ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உச்சநீதி மன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. சிதம்பரம் நடராசர் ஆலயத்தை அரசே நடத்த.. தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் தோழர் கி.வெங்கட்ராமன்



உச்சநீதி மன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. சிதம்பரம் நடராசர் ஆலயத்தை அரசே நடத்த..
தனிச்சட்டம் கொண்டு வருக. தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி  பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தல்.
 

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாகத்தைத் தமிழக அரசு ஏற்றது செல்லாது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அளித்த அறிக்கை வருமாறு.

தில்லை நடராசர் ஆலயத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றுநடத்தியது செல்லாது என உச்சநீதி மன்றம் இன்று (06.01.2014) அளித்துள்ள தீர்ப்பு முற்றிலும் எதிர்பாராத ஒன்று அல்ல என்ற போதிலும். தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பாகும். 

கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு சிதம்பரம் நடராசர் ஆலயத்தை தனது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அதற்கான நிர்வாக அலுவரையும் நியமித்தது. இதனை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து தமிழக அரசின் நிர்வாகம் தொடர ஆணையிட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து தீட்சிதர்களும் சுப்ரமணியம் சாமியும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தமிழக அரசு இதனை உரிய முறையில் கையாள அக்கறைக் காட்டவில்லை மூத்த வழக்கறிஞர்கள் யாரையும் நியமித்து வாதாட முன்வரவில்லை. ஏனோதானோ என்று நடத்தி வேண்டும் என்றே இந்த வழக்கை குழப்பியதோ என்று ஐயப்பட அடிப்படைகள் உண்டு. 

இந்நிலையில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுக்கான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் தமிழக அரசின் ஆணையைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளனர். கோயிலில் முறைகேடுகள் நடந்திருந்தால். அது குறித்து தமிழக அரசு விசாரிக்கலாமே தவிர நிர்வாக அலுவலரை நிரந்தரமாக நியமிக்க முடியாது. என்று நீதிபதிகள் கூறியிருப்பது இந்த வழக்கின் அடிப்படையையே அணுகாத தீர்ப்பாக உள்ளது. 

வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் தீட்சிதர்கள் தனிவகையறாவினர் (Denomination) அல்லர் என்பதையோ, இக்கோயில் கட்டப்பட்டதிலிருந்து பல கட்டங்களில் விரிவாக்கப்பட்டது வரை அரசுகளின் பணியாக இருந்தனவே தவிர இவற்றில் தில்லை தீட்சிதர்களின் பங்கு பணி எதுவும் இல்லை என்ற உண்மையையோ உச்ச நீதி மன்றம் கருத்தில் கொள்ளவில்லை. 

அந்த அடிப்படையில் உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு வழக்கின் முதன்மை சிக்கலை கருதிப்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது. இந்த உண்மையை முன்வைத்து தமிழக அரசு வலுவாக வாதாடாமல் போனது. இந்நிலை வருவதற்கு ஓர் முக்கிய காரணமாக அமைந்து விட்டது. 

இத்தீர்ப்பை சட்ட முறையில் எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு சிதம்பரம் நடராசர் ஆலயத்தை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொணர்வதற்கு தனிச்சட்டம் வரைந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதே ஒரே வழி.

எனவே தமிழக அரசு தில்லை நடராசர் ஆலய நிர்வாகத்தை ஏற்று நடத்தும் வகையில் உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு காலதாமதம் ஆகுமானால் உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றுத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.