அரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னைத் தலைமைச் செயலக மறியல் !
அரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து நடைபெற்ற... சென்னையில் இரண்டாம் நாளாக நடைபெற்ற தலைமைச் செயலக மறியல் போராட்டம்!
பள்ளிக் கல்வியில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு கல்வி - வேலை வாய்ப்பில் 80% இட ஒதுக்கீடு வழங்கவும் வலியுறுத்தி, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் ஆகத்து 17 முதல் ஆகத்து 19 வரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு, சென்னைத் தலைமைச் செயலகம் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று(17.08.2015) நடைபெற்ற, போராட்டத்தில், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் அய்யா பழ. நெடுமாறன், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இரண்டாம் நாள் போராட்டமான இன்று(18.08.2015) , சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து, பேரணியாகப் புறப்பட்ட,தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் தியாகு, தமிழர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி, குமுக விடுதலைத் தொழிலாளர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் மா. சேகர், தமிழர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், தோழர்களும் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார். அதன்பின், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், த.தே.வி.இ. பொதுச் செயலாளர் தோழர் வே. பாரதி ஆகியோர் போராட்ட முழக்கங்களை எழுப்ப, தோழர்கள் அனைவரும் பேரணியாகச் சென்றனர்.
பேரணியை வழிமறித்த காவல்துறையினர், அனைவரையும் தற்போது கைது செய்து, இராயப்பேட்டையிலுள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்தனர்.
தமிழ்த் தேச மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் தோழர் செந்தமிழ்குமரன், தலைமை நிலையச் செயலாளர் தோழர் தமிழ்மகன், வடசென்னை மாவட்டச் செயலாளர் தோழர் புரட்சிநம்பி, பெரம்பூர் பகுதிச் செயலாளர் தோழர் குணவழகன், திருவள்ளூர் மாவட்ட பொருப்பாளர் தோழர் ஏழுமலை தமிழன் உள்ளிட்டோரும், ம.தி.மு.க. சார்பில், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் திரு. ரெட்சன் அம்பிகாபதி உள்ளிட்ட தோழர்களும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ. இராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் க. பாண்டியன், மு. தமிழ்மணி உள்ளிட்டோரும் இதில் கைதாகினர்.
போராட்டம் தொடர்ந்து நாளையும் நடைபெறுகின்றது. நாளைய போராட்டத்தில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, மே பதினேழு இயக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் விடுதலை உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொள்கின்றன.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment