ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னைத் தலைமைச் செயலக மறியல் 150க்கு மேற்பட்டோர் கைது!அரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்துநடைபெற்ற...  சென்னைத் தலைமைச் செயலக மறியல் போரில்..
ஐயா. பழ. நெடுமாறன், தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கைது! 
அரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு கல்வி - வேலை வாய்ப்பில் 80% இட ஒதுக்கீடு வழங்கவும் வலியுறுத்தி, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் இன்று(17.08.2015) முதல் ஆகத்து 19 வரை சென்னைத் தலைமைச் செயலகம் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து பேரணியாகத் தலைமைச் செயலகம் நோக்கி செல்ல முயன்ற பல்வேறு அமைப்புளைச் சேர்ந்த 160 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தைத் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் ஒருங்கிணைத்தார்.
தமிழர் தேசிய முன்னணித் தலைவர் அய்யா பழ. நெடுமாறன், பேரணியைத் தொடக்கி வைத்தார். தமிழகத் தமிழாசிரியர் கழக மேனாள் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார், இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், தந்தை பெரியார் தி.க. திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் நாகராசன் உள்ளிட்டோர் இதில் கைதாகினர்.
"தமிழக அரசே தமிழக அரசே! தமிழ்வழிக் கல்வியை அழிக்காதே! ஆங்கிலத்தைத் திணிக்காதே!", "தமிழ்வழியில் படித்தோருக்கு 80% வேலை வாய்ப்பு கொடு!" என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்களை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை எழுப்ப, ஆண்கள் - பெண்கள் - குழந்தைகள் அனைவரும் முழக்கங்களை எதிரொலித்துக் கொண்டு பேரணியாகச் சென்றனர்.
பேரணியாகச் சென்றவர்களை, காவல்துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்துத் தடுத்து நிறுத்தினர். அதன்பின், அனைவரையும் கைது செய்வதாக அறிவித்து, காவல்துறை வாகனங்களில் ஏற்றினர். சற்றொப்ப 160 தோழர்கள் இதில் கைது செய்யப்பட்டு, இராயப்பேட்டையிலுள்ள சமூக நலக்கூடத்தில் அடைக்கப்பட்டனர்.
தமிழர் தேசிய முன்னணி சார்பில், அதன் முன்னணி செயல்பாட்டாளர்கள் இயக்குநர் வ. கவுதமன், செ.ப. முத்தமிழ்மணி, இலாரன்சு, ஆவல் கணேசன், விழுப்புரம் தமிழ்வேங்கை, பா. இறையெழிலன் உள்ளிட்ட திரளான த.தே.மு. தோழர்கள் இதில் கைதாகினர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ. இராசேந்திரன், தோழர் நா. வைகறை, தோழர் பெண்ணாடம் க. முருகன், க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல். ஆறுமுகம், தீந்தமிழன், திருச்சி கவித்துவன், கீரனூர் ஆரோக்கியசாமி, புதுக்கோட்டை த. மணிகண்டன், ஆ. தேவதாசு, ஆ. குபேரன், வி. கோவேந்தன், இரா. இளங்குமரன், மகளிர் ஆயம் தோழர்கள் தஞ்சை ம. இலட்சுமி, மதுரை மேரி உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் கைதாகினர்.
போராட்டம், நாளையும், நாளை மறுநாளும் இதே போல் தொடர்ந்து நடைபெறுகின்றது. நாளை நடைபெறும் போராட்டத்தில் தமிழ்த் தேச மக்கள் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், குமுக விடுதலைத் தொழிலாளர்கள் ஆகிய அமைப்புகளும், நாளை மறுநாள் நடைபெறும் போராட்டத்தில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை, தமிழர் விடுதலைக் கழகம் ஆகிய அமைப்புகளும் பங்கெடுக்கின்றன.
தமிழக அரசே! அரசுபள்ளிகளில் ஆங்கிலத்தைத் திணிக்காதே! அன்னைத் தமிழை ஏதிலியாக்காதே!No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.