில் கீழைத்தேயவியல் மாநாடு புனேயில் நடைபெற்றபோதுதான் திராவிட மொழிகளுக்கான ஒர் அமர்வு உருவாக்கப்பட்டு தமிழும் சிறிய இடத்தைப் பிடிக்க முடிந்தது.

இதற்கும் ஒரு பின்னணி உண்டு. வில்லியம் ஜோன்ஸ் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் இந்தோ-ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என வகைப்படுத்திய போது அதனை எதிர்த்து ஆங்கிலேய அதிகாரி எல்லீஸ் (1777-1819) கருத்து வெளியிட்டார். தென்னிந்திய மொழிக்குடும்பம் இந்தோ-ஆரிய வகையிலிருந்து வேறுபட்ட தனி மொழிக்குடும்பம் என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற புகழ் பெற்ற நூலை எழுதிய டாக்டர். கால்டுவெல் இத்தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து கிளைத்தவை அல்ல என்று உறுதிபட நிறுவினார். ஆயினும் திராவிடம் என்ற குழப்பமான கருத்தியலுக்கு கால்டுவெல்லின் இந்நூல் உரமிட்டது. இது குறித்து பின்னர் பார்ப்போம்.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் தனித்த மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை என்ற கால்டுவெல்லின் கருத்து ஆய்வுலகில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. தமிழின் பக்கமும் கீழைத்தேயவியல் அறிஞர்களைப் பார்க்க வைத்தது.

ஆயினும் வடமொழி மேலாண்மையே கீழைத்தேயவியலில் தொடர்ந்து நீடித்தது. மேற்குலக ஆய்வாளர்களுக்கிடையே நிலவிய இப்பிழையான கருத்தை நீக்க வேண்டியது தமது தலையாய கடமை என அடிகளார் கருதினார்.

‘இன்று நம் தமிழ் நாட்டுக்கு வேண்டுபவர் யாரெனில் ஆன்றமைந்து அடங்கிய கொள்கைச் சான்றோராகிய ஆராய்ச்சியாளர் பலரே. நான் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்றதின் பயனாகவும், பிற மொழிகளையும் அவற்றின் இலக்கியங்களையும் ஒருவாறு கற்றதின் பயனாகவும், தமிழ் இலக்கியம், தமிழ்ப்பண்பு, தமிழர்கள், தமிழ் வரலாறு முதலியவற்றை உலகில் எவ்வளவிற்குப் பரப்ப வேண்டும் என்று ஒரு சிறுது உணர்ந்துள்ளேன். ஹோமரின் ஒடிசியையும், இலியத்தையும் போற்றுவதைப்போல் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை- ஒப்புயர்வற்ற முத்தமிழ்த் தொடர்நிலைத் செய்யுளை- உலகம் போற்றுமாறு நாம் செய்தல் வேண்டும். கன்பூசியஸ், செனகா முதலாய நீதிநூல் ஆசிரியர்களை உலக மாந்தர் எங்ஙனம் அறிந்து படிக்கின்றனரோ அங்ஙனமே திருவள்ளுவரையும் அவர்கள் அறிந்து படிக்குமாறு நாம் செய்தல் வேண்டும். சாபோ, எலிசபெத், பிரௌனிங், சேக்ஸ்பியர் முதலானோரின் காதல் பாக்களை மக்கள் காதலித்து படித்து இன்புறுவதைப் போல் நம் அகத்துறை இலக்கிய நூல்களையும் அன்னார் படித்து இன்புறும் புதிய நாள் உதிக்க வேண்டும். உலக இலக்கியத்திரட்டு என்னும் பெருந்தொகை நூல்களில் நம் இலக்கிய நூல்களும் இடம் பெறும் பெருமை அடைவித்தல் வேண்டும். மேற்றிசைக் கண்ணும், கீழ்த்திசைக் கண்ணும் உள்ள பல்கலைக்கழகங்கள் தமிழ்க்கலைகளின் தனித்தன்மையை உலகிற்கு உணர்த்துமாறு செய்வித்தல் வேண்டும்.” (தமிழ்த்தூது- ஐந்தாம் பதிப்பு-1998-பக்கம் 29-30)

இதனை பிறர்க்குக் கூறும் அறிவுரையாக மட்டும் இன்றி தனக்குத்தானே இட்டுக்கொண்ட கட்டளையாகவும் கருதிச் செயல்பட்டார். அந்த நோக்கோடு மேற்குலக அறிஞர்கள் தமிழின், தமிழரின் பெருமையை அறிந்துக்கொள்ளும் வகையில் ‘Aspects of Tamil humanism”, “The Ideal of the expanding Self”, The humanistic concept of nature“ என்ற புகழ் வாய்ந்த கட்டுரைகளை எழுதினார்.

வடமொழி இலக்கியத்தோடு தமிழ் இலக்கியத்தை ஒப்பிட்டு தமிழின் விரிந்த பார்வையை, மனிதநேயக் கொள்கையை அடிகளார் எடுத்துரைத்தார்.

‘அக்காலத்து எழுதப்பெற்ற சமஸ்கிருத, பாலி இலக்கியங்களெல்லாம் சமயச் சார்புடையவையாய், புரோகிதர்களால் எழுதப்பெற்றவையாய் இருக்க, பழந்தமிழ் இலக்கியம் ஒன்றே பெரும்பாலும் சமயச்சார்பு அற்றதாய் விளங்குகிறது. இப்பழைய இலக்கியத்தின் பாடுபொருள்களும், நிகழ்வுகளும் சாதி பாகுப்பாட்டை ஏற்றிராத, கல்வியையும், மேம்பாட்டையும் ஆணுக்கும், பெண்ணுக்கும், எல்லா தொழிலினர்க்கும் வழங்கி வந்த ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவை.” என்பது தனிநாயகம் அடிகளாரின் உறுதியான கருத்து.

வடமொழி வாணர்களை மட்டும் இன்றி கிரேக்க அறிஞர்களையும், பண்டைத்தமிழ் இலக்கியவாதிகளோடு ஒப்பிட்டு தமிழின் உலக மேன்மையை அடிகளார் நிலைநாட்டுகிறார். பிளேட்டோவும், அரிஸ்டாட்டிலிலும் புகழ்ந்து பேசும் ஏதன்ஸ் நகரில் குடியுரிமைப்பெற்ற பத்தாயிரம் மக்களுக்கு குற்றேவல் செய்ய இரண்டு இலட்சம் அடிமைகள் இருந்தனர். குருடர்களும், கூனர்களும், உறுப்புகளில் குறையுடையோரும் இவ்வறிஞர்களால் புறக்கணிக்கப்பட்டனர். ஆனால் அடிமை வாழ்க்கையை வள்ளுவர் ஒருபோதும் ஏற்றதில்லை. உறுப்புகுறையுடையோரை பழிப்பதை இழிவாக கருதியது வள்ளுவம். ‘பொறியின்மை யார்க்கும் பழியன்று” என்றது திருக்குறள். இதனை தனிநாயகம் அடிகள் தனது திருக்குறள் திறனாய்வில் எடுத்துக்காட்டுகிறார்.

சான்றாண்மையை வலியுறுத்தும் ரோமானிய ஸ்டாயிக் நெறியை மதித்தாலும் தனிநாயகம் அடிகளார் வள்ளுவம் கூறும் அறம் அதனையும் தாண்டி உயர்ந்து நிற்பதை எடுத்துரைக்கிறார். ரோமானிய ஞானி துறவியாக தனித்து ஒதுங்கி நிற்க, வள்ளுவர் கூறும் தமிழ்ச்சான்றோன் இல்லற வாழ்வு நடத்தும் பண்புடையோனாக மக்கள் நடுவில் காட்சியளிக்கிறான் என்று தெளிவுப்படுத்துகிறார்.

மேற்கத்திய மெய்யியல் இன்ப நுகர்ச்சியை இலட்சியமாக முன்வைக்கும் போது திருவள்ளுவர் ‘அறத்தினான் வருவதே இன்பம்” என வரையறுப்பதை அடிகளார் எடுத்துக்காட்டி தமிழர் மெய்யியலின் மேன்மையை நிலைநாட்டுவார்.

இந்திய சுதந்திர இயக்கம் மேலெழுந்தபோது அது தனக்கான பண்பாடாக ஆரிய பண்பாட்டையும், தனக்கான ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் பெரிதும் கலந்த இந்தி மொழியையும், தனக்கான அறவியல் இலக்கியமாக பகவத் கீதையையும் முன் வைத்தது.

இந்த அரசியலை அறிவுத்தளத்தில் வலியுறுத்த ஒரு பெரும் அறிஞர் பட்டாளமே செயல்பட்டது. அது இன்று வரையிலும் நீடிக்கிறது. மொழியியல், வரலாற்று வரைவியல், தொல்லியல், மரபு அறிவியல் உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் ஆரிய மேலாண்மையையும், வடமொழி ஆதிக்கத்தையும் நிறுவ தொடர்ந்து இந்த அணியினர் அனைத்து உயராய்வு மையங்களிலும் பணி செய்கின்றனர்.

இன்று இந்தியத்தேசிய வெறியும், இந்துத்துவமும் போட்டி போட்டுக்கொண்டு இந்த மேலாண்மையை மக்கள் வாழ்வின் அனைத்து தளங்களிலும் நிறுவி தமிழை, தமிழினத்தை தொடர்ந்து தாழ்த்தி வைக்க மூர்க்கமாக முயன்று வருகின்றன. மார்க்சிய ஆய்வு நெறியின் பெயராலும் இதே வேலை ஆய்வுத் தளங்களில் வேகமாக நடைபெற்று வருகின்றது.

இச்சூழலில் தனிநாயகம் அடிகளார் அவர்களின் ஆய்வு நெறியை இளம் ஆய்வாளர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தேவை எழுந்துள்ளது.

தனிநாயகம் அடிகளாரின் ஆய்வுப்பணி விரிந்த அளவில் எடுத்துச்செல்லபட வேண்டிய தேவை இன்னொரு சூழல் காரணமாகவும் முகாமை பெருகிறது.

இந்தியத் தேசியத்தின் அடிப்படைக் கூறுகளாக ஆரியம், சமஸ்கிருதம், சமஸ்கிருத மயமான இந்தி, ஆகியவை முன்னிறுத்தப் பட்டபோது அதற்கு எதிராகத் தமிழகத்தில் திராவிடக் கருத்தியல் முன்வைக்கப்பட்டது.

வரலாறு நெடுகிலும் ஆரிய ஆதிக்கத்திற்கும், வடமொழி மேலாண்மைக்கும், ஆரியத்தின் வர்ணசாதி பிளவுகளுக்கும் எதிராக தமிழினம் தொடர்ந்து போராடியே வந்திருக்கிறது.

தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும், திருக்குறளும், மேற்கண்ட ஆதிக்கங்களுக்கு எதிராக சமராடி வந்ததையும், தமிழரின் அறக்கோட்பாடு மனித சமத்துவத்தை வலியுறுத்தியதையும், துறைதோறும், துறைதோறும், தனிநாயகம் அடிகளார் நுணுக்கமாக எடுத்துரைத்தார்.

இப்போராட்டத்தின் கொதிநிலைக் காலமாக 19-ஆம் நூற்றாண்டும், 20-ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியும் திகழ்ந்தன.

ஆன்மீகத்துறையில் வேத மதத்தையும் அதன் சாதி பிளவுகளையும், சாடி பேரெழுச்சியை வள்ளலார் இராமலிங்க அடிகள் ஏற்படுத்தினார். பெருந்திரள் செல்வாக்கு பெற்ற கருத்தாக கடவுள் மறுப்பு கருத்து விளங்கத்தொடங்கியதும், 19-ஆம் நூற்றாண்டில் தான். சென்னை இலௌகீக சங்கமும், அது நடத்திய தத்துவ விவேசினி மற்றும் வுhந வுhiமெநச ஆகிய இதழ்களும் பெருமெடுப்பில் கடவுள் மறுப்பு கொள்கைகளை பரப்பின. வருணசாதி கொடுமைகளையும் எதிர்த்தன.

பெரியார் (ஈ.வெ இராமசாமி) பிறப்பதற்கு முன்பாகவே கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு கருத்துக்களை பா வடிவில் மக்களிடம் அத்திபாக்கம் அ. வெங்கடாசலனார் பரப்பினார்.

திராவிட இயக்கம் வடவர் மற்றும் வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராகவும், வருணசாதி பிளவுகளுக்கு எதிராகவும் மக்களிடையே கருத்துகளை பரப்பி தமிழகத்தை சனநாயகப் போராட்டக் களமாக மாற்றியது. இது ஆய்வுக்களத்தில் வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய அறிஞர்களுக்கு வாய்ப்பான சூழலை உருவாக்கித் தந்தது.

ஆயினும் இதுவே ஆங்கிலம் என்ற புதிய ஆதிக்கத்திற்கு வழி ஏற்படுத்தவும் செய்தது.

திராவிட இயக்கத்தில் இரண்டு போக்குகள் எழுந்தன. ஒன்று பெரியார் தலைமையில் ஆனது. இன்னொன்று அண்ணா (சி.என். அண்ணாதுரை) அவர்களால் வழிநடத்தப்பட்டது.

திருக்குறள் மாநாடு, எழுத்து சீர்திருத்தம் என்று சில நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் பெரியார் முன்வைத்த திராவிடக் கருத்தியல் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று ஏசியது. தமிழிலக்கியம் அனைத்தும் பக்தி நெறி சார்ந்து மூடநம்பிக்கைகளை பரப்பியதாகவும், சாதி ஏற்றதாழ்வுகளுக்கு இடம் கொடுப்பதாகவும் இருப்பதாக பெரியார் சாடினார்.

மேலும் இவரது கருத்தியல் திராவிட இனம், திராவிட தேசியம் என்று கூறி தமிழை, தமிழினத்தை, தமிழ்த் தேசியத்தை பின்னுக்குத் தள்ளியது. தமிழாய்வு அறிஞர்களையே மூடர்களாக பகடிச்செய்யும் போக்கு பகுத்தறிவின் பேரால் முன்வைக்கப்பட்டது.

மேற்கத்தியவாதத்தை நகல் எடுத்து பகுத்தறிவு வாதம் என்ற பெயரால் இவ்வியக்கம் பரப்பியது. ஆங்கிலமே உயர்ந்தது தமிழால் முடியாது, தமிழரால் முடியாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டு படித்த இளையோர் இடஒதுக்கீட்டின் மூலம் தங்களுக்குரிய பணி வாய்ப்புகளையும், பதவிகளையும், பெறும் பயனாளிகளாக மாற்றப்பட்டனர்.


இதிலிருந்து அண்ணா அவர்கள் தலைமையில் கிளைத்த இன்னொறு திராவிட இயக்கம் இதற்கு மாறாக சங்ககால பெருமைகளையும், தமிழின் தொன்மையையும், தமிழின் இனிமையையும், பாமரரும் அறியுமாறு வீச்சோடு பரப்பியது. ஆரியத்தை எதிர்க்க வடவர் ஆதிக்கத்தை முறியடிக்க தமிழ் இலக்கியங்களை மிகத் திறமையாக அண்ணா கையாண்டார். இந்தியத் தேசியம் முன்வைத்த பகவத் கீதைக்கு எதிராக திருக்குறளை நிறுத்தி அதனை பட்டிதொட்டி எங்கும் பரப்பியதில் அண்ணாவுக்கும், அவரது தொண்டர்களுக்கும் பெரும் பங்குண்டு. தமிழ் என்பது ஒரு பெரும் அரசியல் ஆற்றலாக இவர்களால் களமிறக்கப்பட்டது.

ஆயினும் இணை ஆட்சிமொழி தொடர்பு மொழி என்ற பெயரால் ஆங்கிலத்தை இவர்களும் மேல்நிலையில் வைத்தனர். தமிழர்களின் செம்மாந்த வாழ்க்கையை எடுத்துக்கூறியபோதும் தமிழர்களின் மிகச் சிறந்த அறிவியல் மற்றும் அறவியல் வாழ்க்கையை இவர்கள் முன்னிறுத்தவில்லை.

ஆங்கிலமே அறிவின் சாளரம், அதுவே அறிவின் அறிகுறி என்ற கருத்தியலை பெருமெடுப்பில் தமிழர்களிடம் விதைத்ததில் இவர்களது பங்கும் முகாமையானது.

நீரின் வடிவம் மாறினாலும் அதன் ஒட்டுமொத்த அளவு மாறாதது. நிலத்தடி நீர், நிலத்தின் மேல் பாயும் நீர், மலைஉச்சியில் உறையும் நீர், அதனை கடந்து மேகத்தில் தங்கியிருக்கும் நீர் ஆகியவற்றின் மொத்த அளவு எப்போதும் ஒன்றுதான். இதனை மேற்கத்திய அறிவியல் உலகம் 19-ஆம் நூற்றாண்டில் அறிந்து கூறியது.

ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘மாறாநீர் வையம்” என்று திருக்குறள் சொல்கிறது.
பொருளை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது என்று மேற்கத்திய அறிவியல் உலகம் 18, 19 நூற்றாண்டுகளில் எடுத்துக்கூறியது. ஆனால் இதனை ‘இல்லது தோன்றாது, உள்ளது மறையாது” என்று சைவசித்தாந்தத்தில் குறிப்பிடப்படுகிறது.

குறிஞ்சிப் பாட்டு, 99 வகை மலர்களையும் அவற்றின் தாவரங்களையும் நிரல் படுத்தி கூறுவதை தனிநாயகம் அடிகளாரும் தனது பழந்தழிழர் இலக்கியத்தில் இயற்கை என்ற நூலில் எடுத்துக்காட்டுகிறார்.

தமிழரின் அளவீடுகள் இன்று குறிப்பிடப்படும் ‘நானோ’ அளவுக்கு நெருக்கமானவையாக உள்ளன. தமிழரின் மரபான மருத்துவம், வேளாண்மை, மற்றும் உலோகவியல் நுட்பங்களை நோக்கி இன்றி உலகம் திரும்பிப் பார்க்கிறது.

தமிழியல் ஆய்வுலகம் இந்த உண்மைகளை முன்வைத்து தமிழை நிலைநிறுத்த வேண்டியக் கடப்பாடு உள்ளது.

இன்றைய உலகமயச் சூழலில், வல்லாதிக்கத்திற்கு துணையாக அறம் மறந்து அறிவியல் உலகம் இயங்கக்கூடிய நிலையில் இவ்வாதிக்கத்திலிருந்து மக்களுக்கான மாற்றுகளை உருவாக்க மனிதநேயம் உள்ள அறிவாளர்கள் முயன்று வருகிறார்கள்.

இந்த மாற்று என்பது அரசியல் தளத்திலும், அறிவியல் தளத்திலும், சமூகவியல் தளத்திலும், அறவியல் தளத்திலும் உலகு தழுவியதாக இருக்கமுடியாது. வல்லாதிக்க வாதிகள் கட்டி எழுப்ப முயலும் ஒன்றை தன்மைக்கும், ஒருமுனை உலகிற்கும் மாற்றாக பன்மைத் தன்மையும், பலமுனை உலகமும், மட்டுமே இருக்க முடியும்.

அப்படிப்பட்ட பலமுனை உலகத்தில் தமிழ்த்தேசம் ஒரு முனையாக திகழவேண்டிய தற்காப்புத் தேவை உள்ளது. அதற்கு தமிழ் ஓர் பேராயுதமாக அமைய வேண்டிய அவசியம் உள்ளது.

ஆரிய இந்தியத்தையும், மேற்கத்திய மயத்திற்கு துணையான திராவிடத்தையும், ஒரு சேர எதிர்கொண்டு தமிழின் மேன்மையை, தமிழரின் பெருமையை, இளையோருக்கு உணர்த்தி தமிழால் முடியும், தமிழரால் முடியும் என்ற தற்சார்பையும், தன்னப்பிக்கையையும், நிலைநிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சமஸ்கிருதம், ஆங்கிலம், கிரேக்கம், ஆகிய அனைத்தோடும் ஒப்பிட்டு தமிழின் மேன்மையை தமிழினத்தின் பெருமையை நிலைநாட்டிய சேவியர் தனிநாயகம் அடிகளாரின் அடியொற்றி ஆய்வுகள் பலதளங்களிலும் விரைந்து, விரிந்து செல்வது முகாமையான தேவையாகும். அதுதான் தற்சார்பான, தகைமை சான்ற எதிர்காலத் தமிழகத்தை படைக்க உதவும்.

இந்த நோக்கில் தனிநாயகம் அடிகளாரின் ஆய்வு நெறி பரவுவதும், அவர் நிறுவிய உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், அவர் தொடங்கி வைத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் ஆகியவை வாண வேடிக்கைகளிலும், சில்லறை அரசியல் சண்டைகளிலும் சிதைந்து விடாமல் பாதுகாக்கப்படுவதும் மிகமிகத் தேவையாகும்.

தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாக்கள் இத்திசையில் செயல்பாட்டிற்கு தமிழ்நாட்டு இளையோரை உந்திச்செல்லட்டும்.

தனிநாயகம் அடிகளார் நினைவைப்போற்றுவோம்.
அடிகளாரின் ஆய்வு நெறிகளை வளர்த்தெடுப்போம்!

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.

இந்நிகழ்வில், திரளான கல்லூரி மாணவர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.