ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தொழிலாளர்கள் பார்வையாளராக இருக்கக் கூடாது பங்கேற்பாளராக இருக்க வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!

“தொழிலாளர்கள் பார்வையாளராக இருக்கக் கூடாது பங்கேற்பாளராக இருக்க வேண்டும்! அதுவே தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்தும்!”

எண்ணூர் அசோக் லேலண்ட்டில் தொழிலாளர்களிடையே...தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!

“தொழிலாளர்கள் பார்வையாளராக இருக்கக் கூடாது - பங்கேற்பாளராக இருக்க வேண்டும்! அதுவே தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்தும்!” என, எண்ணூர் அசோக் லேலண்ட் தொழிலாளர்களிடம், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.

ஒசூர் அசோக் லேலண்ட் யூனிட் 2ல், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில், “தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை” செயல்பட்டு வருகின்றது. இதனையடுத்து, சென்னை – எண்ணூர் அசோக் லேலண்ட் தலைமையகத் தொழிற்சாலையில், தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களைத் தலைவராகக் கொண்டு, “தொழிலாளர் சனநாயகப் பேரியக்கம்” என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

அதன் முதல் வாயில் கூட்டம், 07.10.2015 காலை, 11.30 மணிக்கு எண்ணூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலை வாயிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தொழிலாளர் சனநாயகப் பேரியக்க அமைப்பாளர் தோழர் சிரஞ்சீவி தலைமையேற்றார். செயலாளர் தோழர் நெடுமாறன் வரவேற்புரையாற்றினார். முன்னதாக, சிந்தனை சிற்பி சிங்காரவேலர், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா ஆகியோர் சிலைகளுக்கு, தோழர் கி. வெங்கட்ராமன் மாலை அணிவித்தார். ஒசூர் தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை செயலாளர் தோழர் மதியழகன், ம.தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற அணித் தலைவர் திரு. விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், சிறப்புரையாற்றிய தோழர் கி. வெங்கட்ராமன் பேசியதாவது:

“அன்பான தொழிலாளத் தோழர்களே! தொழிலாளர் சனநாயகப் பேரியக்கம் என்ற பெயரிலே புதிய தொழிலாளர் அமைப்பை அமைத்துள்ள நிர்வாகிகளே! ஓசூரிலிருந்து வந்திருக்கும் தொழிலாளர் பாதுகாப்புப் பேரவைத் தோழர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

இங்கே தொடங்கப்பட்டுள்ள இந்தத் இயக்கம், ஏற்கெனவே இங்கு செயல்பட்டுக் கொண்டுள்ள தொழிற்சங்கங்களை, அதன் தலைமைகளை விமர்சிப்பதற்கோ, அதன் தவறுகளை பேசி இலாவணி அரசியல் செய்வதற்காகவோ தொடங்கப்படவில்லை. இரண்டு அணிகளாக உள்ள தொழிற்சங்க இயக்கத்திற்கு, ஒரு மாற்றுப் பாதை வேண்டுமென வலியுறுத்தவே, நாம் இந்த அமைப்பைத் தொடங்கியுள்ளோம். இந்த மாற்றுப் பாதைக்கு மாற்றுப் பார்வை தேவை.

நான் மாணவராக இருந்த போது, தோழர் ஆர்.கே.வைப் பார்த்து வியந்தவன். மைக்கேல் பெர்ணான்டஸ் அவர்களைப் பற்றி அதிகம் தெரியாது என்றாலும், அவரது அண்ணன் ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்களுடன் பல சிக்கல்களில் ஒன்றிணைந்து நாங்கள் பணியாற்றியிருக்கிறோம். இவர்கள், தொழிற்சங்க இயக்கங்களில் தாங்கள் படைத்த வரலாறுகளைத் தாங்களே அழித்தவர்கள். இது தான் பெரிய அவலம்.

இன்றைக்கு, அரசியல் எந்தளவிற்கு கெட்டுப் போயுள்ளதோ, அதே அளவு தொழிற்சங்க இயக்கமும் கெட்டுப்போய்விட்டது வேதனையான உண்மை. நிர்வாகம் சொல்வது என்னவோ, அதைக் கேட்டுவிட்டு செயல்படுகின்ற தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. எப்போதும் தொழிலாளர் நலன்களும், முதலாளிகள் நலன்களும் பெரும்பாலும் எதிரெதிராகவே இருக்கின்றன. ஆயினும் இதற்கு இடையே ஒரு பொதுப் புள்ளியைக் கண்டடைவதே தொழிற்சங்க ஒப்பந்தமாக அமைகிறது. இதில் இன்று பல சிக்கல்கள் எழுகின்றன.

தொழிற்சங்கம் இயக்கம் கெட்டுப்போனதற்கு வெளிக் காரணிகளும் இருக்கின்றன. உள் காரணிகளும் இருக்கின்றன.

ஒன்று, இன்னும் பழைய தொழில் உற்பத்தி முறையே நீடிப்பதாக நினைத்துக் கொண்டு, அதே பழைய பாணியில், தொழிற்சங்க இயக்கத்தை நடத்துவது. இன்னொன்று இலாவணி அரசியலாக, தலைவர் வழிபாட்டுடன் நடத்துவது.
இன்றைக்கு, தொழில் உற்பத்தி முறை பழையபடி, ஒரே கூரையின்கீழ் நடைபெறுவதில்லை.

வெளிப்பணியாற்றம் (Out sourcing) முறையில், பல பணிகளை வெளியில் பிரித்துக் கொடுத்து, உற்பத்தியை எளிதாக நடத்தி விடுகிறார்கள். நிரந்தரத் தொழிலாளர்களை நீக்கிவிட்டு, அதிக அளவில் ஒப்பந்தப் பணியாளர்களை(Contract), பயிற்சிப் பணியாளர்களைக் கொண்டு(Apprentice), அன்றாடக் கூலிகளைக் கொண்டு - தலையில் கத்தியைத் தொங்கவிட்டு உற்பத்தி செய்கிறார்கள். எனவே, இந்தப் புதிய போக்கை முறியடிக்க, புதிய பாதை தேவை. மாற்றுப் பாதை அவசியம். அதை, பழைய தொழிற்சங்கங்கள் உணராமல் இருப்பது, தொழிற்சங்க இயக்கத்திற்கே பின்னடைவாக உள்ளது.
தொழிலாளர்கள் கூர்மையாக விழிப்போடு இருப்பது இதற்கு முதல் தேவை ஆகும். தலைவருக்கு பின்னால் ஒளிவட்டம் இருப்பது போல, எல்லாம் தலைவரே பார்த்துக் கொள்வார் என ஒதுங்கிக் கொள்வது ஓரு பக்கம் அருவறுப்பான பண்பாடு ஆகும். அதை விட தொழிலாளர்களிடம் நிலவும் இந்த உளவியல் ஆபத்தானது.

இன்றைக்கு சிறப்பாக செயல்படக் கூடிய தலைவர் நாளைக்கு சீரழிந்துப் போகலாம். ஆனால் தொழிலாளர்கள் விழிப்புடன் இருந்தால் தொழிற்சங்க இயக்கம் பாதுகாக்கப் படும்.

எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், தொழிலாளர்கள் பார்வையாளராக இருக்கக்கூடாது - பங்கேற்பாளர்களாக மாற வேண்டும். தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை நடத்த வேண்டும். இதில் பழைய நிலையே தொடர்வதால்தான் தொழிற்சங்க இயக்கம் தோல்வியில் நிற்கிறது.

எனவே, தொழிற்சங்க இயக்கங்கள், தங்கள் தோல்வியை ஒத்துக் கொள்ள வேண்டும். அதுவே நேர்மையானது. நாம் உண்மையைப் பேச வேண்டும். ஒரு தோல்வியை வெற்றி போல பேசக்கூடாது. நம்மால் முழு வெற்றியை பெற முடியவில்லை என்றாலும், அது தவறில்லை. நம்மால் எது முடிந்ததோ அதை முடிந்தது என வெளிப்படையாக சொல்வோம். முடியாததை முடியவில்லை என சொல்வோம். அதில் தவறில்லை. ஆனால், ஒரு காரணத்துக்காகவும் பொய் பேசக் கூடாது. அதில் நாம் உறுதியாக நிற்க வேண்டும்.

இன்றைய போனஸ் பேச்சுவார்த்தையில், 1000 ரூபாய் பெற்றுவிட்டு, நிர்வாகம் 500 ரூபாயோடு நிறுத்திவிட்டது, நாங்கள் தான் மேலும் 500 ரூபாய் பெற போராடினோம் என பொய் சொல்லாதீர்கள். எது நடந்ததோ, அதை உண்மையாகச் சொல்லுங்கள். ஒளிவு மறைவு தேவையில்லை. நியாயமானது எதுவோ, அதைப் பெற நமக்கு காலம் பிடிக்கலாம். ஆனால், நியாயமில்லாததை வெற்றிபோல பேசி தொழிலாளர்களை ஏமாற்றக்கூடாது. நிர்வாகத்தின் அடாவடிகளுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ துணை போகக் கூடாது. எனவே, இதிலெல்லாம் நமக்கு மாற்றம் தேவை என உணர வேண்டும்.

நிர்வாகம் பழையபடி தன் விருப்பம் போல் நடந்து கொள்ள நினைக்கிறது. தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்குமான விருப்பங்கள் வேறு வேறாக இருக்கலாம். இந்த முரண்களை எப்படி குறைந்தபட்ச அளவில், ஒருங்கிணைப்பது என்பதே, தொழிற்சங்கத்தின் பணியாக இருக்க வேண்டும். அதை நாம் செய்வோம். முன்பைவிட தெளிவோடு, முன்பைவிட நேர்மையோடு, முன்பைவிட அதனை நாம் செய்வோம். தோல்வி மனப்பான்மையை நமக்கு நிரந்தரமானதாக்க முயல்கிறது நிர்வாகம். அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது.

இதனை முன்னேடுத்துச் செல்லவே, ஒரு மாற்றத் தலைமை வேண்டும். தலைமை என்பதோ, தலைவர் என்பதோ உயரத்தில் வைத்து பார்க்கப்படுவதல்ல. எந்தத் தலைவர் தலைகளிலும் ஒளிவட்டம் தேவையில்லை. “தலைவர் வாழ்க!” என்ற முழக்கமிடுவதும், பட்டாசு வெடித்து வரவேற்பதுமான தலைவர் வழிபாடு என்பது அருவருப்பானது.

அருவருப்பானது என்பதோடு இல்லாமல், அது தொழிலாளர்களை செயலற்றதாக்கும் தன்மை கொண்டது. “எல்லாவற்றையும் தலைவர் பார்த்துக் கொள்வார்” என்றொரு மனநிலை ஏற்படுத்தி, தொழிலாளர்களை அது செயலற்றதாக்கி, அவர்களை வெறும் பார்வையாளர்களாக மாற்றிவிடும் தன்மை கொண்டது. தொழிலாளர்கள் பார்வையாளர்களாக இருக்கக்கூடாது, அவர்கள் பங்கேற்பாளராக இருக்க வேண்டும்.

தொழிற்சங்கத்தை அவர்களே வழிநடத்த வேண்டும். தலைமை தவறு செய்தால், அதை ஒழுங்குபடுத்தும் வாய்ப்பு – கண்காணிக்கும் பொறுப்பு தொழிலாளர்களுக்கு வேண்டும். அது பங்கேற்பாளரால்தான் முடியும், பார்வையாளரால் முடியாது. தொழிலாளர்கள், தொழிற்சங்க இயக்கத்தை வழிநடத்துபவராகத் தங்களைத் தகுதிபடுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், தொழிற்துறையும், தொழிற்சங்க இயக்கமும் மிக இக்கட்டான நிலையில் இருக்கும் தருணமிது! எனவே, தொழிலாளர்களிடம் ஒரு மாற்றம் வர வேண்டும். புதிய பாதையில் நாம் சிந்திக்க வேண்டும்.

நாங்கள் கைகளில் திறந்த பேனாவோடும் வரவில்லை. திறந்த பூட்டோடும் வரவில்லை. உனக்கு வெற்றி – எனக்கு தோல்வி, அல்லது எனக்கு வெற்றி – உனக்கு தோல்வி என்ற நிலை வேண்டாம். நம் இருவரும் வெற்றி பெறும் புள்ளியில், நாம் இணைந்து பணியாற்றுவோம்.

தொழிற்சாலை நிர்வாகங்கள் முதலில், பழைய பண்ணையார் போல் நடந்து கொள்வதை நிறுத்த வேண்டும். படித்தவர்களைப் போல் நடந்து கொள்ள வேண்டும். பணியாற்றும் தொழிலாளர்களோ, ஓய்வு பெற்ற தொழிலாளர்களோ, அவர்களை முதலில் மதிக்கத் தெரிய வேண்டும். அவர்கள்தாம், தொழிற்சாலைகளை தங்கள் தோலில் சுமந்து நடத்தியவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அறிவோடு பேச வேண்டும்.

சரியானதை சாத்தியம் ஆக்க வேண்டும். சாத்தியம் ஆனதையே சரி என்று சொல்லக் கூடாது.

இந்த எண்ணூர் ஆலையில் 7200 தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இன்று 2600 பேர் மட்டுமே இருக்கிறீர்கள். இது எல்லாமே புதிய தொழில்நுட்பத்தால் வந்த ஆள் குறைப்பு அல்ல. நிரந்தர தொழிலாளர்கள் செய்த பணியை ஒப்பந்த தொழிலாளர்களையும், பயிற்சி பணியாளர்களையும் பணி அமர்த்துவதால் ஏற்பட்டவை ஆகும். இதனால் விபத்துகளும் நடக்கின்றன. அதிகளவில் ஒப்பந்தப் பணியாளர்களையும், பயிற்சிப் பணியாளர்களையும் பணியமர்த்துவதை நிறுத்த வேண்டும். இதுவரை நடந்திருந்தால் இருக்கட்டும், ஆனால், அதற்கொரு முற்றுப்புள்ளி வேண்டும். 2600க்கு கீழ் இனி நிரந்தர தொழிலாளர் எண்ணிக்கை குறையக் கூடாது என்ற முடிவுக்காவது வரவேண்டும்.

ஒரு தொழிலகம் இலபமாக இயங்க வேண்டும் என்பதும் பொருளியல் திறன் மேம்பட வேண்டும் என்பதும் சரிதான். ஆனால் பொருளியல் திறனும் தொழிலாளர் நீதியும், சம வாய்ப்பும் இணைந்து செல்ல வேண்டும். நிர்வாகம் வெற்றி பெறுவது தொழிலாளர்கள் தோல்வியடைவது அல்லது தொழிலாளர்கள் வெற்றி அடைவது நிர்வாகம் தோல்வியடைவது என்பதும் நீடித்த அமைதிக்கு உதவாது. இரண்டு பேருக்கும் வெற்றி என்ற Win – Win என்ற நிலையே சரியானது.

இன்று இது வரை உற்பத்தியில் முதல் இடத்தில் இருந்த டாடா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி இந்த செப்டம்பர் மாதத்தில் அசோக் லேலண்டு நிறுவனம் கூடுதல் உற்பத்தி செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் 335 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளது. இதனை சாதித்தற்காக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கு 213 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவர் (Team Leader) என்ற முறையில் அவருக்கு வரலாறு காணாத உயர்வு அளிக்கப்பட்டிருப்பது தவறல்ல. ஆனால் இந்த குழுவின் உறுப்பினரான தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு மட்டும் நேர் எதிரான அணுகுமுறை பின்பற்றப்படுவது ஏன்? இது குழுவை சிதைக்கும் போக்காகும்.

எனவே, தொழிலாளர்களுக்கு உரிய பங்கைத் தர வேண்டும். இதை கேட்பதில் என்ன தவறு? உற்பத்தியும் போனசும் இணைக்கப்பட வேண்டும். உற்பத்தியும் ஊதியமும் இணைக்கப்பட வேண்டும். இதிலென்ன தவறு? இதுவே Win Win situation! நீங்களும் வெற்றி பெறுங்கள், எங்களையும் வெற்றி பெற விடுங்கள் என்கிறோம். நீங்கள் (நிர்வாகம்) படித்தவர்கள் போல், அறிவியல்முறைப்படி கணக்கிடுங்கள். கட்டப்பஞ்சாயத்து செய்யாதீர்கள்.

உற்பத்தியையும் போனசயும் இணைத்துப் பாருங்கள். தொழிலாளர்கள், மகிழ்ச்சியோடு உற்பத்தியில் ஈடுபடுவார்கள். தங்களுக்காக உற்பத்தியில் ஈடுபடுவார்கள். இதுவே, Win win situation! சந்தையில் வீழ்ச்சி – அதன் காரணமாக உற்பத்தியில் பாதிப்பு என்றால், அந்த பாதிப்பிலும் தொழிலாளர்கள் பங்கு பெறப் போகிறார்கள்.

தொழிற்சாலையின் செலவீனங்களில், தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படுவது மிகக் குறைந்த விழுக்காடு தான். எனவேதான் சொல்கிறோம், அறிவியல் முறைப்படி ஊதியத்தைக் கணக்கிடுங்கள். போனசை கணக்கிடுங்கள். நீங்கள் (நிர்வாகம்) அதற்காக படித்துவிட்டு வேலையில் இருக்கிறீர்கள். ஆனால், தொழிலாளர்கள் அந்தப் பணியை செய்கிறார்கள். புதிய அறிவயல் கோட்பாடுகளைக் கொண்டு கணக்கிடுகிறார்கள். தொழிலாளர் ஜனநாயகப் பேரியக்கத் தோழர்கள் போனஸ் குறித்த அறிவியல் வழிப்பட்ட கணக்கீட்டை கொடுத்துள்ளார்கள். அதன் மீது நிர்வாகம் விவாதிக்க வேண்டும்.

இன்றைக்கு தொழிலாளர்களின் உண்மையான ஊதியம் குறைந்து கொண்டே வருகிறது. விலைவாசி உயர்வு அதற்கொரு முக்கியமான வெளிக் காரணம். ஆனால், அது மட்டுமே காரணமல்ல. உற்பத்தி உயர்வுக்கும் ஊதிய உயர்வுக்கும் தொடர்புள்ளது. உற்பத்தியைக் கணக்கிட்டுப் பார்க்கும் போது, ஒவ்வொரு ஆண்டும் நம் உண்மை ஊதியம் (Real wage) 3 விழுக்காடு அளவிற்குக் குறைந்து கொண்டே வருகிறது. எனவே, இதை மாற்ற வேண்டும்.
அசோக் லேலண்டில் ALTS முறை வந்த பிறகு 440 நிமிட உழைப்பு நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாம் வேலை பார்க்கும் நேரத்தில், முதல் 17.6 நிமிடங்கள்தான் நாம், நம்முடைய ஊதியத்திற்காக வேலை பார்க்கிறோம். மற்ற சுமார் 422 நிமிடங்கள், நிர்வாகத்தின் இலாபத்திற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம். எனவே, ஊதிய உயர்வில் – போனஸ் மதிப்பீட்டில் ஒரு அறிவியல் அணுகுமுறைத் தேவை. பழைய பண்ணையார் போல நடந்து கொள்ளக் கூடாது.

எனவே, இதுபோன்ற மாற்றங்களை நாம் பேச வேண்டும். அதனை செயல்படுத்தவதற்கான வழிமுறைகளில் இறங்க வேண்டும்.

நான், என் கரத்தை பலப்படுத்துங்கள் எனக் கேட்கப்போவதில்லை. உங்கள் கரங்களை பலப்படுத்துங்கள், நம் கரங்களை பலப்படுத்துங்கள் என்றுதான் கேட்கிறேன்.

தொழிலாளர்கள் தங்கள் சிக்கல்களை, தாங்கள் மட்டுமே போராடித் தீர்த்துவிட முடியாது. மற்ற மக்களுடனும் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். 2009ஆம் ஆண்டு தமிழீழ இனப்படுகொலையின் போது எந்தத் தொழிற்சங்கமும் வேலை நிறுத்தம் செய்யவில்லை. ஏன்? நாம் பொது மைய நீரோட்டத்திலிருந்து விலகியிருக்கிறோம். அது கூடாது.

எனவே, நம்முடைய மாற்றுப் பாதை, மக்களுடன் இணைந்து சனநாயக வழியில் போராடும் பாதையாக இருக்க வேண்டும். அதுவே சரியானது! அதை சாத்தியப்படுத்துவோம்! நன்றி! வணக்கம்!”

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார். நிறைவில், தோழர் சீனிவாசராவ் நன்றி கூறினார்.

பெருந்திரளாக தொழிலாளர்கள் தோழரின் உரையை ஈடுபாட்டோடு கூர்ந்து கேட்டு பாராட்டினர்.



தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.