தமிழ்நாடு அரசு கருத்துரிமையின் மீதும் அறவழி ஆர்ப்பாட்டத்தின் மீதும் தாக்குதல் - தோழர் பெ.மணியரசன் கண்டனம்
தமிழ்நாடு அரசு கருத்துரிமையின் மீதும் அறவழி ஆர்ப்பாட்டத்தின் மீதும் தாக்குதல் தொடுப்பது சனநாயகப் பறிப்புச் செயல்களாகும்!
பாடகர் கோவன் கைது – வாழ்வுரிமைக் கட்சித் தோழர்கள் மீதான தாக்குதல் குறித்து...
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் கண்டன அறிக்கை!
மக்கள் கலை இலக்கியக் கழகப் பாடகர் தோழர் கோவன் அவர்கள், தமிழ்நாடு அரசு மதுக்கடைகளைத் திறந்து வைத்திருப்பதைக் கண்டித்தும், சமூகத்தில் அது ஏற்படுத்தும் சீரழிவுகளை காட்சிப்படுத்தியும், தமிழ்நாடு முழுக்க முழு மதுவிலக்கை வலியுறுத்தியும் பாடிய இசைப்பாடலுக்காக நேற்று நள்ளிரவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவர் மீது தேசத் துரோகப் பிரிவு, அரசுக்கு எதிராக கலகம் செய்ய மக்களைத் தூண்டிவிட்டப் பிரிவு, வகுப்புகளுக்கிடையே பகை மூட்டியப் பிரிவு போன்ற பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.
காவல்துறையின் இச்செயல் கருத்துரிமைக்கு எதிரானதும் மக்கள் நலனுக்காக அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களை அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பழிவாங்கும் செயலாகவும் உள்ளது. தமிழ்நாடு அரசின், இந்த சனநாயக விரோதச் செயலை - பழிவாங்கும் செயலை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், அதன் தலைவர் திரு. தி. வேல்முருகன் அவர்கள் தலைமையில், கடந்த 26.10.2015 அன்று திருநெல்வேலி கங்கை கொண்டானில், தாமிரபரணி ஆற்று நீரை பன்னாட்டு பகாசுர கொள்ளை நிறுவனங்களான பெப்சி, கோககோலா ஆலைகள் 1 நாளைக்கு 9 இலட்சம் லிட்டருக்கும் மேல் ஆற்று நீரையும் – நிலத்தடி நீரையும் எடுத்து முற்றாக காலி செய்வதற்கு இந்திய அரசும் – தமிழ்நாடு அரசும் வழங்கியுள்ள அனுமதியை இரத்து செய்யக் கோரி சனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்கள் மீது, திருநெல்வேலி காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி 10 தோழர்களை படுகாயப்படுத்தியுள்ளனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சமூகப் பொறுப்புள்ள ஓர் இயக்கத்தின் தலைவருமான திரு. வேல்முருகன் முன்னிலையிலேயே, இந்த காட்டு தர்பாரை காவல்துறை கட்டவிழ்த்துவிட்டிருப்பது சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தடியடி நடத்தி மக்கள் ஊழியர்களை படுகாயப்படுத்திய வன்முறைச் செயலுக்குப் பொறுப்பான கள ஆய்வாளர் ஒருவர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரிடம் திரு. வேல்முருகன் வேண்டுகோள் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசின் அணுகுமுறை குறித்து ஏமாற்றமளிக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழின உணர்வு இயக்குநர் திரு. வ. கவுதமன் அவர்கள் இயக்கி வெளியிட்ட, “வேட்டி” ஆவணப்படத்திற்காக அவரை விசாரிக்க சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்திருந்தார்கள். பின்னர், அவ் விசாரணையைத் தள்ளிப்போட்டார்கள்.
ஒரு கலைப்படம் இந்திய விடுதலை நாளையொட்டி விமர்சன நோக்கில் வெளியிடுவதில் என்ன குற்றம்? இது போன்ற ஆவணப்படங்கள் மட்டுமல்ல, திரைப்படங்களே தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் வெளி வந்துள்ளன. கலைத்துறையிலும் கருத்துரிமையைப் பறிக்க தமிழ்நாடு அரசின் கை நீள்கிறது எனக் கருத வேண்டியிருக்கிறது. இது போன்ற அணுகுமுறையை தமிழ்நாடு அரசு மறு ஆய்வு செய்து கைவிட வேண்டும்.
மக்கள் போராட்டங்களை காலனிய ஆட்சிக்கால காவல்துறை போல் நசுக்க வேண்டும் மற்றும் பொய் வழக்குப் போட்டு சிறையிலடைக்க வேண்டும் என்ற அணுகுமுறையை தமிழ்நாடு அரசு கடைபிடிக்கிறதோ என்ற ஐயம் உருவாகிறது.
டாஸ்மாக் கொடுமைகளை விளக்கி பாடல் பாடிய தோழர் கோவன் மீது அரசைக் கவிழ்க்க சதி செய்தார், அரசுக்கு எதிரான கலகத்தைத் தூண்டினார் போன்ற பிரிவுகளைப் போட்டிருப்பது, இந்த ஐயத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
எனவே, தமிழ்நாடு அரசு திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தியத் தோழர்கள் மீது தடியடி நடத்தி காயப்படுத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறும், பாடகர் கோவன் மீது போட்டுள்ள வழக்கைக் கைவிடுமாறும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Leave a Comment