ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அப்பாவித் தமிழக மீனவர்களைத் தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசின் சென்னைத் தூதரகத்தை மூடவேண்டும் - தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!

அப்பாவித் தமிழக மீனவர்களைத் தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசின் சென்னைத் தூதரகத்தை மூடவேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
“அப்பாவித் தமிழக மீனவர்களைத் தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசின் சென்னைத் தூதரகத்தை மூடவேண்டும்” என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 


தமிழகத்திற்குரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் மீனவர்களான எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேரையும் 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு போய் அந்த ஐந்து தமிழர் மீது போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்பொழுது அவர்களது உயர் நீதிமன்றம் இந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது.

சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களை மட்டுமின்றி தமிழகத் தமிழர்களையும் இனப்பகையோடுதான் பார்க்கிறது. சிங்கள அரசின் தமிழின அழிப்பு என்பது ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் பொதுவானது என்பதையே தமிழக மீனவர்களை இதுவரை சுட்டும் அடித்தும் கொன்ற நிகழ்வுகளும் இப்போது தூக்கிலிட்டுக் கொல்ல முயலும் நடவடிக்கையும் உறுதி செய்கின்றன.

தமிழினத்தை அழித்ததற்காக இராஜபட்சேயை இந்திய அரசு வரவழைத்து பாராட்டியது. அண்மையில் சிங்கள கப்பற்படைத் தளபதியை தில்லிக்கு வரவழைத்து படை அணிவகுப்பு மரியாதை செய்து பாராட்டியது தொடர்ந்து சிங்கள படையினருக்கு இந்தியா பயிற்சி தந்து வருகிறது. இராஜபட்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்று பா.ச.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கோரிக்கை வைத்துள்ளார். இந்திய அரசின் இப்படிப்பட்ட தமிழினப்பகை நடவடிக்கைகளால் ஊக்கம் பெற்ற சிங்கள இனவெறி அரசு இன வெறிக்கு பலியாகியுள்ள இலங்கை நீதித்துறை மூலம் ஐந்து தமிழகத் தமிழர்களை தூக்கிலிடத் துடிக்கிறது.

இந்திய அரசு ஏழரைக் கோடி தமிழர்கள் இந்தியாவின் குடிமக்கள் என்று கருதினால் இலங்கையோடு உள்ள தூதரக உறவை முறிக்க வேண்டும். இந்திய அரசு அவ்வாறு செய்யவில்லையெனில் தமிழ் மக்கள் அறச்சீற்றம் கொண்டு எழுச்சிப் பெற்று சென்னையில் உள்ள சிங்களத் தூதரகத்தை மூடவேண்டும்.

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.