ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மதுரையில் “மொழிப்போர் – 50 மாநாடு”


“மொழிப்போர் – 50 மாநாடு” மதுரையில் நடத்துகிறது தமிழ்த் தேசியப் பேரியக்கம்!

பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்!

தஞ்சை மாவட்டம் – பூதலூர் வட்டம், ஆச்சாம்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இயற்கை வேளாண் தோட்டமான ”செம்மை வனத்தில்”, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், நேற்று (22.10.2015) காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் நடந்த பொதுக்குழுக்கூட்டத்தில், பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் வந்து கலந்து கொண்டனர்.

சென்னையிலிருந்து, க. அருணபாரதி, பழ.நல். ஆறுமுகம், மதுரையைச் சேர்ந்த அ. ஆனந்தன், இரெ. இராசு, தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ. பால்ராசு, தஞ்சையைச் சேர்ந்த பழ. இராசேந்திரன், நா.வைகறை, ஒசூர் கோ. மாரிமுத்து, பெண்ணாடம் க. முருகன், குடந்தை க. விடுதலைச்சுடர், பூதலூர் ஒன்றியச் செயலாளர் ஆ. தேவதாசு, திருச்சி மூ.த. கவித்துவன், தூத்துக்குடி மு. தமிழ்மணி, திருநெல்வேலி க. பாண்டியன், திருத்துறைப்பூண்டி ப. சிவவடிவேலு, ஈரோடு வெ. இளங்கோவன், சிதம்பரம் ஆ. குபேரன், மதுரை மேரி, தஞ்சை ம. இலட்சுமி உள்ளிட்ட முப்பத்தைந்து பேர் கலந்து கொண்டனர்.
இப்பொதுக்குழுக் கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. 1965 மொழிப்போர் 50ஆம் ஆண்டு நிறைவு மாநாடு

இந்திய வல்லாதிக்கத்தின் இந்தித் திணிப்பைத் தடுத்திடவும் தமிழ் மொழி காத்திடவும் 1965 சனவரி 25-இல் மாணவர்கள் தொடங்கிய மொழிப்போர், மாபெரும் மக்கள் எழுச்சியாக – தமிழ்த் தேசியக் கிளர்ச்சியாக 50 நாள் நடந்தது. இராணுவம் வரவழைக்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் தொடங்கி முந்நூறு பேர்க்கும் மேற்பட்டோர் அன்றையக் காங்கிரசு ஆட்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல்லாயிரகணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
1964 சனவரி 25-இல் இந்தித் திணிப்பை எதிர்த்திடவும் தமிழ்மொழி காத்திடவும் நெருப்புக்குத் தீனியாகத் தன் உடம்பைத் தந்து, முதல் தழல் ஈகியானார் கீழப்பழூர் சின்னச்சாமி! சின்னச்சாமி வழியைப் பின்பற்றி 1965 மொழிப் போரில் பலர் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்தனர்.

தமிழ்நாடு அரசு செயல்பட முடியாத அளவிற்குப் போராட்டம் வலுப்பெற்ற பின், 1965 சனவரி 26க்குப் பின் இந்தி மட்டுமே இந்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாகிடும் என்றிருந்த நிலையை மாற்றி, அதன் பிறகும் ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்கும் என்று அன்றையத் தலைமை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி வானொலி உரையில் உறுதியளித்தார். அதன்பிறகே இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் ஓய்வுக்கு வந்தது.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை இந்திய அரசு தீவிரப்படுத்தியது. இப்பொழுது இந்தி கல்வி மொழியாகவும், அலுவல்மொழியாகவும் தமிழ் நாட்டில் மிகப்பரவலாக அரங்கேற்றப்பட்டு வருகிறது. ஆங்கில ஆதிக்கமும் மேலோங்கி வருகிறது.

கல்வியிலும் மற்ற மற்ற துறைகளிலும் ஆங்கில, இந்தி ஆக்கிரமிப்புகள் அதிகரித்துத் தமிழை ஓரங்கட்டிவிட்டன. தமிழ்மொழி காத்திடச் செய்த ஈகங்கள், நடத்திய போராட்டங்கள் பயனற்று உள்ளன.

இந்நிலையில் 1965 மொழிப்போரின் 50ஆம் ஆண்டு நினைவுகள் – இந்தி, ஆங்கில ஆதிக்கத்தைப் புறந்தள்ளி தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசு அலுவலகங்களிலும், கல்வியிலும் தமிழே கல்விமொழியாகவும் அலுவல் மொழியாகவும் ஆகிட வேண்டுமென்ற போராட்டங்களுக்கு ஊக்கமளிக்கின்றன.

1938இல் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் 1965இல் நடந்த மாபெரும் மொழிப் போரிலும், உயிரீகம் செய்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தவும், கல்வி மொழியாக, ஆட்சி மொழியாக, நீதி மொழியாகத் தமிழை நிலைநாட்டிடத் திட்டங்கள் வகுக்கவும், 2016 சனவரி 24 – ஞாயிறு அன்று, மதுரையில் முழுநாள் மாநாடாக “மொழிப்போர் 50 மாநாடு” நடத்துவது என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு தீர்மானித்தது.

இந்தி - ஆங்கில ஆதிக்கம் வீழ்க!
எல்லாத்துறையிலும் தமிழே வெல்க!

2. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி சென்னையில் முதல்வர் செயலலிதா தலைமையில் ஒரு இலட்சம் பேர் கலந்து கொள்ளும் அனைத்தியக்கப் பேரணி நடத்த வேண்டும்!

காவிரித் தீர்ப்பாயம் 2007 பிப்ரவரி 5ஆம் நாள் இறுதித் தீர்ப்பு வழங்கிய பின்னும், உச்ச நீதிமன்றக் கட்டளைப்படி அத்தீர்ப்பை இந்திய அரசின் அரசிதழில் 19.02.2013 அன்று வெளியிட்ட பின்னும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மறுக்கிறது இந்திய அரசு.

இந்திய அரசு நடுநிலை தவறி, கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களுக்குத் துணை போகிறது. கர்நாடகம் விரும்பவில்லை என்பதற்காகவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மறுக்கிறது. இந்திய அரசு.

கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருந்தும், தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைத் திறந்துவிட மறுக்கிறது கர்நாடக அரசு! அதைத் திறந்துவிடுமாறு கர்நாடகத்திடம் வலியுறுத்த மறுக்கிறது இந்திய அரசு. நடப்புச் சாகுபடி காலத்தில் செப்டம்பர் 30ஆம் நாள் வரை, தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரில் 46 டி.எம்.சி. நீரைத் திருட்டுத்தனமாகத் தேக்கி வைத்துக் கொண்டுள்ளது கர்நாடகம். இதனால் 16 இலட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி என்ன ஆகுமோ என்று பதறிப்போயுள்ளனர் உழவர்கள்.

நடுவண் அரசின் நயவஞ்சகச் செயலைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், அக்டோபர் வரை தமிழ்நாட்டிற்குத் திறந்தவிட்டிருக்க வேண்டிய பாக்கித் தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிடக் கட்டளையிட வலியுறுத்தியும், முதலமைச்சர் செயலலிதா தலைமையில் ஒரு இலட்சம் உழவர்களும் தமிழ் மக்களும் கலந்து கொள்ளும் அனைத்துக்கட்சி மற்றும் அனைத்து உழவர் அமைப்புகளின் பேரணியைச் சென்னையில் நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.

3. திருவைகுண்டம் மணல் கொள்ளையை அனுமதிக்கக் கூடாது

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றுத் தடுப்பணையில் தூர்வாரும் பணி செய்திட வலியுறுத்திப் பல்லாண்டுகளாகத் தமிழக உழவர் முன்னணியும், மற்ற உழவர் சங்கங்களும் போராடின. தமிழ்நாடு பசுமைத் தீர்ப்பாயத்தில் ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் போட்ட வழக்கில் தூர்வாரும் பணியை மேற்கொண்டிட பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

தூர்வாரும் மணலைத் தனியார் மணற் கொள்ளைக்காரர்களிடம் தமிழ்நாடு அரசு ஏலம் விட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு, அணையிலிருந்து எட்டு கிலோ மீட்டர் வரை மணல் அள்ளுகிறார்கள். இம்மணலை திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் கொண்டு போய் குவித்து இருப்பு வைக்கிறார்கள்.

எட்டு கிலோ மீட்டர் தோண்டி மணல் எடுப்பதால் மணல் படுகை நீக்கப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் ஊறுவதும், ஆற்றில் கலக்கும் கழிவுநீர் வடிகட்டப்படுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அணையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் மட்டும் – எட்டடி ஆழம்வரை மட்டும் மணல் அள்ளித் தூர்வாரும் பணியைச் செய்திட ஆணையிட வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.