ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

துயரத்தில் தோய்ந்துள்ள தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்கள் - ஒரு நேரடி சந்திப்பு!


துயரத்தில் தோய்ந்துள்ள தூக்குத் தண்டனை
விதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்கள்!
இராமேசுவரம் சென்றுவந்த தமிழ்த் தேசியப் பேரியக்கக் குழு!
(செய்தி: .ஆனந்தன், தொகுப்பு: .அருணபாரதி)


இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேருக்கும், போதைப் பொருள் கடத்தியதாகப் போட்டிருந்த பொய் வழக்கின் அடிப்படையில் அக்டோபர் 30 அன்று, இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. தமிழகமே அதிர்ச்சியில் கொந்தளித்தது.

தூக்குத் தண்டனை விதித்த இலங்கை அரசின் மீதும், அதை தடுக்கத் தவறிய இந்திய அரசின் மீதும் கடும் கோபம் கொண்ட இராமேசுவரம் மீனவர்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களில் இறங்கினர். சாலைகள் மறிக்கப்பட்டன. ஒரு பேருந்து தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இரண்டு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. தொடர்வண்டித் தண்டவாளங்கள் 500 மீட்டர் அளவிற்கு பெயர்க்கப்பட்டன.

இந்நிலையில், தூக்குத் தண்டனைக்கு உள்ளான மீனவர்களின் குடும்பங்களைச் சந்தித்து வரப் பயணமானோம். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் .ஆனந்தன், தோழர் ரெ.இராசு, இராமநாதபுரம் திரு. நாகேசுவரன், ஓட்டுனர் செய்யது ஆகியோர் ஒரு குழுவாகச் சென்றோம். இராமேசுவரம் தோழர் கணேசன் எங்களுடன் இணைந்து கொண்டார்.

நவம்பர் 1 அன்று எங்கள் பயணம் தொடங்கியது. நவம்பர் 1 - தமிழகம் மொழிவழி மாநிலமாக அமையப்பெற்ற நாள். பல்வேறு அமைப்புகளின் சார்பில் தமிழகமெங்கும் பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 1956ஆம் ஆண்டு தமிழகத்தோடு இணைந்திருந்தகச்சத்தீவு’, 1974இல் இந்திய அரசால் சிங்களத்துக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. இன்றைக்கு அப்பகுதி நம்மோடு இல்லையே என்ற வருத்தத்தோடு, பாம்பன் பாலத்தைக் கடந்தோம்.

இருபுறங்களும் கடல் விரிந்திருப்பதைப் போல், இராமேசுவரம் தீவு மீனவர் முகங்களில் சோகம் விரிந்திருந்தது. ஆங்காங்கே மீனவர்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். என்ன செய்து, ஐவரையும் மீட்கலாம், அவர்கள் கைது செய்யப்பட்ட போது நடைபெற்ற போராட்டங்கள் என பல செய்திகளையும் அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.

அக்டோபர் 30 வரை இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மீனவர் தூக்கு பற்றிய செய்தி வெளியானவுடன், கடலோடிகளின் போராட்டங்களை முடக்கும் நோக்குடன் தமிழக அரசு அதை இன்னொரு மாதம் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது. தினமும் ஆழ்கடலோடு மோதி வாழ்க்கை நடத்தும் கடலோடிகளை, அரசு அறிவிப்புகள் அச்சுறுத்திவிடுமா என்ன? தடை உத்தரவையும் மீறியே மீனவர்கள் போராட்டங்களில் இறங்கியிருந்தனர். அப்பகுதிகளில் சலனமின்றி கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். மழைத் தூறத் தொடங்கியது.

பாம்பன் பாலத்தை விட்டு இறங்கும் போது முதலில் வரும் கிராமம் பாம்பன். அதற்கு அடுத்ததாக அக்காள் மடம், தங்கச்சி மடம் ஆகிய கிராமங்களைக் கடந்து தான் இராமேசுவரம் செல்ல முடியும். தீர்ப்பு வெளியான அக்டோபர் 30 அன்று, பாம்பன் கிராமத்திலிருந்து தங்கச்சி மடம் வரையிலான சில கிலோ மீட்டர் தொலைவுக்கு, சாலையெங்கும் தன்னெழுச்சியாக சற்றொப்ப 20,000 பேர் மறியல் போராட்டத்தில் இறங்கியதாக, அங்கிருந்த நண்பர்கள் சொன்னார்கள். வழிநெடுக பல இடங்களில் சாலைகள் தடுக்கப்பட்டதற்கான அடையாளங்களும், டயர்கள் கொளுத்தப்பட்டதற்கான அடையாளங்களும் இச்செய்தியை எங்களுக்கு உறுதி செய்தன.

தங்கச்சி மடம் ஊருக்குள் நாங்கள் சென்ற போது, அங்கே மீனவ இளைஞர்கள் யாருமில்லை. பெண்களும், வயதான முதியவர்களும் தான் இருந்தனர். கடலோடிகளின் வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அவர்கள் கடலுக்குச் சென்றிருக்கவும் வாய்ப்பில்லை. எனவே, அருகிலிருந்த நண்பர்களிடம் விசாரித்தோம்.

அக்டோபர் 30 அன்று, தொடர்வண்டி தண்டவாளங்களைப் பெயர்த்தெடுத்துப் போராடியதைத் தொடர்ந்து, ‘அடையாளம் தெரியாதவர்கள்என சற்றொப்ப 2500 பேர் மீது, தமிழகக் காவல்துறையினர் வழக்குப் பதிந்திருந்தனர்.

ஒருபுறம், மீனவர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் எனச் சொல்கின்ற தமிழக அரசு, இன்னொரு புறத்தில் போராடிய மீனவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இந்திய அரசு மட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கங்காணி அரசான நாங்களும் துரோகம் செய்வோம் என உணர்த்துவது போல் உள்ளது, தமிழக அரசின் நடவடிக்கை.

நவம்பர் 1 அன்று, கிறித்துவ திருச்சபை - சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் தலைமையில் சற்றொப்ப 8000 மீனவக் குடும்பங்கள் பங்கேற்ற மாபெரும் உண்ணாப் போராட்டம் நடைபெற்றது.

முதலில் நாங்கள், தங்கச்சி மடத்திலிருந்த மீனவர் எமர்சன் வீட்டிற்குச் சென்றோம். வீட்டினுள்ளே எமர்சன் அவர்களின் மனைவி இலாவண்யா, தமது இரு குழந்தைகளோடு சோகமே உருவாக அமர்ந்திருந்தார். எமர்சன் அவர்களின் தாய் தந்தையர் இருவரும் இருந்தனர். 2012ஆம் ஆண்டு சூலையில், சென்னையில் நடந்த தொடர்வண்டி விபத்து ஒன்றில், மீனவர் எமர்சனின் தம்பி பலியாகிருந்தார். தற்பொழுது, இன்னொரு மகனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது எமர்சனின் தாய்தந்தையர் இருவரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்ததை உணர முடிந்தது.

2011ஆம் ஆண்டு நவம்பர் 28 அன்று, மீனவர் எமர்சன் சிங்களக் கடற்படையால் கைது செய்யப்பட்ட போது, அவரது மனைவி இலாவண்யா கருவுற்றிருந்தார். எமர்சன் இலங்கைச் சிறையில் இருந்தபொழுதே, அவருக்கு குழந்தை பிறந்தது. இந்த நேரம் வரை, அவர் அக்குழுந்தையைப் பார்க்கவில்லை என அக்குடும்பத்தினர் சொன்ன போது, மனம் வலித்தது.

அடுத்ததாக, எமர்சனின் வீட்டிற்கு அருகிலேயே உள்ள மீனவர் லாங்லெட் வீட்டிற்குச் சென்றோம். கைதான மீனவர்களிலேயே மிகவும் இளையவர் அவர் தான். அகவை 24. லாங்லெட்டின் தங்கை, தமது 4 அகவைக் குழுந்தையுடன் எங்களை வரவேற்றார். அச்சிறுவன், எங்களைப் பார்த்துமாமாவைப் பார்த்தீங்களா மாமா?” என அப்பாவித் தனமாகக் கேட்டான். பெரியவர்கள் அவனை அமைதியுறச் செய்தனர். எங்கள் குழுவில் வந்திருந்த ஓட்டுநர் செய்யது, தோற்றத்தில் லாங்லெட்டைப் போல் இருந்த காரணத்தால், லாங்லெட்டின் தாயார் இன்பென்டா அவர்கள்எம் மகன் இப்படித்தான் இருப்பான்என கதறி அழுதார். எங்களால் அவரைத் தேற்ற முடியவில்லை. லாங்லெட்டின் தந்தை ஜான் பிரிட்டோ அவரைத் தேற்றினார்.

அடுத்ததாக, தங்கச்சி மடத்திலேயே சிறிது தொலைவில் இருந்த, கைதான இன்னொரு மீனவரான வில்சனின் வீட்டிற்குச் சென்றோம். 42 அகவையான வில்சனுக்கு 3 குழந்தைகள். 2 மகள்கள், 1 மகன். அவரது மனைவி ஜான்சி ஆகியோர் வீட்டில் இருந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் வார்த்தைகள் சொன்ன நாம், நிச்சயம்அப்பா வந்துவிடுவார்என அவர்களது குழந்தைகளுக்கு நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி விடைபெற்றோம்.

மழைக் கடுமையாக இருந்ததால் அகஸ்டஸ், பிரசாத் ஆகியோரது குடும்பங்களைச் சந்திக்க இயலவில்லை.

2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இம்மீனவர்கள் கைது செய்யப்பட்டவுடன் இராமேசுவரத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. கைதான இந்தக் கடலோடிகள் யாருக்கும் சொந்தமாகப் படகுக் கிடையாது. எல்லோரும் மீன்பிடிக்கும் தொழிலாளர்கள் தான். இதனைக் கருத்தில் கொண்டு, அப்பொழுது தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் பலனாக, பொய் வழக்கில் கைதான இக்குடும்பங்களுக்கு தமிழக அரசின் மீன் வளத்துறை சார்பில், வாழ்வூதிய நிவாரணமாக ஒரு நாளைக்கு 250 ரூபாய் அளிக்கப்படுகிறது. 2012ஆம் ஆண்டு இவர்களுக்கு இடர்நீக்கத் தொகையாக 2 இலட்ச ரூபாய் வழங்கப்பட்டது. இந்த உதவிகள் தான், இந்தக் குடும்பங்களை இன்று வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அப்பாவிகள் என்பதற்கான அரசே கொடுக்கும் சான்றுகளாகவும் இவை விளங்குகின்றன.

மீனவர் குடும்பங்கள் தமிழக முதல்வரை சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. நவம்பர் 1க்குப் பிறகு, அப்பகுதியில் பெரிய அளவிலானப் போராட்டங்கள் எதுவும் எழவில்லை. அங்கிருந்த நம் நண்பர்களிடம், “அணுஉலைக்கு எதிரானப் போராட்டம், இடிந்தகரையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்ததால் தான், அது தமிழகமெங்கும் பரவியது. எனவே, இப்பகுதி மீனவர்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றால் தான், இப்போராட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவும். எங்களைப் போல் பல்வேறு அமைப்புகளும் உங்களுக்காகத் தொடர்ந்து போராடுவோம் கடலோடிகளுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களுக்கு அப்போது ஒரு முடிவு கிடைக்கும்என்று கூறி விடைபெற்றோம்.

துயரம் தோய்ந்திருந்த இந்த மீனவர் குடும்பங்களின் வலியும் சோகமும், சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டும், அடித்து உடற்பாகங்கள் சிதைக்கப்பட்டும் உள்ள நூற்றுக்கணக்கான தமிழக கடலோடிகள் குடும்பங்களில் எத்தனை எத்தனைத் துயரங்கள் இருந்திருக்கும் என்ற உண்மையை எங்களுக்குச் சொல்லாமல் உணர்த்தியது. பாம்பன் பாலம் வழியாக ஊர் திரும்பும் போது, கடற்கரையோரம் தள்ளாடித் தள்ளாடி நின்றிருந்த படகுகள், சரியான அரசியல் தலைமையின்றி அல்லல்படும் கடலோடிகளின் நிலையை உணர்த்தியது.

தமிழ்த் தேச விடுதலைப் போராட்டப் பாசறைகளாக கடலோடிகளின் கிராமங்கள் விளங்க வேண்டும். அப்பொழுது தான், இந்திய அரசு மீனவர் சிக்கலில் உரிய கவனம் செலுத்தும். அதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது நம் முன்னிற்கும் கடமை!


இராமேசுவரம் கடலோடி மக்களோடு மகளிர் ஆயம்

மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியதைக் கண்டித்து நவம்பர் 5 அன்று, இராமேசுவரத்தில் நடைபெற்ற உண்ணாப் போராட்டத்தில் மகளிர் ஆயம் பங்கேற்றது.



உண்ணாப் போராட்டத்தில் பேசும் தோழர் அருணா...

திரளான மீனவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் இருந்த உண்ணாப் போராட்டப் பந்தலில் பேசிய மகளிர்ஆயம் தமிழக அமைப்பாளர் தோழர் அருணா, “இப்பிரச்சினை தமிழ்த் தேசியப் பிரச்சினையாக பார்க்கப்படவேண்டும். என்றுமே இலங்கை அரசும் இந்திய அரசும் தமிழர்களுக்கு பகை அரசு தான். எனவே நாம் நமதுஎழுச்சிமிகு போராட்டங்களால் மட்டுமே இந்திய அரசை அசைக்க முடியும். ஐந்து மீனவர்களின் மரணதண்டனையை இரத்து செய்து, அவர்களைத் தமிழகம் அழைத்து வருவதோடு நின்று விடாமல். இராமேசுவரம்மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வானகச்சத்தீவை மீட்கும் வரை நமது போராட்டம் தொடர வேண்டும்” என்று கூறினார்.

போராட்டத்திற்குப் பின்னர், மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா தலைமையில், தோழர்கள்  செரபினா, சந்திரா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர்,தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது, தங்கள் குடும்பத்தினர் அப்பாவிகள் என்றும் அநியாயமாக அவர்கள் இலங்கை சிறையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் தற்போது அவர்களுக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என கண்ணீருடன் கூறினர்.

24 அகவையான இளைஞர் லாங்லெட்டின் தாயார், தன் மகன் நாமக்கலில் வசிப்பவன் என்றும் உடல்நலக் குறைவு காரணமாக 2 மாதங்கள் தீவில் தங்குவதற்கு வந்தபோது கடலுக்கு சென்றான், அவன் கடலுக்கு செல்ல துவங்கியே 3 நாட்கள்தான் ஆனது, அதற்குள் அவனை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுவிட்டனர் என்று கூறிக் கதறினார்.

மற்ற நான்கு பேருடைய துணைவியாரும் 25 – 30 வயதுடையவர்களே. கடந்த 3 ஆண்டுகளாக சிறு சிறு குழந்தைகளோடு, தமிழக அரசின் உதவிப் பணத்தை வைத்துக் கொண்டு மிகுந்த மன உளைச்சலில் வாழ்க்கை நடத்தி வருகின்றன, மீனவர் குடும்பங்கள். “மீன் பிடிக்க போன அப்பா எப்பம்மா வீட்டுக்கு வருவார்என்று குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு இனி என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் தவிக்கின்றனர், அவர்கள்.

“இலங்கை அரசு, நம் சகோதரர்கள் ஐந்து பேருக்கு கொடுத்துள்ள தண்டனை என்பது தாயகத் தமிழர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட தண்டனை! எனவே இச்சிக்கல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கான சிக்கல்! மகளிர் ஆயம் உங்களோடு எப்பொழுதும் இணைந்திருந்து போராடும்என மகளிர் ஆயம் குழுவினர், மீனவர் குடும்பங்களிடம் உறுதி கூறினர்.

இனியாவது இந்திய அரசு, கடிதங்கள் எழுதி தாமதப்படுத்தாமல், மீனவர்களை விடுவிக்க உருப்படியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.