ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நீதியரசர் சந்துரு எழுதிய ” அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” நூல் அறிமுக விழா!




சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திரு. கெ.சந்துரு அவர்கள் எழுதிய ”அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” நூல் அறிமுகம் மற்றும் பாராட்டு விழா நெய்வேலியில் சிறப்புடன் நடைபெற்றது.

நெய்வேலி எண் 3, வட்டம் 19, தமிழர் பண்பாட்டு கழக வளாகத்தில் 30.05.2014 வெள்ளி மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற இந் நிகழ்விற்கு பொறியாளர் துரைக்கண்ணு அவர்கள் தலைமையேற்றார். 


பேராசிரியர் திரு. இராமச்சந்திரன், திருமதி சாந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் , தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணை ஆசிரியர் தோழர்.கி.வெங்கட்ராமன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நீதிபதி சந்துரு அவர்கள் எழுதிய “”அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” நூல் குறித்து திறனாய்வு செய்து கருத்துரை வழங்கினார்.

நிறைவாக ஏற்புரை வழங்கிப் பேசிய நீதியரசர் கெ.சந்துரு அவர்கள் “ இந்தப் புத்தகம் எழுத்தாளர் என்னும் எனது தனிப்பட்ட பெருமைக்கானது அல்ல. நீதிமன்றத்தில் தீர்ப்புரைக்கும் பொறுப்பில் நான் சந்திக்க நேர்ந்த சில சாதிக் கொடுமைகளுக்கு எதிராக நான் வழங்கிய சில தீர்ப்புரைகளின் குறிப்புகளின் தொகுப்பு. இதை சாதிகொடுமைகளுக்கு எதிராக பாமரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், நீதிமன்றத் தீர்ப்புகளாலோ, அரசு கொண்டுவரும், மின் மயான முறையோ, அல்லது இரட்டை குவளை முறை உள்ள தேநீர் கடைகளில் கையாளப்படும் பிளாஸ்ட்டிக் கப் போன்றவற்றாலோ சாதியின் இருப்பு தீர்ந்துவிடாது. சாதி ஒழிப்பிற்கும், தீண்டாமை எதிர்ப்பிற்கும் நீதிமன்றத்துக்கு வெளியே, தமிழர்கள் ஒன்றிணைந்து போராடியாக வேண்டும் ” என்பதை குறிப்பிட்டு பேசினார்.

நிகழ்வில் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழர் பண்பாட்டுக் கழத்தினர், இன உணவாவாளர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

நூல் அறிமுகத்திற்கு முன்னதாக நீதியரசர் சந்துரு அவர்கள் வளாகத்திலிருந்த அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.