ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“ஆயுதம் ஏந்தாத கொரில்லாப் போராளிகளாக மாறி அணைக் கட்டுமானத்தை உடைப்போம்” தேன்கனிக்கோட்டை தமிழர் திரளில் தோழர் பெ.மணியரசன் முழக்கம்!

“ஆயுதம் ஏந்தாத கொரில்லாப் போராளிகளாக மாறி அணைக் கட்டுமானத்தை உடைப்போம்”
தேன்கனிக்கோட்டை தமிழர் திரளில் தோழர் பெ.மணியரசன் முழக்கம்!










ஆயிரக்கணக்கான உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் திரண்டு நிற்க, கிருட்டிணகிரி மாவட்டத்தின் தேன்கனிக்கோட்டை நகரம், மிரண்டு நின்றது நேற்று (08.03.2015). காவிரியைத் தடுக்க கர்நாடகம் அணைக்கட்ட திட்டமிட்டுள்ள மேக்கேத்தாட்டுவிற்குச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தத் திரண்ட, தமிழர்களின் கூட்டமே, அவ்வாறு திணறடித்தது.

பல்வேறு உழவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் – இயக்கங்கள் உறுப்பு வகிக்கும், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், நேற்று காலை நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் நடத்த, அழைப்பு விடுக்கப்பட்டு, தமிழகமெங்கும் அதற்காக விரிவான பரப்புரை இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன.

காலை 10 மணி தொடங்கி, காவிரி டெல்டா மாவட்டம் மட்டுமின்றி, சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள், வாகனங்களை எடுத்துக் கொண்டு தேன்கனிக்கோட்டைக்கு வரத்தொடங்கினர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் என எழுச்சி முழக்கங்களுடன் குவிந்த அனைவரும், முற்றுகைப் போராட்டப் பேரணிக்கு அணிவகுத்து நின்றனர்.

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ.மணியரசன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பேராசிரியர் சின்னசாமி, மூன்று மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. வலிவளம் மு.சேரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், தமிழக உழவர் முன்னணி அமைப்பாளர் திரு. சி. ஆறுமுகம், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் புரவலர் திரு. பூவிசுவநாதன் உள்ளிட்ட பல்வேறு உழவர் அமைப்புத் தலைவர்களும், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாவரம் சி. முருகேசன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஆலோசகர் பொறியாளர் திருநாவுக்கரசு, மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் திரு. மன்னை செல்லச்சாமி, இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியராஜ் ஆரோக்கியராசு, காங்கிரசுக் கட்சி தஞ்சை மாவட்ட முன்னாள் தலைவர் திரு. நாஞ்சி வரதராசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிருட்டிணகிரி மாவட்டத் தலைவர் திரு. ரமேசு, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் தோழர் சக்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தோழர்களும் என பல்லாயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.

போராட்டத்தையொட்டி, மேக்கேத்தாட்டு அணைக்குச் செல்லும் சாலைகளில் மூன்று மாவட்டங்களைச் சோந்த காவல்துறையினர் குவிக்கப்பட்டு, அச்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது. கலவரத் தடுப்பு வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டு, சாலையில் மூன்றடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டது.

“காவிரி நமது குருதி ஓட்டம்! காவிரி நமது வளர்ப்புத் தாய்! கன்னடச் சிறையில் காவிரித்தாய் கதவை உடைத்து விடுதலை செய்வோம்” உள்ளிட்ட எழுச்சி முழக்கங்குடள் பேரணி தொடங்கியது. சாலைகளின் இருபுறமும் பொது மக்கள், வீடு – அலுவலகங்களின் மேல்மாடியில் நின்று, பேரணியைக் காணக் குவிந்து கிடந்தனர். நேரம் செல்ல செல்ல, அந்த சாலையில் 5000 பேர் கூடிவிட்டனர். அவரவர், அமைப்புப் பதாகைகள், கொடிகளுடன் அணிவகுத்து நின்ற போது, மக்கள் கடலாக அவ்விடம் காட்சியளித்தது.

‘பாரத மாதா’ என்றாலே, சாந்தமான ஒரு பெண் கையில் இந்தியக் கொடியுடன் நிற்கும் படம் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு கையில் தமிழீழத் தமிழர் என்ற பெயரைத் தாங்கிய தலை, இன்னொரு கையில் தமிழ்நாட்டுத் தமிழர் என்ற பெயரைத் தாங்கிய தலை, ஒரு கையில் மனுதர்மம், இந்துத்துவ மதவெறி, ஆரிய இனவாதம் என்ற வாள், காவிரி உரிமை – முல்லைப் பெரியாறு உரிமை உள்ளிட்ட உரிமைகளை காலில் மிதித்துக் கொண்டு நிற்கும் ஆக்கிரோசம் என புதிய வகைக் ‘காளி’ உருவமாக ‘பாரத மாதா’ படம் ஒன்றை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் வடிவமைத்து, இந்தியத் தேசியத்தை அம்பலப்படுத்திக் காட்சிப்படுத்தியிருந்தனர். ‘இந்தியா ஒழிக!’ என்ற முழக்கத்துடன், அப்படம் ஆர்ப்பாட்டத் தோழர்களால் கிழித்தெறிந்து, கொளுத்தப்பட்டது.

பேரணியை, காவல்துறையினர் தடுத்த போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் உள்ளிட்ட தோழர்கள் காவல்துறையின் தடுப்பு அரண்கள் மீது ஏற, அவர்களை காவல்துறையினர் கீழே இழுத்துப் பிடித்துத் தள்ளிக் கைது செய்தனர். சற்றோப்ப 25க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் மற்றும், அரசுப் பேருந்துகளைக் கொண்டு தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, நகரின் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

“தோழர்களே! இது இறுதிப் போராட்டமல்ல. இது தொடக்கம் தான். கர்நாடக அரசு காவிரியைத் தடுக்க அணை கட்ட முயன்றால், ஆயுதம் ஏந்தாத கொரில்லாப் போராளிகளாக மாறி, நாம் அணைக் கட்டுமானங்களைத் தகர்ப்போம்! அதற்குத் தயாராகுங்கள்!” என முழங்கினார், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன். அதை ஆமோதித்து, போராட்டத் தோழர்கள் கரவொலி எழுப்பினர்.

தமிழ்நாட்டுத் தமிழர்களின் இந்த எழுச்சிமிகுப் போராட்டம், நிச்சயம் வரலாற்றுப் போக்கை மாற்றும்! காவிரியைக் காக்கும்!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.