ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தழல் ஈகி முத்துக்குமாருக்கு தமிழகமெங்கும் வீரவணக்க நிகழ்வுகள்!

தழல் ஈகி முத்துக்குமாருக்கு தமிழகமெங்கும் வீரவணக்க நிகழ்வுகள்! 2008-2009ஆம் ஆண்டுகளில் தமிழீழ மக்களுக்கெதிரான, சிங்கள – இந்தியக் கூட்டரசுகள் நடத்திய இனவழிப்புப் போரை நிறுத்தக் கோரி, சனவரி 29 – 2009 அன்று காலை, சென்னை நுங்கம்பாக்கம் இந்திய அரசு வருமானவரி அலுவலகம் முன்பு தன்னையே எரித்துத் தீக்கிரையாக்கிய தழல் ஈகி முத்துக்குமார் தொடங்கி, தமிழீழ விடுதலைக்காக உயிர் ஈந்த ஈகியருக்கு தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. 

  சென்னை சென்னையில், தழல் ஈகி முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்தே அதே இடத்தில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக்குழு சார்பில், முத்துக்குமார் உள்ளிட்ட 26 ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் 26 அடி நினைவுத் தூண் எழுப்பப்பட்டிருந்தது. இயக்குநர் த.புகழேந்தி, புலவர் புலமைப்பித்தன் உள்ளிட்டோரும், மாணவர்களும் இணைந்து இவ் ஏற்பாட்டைச் செய்திருந்தனர். அத்தூணுக்கு பல்வேறு அமைப்பினரும் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையிலான தோழர்கள், இந்திய சிங்கள கூட்டுச் சதியை அம்பலப்படுத்திய ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தி முழக்கங்கள் எழுப்பியவாறு முத்துக்குமார் நினைவுத் தூணை வந்தடைந்தனர். அங்கு தோழர் பெ.மணியரசன் ஈகியர் தூணுக்கு மலர் தூவி வீரவணக்கம் செய்தார். நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், த.இ.மு. பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 தஞ்சை


தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ள தழல் ஈகி முத்துக்குமார் சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் வீரவணக்கம் செலுத்தினர். காலை 11 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையிலான த.தே.பொ.க. – த.இ.மு. தோழர்கள் முத்துக்குமார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செய்தனர். புலவர் இரத்தினவேலவர், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை, செங்கிப்பட்டி த.தே.பொ.க. செயலாளர் தோழர் ந.கருப்பசாமி, ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு, தமிழக இளைஞர் முன்னணி ஒன்றியத் தலைவர் தோழர் அ.தேவதாசு, நடுவண் குழு உறுப்பினர்கள் தோழர் புதுக்குடி காமராசு, தோழர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட திரளான தோழர்கள் இதில் கலந்து கொண்டனர். ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு. நந்தகுமார், விடுதலை சிறுத்தைகள் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் திரு. விடுதலைவேந்தன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் திருஞானம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் முத்துக்குமார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். தழல் ஈகி முத்துக்குமார் சிலை அமைக்க, தனது நிலத்தைக் கொடையாக அளித்த புலவர் இரத்தினவேலவர் சார்பில், வீரவணக்கம் செலுத்த வந்தோருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுவாமிமலை

சுவாமிமலை கடை வீதியில், இன்று மாலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெறுகிறது. நிகழ்வுக்கு, த.தே.பொ.க. தோழர் தீந்தமிழன் தலைமையேற்கிறார். நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர், சுவாமிமலை கிளைச் செயலாளர் தோழர் முரளி, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.செந்தமிழன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

ஓசூர் 

ஓசூர் இராம் நகரில், இன்று மாலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்கத் தெருமுனைக் கூட்டம் நடைபெறுகின்றது. கூட்டத்திற்கு, நகரச் செயலாளர் தோழர் செம்பரிதி தலைமையேற்கிறார். தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் மாரிமுத்து நினைவேந்தல் உரை நிகழ்த்துகிறார். தோழர் சுப்பிரமணியன்(த.தே.பொ.க.) நன்றி நவில்கிறார். இதே போல், தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

 (செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.