மாற்றுத் திறனாளிகள் நடத்தும் காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழக இளைஞர் முன்னணி, அக்னிச் சிறகுகள் சேவை அமைப்பு ஆதரவு!
மாற்றுத் திறனாளிகள் நடத்தும் காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழக இளைஞர் முன்னணி, அக்னிச் சிறகுகள் சேவை அமைப்பு ஆதரவு!
போராட்டத்தில் பங்கேற்க முடிவு!
நிறுத்தப்பட்ட உதவித் தொகையை மீண்டும் வழங்க வலியுறுத்தி வரும் 21ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அனைத்து மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அறிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகள் நடத்தும் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் சிதம்பரம் அக்னிச் சிறகுகள் சேவை அமைப்பு மற்றும் தமிழக இளைஞர் முன்னணி அமைப்புகளும் இப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து தமிழக இளைஞர் முன்னணியின் தமிழக துணைப் பொதுச் செயலாளரும் , சிதம்பரம் அக்னிச் சிறகுகள் சேவை அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் ஆ.குபேரன் இன்று (19.08.2014) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஒரு சமூகத்தின் பண்பாடு, மனித நேயம் என்பது அச் சமூகத்தின் மாற்றுத் திறனாளிகள் அரசால் , மக்களால் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதில் அடங்கியிருக்கிறது. உடலால் , ஆற்றலால் இயலாமையுடைய மாற்றுத் திறனாளிகள், உரிமைகளுக்காக போராட வேண்டிய அளவு நிர்பந்திக்கப்பட்டிருப்பது அரசின் அலட்சியத்தையையும், மனித உரிமைகள், சட்ட வரையறை மறுப்பையும் வெளிப்படுத்துகின்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள், சலுகைகளை வழங்க மறுப்பது, உதவித்தொகை உள்ளிட்டக் கோரிக்கைகளுக்காக மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிப்பது என அரசு, மற்றும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கை பெரும்பான்மையான பல்வேறு சனநாயக சக்திகளாலும், அரசியல் கட்சியனராலும் கூட கண்டுகொள்ளப்படாமல் போவது வருந்தத்தக்கது.
உதவித் தொகை நிறுத்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் உடன் நிவாரணம் வழங்க வேண்டும். காட்டுமன்னார்கோவிலில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஏற்கனவே பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய பாக்கி வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.மாற்றுத் திறனாளிகளின் இயலாமையை கருத்தில் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு என தனியாக குறைகேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். என்ற நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21.8.2014 அன்று காலை 10 மணிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளனர்,
இப் போராட்டத்தில் , மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவளித்தும், அவர்களது நியாயமான கோரிக்கைகள் மீது அரசு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிதம்பரம் அக்னிச் சிறகுகள் சேவை அமைப்பு , தமிழக இளைஞர் முன்னணி அமைப்புகளின் சார்பில் மாணவர்களும் , இளைஞர்களும், பெண்களும், போராட்டதில் முழுமையாக பங்கேற்பது என இரு அமைப்புகளின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Leave a Comment