அன்று கண்ணகி சிலையை அப்புறப்படுத்தினார்கள் இன்று அதே சிலையின் காலடியில் மலர் வணக்கம்
அன்று கண்ணகி சிலையை அப்புறப்படுத்தினார்கள் இன்று அதே சிலையின் காலடியில் மலர் வணக்கம்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் திறனாய்வு
சித்திரை முழுநிலவு நாள் கண்ணகிக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள். சென்னை கடற்கரையில் உள்ள கண்ணகி சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் சித்திரை முழுநிலவு நாளையொட்டி 03.05.2015 ஞாயிற்றுக் கிழமை மாலை அணிவித்து வணங்கி இருக்கிறார்கள். இது பற்றிய செய்தி படத்துடன் ஏடுகளில் வந்துள்ளது அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் வளர்மதி, கோகுலஇந்திரா, தி.தி.இரமணா, டி.கே.எம்.சின்னையா, கே.டி. இராஜேந்திரபாலாஜி, எஸ்.அப்துல்ரகிம் மற்றும் சென்னை மேயர் சைதை. துரைசாமி உள்ளிட்டோர் கண்ணகி சிலையின் காலடியில் மலர் தூவி வணக்கம் செலுத்தும் காட்சி படமாக வந்துள்ளது.
தமிழர் வரலாற்றுச் சிறப்பின் அடையாளமாகவும், அறச்சீற்றத்தின் வடிவமாகவும் விளங்குகின்ற கண்ணகியின் இதே சிலையை 2001 டிசம்பரில் அன்றைய முதலமைச்சர் செயலலிதா ஆணையின் பெயரில் எந்திரங்கள் வைத்து பெயர்த்தெடுத்து எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஒரு மூளையில் தூக்கி போட்டுவிட்டார்கள். தலைமை செயலகம் வரும் போதெல்லாம் முதலமைச்சர் செயலலிதாவின் கண்ணில் ஒர் அபசகுணமாக, அருவருக்கத்தக்க சிலையாக கண்ணகி சிலை நின்றது என்றும் எனவே அதை அப்புறப்படுத்த ஆணையிட்டார் என்றும் அப்போது கருத்துக்கள் பேசப்பட்டன. தமிழர் பெருமிதங்களில் ஒன்றாக விளங்கிய கண்ணகி சிலையை அப்புறப்படுத்தியதை அறிந்து தமிழகம் முழுவதும் தமிழ் மக்கள் கொந்தளித்தார்கள் தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அப்போது த.தே.பொ.க.) செயலலிதா அரசின் தமிழின வெறுப்பு நடவடிக்கை இது என்று வண்மையாக கண்டித்து அதே இடத்தில் மீண்டும் கண்ணகி சிலை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி போர்குழல் எழுப்பியது.
தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் கூட்டாக மீண்டும் அதே இடத்தில் கண்ணகி சிலை வைக்க போராட்டம் நடத்தின. சிறு வடிவில் கண்ணகி சிலை ஒன்று செய்து அதை அதே இடத்தில் நிறுவும் போராட்டத்தை நடத்தின. அப்போராட்டதின் தலைமை பொறுப்பை நான் ஏற்றிருந்தேன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்களை அம்பத்தூர் காவல் நிலையத்தினர் முன்கூட்டியே கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விட்டனர். இரு இயக்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் இப்போரட்டத்தில் கைதானோம். அதன் பிறகு பூம்புகாரில் இருந்து மதுரை வரை கண்ணகி சிலையை அதே இடத்தில் வைப்பதற்கான பரப்புரை ஊர்தி பயணம் நடத்தினோம்.
திராவிட முன்னேற்றக் கழகம் கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கான கோரிக்கையை வலியுறுத்தி பெருந்திரள் இயக்கம் நடத்தியது.
யாருடைய கோரிக்கையையும் ஏற்காத முதலமைச்சர் செயலலிதா கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க மறுத்துவிட்டார். 2006 தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவினார். இத்தனை ஆண்டுகளாக இல்லாத வழக்கமாக இப்பொது அ.இ.அ.தி.மு.க.வினர் கண்ணகி சிலை காலடியில் மலர் தூவி வணங்குவது முரண்பட்ட செயலாக உள்ளது. கர்நாடக நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் செயலலிதாவுக்கு தண்டனை அளித்த பிறகு அதிலிருந்து விடுதலையாக கோயில் கோயிலாக பூசை நடத்துவது, பால் குடம் தூக்குவது, மொட்டை அடித்துக்கொள்வது போன்ற பல்வேறு வேண்டுதல்களை செய்து வருகிறார்கள் கடைசியாக கண்ணகியிடம் கருணை கேட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. மக்களை ஏமாற்றுவதில் மட்டுமின்றி கடவுள்களை ஏமாற்றுவதிலும் அ.இ.அ.தி.மு.க.வினர் வல்லவர்கள் என்பதை ஊரறியும் ; உலகறியும்.
அன்று கண்ணகி சிலையை அப்புறப்படுதியவர்கள் இன்று கண்ணகியின் காலடியை வணங்கியுள்ளனர்.
ஒன்று மட்டும் உறுதி , இறுதியில் தமிழே வெல்லும்!
வீரமணி விளக்குவாரா?
திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கண்ணகி சிலையை செயலலிதா அப்புறப்படுத்தியபோது மகிழ்ச்சி தெரிவித்து அச்செயலை அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்டு வரவேற்றார். ஊர் தோரும் கூட்டங்கள் நடத்தி, கண்ணகி சிலையை அப்புறப்படுத்தியது சரியே என்று வாதிட்டார். 2006ல் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கண்ணகி சிலையை மீண்டும் நிறுவிய போது வீரமணிக்கு வெட்க்கம் வந்ததா தெரியவில்லை. இப்போது கண்ணகி சிலையின் காலடியில் அ.இ.அ.தி.மு.க.வினர் மண்டியிடும் போது வீரமணிக்கு வெட்கம் வந்ததா தெரியவில்லை. இவற்றை எல்லாம் விளக்கி பெரியாரிய பகுத்தறிவு வழியில் வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டால் அவருடைய நிலைபற்றி அறிய உதவியாக இருக்கும்.
Leave a Comment