ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

33 கலைப்பொருள் விற்பனைக் கடைகளை தஞ்சை மாவட்ட நிர்வாகம் தகர்த்து அப்புறப்படுத்தியது வன்செயலாகும் - பெ. மணியரசன் அறிக்கை.

தஞ்சைப் பெரியகோயில் வாயில் எதிரே இருந்த 33 கலைப்பொருள் விற்பனைக் கடைகளை தஞ்சை மாவட்ட நிர்வாகம் தகர்த்து அப்புறப்படுத்தியது வன்செயலாகும். தமிழக அரசு தலையிடக்  கோரிக்கை.
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை.
      தஞ்சைப் பெரிய கோயில் முன்வாசலுக்கு எதிரே சாலையோரத்தில் 40 ஆண்டுகளாகச் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உள்ளிட்ட கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் 33 கடைகள் செயல்பட்டு வந்தன.  அண்மையில் ஆளுங்கட்சியினரின் தலையீடு காரணமாக அரசு அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு அந்த 33 கடைகளையும் மாவட்ட நிர்வாகம் இடித்து அப்புறப்படுத்தியது.  கடந்த 11.6.2015 அன்று, 33 வணிகர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்து கடைகளை அப்புறப்படுத்தாமல் இருக்க இடைக்காலத் தடை வாங்கினர்.  

      உயர்நீதிமன்றத்தின் இந்த ஆணையை வைத்துக் கொண்டு 33 வணிகர்களும் 12.6.2015 அன்று மீண்டும் அதே இடத்தில் கடைகளை அமைத்து வணிகத்தைத் தொடர்ந்தனர்.  13.6.2015 நள்ளிரவில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் காவல்துறையை வைத்து அனைத்துக் கடைகளையும் இடித்துத் தகர்த்தி அள்ளிக் கொண்டு போய்விட்டது.  தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் இச் செயல் உயர் நீதிமன்ற ஆணைக்கு எதிரானது; நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்கு உரியது. 33 கடைகளை இடித்து அப்புறப்படுத்திய தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் வன்செயலை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

      40 ஆண்டுகளாகத் தாங்கள் வாழ்க்கையை நடத்துவதற்குரிய வருமானத்தை இந்தக் கடைகள் வழியே பெற்று வந்த 33 குடும்பங்களும் இரண்டு மாதங்களுக்கு மேலாகப் பிழைப்பின்றி தெருவில் நிற்கின்றன.  தஞ்சை நகரத்திலுள்ள ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் இந்த 33 கடைகள் உள்ள இடத்தில் மேலும் 17 கடைகளைக் கொண்டு வந்து நிறுவுவதற்கு சட்டவிரோத வழிகளில் முயன்றதை ஏற்கெனவே கடை வைத்திருப்போர் எதிர்த்ததால் அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக அரசு அதிகாரத்தை ஆளும் கட்சியின் மூலம் தவறாகப் பயன்படுத்தி இந்த மக்கள் விரோதச் செயலில் ஈடுபட்டுள்ளார்கள். 


      இந்த அநீதி பற்றித் தமிழக ஆட்சியாளர்களும் உயர் அதிகாரிகளும் விசாரித்து அறிந்து மீண்டும் அந்த 33 குடும்பங்கள் வாழ்வதற்குரிய வகையில் அந்தக் கடைகளை அங்கே நிறுவிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.