ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம்! திருத்துறைப்பூண்டியில் ஈகச்சுடரேற்ற நிகழ்வு!




இந்திய அரசின் நிதி - படை - அரசியல் உதவிகளோடு, 2009 ஆம் ஆண்டு, இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழீழ மக்களை சிங்கள பௌத்த இனவெறி அரசு இனப்படுகொலை செய்தது. அதன் ஆறாம் ஆண்டு நினைவேந்தல், இவ் ஆண்டு உலகெங்கும் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், நேற்று மாலை, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் முன்பு, ஈகச்சுடரேற்ற நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வுக்கு, த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் சிவவடிவேலு தலைமையேற்றார். த.தே.பே. பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், மூத்த தோழர் இரா. கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை வீரவணக்க முழக்கங்களை எழுப்ப, தலைவர் தோழர் பெ.மணியரசன் முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தி வைக்கப்பட்டிருந்த ஈகியர் தூணுக்கு, மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி, உரையாற்றினார்.

மகளிர் ஆயம் தோழர்கள் மேரி, செரபினா, இளமதி, இலட்சுமி உள்ளிட்ட திரளான மகளிரும், த.தே.பே. தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் தோழர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி, ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

சென்னை நினைவேந்தல்


சென்னையில், தமிழர் (மெரினா) கடற்கரையில், மே பதினேழு இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில், பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர். மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி நிகழ்வை ஒருங்கிணைத்தார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, இந்திய ஈழத்தமிழர் நட்புறவுக் கழகத் தலைவர் பாவலர் காசி ஆனந்தன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனர் திரு. குடந்தை அரசன், தமிழர் முன்னேற்றப் படைத் தலைவர் கி. வீரலட்சுமி, புலவர் கி.த.பச்சையப்பனார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், பொது மக்களும் இதில் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன் தலைமையில், வட சென்னை செயலாளர் தோழர் செந்தில், தமிழக இளைஞர் முன்னணி தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பொருளாளர் தோழர் ஐ. அகரன் உள்ளிட்ட தோழர்கள் இதில் கலந்து கொண்டு, வீரவணக்கம் செலுத்தினர்.

தர்மபுரி

இந்திய அரசின் நிதி - படை - அரசியல் உதவிகளோடு, 2009 ஆம் ஆண்டு, இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழீழ மக்களை சிங்கள பௌத்த இனவெறி அரசு இனப்படுகொலை செய்தது. அதன் ஆறாம் ஆண்டு நினைவேந்தல், இவ் ஆண்டு உலகெங்கும் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

அவ்வகையில், தர்மபுரியில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று (18.05.2015) மாலை, வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. தர்மபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கக் கிளைச் செயலாளர் தோழர் விஜயன் தலைமையேற்றார்.

மொரப்பூர் ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு. செயப்பிரகாசு, தே.மு.தி.க. நிர்வாகி திரு. முனி. ஆறுமுகம், பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயாளர் சரவணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பொது மக்களும் இதில் கலந்து கொண்டு, தமிழீழ இனப்படுகொலையில் பலியான உறவுகளுக்கு வீரவணக்கம் செலுத்தி மெழுகுவர்த்திகள் ஏந்தி நின்று, முழக்கங்கள் எழுப்பினர்.


மதுரை
மதுரையில் தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைத்த நினைவேந்தல் நிகழ்வில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தோழர் மூ. கருப்பையா உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு, வீரவணக்கம் செலுத்தினர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.