ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழீழ இனப்படுகொலையாளிகளைப் பாதுகாக்கும் அமெரிக்க அரசைக் கண்டித்து, அமெரிக்கத் தூதரக முற்றுகைப் போராட்டம்!


தமிழீழத்தில் இலட்சக்கணக்கானத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இனப்படுகொலையாளிகளைப் பாதுகாக்கும் வகையில், சிங்கள அரசே உள்நாட்டுக்குள் விசாரணை நடத்திக் கொள்ளட்டும் எனக் கருத்துக்கூறி செயல்பட்டு வரும், வட அமெரிக்க ஏகாதிபத்திய அரசைக் கண்டித்து, சென்னையில், அமெரிக்கத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டரங்கத்திலிருந்து புறப்பட்டு, இன்று (11.09.2015) காலை பேரணியாகப் புறப்பட்ட உணர்வாளர்கள் 60க்கும் மேற்பட்டோர், தமிழக்க காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும், இன உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, பேரணியைத் தொடக்கி வைத்துப் பேசினார். “அமெரிக்க அரசே! இனப்படுகொலையாளிகளுக்குத் துணை புரியாதே!”, “அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிப்போம்”, “இந்திய - அமெரிக்க - இங்கிலாந்து சதிச்செயல்களை முறியடிப்போம்” என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்களோடு, கைகளில் கோரிக்கைத் தட்டிகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்ற தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, அமெரிக்கத் தயாரிப்புகளான கோக், பெப்சி குளிர்பானங்கள் உடைத்து நொறுக்கப்பட்டும், அமெரிக்க ஏகாதிபத்தியக் கொடியை எரித்தும், தோழர்கள் ஆவேச முழக்கமிட்டனர்.

போராட்டத்தில், தமிழக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பொழிலன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர் தோழர் அரங்க குணசேகரன், தமிழர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் சுந்தரமூர்த்தி, தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் தோழர் கி.வே. பொன்னையன், தமிழர் விடியல் கட்சி பொறுப்பாளர் தோழர் பாபு, தமிழ்த் தேசக் குடியரசு இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் சிவகாளிதாசன், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் இதில் கலந்து கொண்டு கைதாகியுள்ளனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர்கள் பிரபாகரன், இரமேசு, சத்யா உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகியுள்ளனர்.

அமெரிக்க ஏகாதிபத்திய அரசே! தமிழீழ விடுதலையை அழிக்கும் சதிச்செயலில் ஈடுபடாதே!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.