மேகி நூடுல்ஸ்க்குத் தடை அஜின மோட்டோக்கு அனுமதி தமிழக அரசின் இரட்டை வேடம்!மேகி நூடுல்ஸ்க்குத் தடை அஜின மோட்டோக்கு அனுமதி தமிழக அரசின் இரட்டை வேடம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!

ஒரு பக்கம் தடை இன்னொரு பக்கம் ஆபத்தான பொருள் உற்பத்திக்கு அனுமதி என மேகி நூடுல்ஸ் தொடர்பாக தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது.

உத்திரபிரதேசம், ஜார்கண்ட், தில்லி என பல்வேறு மாநில அரசுகளும், இந்தியாவின் படைத்துறையும் தடை செய்த பிறகு கடைசியில் தமிழக அரசும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. இத்தடைக்கான காரணம் மேகி நூடுல்சில் அளவுக்கு அதிகமாக ஈயமும், மோனோ சோடியம் குளூடானேட் என்ற அமினோ அமில உப்பும் இருந்ததுதான்.

இந்த மோனோ சோடியம் குளூடானேட் இயற்கையில் உருளைக் கிழங்கிலும் சில கடல் உணவுகளிலும் இருக்கின்றது. ஆனால் மோனோ சோடியம் குளூடானேட்டை செயற்கையாகத் தயாரிக்கும் போது அதனுடைய வேதிக் கட்டமைப்பு மாறிவிடுவதால் அது ஆபத்தான பொருளாகிறது. எப்போதோ மிகச்சிறிய அளவில் இதனை உட்கொண்டால் பெரிய தீங்கு ஏற்படுவதில்லை. மனித உடலே அதனை சரி செய்து கொள்கிறது. ஆனால் தொடர்ந்து உண்ணுகிற போதும், அளவுக் கூடுதலாக உண்ணுகிற போதும் இதயத் துடிப்பு அதிகரிப்பு, முக இறுக்கம், தலைவலி, செரிமானக் கோளாறு போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. சிலருக்குக் கண்பார்வை போய்விடுகிறது மேகி நூடுல்சில் மோனோ சோடியம் குளூடானேட் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி இருந்ததால்தான் தடைசெய்யப்பட்டது.

ஆனால் இதே மோனோ சோடியம் குளூடானேட் ஒரு சப்பானிய நிறுவனத்தால் அஜின மோட்டோ என்ற வணிக முத்திரைப் பெயரால் தயாரித்து விற்கப்படுகிறது. மோனோ சோடியம் குளூடானேட் இருக்கிறது என்பதால் 2015 சூன் 4 ஆம் நாள் மேகி நூடுல்ஸ்க்கு தடை விதித்த தமிழக அரசு அடுத்த நாள் சூன் 5 அன்று சென்னை, பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்து வரும் ஒன் ஹப் என்ற தொழிலக வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் அஜின மோட்டோ தொழிற்சாலை நிறுவ நிலம் வழங்கி, அனுமதியும் வழங்கியுள்ளது.

செயலலிதா அரசின் மக்கள் பகை இரட்டை வேடம் இது.

பெப்சி, கொக்கோ கோலா, கெண்ட்டகி சிக்கன் உள்ளிட்ட பல உணவு பொருள்களில் தடை செய்யப்பட்ட வேதிப் பொருள்கள் கலக்கப்படுவது தொடந்து வெளிப்படுத்தப்பட்டாலும் அவை எந்தத் தடையுமின்றி தங்கள் வணிகத்தைத் தொடர்கின்றன.

ஆட்டுக்கறி சுவையை செயற்கையாகத் தந்து கால ஓட்டத்தில் கூடுதலாக உணவு உண்ணும் வேட்கையை அதிகப்படுத்துவதால் பல உணவகங்கள் தொடக்கத்தில் அஜின மோட்டோ என்ற பெயரில் விற்கப்படும் மோனோ சோடியம் குளூடானேட்டை அதிகம் பயன்படுத்தின. ஆனால் சில காலங்களிலேயே மக்கள் அதன் தீய விளைவுகளை உணரத் தொடங்கியதால் இப்போதெல்லாம் பல பெரிய உணவகங்களில் ”எங்கள் தயாரிப்புகளில் அஜின மோட்டோ சேர்க்கப்படுவதில்லை” எனக் கொட்டை எழுத்துகளில் விளம்பரம் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயினும் அரசாங்கம் இதற்குத் தடையேதும் விதிக்கவில்லை.

பெருத்த ஆரவாரத்தோடு இந்திய அரசு 2006ல் பிறப்பித்து 2011 ஆகஸ்ட்டில் செயலுக்கு கொண்டுவந்த உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம் உடலுக்கு கேடு விளைவிக்கும் இப்பெருநிறுவனத் தயாரிப்புகளைத் தடை செய்யவில்லை.

ஏனெனில் இச்சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI) பெரு நிறுவனங்களைப் பாதுகாத்து, சிறு உணவகங்களையும், மரபான உணவுப் பொருள் தயாரிப்பாளர்களையும் சந்தையிலிருந்து விரட்டும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையத்தின் உள் அமைப்புகளான ஆய்வுக் குழுக்களில் கோக், பெப்சி, ஐடிசி, கார்கில் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளே இடம் பெற்றுள்ளன.

இன்னும் கூறுவதானால் இச்சட்டத்தை உருவாக்கியதே இந்திய உணவுத் தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் பெரு நிறுவனங்களின் சங்கமான இந்திய உணவு வணிகம் மற்றும் உணவுத் தொழில் கூட்டமைப்புதான் (காண்க: இக் கூட்டமைப்புத் தலைவர் சமீர்பர்தே பேட்டி – Food And Bevarages News, நவம்பர் 17, 2007 இதழ்).

மேகி நூடுல்ஸ் தடை என்பது ஏதோ தற்செயலாக ஊடகங்களில் பெரிதாகப் பேசப் பட்டதால் வந்துள்ள தடையே தவிர அரசாங்கத்தின் கொள்கை நடைமுறை மக்கள் நலப் பாதுகாப்புக்கானதாக இல்லை.

மேகி நூடுல்ஸ் மட்டும் இன்றி குழந்தைகள் அதிகம் பயன்படுத்தும் சாக்லேட், கெண்டகி சிக்கன் உள்ளிட்ட அனைத்து உணவு பொருள்களையும் தற்சார்பான ஆய்வுக் கூடங்களில் ஆய்வு செய்து அவற்றின் மீது இந்திய தமிழக அரசுகள் தடை விதிக்க வேண்டும் என்றும்,

தமிழக அரசு அஜின மோட்டோ நிறுவனத்திற்கு வழங்கியுள்ள இசைவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இப் பொருள்கள் விளம்பரங்களைப் பெரிதும் சார்ந்து தான் விற்கபடுகின்றன மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் பங்கேற்ற அமிதாப் பச்சன் போன்ற பிறபலங்கள் தாங்கள் அப்பாவிகள் எனக் கூறித் தப்பித்துவிட முடியாது. அவர்கள் புகழ் பெற்றவர்கள், குறிப்பாக குழந்தைகளுக்கும் இல்லத்தரசிக்கும் அதிகம் அறிமுகமானவர்கள் என்பதால் தான் மேகி நூடுல் போன்ற நிறுவனங்கள் இவர்களை விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. இவர்களது வாய் அசைப்பில் “மேகி நூடுல்ஸ் உடல் நலத்திற்கு இசைவான உணவு” என்று சொல்லப்படுவதால் தான் மக்கள் அதை நம்பி அதிகம் வாங்குகின்றனர் எனவே இவ் உணவு பொருள்கள் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு கேடு விளைவிப்பதில் இப் பிரபலங்களுக்கு பங்கு உண்டு.

காசுக்கோ புகழுக்கோ ஆசைப்பட்டு குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும், மக்களுக்கு கேடு விளைவிக்கும் விளம்பரங்களில் புகழ் வாய்ந்த திரைப்பட நடிகர்களும், விளையாட்டு வீர்ர்களும் தோன்றாமல் இருப்பது தான் அவர்களின் சமூகப் பொறுப்பாகும்.

மக்களும் விளம்பரத்தைக் கண்டு மயங்காமல் தங்கள் உடல் நலத்திற்கும், இயற்கை வளத்திற்கும் எது ஏற்புடையது என அறிந்து பொருள்களை வாங்க வேண்டும். இந்த மண்ணின் விளைவான தின்பண்டங்களையே பெரிதும் பயன்படுத்தும் பண்பாட்டில் ஒழுக வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

Related

மேகி நூடுல்ஸ் 6020197326838338301

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item