ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி - தோழர் பெ.மணியரசன் சிறப்புக் கட்டுரை!

ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி தோழர் பெ.மணியரசன், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

பெண்கள் தாங்களே முன்வந்து தங்கள் தாலிகளை அகற்றும் நிகழ்வொன்றை அண்ணல் அம்பேத்கர் 125ஆம் ஆண்டுப் பிறந்த நாளில் 14.04.2015 அன்று சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. 

இந்நிகழ்வு இந்துக்களின் புனிதச் சின்னத்தை - புனிதச் சடங்கை இழிவுபடுத்துகிறது என்றும் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், இந்து மதத்தின் பெயரில் இயங்கக் கூடிய சில அமைப்பினர் சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் மனுச் செய்துள்ளனர். வேப்பேரி உதவிக் காவல் ஆணையர் 12.04.2015 அன்று தாலி அகற்றும் நிகழ்வுக்குத் தடை விதித்துள்ளார். 

காவல்துறையின் தடையை அகற்றக்கோரி திராவிடர் கழகத் துணைத் தலைவர் திரு. கலி. பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்கள் வழக்கை 13.04.2015 மாலை 4 மணி முதல் 7 மணி வரை விசாரித்து, தாலி அகற்றும் நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடந்த அனுமதி வழங்கியுள்ளார். திராவிடர் கழகத்தினர்க்குக் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவும் ஆணையிட்டுள்ளார். 

நீதிபதி து. அரிபரந்தாமன் இத்தீர்ப்பை எழுத்து வடிவில் வழங்கும் போது, இரவு 9 மணி. அடுத்த சில நிமிடங்களில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் திரு. சோமையாஜி சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி சத்தீசுகுமார் அக்னிகோத்ரி முன்சென்று நீதிபதி து. அரிபரந்தாமன் கொடுத்த தீர்ப்பை நீக்கிடக்கோரி மேல்முறையீடு செய்ய அனுமதி கோரினார். மறுநாள் (14.04.2015) காலை 7 மணிக்கு மேல்முறையீட்டை எடுத்துக் கொள்வதாகவும், விசாரணை தமது வீட்டில் நடக்கும் என்றும் நீதிபதி அக்னிகோத்ரி கூறினார். 

மறுநாள் காலை 6.30 மணிக்கு உயர் நீதிமன்றப் பதிவு அலுவலகத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. காலை 7.45 மணிக்கு நீதிபதி சத்தீசு அக்னிகோத்ரி, நீதிபதி எம். வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணையைத் தொடங்கியது. காலை 9 மணிக்கெல்லாம் தனிநீதிபதி அளித்த அனுமதிக்கு இடைக்காலத் தடை விதித்தது இரு நீதிபதி அமர்வு. 
இதற்குள் அன்று (14.04.2015) காலை 7 மணிக்கெல்லாம் சென்னைப் பெரியார் திடலில் கணவன் - மனைவி விருப்ப அடிப்படையில் தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டனர், திராவிடர் கழகத்தினர். இருபத்தோரு பெண்கள் தாலி அகற்றினர். 

நீதிமன்றத் தடை வந்தபின் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, மாட்டுக்கறி விருந்துண்ணும் நிகழ்ச்சியைத் தள்ளி வைத்து, உயர் நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்று நடத்துவோம் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி. 

உடனே பாரத் இந்து முன்னணி, சிவசேனை என்ற பெயர்களில் இயங்கும் பிரிவினர், திராவிடர் கழகத்தினர் இந்து மதத்தை இழிவுபடுத்திவிட்டனர், தாலியின் புனிதத்தை அவமதித்துவிட்டனர் என்று முழங்கிக் கொண்டு வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் பாரத் இந்து முன்னணியினர் சாலை மறியல் செய்து கைதாகினர். குமணன்சாவடியில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியினர் அரசுப் பேருந்துகளின் மீது கல்வீசிக் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். 

14.04.2015 மாலை 3.30 மணியளவில் பெரியார் திடல் வாசலில் தானியில் வந்த சிவசேனையைச் சேர்ந்த நான்கு பேர் “ஜெய் காளி, ஓம் காளி” என்று வடமொழியில் கூச்சல் போட்டுள்ளனர். திராவிடர் கழகத்தினர்க்கும் சிவசேனைக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் தடியடி நடத்தி இருதரப்பினரையும் விரட்டியுள்ளனர். இருதரப்பினரும் காயம்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். சிவசேனையினர் வந்த தானியில் (ஆட்டோவில்) இருந்த, தரையில் வீசினால் வெடிக்கக்கூடிய பட்டாசு ரக வெடிகுண்டுகள், கடப்பாரை, சுத்தியல் போன்றவற்றைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

“இந்து” என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்திய இந்த சிறு கும்பல்களின் பின்னணியில் பாரதிய சனதாக் கட்சி இருக்கிறது என்பது, 14.04.2015 அன்றே அம்பலமானது. பா.ச.க.வின் இந்தியச் செயலாளர்களில் ஒருவரான எச். இராஜா தாலி அகற்றல் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். “திருட்டுத்தனமாகத் தாலி அகற்றும் போராட்டம் நடந்துள்ளது” என்று எச். இராஜா தம் வழக்கப்படி தடித்தனமாகப் பேசியுள்ளார். இந்து முன்னணி இராம கோபாலன் “வீரமில்லாத வீரமணி” நான்கு சுவர்களுக்குள் தாலி அகற்றும் போராட்டம் நடத்தியுள்ளார் என்று சாடியுள்ளார். 

தாலிகளை அகற்றிய 21 குடும்பத்தினரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் வேறு மதத்திற்குப் போகவில்லை. தங்கள் முன்னோர்கள் கடைபிடித்த பழக்க வழக்கங்களில், ஆண் - பெண் சமத்துவத்திற்கு முரணாக உள்ள சில ஒப்பனைகளை அவர்கள் தாங்களாகவே முன்வந்து நீக்கிக் கொள்கிறார்கள். இதில் தலையிட, இதனைத் தடுக்க எச். இராஜாவுக்கோ, இராம கோபாலனுக்கோ வேறு சில விடலைகளுக்கோ இந்துமதம் உரிமை வழங்கியுள்ளதா? இல்லை. 

இந்து மதத்தில் எச். இராஜா, இராம கோபாலன் போன்றவர்கள் யார்? அவர்களுக்கு என்ன இடம் வழங்கப்பட்டிருக்கிறது? இந்து மதத்தில் ஏராளமான கடவுள்கள் உண்டு. சைவம், வைணவம் போன்ற பல பிரிவுகள் உண்டு. இந்து மதத்திலிருந்து ஒருவரை நீக்கி வைக்க, தள்ளி வைக்க எந்த பீடத்திற்கும் அதிகாரம் கிடையாது. 

இந்து மதத்தில் புரையோடிப் போயிருந்த எத்தனையோ தீய நம்பிக்கைகளை - பழக்க வழக்கங்களை இந்து மதத்தில் தோன்றிய சீர்திருத்தவாதிகள் எதிர்த்து அவற்றுக்கெதிரான சட்டங்களை இயற்றும்படிச் செய்துள்ளார்கள். 

கணவன் இறந்தவுடன் மனைவியைக் கட்டாயப்படுத்தி, அவன் பிணம் எரியும் நெருப்பில் அவளைத் தள்ளிக் கொல்லும் உடன்கட்டை ஏறுதல், பருவமடையாத பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது, அக்குழந்தையின் கணவன் இறந்துவிட்டால், ஆயுள்வரை அப்பெண் விதவையாக இருந்து அழிவது, கோயில்களில் நிலக்கிழார்கள், மைனர்கள் போன்றவர்களின் வரம்பற்ற பாலுறவுக்காக தேவதாசிகளாகப் பெண்களுக்குப் பொட்டுக்கட்டி விடுவது போன்ற எத்தனையோ பெண்ணடிமைத்தன நிகழ்வுகள் புனிதச் சடங்கு என்ற பெயரில் இந்து மதத்தில் இருந்தன. இந்து மதத்தைச் சேர்ந்த இராஜாராம் மோகன்ராய், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற எத்தனையோ பேர் முயன்று போராடி, இவற்றையெல்லாம் தடை செய்யும் சட்டங்கள் வரச் செய்தனர். 

வள்ளல் பெருமான், சிலை வணக்கத்தையே எதிர்த்து ஒளி வணக்கத்தைக் கொண்டுவந்தார். இராம கோபாலன், எச். இராஜா வகையறாக்களின் தலைச் செருக்கையும், தலைகால் புரியாத களியாட்டத்தையும் பார்த்தால், வள்ளலார், தெய்வச் சிலைகளை இழிவுபடுத்திவிட்டார், சிலை வணக்க இந்துக்கள் மனத்தைப் புண்படுத்திவிட்டார் என்று கூக்குரலிட்டு, வள்ளலாரின் சன்மார்க்க சங்கங்களைத் தடை செய்யக் கோருவார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. 

இந்துக்களில் ஆரியர்கள் இருக்கிறார்கள். தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு இனத்தினர் இருக்கிறார்கள். பா.ச.க., இந்து முன்னணி, சிவசேனை போன்றவை முன்வைக்கும் இந்து மதம் ஆரிய இந்துத்துவா! அது தமிழ்ச் சைவ சித்தாந்தமோ, தமிழ்த் தென்கலை வைணவமோ அல்ல! 

அண்ணா தி.மு.க.வும் செயலலிதாவும், எந்த இந்துப் பிரிவை ஆதரிக்கின்றனர் என்பதுதான் தமிழர்கள் முன் உள்ள வினா! ஆரிய இந்துப் பிரிவையா? தமிழர்களின் சைவ சிந்தாந்தம் மற்றும் தென்கலை வைணவக் கொள்கைகளைக் கொண்ட இந்துப் பிரிவையா?
செயலலிதா கட்சி, ஆரிய இந்துப் பிரிவை ஆதரிக்கிறது என்பதுபோல்தான் அதன் செயல்பாடுகள் தெரிவிக்கின்றன.

நான்கு சுவர்களுக்குள் - தங்கள் சொந்த இடத்தில் திராவிடர் கழகத்தினர் தாலி அகற்றும் நிகழ்வை நடத்துவதற்குக் காவல்துறையினர் ஏன் தடை விதிக்க வேண்டும்? அத்தடையை நீக்கித் தனி நீதிபதி கொடுத்த ஆணையின் மீது தடை வாங்க இரவு 9 மணிக்குத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, மூத்த நீதிபதி கதவைத் தட்டி, கோரிக்கை வைத்து மறுநாள் 6.30 மணிக்கு வழக்கைப் பதிவு செய்து, 7.30 மணிக்கெல்லாம் நீதிபதி அக்னி கோத்ரி வீட்டில் இருநீதிபதி அமர்வை நடக்கச் செய்து தடை வாங்கியிருக்கிறார். மற்ற பொது நல வேலைகளில் செயலலிதா ஆட்சி இவ்வாறு முனைப்பாக நடந்து கொண்டதுண்டா? இல்லை. 

நீதிபதி அக்னிகோத்ரி அமர்வும், அமைதியாக நடக்கும் கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைக்கு இந்திய அரசமைப்புச் சட்டப்படி அனுமதி உண்டு என்பது இந்தியக் கலாச்சாரம் தொடர்பான விடயங்களில் பொருந்துமா என்று கேட்டு, வழக்கை ஒத்தி வைத்துள்ளார். இந்தியக் கலாச்சாரம் என்பதில்தான் ஆரிய ஆதிக்கம் ஒளிந்துள்ளது.
ஆரியப் பார்ப்பனியத் தலைமையிலான இந்து மதப்பிரிவைத்தான் செயலலிதா ஆதரிக்கிறார்; 

தமிழர்களின் இந்து மதத்தை அவர் ஆதரிக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. தமிழக அரசின் இந்த பாகுபாட்டு அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

தில்லியிலும் ஆரியப் பார்ப்பனிய ஆட்சி; தமிழ்நாட்டிலும் ஆரியப் பார்ப்பனியத்திற்கு ஆதரவான ஆட்சி என்ற துணிச்சலில்தான் பார்ப்பனிய இந்துத்துவா புள்ளிகள் தலைகால் தெரியாமல் வெறிப்பேச்சு பேசுகின்றனர். வெடிகுண்டுகளை புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தில் வீசிச் சென்றனர். இப்போது, தி.க. அலுவலகத்திற்கே வெடிகுண்டுடன் வந்துள்ளனர். வெடிகுண்டு, கடப்பாரை, சுத்தியல் சகிதம் வந்த அந்த வன்முறைக் கும்பலை பெரியார் திடல் வாசல்வரை வர விட்டு, வடநாட்டு மொழியில் கூச்சல்போட காவல்துறை அனுமதித்துள்ளது. தமிழகக் காவல்துறைக்கு இவ்வாறு தவறான வழிகாட்டியது யார்?

தாலி என்பது கடந்த காலத்தில், ஏன் சங்க காலத்தில்கூடத் தமிழர்கள் திருமணத்தில் இடம் பெற்றுள்ளது. அப்பொழுது, இந்து மதம் கிடையாது. ஆனால், இன்று பெண்ணுக்குத் தாலி போடுவது ஆணாதிக்கத்தின் அடையாளம் தவிர, வேறல்ல. எனவே, தமிழ்ப் பெண்கள் தாலி போட்டுக் கொள்ள தாங்களே முன்வந்து மறுப்புத் தெரிவிக்க வேண்டும். 

அடுத்து, ஒருவர் தன் உடம்பில் என்ன அணிகலனை அணிந்து கொள்வது அல்லது அணிந்து கொள்ளாமல் தவிர்ப்பது என்று முடிவு செய்ய அந்தத் தனிநபருக்கு முழு உரிமை உள்ளது. இவ்வாறான உரிமையைக் காலம்காலமாக இந்துமதம் அனுமதிக்கிறது. கடவுள் மறுப்பு கூட இந்துமதக் கோட்பாட்டில் ஒரு பகுதிதான். தங்களின் பழைய சமூக ஆதிக்கத்தை மீண்டும் புதுப்பிக்கத் துடிக்கும் பார்ப்பனியப் புள்ளிகளின் சதிவலையில் தமிழர்களாய் உள்ள இந்துக்கள் வீழ்ந்துவிடக் கூடாது. தாலி வேண்டாம் என்று பரப்புரை செய்ய - தாங்களே முன்வந்து தாலியை அகற்ற நூற்றுக்கு நூறு உரிமை இருக்கிறது. அதே வேளை வலுக்கட்டாயமாகத் தாலியை அகற்றவோ, தாலி கட்டுவதைத் தடுக்கவோ யாருக்கும் உரிமையில்லை.

இந்தப் புரிதலோடு - தமிழ் மக்கள் செயல்பட வேண்டும். மத உணர்வைக்காட்டி, ஆதிக்க சதிவலையில் வீழ்த்த முயலும் ஆரிய - பார்ப்பனியக் கேடர்களுக்குத் தமிழ் மக்கள் இடம் கொடுக்கக் கூடாது.

2 comments:

  1. மிகச் சிறப்பான பதிவய்யா ! தங்களை திராவிட இயக்கங்கள் இழந்ததால் வந்த விணை இது !

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.