ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சிங்கள் அரசு மக்களைத் தடுத்தாலும் ஐ.நா விசாரணை நடக்கும் : அஸ்மா ஜெஹாங்கிர்


இலங்கை மீதான சர்வதேச விசாரணையை நடத்தவுள்ள ஐநா விசாரணைக்குழுவுடன் தொடர்புகொள்ளும் மக்களை அரசாங்கம் தடுக்க முயன்றாலும் எங்கள் விசாரணைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்று அந்த விசாரணைக் குழுவின் வல்லுநர்களில் ஒருவரான அஸ்மா ஜெஹாங்கிர் தெரிவித்துள்ளார்.

மக்களை  தடுக்க முயல்வது அரசாங்கத்துக்கே பாதகமாக அமையும் என்றும் அஸ்மா ஜெஹாங்கிர் தெரிவித்துள்ளார்.

ஐநா விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கமுடியாது என்று தீர்மானம் எடுத்துள்ள இலங்கை அரசாங்கம், அந்த விசாரணைக் குழுவுடன் தொடர்புகொள்பவர்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த சூழ்நிலையில், இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தவுள்ள விசாரணைக் குழுவை ஐநா மனித உரிமைகள் பேரவை கடந்த வாரம் அறிவித்தது.

ஃபின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்ட்டி அத்திசாரி, நியூசிலாந்தின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கிர் ஆகிய மூன்று துறைசார் வல்லுநர்கள் இந்த விசாரணையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கங்கள் ஒத்துழைப்பு வழங்காதிருந்த பல சர்வதேச விசாரணைகளை இதற்கு முன்னர் தாம் நடத்தியிருப்பதாகவும் விசாரணைக்குழு வல்லுநர் ஜெஹாங்கிர் தெரவித்தார்.

தமக்கு ரகசியமாக தகவல்களை அளிப்போரின் ரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தமது விசாரணைகள் வரும் ஆகஸ்ட் முதல் - இரண்டு வாரங்களில் தொடங்கும் வாய்ப்புள்ளதாகவும் அஸ்மா ஜெஹாங்கிர் கூறினார்.

தமது பரிந்துரைகள் அடங்கிய விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், ஐநா மனித உரிமைகள் பேரவையே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கும் என்றும் வழக்கறிஞர் ஜெஹாங்கிர் தெரிவித்தார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.