ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

திராவிடமா? தமிழ்த்தேசியமா? சூனியர் விகடன் ஏட்டின் செய்தி..!




“திராவிடமா? தமிழ்த்தேசியமா?” தலைப்பிலான விவாத நிகழ்வு குறித்து, சூனியர் விகடன் ஏட்டில் கட்டுரை வெளியாகியுள்ளது.

அதில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் முன் வைத்துள்ள வாதத்தை சுருக்கமாகத் தந்துள்ளது.

-> இந்திய அரசு என்பது தமிழ் இனப்பகை அரசு. இந்தியாவிலிருந்து தமிழகம் விடுபட்டால்தான் தமிழ்த் தேசிய இனம் வாழும் என்பதை பகிரங்கமாக நாங்கள் சொல்வோம். எந்தத் திராவிட இயக்கமாவது அப்படிச் சொல்ல முடியுமா? தேர்தலில் நிற்காத திராவிட இயக்கமாவது சொன்னதா?

-> திராவிடம் என்பது இனப்பெயரா? மொழிப் பெயரா? இடப்பெயரா? தி.க. சொல்லும் திராவிடம் வேறு. தி.மு.க. சொல்லும் திராவிடம் வேறு. “நான் இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன். நாட்டால் இந்தியன்” என்று சொல்கிறார் கலைஞர். இப்படி ஓர் இனக் கொள்கை சமூக அறிவியலில் எந்த விஞ்ஞானத்தில் இருக்கிறது?

-> காவிரி நீர் பறிபோய்விட்டது. பாலாற்றுக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர்ரை அணைக்கட்டி தடுக்கிறார்கள். முல்லைப் பெரியாறு தீர்ப்பு வந்தும் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. தேனி மாவட்டத்துப் பெண்கள் கேரளாவில் துன்புறுத்தப்பட்டனர். அப்போதெல்லாம் இந்தத் திராவிடம் வேலை செய்யவில்லை. ஒட்டுமொத்தமாக திராவிடம் என்பதே கற்பனையாகிப் போன ஒன்று.

-> ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்களே.. அவர்களுக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ, கேரளாவிலோ ஏன் போடவில்லை?

தமிழின உணர்ச்சிக்கு உளவியல் ஊனத்தை உண்டாக்கியது திராவிட இயக்கம். அந்தக் கோட்பாட்டை வரைந்தவர் வேறு யாருமல்ல, பெரியார்.

-> தமிழ் இலக்கியத்தில் திராவிடம் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா? தமிழின மறுப்பு, தமிழ் மொழி எதிர்ப்பு இதுதான் பெரியாரிடம் நான் கண்டுபிடித்தது. 69-இல் தமிழை விட்டொழித்துவிட்டு ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றார். தனது அரசியலுக்கு ஏற்ப எதிர்வினை ஆற்றக் கூடியவர் பெரியார்.

-> எமது தேசிய இனம், தேசிய மொழி தமிழ் மட்டுமே. இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது எமது இலக்கு!” என்று நிறைவு செய்தார்.

இவ்வாறு சூனியர் விகடன் ஏடு தொகுத்துத் தந்துள்ளது.

நன்றி : சூனியர் விகடன்

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.