ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பேரறிவாளன் சாந்தன் முருகன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தமிழர்கள் போராட்டம் வெற்றி

பேரறிவாளன் சாந்தன் முருகன் உள்ளிட்ட  ஏழு பேர் விடுதலை தமிழர்கள் போராட்டம் வெற்றி!

இந்திய அமைதிப்படையை தமிழீழத்திற்கு அனுப்பி, ஆயிரக்கணக்கான தமிழீழ மக்கள் கொல்லப்படக் காரணமாக விளங்கிய இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு, இந்திய அரசால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரையும், வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

பன்னெடுங்காலமாக தமிழகத்தின் தமிழின உணர்வாளர்கள் கோரி வந்த இக்கோரிக்கை, 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழ் மக்களின் ஒட்டு மொத்தக் கோரிக்கையாக வளர்ந்தது. உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு ஒருபுறமும், மக்களின் எழுத்தம் மறுபுறமும் எழுந்ததையடுத்து தமிழக அரசு இவர்களை விடுதலை செய்ய முன்வந்துள்ளது

இவ்விடுதலையை கொண்டாடும் வகையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் தமிழின உணர்வாளர்களும், தமிழ் மக்களும் வெடி வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடி வருகின்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பல இடங்களில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்றன

குடந்தை

குடந்தை காந்திபூங்கா அருகில், மாலை 6.30 அளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் தலைமையில் கூடிய கட்சித் தோழர்களும், உணர்வாளர்களும், இவ்விடுதலையை ஆதரித்து ஆரவார முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்


சென்னை
எழுவர் விடுதலை - தமிழர் போராட்டத்தின் வெற்றி!” என தெரிவிக்கும் வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகளை, சென்னை மாநகரமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் ஒட்டியுள்ளனர்


சிதம்பரம்


இராசீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 23 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் , நளினி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது ! 

இதனை வரவேற்று  சிதம்பரம் தெற்கு சன்னதி - கீழவீதி ஆகிய இடங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர்கள், தமிழக உழவர் முன்னணி, உலகத் தமிழர் பேரமைப்பு, தமிழக இளைஞர் முன்னணி அமைப்பு நிர்வாகிகள் பட்டசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், வரவேற்பு முழக்கங்கள் எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

முருகன்குடி

முருகன்குடி பேருந்து நிலையம் அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர்கள், தமிழக இளைஞர் முன்னணி அமைப்பு நிர்வாகிகள் பட்டசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், வரவேற்பு முழக்கங்கள் எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இவ்வாறு பல பகுதிகளிலும், எழுவர் விடுதலை ஆதரித்து கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏழு பேரும் வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகும் நாளை தமிழினமே ஒட்டு மொத்தமாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளது


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.