ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பிரித்தானியாவில் வெளியாரை வெளியேற்றக்கோரும் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகுகிறது! தமிழர்கள் சிந்திக்க வேண்டும்! - பெ.மணியரசன்


பிரித்தானியாவில் வெளியாரை வெளியேற்றக்கோரும் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகுகிறது! தமிழர்கள் சிந்திக்க வேண்டும்! பெ. மணியரசன்

பிரித்தானிய அரசியலானது பழமைவாத கன்சர்வேட்டிவ் கட்சி – தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டை சார்ந்ததாகவே நீண்டகாலமாக இருந்து வந்தது. இவ்விரண்டில் ஒன்றுதான் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நிலை இருந்து வந்துள்ளது. மற்ற சிறுகட்சிகள் இருந்தாலும் அவை மேற்படி இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக வளரமுடியவில்லை.

ஆனால் இப்பொழுது அந்த நிலை மாறும் வகையில் புதிதாக ஒரு கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. ஒருங்கிணைந்த முடியரசின் விடுதலைக்கட்சி (United Kingdom Independence Party) என்ற அக்கட்சி கடந்த 10.10.2014 அன்று பிரித்தானிய நாடாளுமன்ற மக்களவை (House of Commons) தொகுதி ஒன்றுக்கு நடந்த இடைத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியையும் தொழிலாளர் கட்சியையும் வீழ்த்தி பெருவெற்றிப் பெற்றுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து வெளியேறி பிரித்தானிய விடுதலை கட்சியில் (UKIP) சேர்ந்த டக்ளஸ் கார்ஸ்வெல் என்பவர் கிளாக்டன் ஆன் சி என்ற அந்த தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளார்.

அதே காலத்தில் நடந்த பிரித்தானிய மக்களவைக்காண கிரேட் மான்சென்ஸ்டர் தொகுதி இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சியிடம் மிகக் குறைந்த வாக்கு வேறுபாட்டில் பிரித்தானிய விடுதலைக் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

இன்னும் ஏழு மாதங்களில் பிரித்தானிய மக்களவைக்குப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தல்களில் பிரித்தானிய விடுதலைக் கட்சி பெற்ற வெற்றியும் வாங்கிய வாக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியையும் தொழிலாளர் கட்சியையும் கலக்கியுள்ளன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இந்த விடுதலைக் கட்சியும் பழையக் கட்சிதான். ஆனால் இது முன்வைக்கும் தேசிய வாத முழக்கங்கள் இப்போது மக்களின் பேராதரவை பெற்று வருகின்றன.

1.   வரலாற்றுப் பெருமிதங்கள் பல படைத்துள்ள பிரித்தானியா பத்தோடு பதினொன்றாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பாக இணைந்திருக்க கூடாது. அதிலிருந்து விலக வேண்டும்.

2.   வெளி நாட்டினர் பிரித்தானியாவில் குடியேறுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து வெளியார் வருகையைத் தடுக்க வேண்டும். வெளியேற்ற வேண்டியவர்களை வெளியேற்ற வேண்டும்.

இந்த இரு முழங்களும் தான் பிரித்தானிய மக்களிடம் பிரித்தானிய விடுதலைக் கட்சிக்குப் புதிய செல்வாக்கை வளர்த்துள்ளன.

இந்த விடுதலைக் கட்சி இனப்பெருமை, தாயகப் பாதுகாப்பு என்ற முழக்கங்களை முதன்மைப்படுத்துகிறது.

முதலாளியம் முழு வளர்ச்சியடைந்து, நாடாளுமன்ற சனநாயகத்திற்கு உலகின் முன் எடுத்துக்காட்டாக உள்ள பிரித்தானியாவில் இனப்பெருமிதமும் வெளியாரை வெளியேற்றும் முழக்கமும் மக்கள் திரளின் ஆதரவைப் பெற்று வருவதை தமிழர்கள் கவனிக்க வேண்டும்.

இவை போன்ற தமிழினப் பாதுகாப்பு முழக்கங்களை தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்வைத்து 1956க்கு பிறகு வந்த வெளி மாநிலத்தவர்களை தமிழக குடிமக்களாக கருதக் கூடாது என்றும் வெளியேற்ற வேண்டியவர்களை வெளியேற்ற வேண்டுமென்றும் போராடி வருகிறது. தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தமிழினப் பாதுகாப்பு போராட்டத்தை இனவெறியென்றும், பாசிசமென்றும் கூச்சல் போடும் தமிழினத் துரோகிகளை தமிழ் மக்கள் அடையாளம் கண்டுக் கொள்ள வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்



பேச: 7667077075, 9443918095 

முகநூல் : www.fb.com/tamizhdesiyam 

ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.