தென்பெண்ணை கிளைவாய்க்கால் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றக்கோரி பெருந்திரள் உழவர் பேரணி
இன்று(11.08.2014) காலை, கிருட்டிணகிரியில்... தென்பெண்ணை கிளைவாய்க்கால் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றக்கோரி பெருந்திரள் உழவர் பேரணி
கிருட்டிணகிரி மாவட்டம், இராயக்கோட்டை பகுதியானது சிறுதானியங்கள், மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் தினசரி உணவிற்குத் தேவையான புளி, கொத்தமல்லி, புதினா என அனைத்து விதமான வேளாண் பயிர்களும் எப்பருவத்திலும் விளையும் இயற்கை சூழலைக் கொண்டுள்ளது. இராயக்கோட்டை காய்கறி சந்தையிலிருந்து தினந்தோறும் தமிழகம் தவிர கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய அண்டை மாநிலங்களுக்கு காய்கறி மற்றும் மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளாவின் காய்கறித்தேவையை இராயக்கோட்டை பகுதி உழவர்கள்தான் பூர்த்தி செய்கின்றனர். தினமும் இராயக்கோட்டை காய்கறிச் சந்தையில் பலகோடி ரூபாய் வணிகம் நடைபெறுகிறது. இதனால் இப்பகுதி உழவர்கள்அரசுக்கும் வருவாய் ஈட்டித் தருகின்றனர் .
பெருமுதலாளிகளின் சுயநலத் தேவைகளுக்காக, மலைகளும், காடுகளும் என சூழலியல் வளங்கள் அழிக்கப்பட்டுவருவதால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் பருவமழை பொய்த்து கடும் வறட்சியை சந்தித்து வருகின்றது. இப்பகுதி, உழவர்களுக்கும், பொது மக்களுக்கும் தண்ணீரின்றி கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கிணற்று நீர் கானல் நீராகி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இதனால் இப்பகுதியில் அனைத்து உழவர்களும் ஆழ்துளை கிணறுகளை மட்டுமே நம்பி வேளாண்மை செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது, நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு மேல் சென்றுவிட்டது.
ஆழ்துளை கிணறுகளுக்காக செலவிட்டு, கடன்பட்டு வட்டி கட்டமுடியாமல் தங்கள் வாழ்வாதாரமான நிலங்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு வயிறு பிழைக்க நகரங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் நிலையை, இம்மக்கள் எட்டியுள்ளனர். இதுமட்டுமின்றி உழவுத்தொழிலை சார்ந்த பலதொழில்களும் தொடர்ந்து அழிந்து வருகின்றன. இவற்றிக்கெல்லாம் மூலகாரணமாக, இப்பகுதியின் தண்ணீர்ச் சிக்கலே உள்ளது!
20 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் நிலவும் பருவநிலை மற்றும் சூழியல் மாற்றங்களை அறிந்த இப்பகுதி பெரியோர்கள், இப்பகுதியில் நிலத்தடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில், தென்பெண்ணை கிளைவாய்க்கால் மூலம் ஆண்டிற்கு ஓரிரு முறை அப்பகுதியில் இருக்கும் ஏரி, குளம், குட்டை, ஊருணிகளில் நீரை நிரப்பினால் நிலத்தடி நீர்மட்டத்தை நிலைநாட்ட முடியும் என உணர்ந்தனர். இவற்றில், நீரை நிரப்பக் கோரும் திட்டத்திற்காக, 20 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துப் போராடி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக புதுவீச்சுடன் “தமிழக உழவர் முன்னணி”யின் வழிகாட்டுதலுடன் உழவர்களையும், பொது மக்களையும் ஒருங்கிணைத்து “தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு” உருவாக்கப்பட்டு, பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி தமிழக பொதுப்பணித்துறை மற்றும் தமிழக அரசின் கவனத்திற்கு இச்சிக்கலை முறையாக கொண்டு சென்றுள்ளோம்.
2010ஆம் ஆண்டு அக்டோபரில் களஆய்வு செய்து இத்திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியம் தான் என பதில் அளித்த தமிழக பொதுப்பணித்துறை, மக்களின் தொடர் போராட்டங்களுக்குப் பின் 2012- 2013இல் இத்திட்டதிற்கான அளவீடுகளை செய்து 2014 எப்ரலில் பதில் அளித்தது. அப்பதில் மனுவின்படி, இத்திட்டத்தை நிறைவேற்ற உரு 22.20 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கான இறுதிகட்ட வேலைகள் நடந்து முடிந்து விட்டநிலையில், இப்பகுதியில் நிலவும் நீர்ச் சிக்கலை தீர்க்கும் வகையிலும், உழவர்களின் வாழ்வாதாரங்களை காத்திடவும், இராயக்கோட்டைப் பகுதி மக்களின் 20 ஆண்டுகால இக்கோரிக்கையை இனியும் காலம் தாழ்த்தாமல் போர்க்கால அடிப்படையில் ”தென்பெண்ணை கிளைவாய்க்கால் திட்டத்தை” போர்க்கால அடிப்படையில் நடப்பு நிதியாண்டிலேயே நிறைவேற்ற தமிழக அரசையும் தமிழக பொதுப் பணித் துறையையும் வலியுறுத்தி தமிழக உழவர் முன்னணி மற்றும் தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு சார்பில் இன்று (11-08-2014) திங்கட்கிழமை காலை 10 மணியளவில், கிருட்டிணகிரியில் நடைபெரும் பெருந்திரள் உழவர் பேரணி நடைபெறுகின்றது. தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு. கி.வெங்கட்ராமன் இதில கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.
Leave a Comment