இந்திய அரசின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்திற்கு எதிராக தமிழகமெங்கும் உழவர் ஆர்ப்பாட்டாங்கள்!
இந்திய அரசின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்திற்கு எதிராக தமிழகமெங்கும் உழவர் ஆர்ப்பாட்டாங்கள்! தமிழக உழவர் முன்னணி மாநாட்டில் அறிவிப்பு!
கட்சி சார்பற்ற உழவர் அமைப்பான தமிழக உழவர் முன்னணியின் தமிழகப் பேராளர் மாநாடு 23.05.2015 சனிக்கிழமை சிதம்பரத்தில் நடைபெற்றது. கடலூர், திருவாரூர், தஞ்சை, கிருட்டிணகிரி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகலிருந்து தோர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
பேராளர் மாநாட்டிற்கு கடலூர் மாவட்டத் தலைவர் திரு. அ. கோ. சிவராமன் தலைமையேற்க திருமதி ஆர். ரங்கநாயகி வரவேற்புரை நிகழ்த்தினார். தூத்துக்குடி மாவட்டத் தலைவர் திரு. மு. தமிழ்மணி தமிழக உழவர் முன்னணியின் கொடியை ஏற்றினார்.
ஆலோசகர் திரு. கி. வெங்கட்ராமன் மாநாட்டுத் தொடக்க உரை ஆற்றியதோடு நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். செயல்பாட்டு அறிக்கையை திரு. சி. ஆறுமுகம் முன்மொழிய திரு தங்க. கென்னடி வழிமொழிந்தார். பேராளர்களின் விவாதத்திற்குப் பிறகு அறிக்கை ஏற்கப்பட்டது.
தமிழக உழவர் முன்னணியின் தலைவராக திரு. சி.ஆறுமுகம், பொதுச்செயலாளராக திரு. க. தூருவாசன், பொருளாளராக திரு. அரா.கனகசபை, துணைத் தலைவராக திரு. மு. தமிழ்மணி, துணைச் செயலாளராக திரு. தங்க. கென்னடி, ஆகிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், 11 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளையும், பேராளர் மாநாட்டையும் வாழத்தி கொள்ளிடம் கீழணைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. ப. வினாயகமூர்த்தி, உழவர் மன்ற கூட்டமைப்புத் தலைவர் திரு. பெ. இரவிந்திரன், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் திரு. த. மணிமொழியன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தலைவர் திரு. காவிரி. தனபாலன், டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் திரு. வலிவலம் மு. சேரன் ஆகியோர் உரையாற்றினர்.
மாநாட்டை முடித்து வைத்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன், நிறைவுரை நிகழ்த்தினார். திரு. கோ. நாராயணசாமி, நன்றி கூறினார்.
பேராளர் மாநாட்டில் கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. இந்திய அரசின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து 2015 சூன் 9ல் தமிழகமெங்கும், தமிழக உழவர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.
2. தொடர் வறட்சி காரணமாகவும், அண்டை மாநிலங்களின் நீர் முற்றுகை காரணமாகவும், 2012ல் முழு சாகுபடியும், 2013- 14 குறுவை சாகுபடியும் அழிந்து, சம்பா சாகுபடியும் பாதி மகசூலே கிடைத்து, அண்மையில் கடந்த வாரம் கொட்டித்தீர்த்த கோடை மழையால் பருத்தியும், எள்ளும், காய்கறி சாகுபடியும் அழிந்து உழவர்கள் கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசும், இந்திய அரசின் அரசு வங்கிகளும் உழவர்களின் வேளாண் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், இந்திய அரசு அறிவித்துள்ள திருத்தி அமைக்கப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தனியார் காப்பீட்டு முதலாளிகளுக்கு துணை செய்வதாகவும், உழவர்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளது. எனவே அரசு காப்பீட்டு நிறுவனங்கள் வழியாகவே பயிர் காப்பீட்டுத் திட்டத்தை இந்திய அரசு தொடரவேண்டும் எனவும், இக்காப்பீட்டுத் திட்டத்தை ஏக்கர் வாரியாக காப்பீடு வழங்கும் வகையில் திருத்தி அமைக்க .
3. இந்திய அரசே காவிரி மேலாண்மை வாரியம் அமை! மேக்கேத் தாட்டு அணைத் திட்டத்தை தடுத்து நிறுத்து!
4. முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு புதிய அணைக்கட்டுவதற்கு இந்திய அரசு அளித்த இசைவைத் திரும்பப் பெற்றுக் கொண்டு நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த உடனடியாக செயலில் இறங்க .
5. கரும்பு உழவர்களுக்கு நிலுவையின்றி கொள்முதல் தொகையை வழங்கு!
கரும்பு உழவர்களுக்கு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் விலை வழங்க வேண்டிய இந்திய அரசு ரூ. 2,200 விலையாக அறிவித்தது. தமிழக அரசு வாகன வாடகை நூறு ரூபாய் உள்ளிட்டு ஒரு டன் கரும்புக்கு ரூ2,650/- கொள்முதல் விலை என அறிவித்தது. இந்த அறிவிப்பு வெறும் ஏட்டுச்சுரைக்ககாயாகவே உள்ளது. அரசு மற்றும் கூட்டுறவு சக்கரை ஆலைகளோ, தனியார் சக்கரை ஆலைகளோ இந்த விலையை முழுவதுமாக வழங்குவது இல்லை. ரூ.2,100/- தொடங்கி அதிகம் போனால் ரூ.2,300/- மட்டுமே வழங்கப்படுகிறது. கரும்பு வெட்டி 14 நாட்களுக்குள் தொகையை கொடுத்தவிடவேண்டும் என்ற சட்ட நிபந்தனையையும் காற்றில் பறக்க விட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள மிகக்குறைந்த கொள்முதல் தொகையாவது முழுமையாகவும், உரிய காலத்திலும் கரும்பு உழவர்களுக்கு கிடைக்கும் வகையில் இந்திய, தமிழக அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
5. தமிழக அரசே வீராணம் திட்டத்தைத் தொடராதே!
தொடக்கதிலிருந்தே தமிழக உழவர் முன்னணி எச்சரிக்கை செய்ததுபோல் வீராணம் திட்டம் உபரி நீரை சென்னைக்கு எடுத்துச்செல்லும் திட்டமல்ல. உள்ள நீரையும் உறிஞ்சும் திட்டம் என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரி நடைமுறையில் பொதுப்பணித்துறையிடமிருந்து, சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தின் அதிகாரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுவிட்டது. மதகுகளில் பூட்டிய கூண்டுகளும், வேளாண்மைக்கு தண்ணீர் மறுப்பும் இத்திட்ட அறிவிப்புக்கே எதிரானது. பெருநகர குடிநீர் வாரியத்தின் பொறுப்பில் போய் விட்டதால் ஏரி தூர் வாரப்படவும் இல்லை. எனவே, முன்பு இருந்ததுபோல் வீராணம் ஏரியை பாசன ஏரியாக பொதுப்பணித்துறை அதிகாரத்தின் கீழ் தொடர்ந்து இருக்கச் செய்யுமாறும், புதிய வீராணம் திட்டத்தை இனியும் தொடராமல் கைவிடுமாறும் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
7. தமிழகத்தை தனி வேளாண் மண்டலமாக அறிவித்து, எம்.எஸ். சாமிநாதன் குழு பரிந்துரைப்படி அடிப்படை விலை வழங்குக!
கர்நாடகம், ஆந்திரம், பஞ்சாப் உள்ளிட்ட அண்டை, அயல் மாநிலங்களின் நெல் மற்றும் இதர தானியங்கள் தமிழகச் சந்தையை ஆக்கிரமித்து நிற்கின்றன. தமிழ்நாட்டு உழவர்கள் தமிழகச் சந்தையை இழந்து வேறு சந்தையும் கிடைக்காமல் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளனர். தமிழ்நாட்டுச் சந்தை, தமிழ்நாட்டு உழவர்களுக்கு உறுதி செய்யப்படுவது அடிப்படைப் பாதுகாப்பு ஏற்பாடு ஆகும். இதற்கு ஏற்ப தமிழகத்தை தனி வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என 2007லிருந்தே தமிழக உழவர் முன்னணி கோரிவருகிறது.
எனவே, தமிழக அரசு தமிழ்நாட்டு உழவர்களுக்கு தமிழ்நாட்டுச் சந்தையை முன்னுரிமையாக உறுதி செய்யும் வகையில் தமிழகத்தைத் தனி வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அதனைச் செயல்படுத்த வேளாண் மண்டல ஆணையம் நிறுவப்படவேண்டும். தமிழகத்தின் தேவைக்கு தமிழ்நாட்டு உழவர்களிடம் வேளாண் விளைப் பொருட்களை கொள்முதல் செய்தது போல கூடுதல் தேவைக்குத்தான் வெளிமாநில நெல்லையோ, பிற வேளாண் விளை பொருளையோ தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசை இப்பேராளர் மாநாடு வலியுறுத்துகிறது.
அதே போல் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய வோளாண் ஆணையம் அறிவித்தவாறு அனைத்து வேளாண் விளை பொருள்களுக்கும், அதன் சாகுபடி செலவுக்கு மேல் குறைந்தது 50 விழுக்காடு கூடுதல் தொகை சோ;த்து அதனைக் குறைந்தபட்ச கொள்முதல் விலையாக அறிவிக்க வேண்டும்.
இது அவ்வேளாண் விளைபொருள்களுக்கான அடிப்படை விலையாக அமைய வேண்டும். நெல்லிலிருந்து கிடைக்கும் தவிடு, கரும்பிலிருந்து கிடைக்கும் பாகு, சாராயம், உரம் போன்று அனைத்து வேளாண் விளை பொருள்களிலிருந்தும் கிடைக்கும் தொழிற்சாலை அடிப்படைப் பொருள்களுக்கும் உழவர்களுக்கு விலை கிடைக்கும் வகையில் ஒவ்வொரு பயிருக்கும் மதிப்புக்கூட்டு விலை கூடுதலாக வழங்கப்படவேண்டும். அறிவியல் வழிப்பட்ட இவ்விலைக் கொள்கையை தமிழக அரசு வரும் நிதி ஆண்டிலிருந்தே கடை பிடிக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
8. தண்ணீரைத் தனியார் மயமாக்காதே!
பாலாறு, தாமிரபரணி, பவானி உள்ளிட்ட ஆறுகளின் நீரும், ஊற்று நீரும் எற்கெனவே தொழிற்சாலைகளுக்கும், தண்ணீர் வணிகர்களுக்கும் வாரி வழங்கப்படுகிறது. உழவர்கள் சாகுபடிக்குத் தண்ணீர் இன்றி தவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்திய அரசு அறிவித்துள்ள தேசிய நீர்க்கொள்கை ஒட்டுமொத்தமாக ஆற்று நீரையும், ஊற்று நீரையும் தனியாருக்கு வழங்குவதாக உள்ளது.
இயற்கை நீதியின் படி தண்ணீரானது மனித சமூகத்தின் பொதுச்சொத்து. அரசுகள் அதற்கு காப்பாளா;கள் அவ்வவே. இயற்கை வழங்கும் இந்நீரை மனிதர்கள் பிற உயிரினங்களுக்கும் வழங்கி உயிர்ம நேயம் காக்க வேண்டியது கடமையாகும்.
தண்ணீரைத் தனியார் மயமாக்கும் இந்திய அரசின் முயற்சி இந்த இயற்கை நீதிக்கு எதிரானதாகும்.
எனவே, தண்ணீரைத் தனியார் மயமாக்கும் தேசிய தேசிய நீர்க்கொள்கையை கைவிடுவதுடன் தண்ணீரைத் தனியார் மயமாக்கும் அனைத்து திட்டங்களையும் நிறுத்த வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
9. மரபீனிப் பயிர்களுக்கு இசைவு வழங்காதே.
உச்ச நீதிமன்றத் தடையை மீறி, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முடிவை மீறி உலக அறிவியலார்களின் ஆய்வு முடிவுகளுக்கு புறம்பாக மரபீனி மாற்ற விதைகளை நெல், கத்தரி, சோளம், கடுகு, பருத்தி உள்ளிட்ட பல பயிர்களுக்கு இந்திய அரசு கள ஆய்வு அனுமதி வழங்கி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
மரபீனி மாற்ற விதைகளை அனுமதிப்பாதாவது உழவர்களின் விதை சுதந்திரத்தை மட்டுமின்றி, உய்த்துணர முடியாத அளவுக்கு தலைமுறை, தலைமுறையாக சுற்றுச் சூழலைக் கெடுத்து நாட்டையும், நாட்டு மக்களையும் ஒட்டுமொத்தமாக கம்பெனிகளின் ஆட்சிக்கு உட்படுத்துவது ஆகும்.
எனவே இந்திய அரசு மரபீனி மாற்ற விதைகளுக்கு வழங்கியுள்ள கள ஆய்வு அனுமதியைத் திரும்பப் பெற்று அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவும். உச்ச நீதிமன்றமும் கூறியுள்ள தடையை மதித்து நடக்குமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது.
10. தென்பெண்னை கிளை வாய்க்கால் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்து.
தென்பெண்ணை ஆற்றிலிருந்து கிளை வாய்க்கால் வெட்டும் திட்டம் தமிழக உழவர் முன்னணியின் தொடர் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் இதற்கான பணிகள் ஆமை வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. காலம் கடத்தப்பட்டால் கிளை வாய்க்கால் திட்டத்திற்கான திட்ட செலவு கூடிவிடும் ஆபத்து உள்ளது.
எனவே தமிழக அரசு தென்பெண்ணை கிளை வாய்க்க்hல் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற இந்த நிதி ஆண்டிலேயே நிதி ஒதுக்கீடு செய்யுமாறு இப்பேராளர் மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
மாநாட்டில், திரளான உழவர்களும், உணர்வாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Leave a Comment