ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யரின் தீர்ப்புகள் திசை காட்டும் விளக்குகளாய் ஒளிரும்" - தோழர் பெ. மணியரசன் இரங்கல்!

"நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யரின் தீர்ப்புகள் திசை காட்டும் விளக்குகளாய் ஒளிரும்"

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் மறைவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. இந்திய நீதித்துறை வரலாற்றில் அணையா விளக்காக, என்றும் நின்று நிலவக்கூடிய திசைகாட்டும் தீர்ப்புகளை வழங்கியவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது என்ற வழக்கில் பதவி உயர்வுகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒளிகாட்டும் தீர்ப்பு வழங்கினார். அத்தீர்ப்பில் சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை கொடுமை ஆகியவற்றின் சமூக இருப்புகளை விரிவாக விவாதித்து அவற்றைப் போக்குவதற்கான கருத்துகளையும் வழங்கினார்.

மரண தண்டனை கூடவே கூடாது என்று அவர் தீர்ப்புரைகளில் கூறியுள்ளார். மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தூக்கு மரத்தில் ஒருவர் தொங்கவிடப்படும் பொழுதெல்லாம் இந்திய அரசுக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றார். பணி ஓய்வுக்குப் பிறகு மனித உரிமைக் களத்தில் குறிப்பாக மரண தண்டனைக்கு எதிரான இயக்கங்களில் அவர் துடிப்போடு பங்கு கொண்டார். இராசீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று உயிருள்ளவரை போராடி வந்தார்.
இளம் வழக்கறிஞர்களுக்கும் மனித உரிமைப் போராளிகளுக்கும் வழிகாட்டும் நீதித்துறை வல்லுனராகவும் மனிதஉரிமைப் போராளியாகவும் என்றென்றும் வி.ஆர். கிருஷ்ணய்யர் விளங்குவார். அவருக்கு மீண்டும் தமிழ்த் தேசியப்பேரியக்கத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தமது அறிக்கையில் தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.