மழை அளவை குறிக்கச் சென்ற தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மழை அளவை குறிக்கச் சென்ற தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுத்த கேரளா அதிகாரிகள், மேலும் கைது செய்வோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
கேரள வனத் துறைக்குச் சொந்தமான முல்லைக்கொடி, வனக்காவலை, தாண்டிக்குடி ஆகிய 3 இடங்களில் மழை மானி பொருத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் அங்கு சென்று மழை அளவு, அணையின் நீர்வரத்து ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு குறித்து வருவது வழக்கம். அதன்படி அணையின் செயற்பொறியாளர்கள் குமார், ஜெகதீஸ், தமிழக துணைக் குழுப் பிரதிநிதியும், உதவிச் செயற்பொறியாளருமான சவுந்தரம், தமிழ்செல்வன் ஆகியோர் படகு மூலம் முல்லைக்கொடிக்கு நேற்று சென்றனர்.
அங்கு வந்த கேரள வனத் துறையினர் அவர்களை படகிலிருந்து தரையில் இறங்க விடாமல் தடுத்து அவதூறாகப் பேசினர். தமிழக அதிகாரிகள் முல்லைக்கொடிக்கு வந்து செல்ல கேரள தலைமைச் செயலர் கொடுத்த அனுமதி கடிதத்தை காட்டியும், அதை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து, தமிழக அதிகாரிகள் படகில் தேக்கடிக்கு வந்து கொண்டிருந்தபோது கேரளாவின் வனத்துறை ரேஞ்சர் சஞ்சீலன் தலைமையிலான வனத் துறையினர் மற்றொரு படகில் வந்து, தமிழக அதிகாரிகளின் படகை வழிமறித்து முல்லைக்கொடிக்கு மீண்டும் வந்தால் கைது செய்து விடுவதாக மிரட்டி அனுப்பினர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து தமிழக அதிகாரிகளை பணி செய்ய விடாமல் செய்கிறது கேரள அரசு.
Leave a Comment