ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன்

நியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன்
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில், நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அளித்து,  05.01.2015 அன்று இந்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆய்வகத் திட்டம் பற்றி, செய்திகள் வந்ததிலிருந்தே தேனி மாவட்டத்திலுள்ள மக்களும், தமிழகமெங்குமுள்ள அறிவியலாளர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், அபாயகரமான நியூட்ரினோ ஆய்வகத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பொட்டிபுரத்தில் அமையவுள்ள “இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வகம்” (Indian based Neutrino Observatory - INO) பற்றி, விவாதிப்பதற்கு முன்னால் நியூட்ரினோ குறித்த சில அடிப்படை செய்திகளை தொகுத்துக் கொள்வது நல்லது.
நாம் வாழும் இந்தப் புவிப்பந்திலும், இதைத்தாண்டியுள்ள விரிந்து பரந்த அண்டத்திலும் உள்ள உயிரற்ற, உயிருள்ள பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை என்பதை அனைவரும் அறிவர்.
அணுக்கள்தாம் பொருளின் ஆகச்சிறிய அடிப்படை வடிவம் என அறிவியல் உலகம் தொடக்கத்தில் நம்பியது. ஆயினும், ஆய்வுகள் தொடரத் தொடர இந்த அணுக்களும் பல உள் துகள்களால் ஆனவை எனத் தெரிந்தது. எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவை மட்டுமே இந்த உள் துகள்கள் என ஒரு கட்டத்தில் நம்பப்பட்டது. ஆயினும், இவற்றையும் தாண்டி, இவற்றையும் விட மிகமிகச் சிறிய உள் துகள்கள் கண்டறியப்பட்டன.
இந்த ஆய்வுகளின் தொடர்ச்சியாக அணுக்கரு அறிவியலில் ‘கற்றை இயற்பியல்’ (Quantum Physics) என்ற புதிய அறிவியல் துறையே உருவானது. இந்த புதிய அறிவியல் பிரிவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர், ஆஸ்திரியாவில் பிறந்து சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த உல்ப்கேங்க் பாலி (Wolfgang Pauli) என்ற நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் ஆவார்.
அறிவியலாளர் பாலி ஓர் வித்தியாசமான ஆய்வாளர். அவர் மிகச்சிறந்த ஆய்வுகள் மேற்கொண்டிருந்தாலும் அவற்றைப் பல்கலைக்கழகங்களிலோ ஆய்வு ஏடுகளிலோ கட்டுரைகளாக வழங்கியவர் அல்லர். அவருடைய ஆய்வு முடிவுகள் அனைத்தையும் தமது நண்பர்களுக்குக் கடிதம் வாயிலாக எழுதி அனுப்பும் பழக்கம் உள்ளவர். அதனாலேயே, அவருடைய ஆய்வு முடிவுகள் முற்றிலும் புதிய செய்திகளாக இருந்த போதிலும், அவருக்கு நோபல் பரிசு வழங்குவது குறித்து விவாதங்கள் எழுந்தன. இவரது கடித வடிவிலான அறிக்கைகளே, ஆய்வு முறையியலின்படி எழுதப்பட்டவைதான் என ஐன்ஸ்டீன் எடுத்துக்காட்டிய பிறகு தான் உல்ப்கேங்க் பாலிக்கு 1945இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அணுக்கருவிலிருந்து பல்வேறு கதிர்கள் வெளியேறுகின்றன. அவை குறித்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்ட பாலி, 1930இல் “பீட்டா அழிவு” (Beta decay) குறித்து ஆய்வு மேற்கொண்ட போது, பெற்ற முடிவுகளால் அதிர்ந்து போனார். ஏனெனில், ஆய்வின் தொடக்கத்தில் இருந்த ஆற்றலும், இயங்குவிசையும் ஆய்வின் முடிவில் சற்று குறைந்ததை அவர் கண்டார். இது, ஆற்றலின் அழியா விதிக்கு எதிரானது.
இப்பேரண்டத்திலுள்ள பொருளானாலும் ஆற்றலானாலும் புதிதாக உருவாவதும் இல்லை, இருப்பது அழிவதும் இல்லை என்பதே இயற்பியல் விதி. இப்பேரண்டத்தில் உள்ள ஆற்றல் அழியாது என்பது ஓர் அடிப்படை அறிவியல் செய்தியாகும்.
“இல்லது தோன்றாது
உள்ளது மறையாது”
என்பது நமது தமிழ் முன்னோர்களும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிந்து கூறிய செய்தியாகும்.
ஓர் ஆற்றல் இன்னொரு ஆற்றலாக வடிவ மாற்றம் பெறுமே தவிர அழியாது. எடுத்துக் காட்டாக, வெப்ப ஆற்றல் மின்சார ஆற்றலாக மாறலாம். மின் ஆற்றல் ஒளி ஆற்றலாக மாறலாம். ஆனால், இவற்றின் கூட்டுத்தொகை மாறாது. இதுவே, ஆற்றலின் அழியா விதி.
பாலி ஆய்வில், ஆய்வின் தொடக்கத்தில் செலுத்தப்பட்ட ஆற்றலும் முடிவில் காணப்பட்ட ஆற்றலும் ஒரே அளவில் இல்லாதது அவரது ஆய்வு வேகத்தைக் கூட்டியது. அதன் விளைவாக, இதுவரை கண்டறியப்படாத புதிய அணு உள் துகள் ஒன்று இருப்பதை அறிந்து வழக்கம்போல் தனது நண்பர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.
1930 திசம்பர் 4 ஆம் நாளிட்டு, அவர் எழுதிய அந்தக் கடிதம் நண்பர்களுக்கு அனுப்பப்பட்டாலும் எந்தவொரு நண்பரின் பெயர் குறிப்பிட்டும் விளிக்கப்படவில்லை. மாறாக, “அன்புமிக்க கதிரியக்க கனவான்களே” என விளித்து தனது ஆய்வறிக்கையை கடித வடிவில் வெளிப்படுத்தினார்.
தாம் கண்டறிந்த இந்த புதிய நுண் துகள் மின்னூட்டம் அற்றது, புரோட்டான் நிறையில் (எடை என்று புரிந்து கொள்ளலாம்) 1 விழுக்காடு நிறை மட்டுமே கொண்டது என்று கூறிய பாலி, இது ஒளியின் வேகத்தில் (ஏறத்தாழ வினாடிக்கு 3 இலட்சம் கிலோ மீட்டர்) செல்ல வல்லது எனக் கூறினார். இந்த புதிய நுண் துகளுக்கு “நியூட்ரினோ” (Neutrino) எனப் பெயரிட்டார்.
உல்ப்கேங்க் பாலி இவ்வாறு நியூட்ரினோ இருப்பதை கண்டறிந்து கூறினாலும், அதனை அவர் இயற்பியல் கணித வழியிலேயே சொல்ல முடிந்தது. நேரடியாக ஆய்வகச் சோதனையின் மூலம் நியூட்ரினோவைப் பிடித்துக் காட்ட முடியவில்லை.
நியூட்ரினோ குறித்த அவரது அறிவிப்பு வந்து 26 ஆண்டுகள் கழித்துதான் 1956இல் ஆய்வகங்களில் நேரடியாக நியூட்ரினோ நுண் துகள் கண்டறியப்பட்டது. இந்த செய்தியை பாலிக்கு அறிவியலாளர்கள் சொன்னபோது, மறுமொழியாக அவர் அனுப்பிய தந்தியில் “மகிழ்ச்சி. காத்திருக்கும் பொறுமை உள்ளவனுக்கே நல்ல செய்தி கிடைக்கும்” என்றார்.
சூரியனிலிருந்து வெளிவரும் காஸ்மிக் கதிர்களிலிருந்து நியூட்ரினோ நுண் துகள் இயற்கையில் உருவாகி, பூமியை அடைகிறது. கண்ணுக்குத் தெரியாமல் மனித உடலிலோ, பிற பொருள்களிலோ எந்த விளைவையும் ஏற்படுத்தாமல் பெருமழை போல் நொடி தோறும் நியூட்ரினோ துகள்கள் பொழிந்து கொண்டே இருக்கின்றன.
இதுவரை கண்டறியப்பட்ட அணு நுண் துகள்களிலேயே மிகமிக நிறை (எடை) குறைவான துகள் நியூட்ரினோவே ஆகும். முதலில், ஒளியைப் போலவே இதற்கும் நிறை இல்லை என்றே கருதினார்கள். இது குறித்து, கூடுதல் ஆய்வுகள் மேற்கொண்ட போதுதான் இந்த நியூட்ரினோ நுண் துகள் எலக்ட்ரான், மியூவான் (Muon), டாவ் (Tau) ஆகிய மூன்று வடிவங்களில் நிலவுவதாகவும், அவற்றுள் மியூவான், டாவ் ஆகியவற்றுக்கு மிகச்சிறிய அளவில் நிறை உண்டு எனவும் கண்டறிந்தனர். அதே நேரம், நியூட்ரினோ நுண் துகளானது, மேற்கண்ட மூன்று வடிவங்களில் ஒன்றிலிருந்து ஒன்று மாறிக் கொண்டே இருக்கிறது எனவும் கண்டறிந்தனர். இதனை நியூட்ரினோவின் “ஊசலாட்டம்” (Oscillation) என்றனர்.
நிறை இருப்பதிலிருந்து, நிறை இல்லாத நிலைக்கும் மீண்டும் நிறை உள்ள நிலைக்கும் மாறும் இந்த ஊசலாட்டம் குறித்து, அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
நியூட்ரினோ மின்னூட்டம் அற்ற, ஒளி வேகத்தில் பரவும் நுண் துகள் மட்டுமல்ல. கடினமான பாறைகளையும், எந்தவகை நீர்மங்களையும் ஊடுருவிச் செல்ல வல்லது. இவ்வாறு ஊடுருவிச் செல்லும்போது, அதன் திசை வேகத்தில் குறைவதும் இல்லை.
இயற்கையில் சூரியனிலிருந்து வெளிப்படும் நியூட்ரினோ கதிர்கள், பல கோடிக்கணக்கில் நொடி தோறும் பூமிக்கு வந்து கொண்டிருந்தாலும், அதனால் மனிதர்களுக்கோ பிற உயிரிகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. காரணம், இயற்கையில் வெளிப்படும் நியூட்ரினோக்களின் ஆற்றல் 2.2 எலக்ட்ரான் வோல்ட் (ev) முதல் 15 மெகா எலக்ட்ரான் வோல்ட் (Mev) அளவு ஆற்றல் மட்டுமே கொண்டவை ஆகும்.
இந்த சிறிய அளவிலான ஆற்றலுள்ள நியூட்ரினோக்கள் எந்தப் பொருளுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
இது குறித்து, ஆய்வு செய்வதற்காகவே பொட்டிபுரத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளதாக அரசும், சில அறிவியலாளர்களும் கூறுகிறார்கள். இது உண்மைதான் என்றாலும், முழு உண்மையல்ல.
இயற்கையில் கிடைக்கும் நியூட்ரினோ தனித்து வருவதில்லை. இதைவிட பல கோடி மடங்கு அளவில் பொழியும் காஸ்மிக் கதிர்கள் ஊடேதான் சேர்ந்து வருகிறது. இதனை, தனியே வடிகட்டி பிரித்தெடுத்து ஆய்வு செய்ய வேண்டும். அதற்குத்தான் ஒரு கிலோ மீட்டர் உயரம் - ஒரு கிலோ மீட்டர் அகலம் – ஒரு கிலோ மீட்டர் நீளம் உள்ள ஓர் மலைப்பகுதியை தேர்ந்தெடுத்து அதைக் குடைந்து உச்சியிலிருந்து 1500 அடி ஆழத்தில், ஆய்வகம் அமைத்து இந்த பாறை வடிகட்டிகளின் மூலம் காஸ்மிக் கதிர் உள்ளிட்ட பிற துகள்களைத் தடுத்து நிறுத்தி, நியூட்ரினோவை மட்டும் பிரித்தெடுத்து ஆய்வு செய்கிறோம் என்கிறார்கள்.
இந்த ஆய்வகத்தை நிறுவுவதற்கு இமயமலை தொடங்கி வடநாட்டின் பல பகுதிகளை ஆய்வு செய்தபோது, அங்கெல்லாம் எதிர்ப்புக் கிளம்பியதால் இளித்தவாயர்கள் தமிழர்கள்தான் என்ற தெளிவோடு, சுருளியாறு பக்கத்தில் தேனி மாவட்டத்தில் ஓர் இடத்தை முதலில் தேர்வு செய்தார்கள். அங்கு காப்புக் காட்டுப் பகுதி (Reserved area) பல இலட்சம் மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், கடைசியில் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தை தேர்வு செய்ததாக கூறுகிறார்கள்.
இமயமலையை விட்டுவிட்டு, ஏன் இங்கு வந்தார்கள் எனக்கேட்டால் இமயமலை – இளைய மலை, அங்கிருப்பது படிமப்பாறை, ஆனால் பொட்டிபுரத்தில் இருப்பதோ கடினப்பாறை,  எனவேதான் இப்பகுதியைத் தேர்வு செய்தோம் என்கிறார்கள்.
படிமப்பாறையை காஸ்மிக் கதிர்கள் ஊடுருவிவிடும் என்பதற்கு எந்த அறிவியல் சான்றும் இல்லை. படிமப்பாறை கதிர் வடிகட்டியாக, பாதுகாப்புக் கவசமாக இருக்காது என்பதற்கு உறுதியான சான்றெதுவும் இல்லை.
சரி கடினப்பாறை தான் வேண்டும், அதற்கு மேற்குத் தொடர்ச்சி மலைதான் பொருத்தமானது என்றால் இந்த மேற்குத் தொடர்ச்சி மலை தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடகத்தைக் கடந்து, கோவா வரையிலும் உள்ளது. அங்கும் இதே வகைப் பாறைதான் உள்ளது. அந்த இடங்களையெல்லாம் விட்டுவிட்டு, தமிழகத்தை இந்திய அரசு தேர்ந்தெடுத்திருப்பதற்கு அடிப்படைக் காரணம் இனப்பகைதான்!
இன்னொன்று, இங்குதான் இயற்கையை வெறும் பயன்பாட்டுப் பொருளாகப் பார்க்கிற திராவிட இயக்க, பொதுவுடைமை இயக்க அறிவாளர்கள் உள்ளனர். இவர்கள், தமிழ்நாட்டு இளைஞர்களிடையே பெருமளவில் ஒருவகை “விஞ்ஞான வழிபாட்டை” வளர்த்திருக்கிறார்கள்.
இந்திய அரசு தேர்ந்தெடுத்துள்ள தேனி மாவட்ட – கேரளத்தின் இடுக்கி மாவட்ட சந்திப்புப் பகுதி என்பது, மிகச் செறிவான பல்வகை உயிர்மக் காட்டுப் பகுதியாகும். இங்கு, பல்வேறு சிற்றாறுகள் உருவாகி ஓடுகின்றன. பத்துக்கும் மேற்பட்ட சிற்றணைகள் உள்ளன.
இந்த மலையில்தான் பொட்டிபுரத்தில் மலை உச்சியிலிருந்து 1500 அடி ஆழத்திற்கு 132 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம், 20 மீட்டர் உயரமுள்ள குகையைத் தோண்டி அதன் நடுவில் உலகிலேயே மிகப்பெரிய ஐயாயிரம் டன் எடையுள்ள காந்தமய இரும்பு உணர்விக் கருவியை (Magnetised Iron Calorimeter detector - ICAL) நிறுவ உள்ளார்கள்.
இந்த ஆய்வகத்தை நிறுவ 1000 டன் ஜெலட்டின் வெடிக் குச்சிகளை 800 நாட்கள் வெடிக்கச் செய்து, 800 டன் பாறைகளைப் பெயர்த்து குகை அமைக்க உள்ளார்கள். இந்த ஆய்வகத்தை நிறுவ 37,000 டன் சிமெண்ட்டை பயன்படுத்தப் போகிறார்கள்.
இவ்வளவு பெரும் பரப்பில் ஏறத்தாழ 7 இலட்சத்து 50,000 கன அடிப் பாறையைப் பெயர்த்தெடுக்கும் அளவிற்கு வெடி வைத்துத் தகர்க்கும்போது, இம்மலையில் உள்ள நீரடுக்குப் பகுதிகள் (Aquifier) நிலைகுலைந்து நீரியல் நிலநடுக்கம் நிகழும் ஆபத்து உண்டு என்பதை பல அறிவியலாளர்கள் எடுத்துக் கூறினாலும், அரசும் நியூட்ரினோ திட்டம் சார்ந்த அறிவியலாளர்களும் மொட்டையாக மறுக்கிறார்கள்.
ஆயினும், பொட்டிபுரம் ஆய்வகத்தைவிட சிறிய ஆய்வகமான இத்தாலியின் கிரான் காசோ ஆய்வகம், அப்பகுதியிலுள்ள நீரடுக்குகளை நிலை குலையச் செய்து அப்பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும், நீர் மாசுபாடும் பெருமளவு ஏற்படுத்தியதை உலகம் கண்டது.
இத்தாலி நாட்டு அறிவியலாளர்கள் பலரும், உழவர்களும், பொது மக்களும் எதிர்த்ததன் விளைவாக 2011ஆம் ஆண்டில், கிரான் காசோ நியூட்ரினோ ஆய்வகம் மூடப்பட்டது. ஆயினும், இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் திறக்கப்பட்டது. அதனை எதிர்த்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அறிவியலாளர்கள் பலர் இவ் ஆய்வகத்தை மூட வலியுறுத்தித் தொடுத்த வழக்கு, இத்தாலி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நியூட்ரினோ ஆய்வில் வெளிப்படும் வெப்பத்தைத் தணிக்க பெருமளவில் தண்ணீர் தேவையாகும். இதற்காக பொட்டிபுரத்திலிருந்து 35 கிலோ மீட்டர் குழாய் பதித்து, சுருளி ஆற்றிலிருந்து நாள்தோறும் ஏறத்தாழ 16 இலட்சம் லிட்டர் தண்ணீர் (1.575 D) இடைவிடாது எடுத்து வர இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான கிராமங்கள், குடி நீரின்றியும் வேளாண்மைச் சாகுபடிக்கு நீரின்றியும் பாதிக்கப்படப் போகின்றன.
இந்த ஆய்வகத்தில் முதல் பத்தாண்டுகள் நிகழ உள்ள முதற்கட்ட ஆய்வுப் பணிதான் விண் வெளியிலிருந்து வரும் நியூட்ரினோ துகள் பற்றிய ஆய்வாகும். இதற்குப் பிறகு, மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாம் கட்ட ஆய்வு மிகமிக ஆபத்தானது, பேரழிவை ஏற்படுத்தக் கூடியது. இதைத்தான், தமிழ்நாட்டு மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அமெரிக்காவிலிருந்தும், சப்பானிலிருந்தும் நியூட்ரினோத் தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் நியூட்ரினோ கற்றைகளை பொட்டிபுரம் ஆய்வகத்திற்கு அனுப்பி, நடைபெற உள்ள ஆய்வே மிக ஆபத்தான அடுத்தக்கட்ட ஆய்வாகும்.
இப்படியொரு பேரழிவு உண்டாக்கும் ஆய்வை பொட்டிபுரம் ஆய்வகத்தில் நிகழ்த்த உள்ளதையே, இந்திய அரசும் இந்த ஆய்வகத்தின் அறிவியலாளர்களும் மறைக்கிறார்கள். இந்திய வல்லரசின் இந்த பொய்ப் பரப்புரைக்கு, ஊதுகுழலாகவும் ஊடகமாகவும் தமிழ்நாட்டில் மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் செயல்படுகின்றன. குறிப்பாக, மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’ வரிந்து கட்டிக்கொண்டு, மாணவர்களிடையேயும், பேராசிரியர்களிடையேயும் வலுவான பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.
ஆனால், இதே சி.பி.எம்.மின் கேரளத் தலைவர் அச்சுதானந்தன் இந்த நியூட்ரினோ ஆய்வகத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார். ஆனால், ஆரிய இந்தியத்தின் இடதுசாரி எடுபிடிகளான தமிழ்நாட்டு சி.பி.எம். மட்டும் காவிரி – முல்லைப் பெரியாறு – தமிழீழம் போன்ற பல சிக்கல்களில் நடந்து கொண்டதைப்போல், நியூட்ரினோ ஆய்வகம் குறித்தும் தமிழினப் பகையோடு நடந்து கொள்கிறது.
ஆனால், இவர்களது பொய்ப் பரப்புரைக்கு எதிரான சான்றுகள் ஏராளமாக உள்ளன.
பொட்டிபுரத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை உறுதி செய்து 05.01.2015 அன்று, நியூட்ரினோ ஆய்வகத்தை நிர்வகிக்கும் பொறுப்பிலுள்ள “டாட்டா அடிப்படை ஆய்வு நிறுவனம்” (Tata Institute of Fundamental Research) அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் இறுதிப்பகுதியில், “தற்போது முன்மொழியப்பட்டுள்ள காந்த மயத் தகடுகள் உணர்வு நிலையம் மட்டுமின்றி வேறு ஆய்வுகளையும் இந்த ஆய்வகம் மேற்கொள்ளும். இது தொடர்பாக உலகின் வேறுப் பகுதிகளில் நடக்கும் நியூட்ரினோ ஆய்வுகளோடும் இணைந்து செயல்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

                இதில் கூறப்பட்டுள்ள வேறு ஆய்வுகள்”, “வேறு ஆய்வு நிறுவனங்கள்”  ஆகியவை யாவை என்பதை அறிய இந்த நியூட்ரினோ  ஆய்வகத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் என்.கே.மொண்டல் தலைமையிலான குழுவின் திட்ட அறிக்கையே சான்று.

இந்திய நியூட்ரினோ ஆய்வக திட்ட அறிக்கையின் முதல் தொகுதியில் முதல் கட்டமாக விண்வெளியிலிருந்து வரும் நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்வோம். இரணடாவது கட்டமாக ஜப்பான் மற்றும் அமெரிக்காவிலிருந்து நியூட்ரினோ தொழிலகத்தில் உருவாக்கப்படும் 11,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு நேர்கோட்டில் பயணிக்கவல்ல நியூட்ரினோ கற்றையைப் பெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்டும்என கூறப்பட்டுள்ளது. (Project Report Volume – I, INO/2006/01 Page – 1, 1.3 A Vision)  

இதற்குப் பிறகு டேராடுனில் 2011 மார்ச் 7 முதல் 11 வரை நடைப்பெற்ற அமெரிக்க இயற்பியல் ஆய்வக மாநாட்டில் அமெரிக்காவிலிருந்து நியூட்ரினோ தொழிற்சாலையில் உருவாக்கப்படும் நியூட்ரினோ கற்றைகளை பொட்டிபுரம் இந்திய நியூட்ரினோ ஆய்வகத்திற்கு  அனுப்பி ஆய்வு செய்வது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. (INO-A Status Report 29.11.2011 on American Institute of Physics Conference proceedings Minute)

இதைவிட மக்களை ஏமாற்றுவதற்காக பொட்டிபுரம் ஆய்வகத்தில் விண்வெளி யிலிருந்துவரும் இயற்கையான நியூட்ரினோ துகள்களை மட்டும் தான் ஆய்வு செய்ய போகிறோம், நியூட்ரினோ தொழிற்சாலையிலிருந்து பெறப்படும் நியூட்ரினோ கற்றைகளை இந்த ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்போவதில்லை என சத்தியம் செய்வதற்காக கல்லூரி, கல்லூரியாக அனுப்பப்படும் முனைவர் டி.இந்திமதி, வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையே போதும். இந்திய அரசின் பொய் உடைந்துபோகும்.

 “7,400 கிலோ மீட்டருக்கு அப்பால் உருவாக்கப்படும் நியூட்ரினோ கற்றைகளை பெற்று இந்திய நியூட்ரினோ ஆய்வகத்தில் நியூட்ரினோ ஊசலாட்டத்தை ஆய்வுசெய்வோம்”  என்று முனைவர் இந்துமதி உறுதிபடக்கூறுகிறார். (காண்க: Effect of Tau Neutrinos Contribution to Muon Signals at Neutrino Factories – December 2009)
               
இங்கு முனைவர் இந்துமதி கூறும் 7,400கிலோமீட்டருக்கும், அதற்கும் குறைவாகவும் தொலைவில் உள்ள நியூட்ரினோ தொழிற்சாலைகள் எவை என்று பார்த்தால் மறைக்கப்படும் உண்மைத் தெரிந்துவிடும்.

ஜப்பானின் டோக்கியோ நியூட்ரினோ தொழிற்சாலை தேனியிலிருந்து 6,900 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஜெனிவாவில் உள்ள இன்னொரு நியூட்ரினோ தொழிற்சாலைக்கும் தேனிக்கும் இடையில் உள்ள தொலைவு 7,200 கிலோ மீட்டர். அமெரிக்காவின் பெர்மிலேப் (Fermilab) நியூட்ரினோ தொழிற்சாலைக்கும் தேனிக்கும் வான்வழி தொலைவு விமானப்பாதை என்ற வகையில் பார்த்தால் 8,600 கிலோமீட்டர். பூமிக்கடியில் நேர்கோடு வரைந்தால் இந்த தொலைவு 7,400 கிலோ மீட்டருக்கும் சற்றுக் குறைவாகவே இருக்கும்.

நியூட்ரினோ தொழிற்சாலைகளிலிருந்து பெறப்படும் நியூட்ரினோ கற்றைகளை பொட்டிபுரம் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்போவதில்லை என்று திரும்பத்திரும்ப இவர்கள் பொய் கூறுவதன் மூலம் மிகப்பெரிய ஆபத்தை மறைக்கிறார்கள்.

நாம் ஏற்கெனவே குறிப்பட்டது போல் விண்வெளியிலிருந்து இயற்கையாக பொழியும் நியூட்ரினோ துகள்கள் 2.2 ev முதல் 15 Mev வரை மட்டுமே ஆற்றல் உள்ளவை. இந்த குறைவான ஆற்றல் உள்ள நியூட்ரினோக்களால் மனிதர்களுக்கோ பிற உயிரினங்களுக்கோ பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஆனால் செயற்கையான உருவாக்கப்பட்டு கற்றையாக அனுப்பப்படும் நியூட்ரினோக்கள் 1,500 Gev மேல் ஆற்றல் உள்ளவை.

1,500 ஜிகா எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் மற்றும் நிறை உள்ள மியூவான் (Muon) நியூட்ரினோ கற்றைகளால் முதல் நிலைக் கதிரியக்கமும், அவை ஆய்வக மலைப் பாறைகளில் மோதுவதால் இரண்டாம் நிலை கதிரியக்கமும் ஏற்படும். இந்த இரண்டாம் நிலை கதிரியக்கம் முதல் நிலை கதிரியக்கத்தைவிடவும் பலகோடி மடங்கு ஆற்றல் வாய்ந்தது. இதன் பாதிப்புகளும் மிகவும் அதிகமானது என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. (எடுத்துக்காட்டு : Muon Colliders and Neutrino Effective Doses – J.J Bevelacqua, 20.12.2012ஆய்வறிக்கை)

எடுத்துக்காட்டப்பட்டுள்ள ஆய்வறிக்கையை எழுதிய அறிவியலாளர் ஜெ.ஜெ.பெவலக்கா         (J.J Bevelacqua) நியூட்ரினோ ஆய்வுலகில் மீண்டும், மீண்டும் மேற்கோள் காட்டப்படும் தலைசிறந்த அறிவியலாளர் ஆவார். இது போன்ற வேறு ஆய்வு அறிக்கைகளும் உள்ளன.

மிகை உயர் ஆற்றல் உள்ள காஸ்மிக் நியூட்ரினோக்களால் உருவாகும் கதிரியக்கங்கள் குறித்து எச்சரிக்கும் ஓர் ஆய்வறிக்கை மிக முக்கியமானது. (Chia – Yu  Hu et al – Near field effects of Cherenkov Radiation Induced by Ultra High Energy Cosmic Neutrinos – Astroparticle Physics – 35;  p 421 – 434, 2012)

நியூட்ரினோக்களின் ஆற்றல் 50 Gev அளவு இருந்தாலே ஆய்வகம் நிறுவப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மிகக்கடுமையான கதிரியக்கத் தாக்கம் இருக்கும் என இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. ஆனால், பொட்டிபுரம் ஆய்வத்திலோ வெளியிலிருந்து பெறப்படும் 1>500 Gev ஆற்றல் உள்ள நியூட்ரி னோக்கள் புழங்க இருக்கின்றன. அப்படியானால் சியா யு ஹூ குறிப்பிடுவதை விட 75 மடங்கு அதிக கதிரியக்கம் வெளிப்படும் ஆபத்து உள்ளது.

இந்த கதிரியக்கம் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் தலைமுறை தலைமுறையாக தீங்கு விளைவிக்கக் கூடியது. ஒரு வேளை சிறிய அளவு கசிவு ஏற்பட்டால் கூட கணித்திடமுடியாத தீயத் தொடர்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

50 Gev ஆற்றல் உள்ள மியுவான் நியூட்ரினோ கற்றைகள் புழங்குகின்றன என்றால் அங்கு 15mSv அளவுக்கு கதிரியக்கம் ஏற்படும் என்று இன்னொரு ஆய்வறிக்கை கூறுகிறது. (Neutrino Radiation Hazard at a planned CERN Neutrino Factory – The Macro Silari and Helmat vincke – Technical note, 09.01.2002)  இங்கு குறிப்பிடப்படும் Sv என்பது சீவர்ட் (Sievert) என்ற கதிரியக்க அளவைக் குறிக்கும்.

மேலே சொல்லப்படும் 15mSv அளவு கதிரியக்கம் என்பது 2011-ல் புக்குசிமாவில் நிகழ்ந்த அணுஉலை விபத்தில் வெளிப்பட்ட கதிரியக்க அளவுக்கு நிகரானது என ஜெ.ஜெ. பெவலக்கா (J.J Bevelacqua)  குறிப்பிடுகிறார்.

நியூட்ரினோ ஆய்வத்தை எதிர்காலத்தில் மூடுகிற போது தங்கும் கதிரியக்கக் கதிர்கள் நீண்டகால ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்று மேலே குறிப்பிட்ட மேக்ரோ சிலரிக் குழுவினரின் ஆய்வு எடுத்துக்கூறுகிறது.

50 Gev  ஆற்றல் உள்ள நியூட்ரினோ கற்றைகளைப் பெற்று ஆய்வு செய்யும்ஆய்வகத்தைச் சுற்றி குறைந்தது 340 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த உயிரின நடமாட்டமும் இருக்கக்கூடாது என பல்வேறு ஆய்வறிக்கைகள் எச்சரிக்கின்றன. பொட்டிபுரம் ஆய்வத்திலோ இதைவிட பன்மடங்கு ஆற்றல் உள்ள நியூட்ரினோ கற்றைகள் பெறப்படபோகின்றன. இதற்கு எவ்வளவு நூறு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டுமோ தெரியவில்லை. அந்த அலவு தொலைவுக்கு கதிரியகத்தின் வீச்சு இருக்கும்.

திட்டமிடப்பட்டுள்ள பொட்டிபுரம் ஆய்வகத்தைவிட 600 அடி ஆழம், அதாவது 2100 ஆழத்தில் பூமிக்கு அடியில் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பாலைவனத்தில் இயங்கிவந்த Exo 200 என்ற செறிவூட்டப்பட்ட செனான் (Xenon) ஆய்வகம், நியூட்ரினோ குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்போது, 2014 பிப்ரவரியில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதியைச் சுற்றி கடுமையான கதிரியக்கம் வெளிப்பட்டு, அந்த ஆய்வகம் மூடப்பட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதன் அருகில் கூட யாரும் நெருங்க முடியாது என அந்த ஆய்வக நிர்வாகம் அறிவித்துள்ளது. (காண்க : Nature/News, June 4, 2014)

அடுக்கடுக்கான ஆய்வறிக்கைளும், உண்மை நடப்புகளும் இவ்வாறு இருக்க திரு.வை.கோ.பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில் இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ள மும்பை பாபா அணு ஆற்றல் நடுவத்தின் இயக்குநர் சேகர் பாபு முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பதை விடவும் பெரிய பொய்யை கூறுகிறார்;. (The Hindu 07.02.2015)

 “இந்திய நியூட்ரினோ ஆய்வத்தால் கதிரியக்க மாசுபாடு ஏற்படும் என்று கூறுவது ஏளத்துக்குரியது. கதிரியக்க கழிவுகள் உருவாகும் என்பது அடிப்படையற்ற பொய். மனுதாரர் (வை.கோ) அறிவியல் தொழில்நுட்ப அறிவு அற்றவர். மனுதாரருக்கு ஆலோசனை வழங்கியுள்ளவர்களின் அறிவியல் அறிவு ஐயத்திற்கு உரியது. வர்களால் மனுதாரர் தவறான வழிநடத்தப்படுகிறார் என்று அறிவின் அகங்காரத் தோடு அப்பட்டமான பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளார்.

பொட்டிபுரம் இந்திய நியூட்ரினோ ஆய்வத்தின்  திட்ட அறிக்கையையும் இத்திடத்தில் பங்கு பெற்றுள்ள முனைவர் இந்துமதியின் ஆய்வுத்தாளையும், இது குறித்து டேராடுனில் 2011-ல் நடைப்பெற்ற ஆய்வு கருத்தரங்க குறிப்புகளையும் அப்பட்டமாக மறைத்து இந்த பொய்யுரை வாதுரையாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்திற்கு பின்னால் இன்னொரு கொடுமையான சதித்திட்டமும் உள்ளது. அதுதான் நியூட்ரினோ ஆயுதம்’’ என்பதாகும். இதில் அமெரிக்க வல்லரசு ஆர்வத்தோடு கூட்டுசேர்ந்திருப்பதற்கும், இந்திய ஏகாதிபத்தியம் அவசரம் காட்டுவதற்கும் அடிப்படை இதுதான்.

நியூட்ரினோ கற்றைகளை எதிரி நாட்டு அணு ஆயுதங்களை அழிப்பதற்கான எதிர் ஆயுதமாகவும், பயன்படுத்தலாம் என முதன்முதலில் அறிவித்தர் ஜப்பானிய அறிவியலாளரான ஹிரோடக்கா சுகவரா என்பவராவார்.

2003ம் ஆண்டில் இவரும், இவரது ஆய்வுக் குழுவினரும் இணைந்து அளித்த ஆய்வறிக்கையில் மிகை உயர் ஆற்றல் உள்ள நியூட்ரினோ கற்றைகளை எதிரிநாட்டு அணுகுண்டு வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சந்தடி இல்லாமல் அனுப்பி உருக்கவோ, வெடிக்கவோ செய்யமுடியும் எனக் கூறினர். உலகின் நில நடுக்கோட் டிற்கு ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்திற்கு கூட பூமிக்கு அடியில் நியூட்ரினோ கற்றைகளை அனுப்பி யாருக்கும் தெரியாமல் இத்தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று அவர்கள் கூறினர். (Hirotaka Sugawara   et  al – Destruction of  Nuclear Bombs Using Ultra High Energy Neutrino Beam, June 2003)

அப்போதிலிருந்தே அமெரிக்கா நியூட்ரினோ ஆய்வில் சுறுசுறுப்புக் காட்டத் தொடங்கியது.


அதன் தொடர்ச்சியாக அன்மையில் ஆல்பிரட் டோனி என்ற அறிவியலாளர் அணு ஆயுதத்திற்கு எதிரான அதைவிட வலுவான ஆயுதமாக நியூட்ரினோ ஆயுதத்தை உருவாக்கிப் பயன்படுத்தலாம் என அறிக்கை அளித்தார்;. (Neutrino Counter Nuclear Weapon Alfred Tony, 26 June 2013) 


மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஆரியச்சார்பு அறிவியலாளர்கள் பாரதிய சனதா கட்சித் தலைமைக்கு 2014-ம் ஆண்டு தொடக்கத்தில் அளித்த அறிக்கையில் கொஞ்சம் கூடுதல் தொகை செலவழிக்க தயாராக இருந்தால் இந்திய அரசும் நியூட்ரினோ ஆயுத வல்லரசாக முடியும் எனக் குறிப்பிட்டனர். ஆட்சிக்கு வந்த கையோடு மோடி அரசு நியூட்ரினோ ஆய்வில் ஆர்வம் காட்டுவதற்கான அடிப்படை இதுதான். ஆனால் வெளித்தோற்றத்திற்கு அணு உலகத்தை ஆழமாக அறிந்துகொள்ள இந்த அடிப்படை அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக படம் காட்டுகிறார்கள். ஆரியத்தின் இடது சாரி படைப்பிரிவான சி.பி.எம்.கட்சி வரிந்துகட்டிக் கொண்டு இந்த பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.

இந்த கொடிய நோக்கங்களுக்காகத்தான் பிற பகுதிகளிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட நியூட்ரினோ ஆய்வகத்தை தமிழ்நாட்டில் நிறுவ மோடி அரசு முனைந்துள்ளது.
 
தேனி மாவட்டத்தின் சுற்றுச்சுழலுக்கும், நீர் ஆதாரத்துக்கும் கேடுவிளைவிப்ப தோடு மட்டுமின்றி மிகக்கொடுமையான கதிரியக்க ஆபத்தையும் விளைவிக்க கூடிய பொட்டிபுரம் இந்திய நியூட்ரினோ ஆய்வகத்திற்கு இந்திய அரசு இசைவு அளித்திருப்பது இந்திய அரசின் இன்னொரு தமிழினப்பகை நடவடிக்கையாகும்.

இந்த ஆய்வகத்திற்கு இதன் விளைவுகளைப்பற்றி சிந்தித்துப்பாராமல் தமிழக அரசு நிலம் அளித்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்.

இனியாவது இதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு செயல்பட வேண்டும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆய்வகத்திற்கு தடையில்லாச்சான்று வழங்கக் கூடாது. தடையில்லாச்சான்று கோரி இனிதான் ஆய்வகப்பொறுப்பாளர்கள் தமிழக அரசிடம் மனு அளிக்கப்போகிறார்கள். இந்த கடைசி சட்ட வாய்ப்பையாவது தமிழக அரசு தமிழக மக்கள் சார்பாக பயன்படுத்த வேண்டும். தடையில்லாச்சான்று அளிக்க கூடாது.

நியூட்ரினோ திட்டம் தேனி மாவட்ட மக்களைத்தானே பாதிக்கப்போகிறது என பிற பகுதி தமிழர்கள் வேடிக்கை பார்க்கக்கூடாது. அணு உலைத்திட்டம், கெயில் குழாய் பதிப்பு, மீத்தேன் திட்டம் என்று தமிழகத்தின் சுற்றுச்சூழல் மீதும், தமிழினத்தின் மீதும் பகைகொண்டு அடுக்கடுக்கான பேரழிப்புத் திட்டங்களை இந்திய அரசு திணித்துவருகிறது.

இந்த வரிசையில் இப்போது வந்திருப்பது நியூட்ரினோ ஆய்வகத் திட்டம். இந்த திட்ட அறிக்கையே கூறுவது போல அதிகம் போனால் 20 ஆய்வு மாணவர்களுக்கும், 200 பணியாளர்களுக்கும் மட்டுமே இதில் வேலைவாய்ப்பு உள்ளது. அதிலும் எவ்வளவு பேர் வெளிமாநிலத்தவர் வருவார்கள் என சொல்லமுடியாது. இதற்காக தமிழகம் தலைமுறை தலைமுறையாக ஓர் இன அழிவை சந்திக்கவேண்டுமா என்பதைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

நியூட்ரினோ ஆய்வகம் நிறுவப்படுவதை எதிர்த்து அனைத்துப் பகுதி தமிழர்களும் ஒன்றினைந்து போராடவேண்டும். மாணவர்களும், தமிழ்நாட்டு இளைஞர்களும், பொறுப்புள்ள அறிவாளர்களும் இதில் கூடுதல் முனைப்பு காட்டவேண்டும்.

இந்த ஆய்வுக்கு எதிராக வெளிவந்துள்ள அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களை எடுத்து வைத்து கருத்துத் துறையில் போராடுவதோடு, பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் நிறுவுவதற்காக கொண்டுவரப்படும் கட்டுமானக் கருவிகள் தாங்கிய வண்டிகளை ஊருக்குள் நுழைய விடாமல் மறித்து விடாப்பிடியாகப் போராடவேண்டும்.
               
                இது தமிழினத்தின் தற்காப்புப் போராட்டம்!


தகவல் உதவிக்கு நன்றி: Vijay Asokan,
Thamilinchelvan.Wordpress.com
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.