ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இலங்கையில் கலப்பு நீதிமன்ற விசாரணை நீதி மறுப்பே பன்னாட்டுப்புலன் சாரணையை மறுக்கும் அமெரிக்க, இந்திய சதியை முறியடிப்போம். - தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை


இலங்கையில் கலப்பு நீதிமன்ற விசாரணை நீதி மறுப்பே பன்னாட்டுப்புலன் சாரணையை மறுக்கும் அமெரிக்க, இந்திய சதியை முறியடிப்போம்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ நா மனித உரிமை ஆணையரின் பரிந்துரை மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. 


அமெரிக்கா - இந்தியா - இலங்கை கூட்டுச்சதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தில் இந்த பரிந்துரையின் வாயிலாக அரங்கேறுகிறதோ என ஐயப்பட அடிப்படைகள் உள்ளன.

ஐ.நா மனித உரிமை மன்றத்தில் கடந்த 16.9.2015 அன்று மனித உரிமை ஆணையர் சையீத் ராத் அல் உசேன் முன்வைத்த 268 பக்க அறிக்கை கடந்த 2002 தொடங்கி 2011 முடிய இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தேறிய மனித உரிமை மீறல்களையும், நடைபெற்ற போர்க்குற்றங்களையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் பட்டியலிடுகிறது.

சிறார்களை படையில் சேர்த்தது, துரோகிகள் என வரையறுக்கப்பட்ட சிலரைக் கொன்றது மற்றும் தண்டித்தது ஆகிய குற்றச்சாட்டுகளை விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது இந்த அறிக்கை முன்வைத்த போதும் விடுதலைப்புலிகள் பெண்களின் கண்ணியத்திற்கு பாதுகாவலர்களாக இருந்ததை உறுதிப்படுத்துகிறது.


முதன்மையாக இலங்கை அரசையும், இலங்பை படையினரையும் தான் மனித உரிமை ஆணையரின் அறிக்கை குற்றம் சாட்டுகிறது. நடந்தது அப்பட்டமான இனப்படுகொலைதான் என்பதற்கு உரிய முதன்மை ஆதாரங்களை இவ்வறிக்கை வெளிப்படுத்திய போதிலும், அங்கு நடைபெற்றது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என சொல்லத்தக்க போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்று மட்டுமே வரையறுக்கிறது.

சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், பாலியல் வன்முறைகள், சித்தரவதைகள், திட்டமிட்டு ஆட்கள் காணாமல் அடிக்கப்படுதல் பொதுமக்கள் மீதான குண்டுவீச்சுகள் உள்நாட்டு புலம்பெயர்ந்தோர் மீது நடத்தப்பட்ட பரவலான மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை அதற்குரிய ஆதாரங்களோடு இந்த அறிக்கை பட்டியலிடுகிறது. ஆனால் பரிந்துரையோ இவ்வுண்மைகளுக்கு பொருந்தாததாக உள்ளது.

இலங்கையின் உள்நாட்டு நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டமைப்புகளும், அங்கு நிலவும் பண்பாட்டுக் கட்டமைப்புகளும் சிங்கள – புத்தவாதத்திற்கு முற்றிலும் ஆள்பட்டிருப்பதை ஆய்ந்து ஏற்றுக்கொள்ளும் ஆணையரின் அறிக்கை இறுதியில் முன்வைக்கும் பரிந்துரை இந்த அறிக்கையில் கண்டுள்ள முடிவுகளுக்கு எதிரானதாக உள்ளது. 

இலங்கையின் சிறப்பு நீதிமன்றமே நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைமீறல்கள் குறித்து விசாரித்து தண்டனை வழங்கட்டும் என பரிந்துரைக்கிறது. இந்த சிறப்பு நீதிமன்றம் இலங்கை அரசமைப்பின் வரம்புக்குட்பட்டு பன்னாட்டு நீதிபதிகளையும், வழக்குரைஞர்களையும், புலனாய்வாளர்களையும் இணைத்துக் கொண்டதாக இருக்கவேண்டும் என இப்பரிந்துரை கூறுகிறது. இலங்கையின் நீதித்துறை சுதந்திரம் மீட்கப்பட பல பத்தாண்டுகள் ஆகக்கூடும் என ஏற்றுக்கொள்கிறதே ஆணையம் அதற்கு நேர்மாறாக இலங்கையின் உள்நாட்டு நீதிமன்றத்தை பரிந்துரைப்பது தன்முரண்பாடாக உள்ளது.


இதற்கு முன்னர் ஐ.நா மனித உரிமை ஆணையராக இருந்த நவீன்பிள்ளை தற்சார்பான பன்னாட்டு குற்றவியல் புலன்விசாரணை வேண்டும் என மீண்டும், மீண்டும் பரிந்துரை அளித்தார். அது ஏன் புறந்தள்ளப்பட்டது என்பதற்கான விளக்கம் ஏதும் அளிக்காமலலேயே பன்னாட்டு வல்லுனர்களை இணைத்துக்கொண்ட உள்நாட்டு நீதிமன்ற விசாரணை என்ற பரிந்துரையை மனித உரிமை ஆணையம் அளித்திருப்பது தற்செயலானதல்ல. அமெரிக்க – இந்திய - இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியின் விளைவாக மனித உரிமை மன்றத்தில் வரவுள்ள தீர்மானத்திற்கு இசைவானதாகவே திட்டமிட்ட முறையில் இப்பரிந்துரை வரையப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சியாளர் மாற்றத்தை பெரிய அடிப்படை முன்னேற்றம் போல இவ்வறிக்கை பாராட்டுவதற்கு ஓர் உள்நோக்கம் இருக்கிறது. இதே போல் இனமோதல் நடைபெற்ற சில நாடுகளில் போர் முடிந்தபிறகு அமைக்கப்பட்ட “குற்றங்களுக்கான தண்டனை, நல்லிணக்க முயற்சி, குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான பொறியமைவுகள் நிறுவுதல்”; என்பனவற்றை முன்னெடுத்துக்காட்டாகக் கொண்டு இந்த சிறப்பு நீதிமன்றமும், வேறு சில சீர்திருத்தங்களும் முன்மொழியப்படுவதாக இப்பரிந்துரை கூறுகிறது.

இப்பரிந்துரை முன்வைக்கப்படுவதற்கு முதல் நாளும், இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டபிறகும் ஐ.நா மனித உரிமை மன்றத்தில் உரையாற்றிய இலங்கை அரசின் பேராளர் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரசிங்கா தென்னாப்பிரிக்காவைப் போல இலங்கையிலும் நீதிவழங்குவதற்கும், நேர்ந்த குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கும் தங்களது அரசு உரிய சட்ட ஏற்பாடுகளை செய்யும் எனக்கூறியதும், ஆணையரின் பரிந்துரையும், ஒரே அலைவரிசையில் இருப்பதை உணரமுடியும்.

தென்னாப்பிரிக்கா, கொசோவா, சியாரா லியோன் போன்ற நாடுகளில் பன்னாட்டு வல்லுநர்களை இணைத்துக்கொண்ட உள்நாட்டு நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிவழங்கியதை இலங்கை சூழலுக்கு பொறுத்த முடியாது. காரணம், இந்நாடுகளில் இனப்போராட்டங்களின் முடிவில் முற்றிலும் புதிய இன அரசு நிறுவப்பட்டபிறகு அவற்றின் கீழ் விசாரணை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இலங்கையில் நடந்திருப்பது ஆட்சியாளர் மாற்றமே தவிர அடிப்படையான இனக்கட்டமைப்பு மாற்றம் இல்லை. அதே ஒற்றை ஆட்சி, சிங்கள பேரினவாதம் ஆடாமல் அசையாமல் இருக்கிறது.
இராசபட்சே ஆட்சியின் இனக்கொள்கையில் சிறிசேனா அரசுக்கு எந்த அடிப்படை கொள்கை மாற்றமும் இல்லை என்பதை இலங்கையின் குடியரசுத் தலைவர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேயும் மீண்டும், மீண்டும் உறுதிபடக் கூறிவருகிறார்கள். போர்க்காலத்தில் கருணாவையும், டக்ளசையும் பயன்படுத்திக்கொண்டது போல போர் முடிந்த இன்றைய கட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தரை இலங்கை அரசு பயன்படுத்துகின்றது. அதற்காக அவருக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் பதவி வழங்கியுள்ளது. இது எல்லாமே அமெரிக்க - இந்திய ஆலோசனையோடு சிங்கள அரசு செய்திருக்கும் காய் நகர்த்தலாகும்.
இந்த சூழலை தென்னாப்பிரிக்கா, கொசோவா போன்ற நாடுகளின் அசரசியல் சூழலோடு நேர்மையான யாரும் பொருத்திக் கூறமுடியாது.

ஆயினும், சிறிசேனாவும், ரணிலும் பதவியேற்ற பிறகு இலங்கையில் இனஇணக்கத்திற்கான சூழ்நிலை மலர்ந்து வருவதுபோல் ஆணையரின் அறிக்கை படம் காட்டுகிறது. மறுபுறம் அதே இலங்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண மன்றம் அம்மாகாண முதலமைச்சர் தலைமையில் கடந்த 1.9.2015 அன்று இலங்கையின் நீதித்துறையையும், மனித உரிமை நிறுவனங்களையும் நம்ப முடியாது என்றும் பன்னாட்டு புலன் விசாரணையே தேவை என்றும், இதற்கு ஐ.நா மனித உரிமை மன்றம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி ஒருமனதாக தீர்;மானம் நிறைவேற்றி இருப்பதை ஆணையரின் அறிக்கை கண்டுகொள்ளவே இல்லை.

இதற்கு மேல் இப்போது தமிழக சட்டமன்றம் பன்னாட்டு புலன்விசாரணை கோரி மீண்டும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அதே நேரம் கினிநொச்சி தொடங்கி யாழ்ப்பாணம் வரை தமிழீழ இளைஞர்கள் நடைப்பயணம் மேற்கொண்டு பன்னாட்டு விசாணை கோரி பல்லாயிரம் தமிழ் மக்களின் கையெழுத்தைப் பெற்று வடக்கு மாகாண முதலமைச்சரிடம் அளித்துள்ளனர். புலம் பெயர் தமிழர்களும் பல நாடுகளிலும் மாநாடு நடைபெறும் ஜெனிவாவிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு தற்சார்பான பன்னாட்டு புலன் விசாரணை கோருகின்றனர். 

இவ்வாறு பாதிகப்பட்ட ஒட்டுமொத்த தமிழினமும் முன்வைக்கும் கோரிக்கையை புறந்தள்ளிவிட்டு, இதற்கு முன்னர் இருந்த மனித உரிமை ஆணையரின் பரிந்துரையையும் புறந்தள்ளிவிட்டு இப்போதைய ஐ.நா மனித உரிமை ஆணையர் முன்வைத்துள்ள இப்பரிந்துரை தமிழினத்திற்கு நீதிவழங்க மறுக்கும் வல்லரசு சதித்திட்டத்தின் அறங்கேற்றமே ஆகும்.


இந்நிலையில், ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கையின் அழுதத்தை உணர்ந்து ஐ.நா மனித உரிமை மன்றம் தற்சார்பான பன்னாட்டு புலன்விசாரணைக்கான தீர்மானத்தை நடப்பு கூட்டத்தில் இயற்ற வேண்டும் எனறும்,

தமிழ்நாடு இந்தியாவின் பகுதிதான், தமிழர்கள் இந்தியாவின் சட்டப்படியான குடிமக்கள்தான் என்பதை ஏற்பதாக இருந்தால் இந்திய அரசு ஐ.நா மனித உரிமை மன்றக் கூட்டத்தில் பன்னாட்டு புலன்விசாரணைக்கான தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.