ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழக மாணவர் முன்னணி சார்பில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு மிதிவண்டிப் பரப்புரை பயணம்தமிழக மாணவர் முன்னணி சார்பில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு மிதிவண்டிப் பரப்புரை பயணம்.


உங்களைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது? என கண்ணைத்திறந்து பாருங்கள்!
தமிழக மாணவர் முன்னணி விழிப்புணர்வு பரப்புரை
உலகிலேயே முன்தோன்றிய மண் என்பதால், தமிழகத்தில் கனிம வளம் அடர்ந்து கிடக்கிறது.தமிழர் தாயகத்தில் உள்ள கனிம வளங்களை வல்லாதிக்க நாடுகள் வான்வழி ஆய்வு செய்து அடையாளம் கண்டுவருகிறது.தமிழகத் தாயகப் பகுதியையும், கனிமவளங்களையும் சூறையாட இந்திய அரசு ஒப்பந்தம் போடுகிறது. தமிழினத்தை அழிப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்று காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டம். இந்திய அரசு தமிழகத்தை சூறையாட கிரேட் ஈஸ்ட்டன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற பன்னாட்டு நிறுவனத்திடம் எரிவாயுவினை எடுக்க 5000 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 40 ஆண்டுகள் வரை எரிவாயு எடுப்பார்கள். 40 ஆண்டுகளுக்கு பிறகு நம் தமிழகத்தின் காவிரிப் படுகை மென்று துப்பிய சக்கையாகவும், மிகக் கொடிய பாலைவனமாகவும் மாறும்…!

எதிர் நோக்கும் அபாயங்கள்

1. மீத்தேன் எரிவாயுவை எடுக்க பூமிக்கடியில் 2000 அடி வரையில் உள்ள நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்படும்..

2. ஒரு குறிப்பிட்ட அடிக்கு பிறகு வெளியேற்றப்படும் நீரானது கடல் நீரை விட 5 மடங்கு உப்பானது. இந்த நீரை விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பாசனக் கால்வாய்களில் வெளியேற்றுவதனால் அந்த நீர் பாயும் நிலப்பகுதியெல்லாம் பொட்டல் காடாகும்.இது நிச்சயம்!

3. புற்றுநோய், மரபணுமாற்றுக் கோளாறுகள், மூளை, நரம்புக்கோளாறு, நாளமில்லாச்சுரப்பிகள் பாதிப்பு, தோல் நோய், கண்பார்வை இழப்பு, தொடு உணர்வு அழிவு, ஈரல் பாதிப்பு, ஆண்மைக் குறைவு, சுவாசக் கோளாறு போன்ற பல்வேறுநோய்கள் ஏற்படும்..

4. நீரையும் எரிவாயுவையும் வெளியேற்றுவதால் நில நடுக்கம், மண் உள்வாங்குதல் போன்றவை ஏற்படும். சிறிய குடிசைகள் முதல் தமிழர் கட்டிடக் கலையின் வரலாற்றுப் பெருமிதம் கொண்ட தஞ்சை பெரியக் கோயில், தாராசுரம் கோயில், சுவாமிமலை கோயில் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி ஆலயம் போன்றவை மண் உள்வாங்குதலால் பேராபத்திற்கு உள்ளாகும்.

5. மீத்தேன் எடுக்கப்பட இருக்கும் தஞ்சை மாவட்டத்தில் 8 வட்டங்கள் ,திருவாரூர் மாவட்டத்தில் 7 வட்டங்கள், நாகை மாவட்டத்தில் 8 வட்டங்கள் உள்ள 49 லட்சம் மக்களும் வெளியேறியாக வேண்டும்;63 லட்சம் கால்நடைகளும் , பல்லாயிரம் கோடி உயிரினங்களும் , தாவர வர்க்கமும் முற்றிலுமாக அழிந்து போகிவிடும்.

இந்த திட்டத்தை அறிந்த ஆடுதுறை, நரசிங்கன்பேட்டை மற்றும் பாவாஜிக்கோட்டை மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தினால் மீத்தேன் எடுக்கும் முதற்கட்ட பணிகளைத் தடுத்து நிறுத்தினர். இது அனைத்து மக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகும்.

நிலத்தடி நீர் வெளியேற்றுவதால் விவசாயம் நிச்சயம் செய்ய முடியாது, குடிக்க நீர் கிடைக்காது, காற்றில் நச்சுக் கலந்து மூச்சு விடக் காற்று கிடைக்காது,அனைத்து பயிர்களும், ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்களும் அழிந்து போகும் நிலை ஏற்படும். மக்கள் வாழமுடியாமல் தன் தாயகப்பகுதியை விட்டு வெளியேறும் சூழ்நிலையை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். தன் தாயகப் பகுதியை விட்டு வெளியேறும் இனம் அகதியாக அலைந்து திரியும்; பிற மாநிலங்களிடம் அடிமை இனமாக மாறும் !பின்னர் பிற இனங்களில் கரைந்து மறையும்.! 

நமக்கு உணவிட்ட நிலம் உயிர் கொடுத்த தாய்க்குச் சமம்,
இதில் அந்நியன் கால்படச் சகியோம்..!

தமிழினத்தை அழிக்கும் இத்திட்டத்தை முறியடிக்க தமிழர்களாய அணிதிரள்வோம். மீத்தேன் எரிவாயு திட்டத்தை விரட்டியடிப்போம்..!

தொடர்புக்கு : 8220860946

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.