மேற்பார்வைக்குழு அமைப்பது முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீர்தேக்க முன் நிபந்தனை அல்ல !
மேற்பார்வைக்குழு அமைப்பது முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீர்தேக்க
முன் நிபந்தனை அல்ல ! தமிழக உழவர் முன்னணி விளக்கம்
இதுகுறித்து தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு கி.வெங்கட்ராமன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டபிறகுதான் முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க முடியும், தமிழக அரசு தன்னிச்சையாக தண்ணீர் தேக்க முடியாது என்று தமிழக முதலமைச்சர் செயலலிதா கூறியிருப்பது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. தமிழக அரசு 142 அடி தண்ணீர் தேக்க எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. செயலலிதாவின் இந்த அறிவிப்பு முல்லைப்பெரியாறு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை வெற்றுக் காகிதமாக மாற்றி விடும் ஆபத்து உள்ளது.
செயலலிதாவின் இந்த அறிவிப்பை தமிழக உழவர் முன்னணி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக பொதுப் பணித்துறையினருக்கு ஆணையிட்டு மதகுகளை இறக்கி 142 அடி தண்ணீர் தேக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் .
தலைமை நீதிபதி லோடா தலைமையிலான உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயம் 2014 மே 7 அன்று அளித்துள்ள தீர்ப்பில் எந்த இடத்திலும் மூன்று நபர் மேற்பார்வைக் குழு அமைத்த பிறகுதான், அவர்கள் முன்னிலையில் தான் முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று கூறப் படவில்லை.
இத்தீர்ப்பின் 221 ஆம் பத்தி “தமிழ்நாடு மாநிலம் அணையில் 142 அடி தண்ணீர் தேக்கிக் கொள்ளவோ அணையின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவோ கேரள மாநில அரசு 2006ல் தான் பிறப்பித்த – இப்போது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று இத்தீர்ப்பில் அறிவிக்கப் பட்டுள்ள- சட்டத்தை பயன்படுத்தியோ அல்லது வேறு வகையிலோ குறுக்கிடவோ தடை ஏற்படுத்தவோ கூடாது என நிரந்தர தடை ஆணை பிறப்பிக்க படுகிறது” என்று தெளிவுபடக் கூறுகிறது. தமிழக அரசின் அதிகாரத்தையும் , 142 அடி தண்ணீர் தேக்கி கொள்ள தமிழக அரசுக்கு உள்ள உரிமையையும் தங்கு தடை அற்றது என அறிவிக்கிறது. இதில் எந்த ஐயப்பாட்டுக்கும் இடம் இல்லை.
முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கினால் அணையின் பாதுகாப்புக்கு ஆபத்து எனக் கூறிய கேரள அரசின் வாதத்தை இத்தீர்ப்பு முற்றிலும் நிராகரித்தது.
இது குறித்து 222ஆம் பத்தி கூறுவது கவனம் கொள்ளத் தக்கது. அது கூறுவதாவது.
“முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை மீண்டும் தேக்கினால் அணையின் பாதுகாப்புக்கு ஆபத்து என்பது இல்லாத ஒன்றாகும். ஆயினும் கேரளாவின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்பதற்காக மூன்று நபர் மேற்பார்வைக் குழு ஒன்று அமைக்கப் படட்டும் ” என்பதாகும்.
அணையின் பாதுகாப்பு குறித்த கேரளாவின் கற்பனையான அச்சத்தை போக்குவதற்காவே மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக் குழு அமைக்கப் படுகிறது என்பதை உச்சநீதிமன்றத் தீர்ப்பு எந்த ஐயத்திற்கும் இடமின்றி தெளிவாகவே கூறுகிறது. 142 அடி தண்ணீர் தேக்க மூன்று நபர் குழு அமைக்கப்படுவதை முன் நிபந்தனையாக கூறவே இல்லை.
தீர்ப்பின் பத்தி 223 மேற்பார்வைக் குழுவின் அதிகாரம் மற்றும் பணிகள் குறித்து கீழ்வருமாறுக் கூறுகிறது.
i. முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தேக்கிக் கொள்வதை இக்குழு மேற்பார்வையிடும் .
ii. குறிப்பாக பருவமழை தொடங்குவதற்கு முன்பும், பருவமழை காலத்திலும் இக்குழு அவ்வபோது அணையைப் பார்வையிட்டு அதன் பாதுகாப்புத் தன்மையை கவனித்து வரும். அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும். அப்பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு செயல் படுத்த வேண்டும்.
மேற்கண்ட இரு பத்திகளையும், மேற் சொன்ன பத்தி 222ஐயும் இணைத்து படித்தால் தீர்ப்பின் முழுப் பொருளும் தெளிவாக விளங்கும்.
142 அடி தண்ணீர் தேக்குவதை மேற்பார்வைக்குழு மேற்பார்வையிடும் என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர, மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் தான் மதகுகளை இறக்கி 142 அடி தண்ணீர் தேக்க வேண்டும் என்ற வாசகமோ அல்லது அந்த பொருள் வரும்படியான வாசகமோ இத்தீர்ப்பில் எந்த இடத்திலும் இல்லை.
142 அடி தண்ணீரை அணையில் தேக்கிய பிறகு அணையின் நிலையை பார்வையிடுவதற்குதான் இக்குழு அமைக்கப் படுகிறதே தவிர 142 அடி தண்ணீர் தேக்கும் செயலை பார்வையிடும் அமைப்பு அல்ல இது.
தீர்ப்பு இவ்வளவு தெளிவாக இருக்கும்போது நடுவண் அரசும், கேரள அரசும் அதிகாரியை நியமித்தப் பின் ,மூன்று நபர் மேற்பார்வைக்குழு அமைக்கப் பட்ட பிறகு , அதன் முன்னிலையில் தான் அணையின் மதகுகளை இறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுவதாக முதலமைச்சர் செயலலிதா எதை வைத்து கூறுகிறார் என்பது வியப்பாக இருக்கிறது.
தீர்ப்பில் சொல்லப் படாத நிபந்தனையை இருப்பதாக கருதிக் கொண்டு முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்கும் பணியை இனியும் தள்ளிப் போடுவது மீட்க முடியாத பேரிழப்பை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்திவிடும்.
எனவே இனி ஒரு நிமிடமும் காலதாமதம் செய்யாமல் முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க ஆணையிடுமாறும், அணையின் பாதுகாப்புப் பணியை மீண்டும் தமிழக காவல்துறையிடம் மீட்டுக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Comment