ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஆகத்து 7 முதல் 13 வரை : சமற்கிருத எதிர்ப்பு வாரம்


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கடைபிடிக்கும் சமற்கிருத எதிர்ப்பு வாரம் 2014 ஆகத்து 7 முதல் 13 வரை

சமற்கிருதம் என்பதன் இன்னொரு பெயர் ஆரியம்; ஆரியம் என்பதன் இன்னொரு பெயர் பார்ப்பனியம்! பார்ப்பனியம் என்பதன் இன்னொரு பெயர் வருணாசிரம தர்மம்!

வருணாசிரம தர்மத்தின் பொருள், ஆதிக்கச் செலுத்தப் பிறந்தவர்கள் ஆரியர்களும் பார்ப்பனர்களுமாவர்! மற்ற இனத்தார் அவர்களுக்கு அடங்கி வாழ வேண்டும்; அடிமை வேலை செய்து வாழ வேண்டும் என்பதாகும்!

ஆரியம் – பார்ப்பனியம் என்பதன் இன்றைய அரசியல் பெயர் இந்தியம்! இந்தியம் என்பதன் புனைபெயர் இந்துத்வா!

பா.ச.க. அரசு என்பது சாரத்தில் பார்ப்பனிய அரசுதான்; ஆரிய அரசுதான். எனவே, பா.ச.க. ஆட்சிக்கு வந்தவுடனேயே அவசரம் அவசரமாக இந்திய அரசுத் துறையில் இந்திப் பயன்பாட்டை அதிகப்படுத்தியது. இணையதளங்களில் இந்திய அரசு அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் இந்தியில்தான் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டது.

இதற்கு எதிர்ப்புக் கிளம்பியதும், இந்தி பேசும் மாநிலங்களில் பணியாற்றுவோர்க்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறிச் சமாளித்தது. நடுவண் அமைச்சர்களும் நடுவண் அரசு அதிகாரிகளும் பரிமாறிக் கொள்ளும் செய்திகள் பெரிதும் அனைத்திந்தியத் தன்மை வாய்ந்தவைதான்! இதில், இந்தி பேசாத மாநிலங்களுக்கு தனிச்செய்தி எங்கிருந்து வருகிறது? அதுவும் இணையதளங்களில் மாநில எல்லைகள் ஏது? பம்மாத்து பேசுகிறது பா.ச.க.

இப்போது, இந்தியின் மூலமொழிகளில் ஒன்றான சமற்கிருதத்தைத் திணிக்கும் செயலில் இறங்கியுள்ளது நரேந்திர மோடி அரசு. நடுவண் அரசுப் பாடத்திட்டதைக் கொண்ட நடுவண் மேல்நிலைப் பள்ளிக் கல்வி வாரியப் (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளில் 2014 ஆகத்து 7 முதல் 13 வரை சமற்கிருத வாரம் கடைபிடிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

அந்த ஓருவாரத்தில் பள்ளி மாணவர்களிடமும் சுற்றியுள்ள மக்களிடமும் சமற்கிருதமொழியின் மேன்மையைப் பரப்ப வேண்டும். அவர்களிடம் சமற்கிருதச் சொற்களை தமிழ்ச் சொற்களுக்கு மாற்றாக பயன்படுத்தும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்டைக்கால ஆரியர்கள் தொடங்கிய தமிழ் அழிப்பு வேலையை இப்பொழுதும் அரசு அதிகாரத்தோடு தொடர்கிறார்கள் பா.ச.க. ஆரியர்கள்.

தண்ணீரைத் தீர்த்தம் என்றார்கள்; சாப்பாட்டைப் போஜனம் என்றார்கள். குடியிருக்கும் வீட்டைக் கிரகம் என்றார்கள். திருமணத்தை விவாகம் என்றார்கள். தீயாடியப்பரை அக்னீசுவரர் என்றார்கள். முருகனை சுப்பிரமணியம் என்றார்கள். தமிழர்களை சூத்திரர்கள் என்றார்கள் – பஞ்சமர்கள் என்றார்கள்; கடைசியில் தமிழை நீச பாஷை என்றார்கள். சமற்கிருதத்தைத் தேவபாஷை என்றார்கள்!

ஆரிய ஆக்கிரமிப்பால் – சமற்கிருதக் கலப்பால் தமிழ்மொழியில் வெவ்வேறு மண்டலங்களில் வெவ்வேறு கலப்பு மொழிகள் உருவாயின. அவ்வாறு தமிழிலிருந்து பிரிந்தவைதாம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள்!

எஞ்சியிருக்கின்ற தமிழகத்தையும் தமிழ்மொழியையும் மீண்டும் பிரிக்க வருகிறதா சமற்கிருதம்?

சமற்கிருதம் யாருக்கும் தாய்மொழி இல்லை; ஆனால், மற்றவர்களின் தாய்மொழியைச் சிதைப்பதே அதன் வேலை!

இந்தியைத் திணித்திட அது பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி என்றார்கள்! சமற்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை 14 ஆயிரம் மட்டுமே என்று மக்கள் தொகைக் கணக்கு கூறுகிறது. அவர்களும் வீம்புக்குப் பெயர் கொடுத்தவர்கள்!

இதனால் ஆரியச் சதிகாரர்கள் என்ன கூறுகிறார்கள்? இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளும் சமற்கிருதத்திலிருந்து பிறந்தவை என்று கயிறு திரிக்கிறார்கள். யாருக்கும் தாய்மொழியாக இல்லாத சமற்கிருதம் தமிழ் மொழியிலிருந்து சொற்களைக் கடன் வாங்கியும், எழுத்து வடிவத்தைக் கற்றுக் கொண்டும் வளர்ந்த செயற்கை மொழி!

சமற்கிருதத் தொடர்பில்லாமல், சமற்கிருதம் உருவாக்கப்படுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்கையாகத் தோன்றிய மொழி தமிழ். இதனை எல்லீஸ், கால்டுவெல், நோம் சாம்ஸ்கி போன்ற மேலை மொழியியல் அறிஞர்கள் உறுதி செய்துள்ளார்கள்.

சமற்கிருத ஆதிக்கம் என்பது மொழி ஆதிக்கம் மட்டுமன்று; ஆரிய – பார்ப்பன இன ஆதிக்கமாகும். பார்ப்பனரல்லாத மக்களை ஒடுக்கும் – இழிவுபடுத்தும் வர்ணாசிரம ஆதிக்கமாகும்! தீண்டாமையின் ஊற்றுக் கண் ஆரியமே!

தமிழர்களைச் சூத்திரர்களாக்கிட – பஞ்சமர்களாக்கிட மீண்டும் வருகிறது சமற்கிருதம்! 
சமற்கிருத நச்சுப்பாம்மை விரட்டியடிப்போம்!
வீதிக்கு வாருங்கள் தமிழர்களே!



No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.