ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மார்க்சியம் பெரியாரியம் தமிழ்த் தேசியம் - பெ. மணியரசன்

தோழர் செந்தில் தலைமையில் இயங்கும்  இளந்தமிழகம் இயக்கம், “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” என்ற தலைப்பில் ஒரு குறுநூல் வெளியிட்டுள்ளதுபதிப்புரை, அணிந்துரை, முன்னுரை ஆகியவற்றுடன் சேர்த்து மொத்தம் 71 பக்கம். பெரியாரின் 136-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் 2014 செப்டம்பர் 20 ஆம் நாள், இளந்தமிழகம் இயக்கம் நடத்திய கருத்தரங்கில் தோழர்கள் கொளத்தூர் மணி, தியாகு, பாவலர் தமிழேந்தி, செந்தில் ஆகியோர் ஆற்றிய கருத்துரைகள், முனைவர் து. மூர்த்தி  அவர்களின் அணிந்துரைநிறைவில் வினா-விடைப் பகுதி ஆகியவற்றை இக்குறுநூல் கொண்டுள்ளது.

இதுபோன்ற கருத்தரங்குகள் நடப்பது வரவேற்கத்தக்க முயற்சிகள். தமிழ்நாட்டுச் சிந்தனைக்களத்தில் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலவிய தேக்கநிலை உடைக்கப்பட்டு, பல்வேறு சிந்தனைகள் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றனதமிழ்த் தேசியம், தலித்தியம், பெண்ணியம், மூன்றாம் பாலியம், சூழலியல், இயற்கை வேளாண்மை, இயற்கை மருத்துவம், மனித உரிமை இயல், சாவுத் தண்டனை ஒழிப்பு எனபற்பல துறைகளில் புதிய சிந்தனைகள் பீறிட்டுக் கிளம்புகின்றன. கலை இலக்கியத் துறைகளிலும் புதிய சிந்தனைகள், புதிய உத்திகள் முன்வருகின்றன

சிந்தனைக் களத்தில் மட்டுமின்றி, போராட்டக்களத்திலும் தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது. பொது மக்கள் வீதிக்கு வந்து நடத்தும் போராட்டங்கள் அதிகம் நடைபெறும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் என்று இந்திய உளவுத்துறையின் புள்ளிவிவரம் கூறுகிறது.

இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தமிழ்நாடு அதிகப் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதாகும். இந்தியாவிலேயே அதிக அளவில் அண்டை அயல் இனங்களால் உரிமைப் பறிப்புக்கு உள்ளான மாநிலம் - இயற்கை வளங்கள் கொள்ளை போகும் மாநிலம் தமிழ்நாடுதான்! தன் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றரை இலட்சம் பேர் தமிழீழத்தில் இந்தியாவின் பங்களிப்புடன் சிங்களப்படையால் இனப்படுகொலை செய்யப்பட்ட போது, அந்தப் போரை நிறுத்த முடியாமல் தவித்தவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள்!

அரசியலில் தனிநபர் வழிபாடு, ஊழல் ஆகியவை மிகுந்த மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது. சாதித் தீவிரவாதம், சாதீய ஒடுக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, சாதி மோதல்கள், சாதிக் கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலமா கவும் தமிழ்நாடு உள்ளதுபாலியல் வன்முறைகள் கூடுதலாகி வருகின்றன.

இந்தி, சமற்கிருதம், ஆங்கிலம் ஆகியவற்றின் ஆதிக்கத்தால் தமிழ் புறக்கணிக்கப்படும் அவலம் பெருகி வருகிறது

இவை மட்டுமின்றி மற்ற மாநி லங்களைப் போலவே தமிழ்நாடும் பன்னாட்டுப் பெருமுதலாளிய நிறுவனங்கள், ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் பொருளியல் சூறையாடல், அவற்றின் அரசியல் ஆக்கிரமிப்பு போன்றவற்றாலும் உலக மயத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது

இந்துத்துவ ஆதிக்கவாதம் மேலும் தீவிரப்பட்டுள்ளது. இதன் எதிர்வினையாக இசுலாமியத் தீவிரவாதம் மற்றும் முசுலீம் தனித்துவவாதம் தோன்றியுள்ளது

இப்படிப்பட்ட பின்னணியில் தமிழ்நாட்டில் போராட்டங்கள் அதிகரித்துள்ளனபுதிய சிந்தனைகள் உருவாகின்றன. கருத்தியல்களுக்கிடையே தருக்கங்கள், மோதல்கள் நடக்கின்றனஎனவே கருத்தியல்களுக்கிடையே உரையாடல்களும் விவாதங்களும் தேவை.

ஏற்கெனவே செல்வாக்குப் பெற்றுள்ள பழம்பெரும் கருத்தியல்கள் சார்ந்தோர் - தங்கள் தங்கள் கருத்தியல்கள் -_- சித்தாந்தங்கள் வழியே மேற்கண்ட அனைத்துச் சிக்கல்களுக்கும் தீர்வுகள் சொல்கின்றனர். புதிய புதிய சிந்தனைகள் எழுவதால் தங்களின் பழம்பெரும் சித்தாந்தங்களுக்குப் பாதிப்பு வந்துவிடுமோ என்று ஐயுறுகிறார்கள்; அஞ்சுகிறார்கள்!

தமிழ்நாட்டில் ஏற்கெனவே செல்வாக்கு செலுத்திவரும் சமூகவியல் கருத்தியல்கள் மார்க்சியம் மற்றும் பெரியாரியம்.

மேற்கண்ட சிக்கல்களுக்குத் தீர்வுகாண மார்க்சியமும் பெரியாரியமும் எந்த அளவு பொருத்தப்பாடுகள் கொண்டவை, எந்த அளவு பொருத்தப்பாடுகள் போதாதவை என்பவை இப்போது தமிழ்நாட்டுக் கருத்தியல் களத்தில் விவாதப்பொருள்களாகி உள்ளன. குறிப்பாகத் தமிழ்த் தேசியமும் மார்க்சியமும், தமிழ்த் தேசியமும் பெரியாரியமும் என்ற தளங்களில் விவாதங்கள் நடக்கின்றன

தமிழ்த் தேசியத்தை மறுக்கும் மார்க்சிய மரபுவாதிகளும் உள்ளனர்தமிழ்த் தேசியத்தை ஏற்கும் மார்க்சியர்களும் உள்ளனர். அதே போல் பெரியாரியவாதிகளிலும் இரு பிரிவினர் உள்ளனர்

தமிழ்த் தேசியத்தை ஏற்கும் மார்க்சியர்களும் பெரியாரியர்களும் தங்கள் தங்கள் மார்க்சிய மற்றும் பெரியாரிய சித்தாந்த சட்டகங்களுக்கு உட்பட்டதாகத் தமிழ்த் தேசியத்தைக் காட்டவும் வடிவமைக்கவும் முயலுகின்றனர். இந்த இடத்தில்தான் நாம் மார்க்சியர்  மற்றும் பெரியாரியர்களுடன் முரண்படுகிறோம். “பெரியாரும் தமிழ்த் தேசியமும்’’ என்ற இந் நூலில் உள்ள உரைகள் மார்க்சியர்களாலும் பெரியாரியர்களாலும் பேசப்பட்டுள்ளன.

எனவே இவர்கள் பெரியாரியத்துக்குள் ஒரு கூறாகவும், மார்க்சியத்திற்குள் ஒரு கூறாகவும் தமிழ்த் தேசியத்தைப் பொருத்திக் காட்ட முயல்கிறார்கள்.

தமிழ்த் தேசியமோ, “தமிழர் அறம்’’ என்ற தனது கருத்தியல் அடித்தளத்தில் நின்று கொண்டு, மார்க்சியம் பெரியாரியம் அம்பேத்காரியம் உள்ளிட்ட பல்வேறு கருத்தியல்களில் இருந்து தமிழ் நாட்டின் சமூக - அரசியல் - தேவைகளுக்குப் பொருந்தி வருவனவற்றை எடுத்துக்கொள்ளும்; அவற்றையும் தமிழ்ச் சமூகச்சூழலுக்குரிய வடிவத்தில் தனதாக்கிக்கொள்ளும்மற்ற சித்தாந்தங்களை மொட்டையாக மறுப்பதோ - அயல் சித்தாந்தங்கள் என்று புறக்கணிப்பதோ தமிழ்த் தேசியத்திற்குரிய அணுகுமுறை அன்று!

எல்லாம் எமக்குள் இருக்கிறதென்ற தற்குறித்தனமும் தமிழ்த் தேசியத்தில் இல்லை. எல்லாம் வெளியில் இருந்துதான் வரவேண்டுமென்ற கருத்தியல் வெறுமையும்  தமிழ்த் தேசியத்தில் இல்லை! தமிழ்த் தேசியம் சமூகப் பன்மையை மட்டுமின்றி கருத்தியல் பன்மையையும் ஏற்கிறதுஅதே வேளை, வெளியிலிருந்து ஏற்றுக் கொண்ட கருத்துகளை அப்படியே உதிரிக்கருத்துகளின் கலவையாகக் கோத்துக்கொள்ளாமல் தமிழ்ச்சமூகச் சூழலுக்கேற்ப மறுவார்ப்பு செய்துகொள்கிறது!

சென்னைக் கருத்தரங்கில் பேசிய தோழர்கள்தேசியம்’’ குறித்து மார்க்சியம் என்ன கூறுகிறது, பெரியாரியம் என்ன கூறுகிறது என்று விளக்காதது ஏமாற்றமே!. “தேசியம்’’ பற்றிய கருத்தியலுக்கு மார்க்சியமோ அல்லது பெரியாரியமோ புதிய பங்களிப்பு என்ன வழங்கியிருக்கிறது என்பதையும் கூறவில்லை.

சமூக வளர்ச்சி வரலாற்றில் மொழி, தேசிய இன உருவாக்கம், தேச உருவாக்கம் ஆகியவை வகித்த குறிப்பிடத்தக்க பாத்திரத்தை மார்க்சியம் உரியவாறு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது நமது திறனாய்வு! அயர்லாந்து போன்ற தேசங்களில் விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்ற போது காரல் மார்க்ஸ் அதை ஆதரித்தார்தேச விடுதலைப் போராட்டம், தேசியத் தன்னுரிமை (Self determination) ஆகியவற்றை எந்தெந்தக் கட்டத்தில் ஆதரிக்கலாம், எந்தெந்தக் கட்டங்களில் ஆதரிக்கக் கூடாது என்று லெனின் சொன்னார். சமூக வளர்ச்சியின் தவிர்க்க முடியாத ஒரு தேவையாக, புறநிலை உண்மையாக தேச விடுதலைப் போராட்டம்   இருக்கிறது என்பதை மார்க்சும் லெனினும் கூறவில்லை. தன்னுரிமையை ஒரு சனநாயக உரிமையாக மட்டுமே லெனின் வரையறுக்கிறார்

அதைத்தான் தோழர் செந்தில் தமது உரையில்தேசியம் என்பது ஒரு சமூகம் சனநாயகத்தைக் கவ்விச் செல்வதற்கான வாகனமாகும்’’ என்கிறார். “நமது சமூகத்தில் சாதி நாயகத்திற்கு எதிராக சனநாயகத்தை நிறுவப் போராடுவதே தேசியப் போராட்டமாகும்’’ என்கிறார்.

நமது சமூகம்’’ என்பதைத் தமிழ்ச் சமூகம் என்று குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம். இந்திய சமூகம் என்றும் கொள்ளலாம்இக்கூற்றில் எது என்ற தெளிவில்லை. சாதி ஒழிப்புப் போராட்டம் என்ற சனநாயகக் கடமைக்குரிய வடிவம் என்ற பொருளில் தான் தமிழ்த்தேசியத்தைத் தோழர் செந்தில் ஆதரிக்கிறார் என்று  புரிந்து கொள் ளலாம். தமிழ்த்தேசியம் சாதி ஒழிப்பு, ஆண் - பெண் சமத்துவம், பொருளாதாரச் சமத்துவம் போன்ற பலவற்றையும் தனது பிரிக்க முடியாத உட்கூறுகளாகக் கொண்டுள்ளது என்பது நம் நிலைபாடு. அதே வேளை தமிழ்த் தேசியம் என்பது தமிழ்நாட்டு விடுதலை, இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசு என்ற முதன்மை இலக்கைக்கொண்டது என்பது நமது வரையறுப்பு. ஏனெனில்தேசியம்’’ என்பதே ஒரு தேசத்தின் இறையாண்மை மீது தான் நிற்கிறது

பெரியாரும் தமிழ்த் தேசியமும்கருத்தரங்கில்தேசியம்என்பதற்கான அடிப்படை வரையறுப்பை யாரும் பேசவில்லை. இறையாண்மையுள்ள தேச அரசு என்பது தேசியத்தின் உயிர் நாடி. தமிழ்த்தேசியத்தில் அது பற்றிப் பேசாமல் சனநாயகம்சாதீயம் உள்ளிட்ட மற்ற சில செய்திகளைப் பேசியுள் ளார்கள். சனநாயகம், சாதி ஒழிப்பு இரண்டும் தமிழ்த்தேசியத்தில் பிரிக்க முடியாத கூறுகள்தாம்; முகாமையானவைதாம். ஆனால்  தமிழ்த் தேசியத்தின் அடித்தளமான தமிழ்நாடு விடுதலை இக்கருத்தரங்கில் உரியவாறு பேசப்படவில்லை.    

அக்கருத்தரங்கப் பேச்சில் தோழர் தியாகு தேசியம் குறித்துப் பின்மாறு வரையறுக்கிறார்

தேசியம் என்ற சொல்லை அதற்குரிய வரலாற்றுச் சமூகவியல் பொருளில் விளங்கிக்கொள்ள வேண்டும். ஒரு தேசம் அல்லது தேசிய இனத்தினுடைய ஆக்கக் கூறுகளாக இருப்பவற்றைச் சுருக்கமாகச் சொன்னால், “மொழி, பண் பாடு, நிலம், பொருள், வரலாறு’.  பண்பாடு என்பதுநாம்என்கிற மனநிலை, அது வெளிப்படுகிற கருத்தியலைச் சொல்கிறது. இதுதான் தேசியத்தின் அடிப்பொருள். அதன் வளர்ச்சி பெற்ற அறிவியல் பார்வை என்பதெல்லாம் பிறகு. அது தனித் தமிழ்நாடா, தன்னாட்சியா, தன் தீர்வுரிமையா (சுயநிர்ணய உரிமை யா) என்பதெல்லாம் பிறகு.

தேசியம் என்பதன் அடிப்பொருளை எடுத்துக்கொண்டால், அது மொழி வழிப்பட்ட தேசியமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மொழி வழிப்பட்ட தேசியம் எல்லாமும் முற்போக்கானதாக இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. சிங்களப் பேரினவாதம் கூட ஒரு தேசியம் தான்அது ஆதிக்கத் தேசியம். ஒரு கட்டத்தில் முற்போக்கான பங்கு வகிக்கும் ஒரு தேசியம் பிறிதொரு கட்டத்தில் பிற்போக்கானதாக மாறலாம்” (பக்கம் 46).

தோழர் தியாகுவின் மேற்படிக் கூற்றில், தேசியம் குறித்த வரையறுப்பும் தெளிவின்றி இருக்கிறதுதமிழ்த்தேசியம் குறித்த வரையறுப்பும் துல்லியமின்றி இருக்கிறது

எனவே இந்தப்புரிதல்பின் புலத்தில்தான் இந்தியத் தேசியத் தையும் ஏற்றுக் கொள்கிறார் தியாகு.

இந்தியத் தேசியம்”, ‘நாம் இந்தியர்என்கிற உணர்ச்சி ஒரு பொதுப் பகைவனுக்கு எதிராக வெவ்வேறு தேசிய இன மக்களை ஒன்றுபடுத்திய அளவில், வெவ்வேறு மதத்தவரை ஒன்றுபடுத்திய அளவில் வரலாற்றில் ஒரு முற்போக்கான பாத்திரம் வகித்தது. இந்தியத் தேசியம் எதிர்வகைத் தேசியமே தவிர, பொய்த்தேசியம் அன்று என்கிறார்.

தனித் தமிழ்நாடா, தன்னாட்சியா (சுயாட்சி), தன் தீர்வுரிமையா- இவற்றில் எதுவாக இருந்தாலும் அது தமிழ்த்தேசியம்தான் என்கிறார் தியாகு! மாநில சுயாட்சி கேட்டாலும் அதுவும் தமிழ்த்தேசியமோ?

பல்வேறு இனமக்கள், பல்வேறு மத மக்கள் ஒன்றிணைந்து பொதுப் பகைவனான வெள்ளையனுக்கு எதிராகப் போராடியதால் இந்தியத் தேசியம் உருவானது என்கிறார். இந்தியத் தேசியம் பொய்த் தேசியம் அல்ல, உண்மைத் தேசியம்,- எதிர் வகைத் தேசியம் என்கிறார் தியாகு.

இப்பொழுது, ஏகாதிபத்தியம் -- உலகமயம் - இந்தியப் பெருமுதலாளியம் ஆகிய பொதுப்பகை ஆற்றல்களுக்கு எதிராகக் கன்னியாகுமரியிலிருந்து காசுமீர்வரை, கத்தியவாரிலிருந்து கவுகாத்திவரை உள்ள பல்வேறு இன மக்களும், மதங்களின் மக்களும் ஒருங்கிணைந்து போராடுவதுதான் இந்தியத்தேசியம் என்று சி.பி.., சி.பி.எம். கட்சிகள் கூறுகின்றனதோழர் தியாகுவின் இந்தியத் தேசிய வரையறுப்புப்படி இந்த இடதுசாரிக் கட்சிகளின் தேசியமும் மெய்யான எதிர்வகைத் தேசிய மாகும்.  

தியாகுவின் வரையறுப்பை ஏற்றுக் கொண்டால், இடது சாரிகள், பா... உள்ளிட்ட வலது சாரிகள் கூறும் இந்தியத் தேசியம் உண்மையானதுதான். தமிழ்த் தேசியமும் உண்மையானதுதான். ஆக, ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒரே மக்களுக்கு இரட்டைத் தேசியம் இருப்பதாகக் கூறுவதாகும்

சமூக அறிவியல்படி பார்த்தால் இந்தியத்தேசியம் என்பது பொய்! வரலாற்று வழியில் அமைந்துவிட்ட  ஒரு தாயக நிலம், அதில் மக்களால் பேசப்படும் பொது மொழி, அம்மக்களிடையே நிலவும் பொதுப் பொருளியல் வாழ்வு, அவர்களிடையே உருவான பொதுப் பண்பாடு, அப்பண்பாட்டில் உருவான நாம் ஓர் இனம் என்ற உணர்ச்சி ஆகியவற்றைக் கொண்டதுதான் ஒரு தேசம். அத்தேசம் குறித்த கருத்தியலைக்கொண்டது தான் தேசியம்! ஜே. வி. ஸ்டாலின் தேசம், தேசியம் குறித்துச் சொன்ன வரையறை இது. இவ்வரையறை பெரும்பாலும் உலகு தழுவிய அளவில் பொருந்தும். இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு.

இந்தியா என்பது வரலாற்று வழியில் ஓர் இன மக்களின் பொதுத் தாயகம் அன்று. அதில் காலம் காலமாகப் பேசப்படும் பொது மொழி ஒன்று இல்லை. அதில் வாழும் மக்களிடையே பொதுப் பண்பாடும் இல்லைபிறகு எப்படி இந்தியா ஒரு தேசமாகும்? எப்படி இந்தியத் தேசியம் எதிர் வகைப்பட்ட உண்மையான தேசியமாகும்?

வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பில் பொதுப்பகைவனுக்கு எதிராகப் பீறிட்டுக் கிளம்பிய மக்களின் ஒன்றுபட்ட உணர்ச்சியில், தந்திரமாக இந்து மத, ஆரிய தேச உணர்ச்சிகளைத் திணித்து, இந்தியத் தேசியம் என்ற புனைவுக் கருத்தியலைத் தங்கள் நலனுக்காக ஆரியப் பார்ப்பனிய - முதலாளிய ஆற்றல்கள் உருவாக்கின. அவ்வாறான இந்துத்துவா புனைவு தேசியத்தைத்தான் தோழர் தியாகு எதிர்வகை இந்தியத்தேசியம் என்று ஞாயப்படுத்துகிறார். இந்தியத்தேசியம் என்பது பார்ப்பன - பனியா தேசியம் என்று பெரியார் சரியாகவே சொன்னார். பெரியார் குறித்த கருத்தரங்கில் அதைத் தோழர் தியாகு கவனத்தில் கொள்ள வில்லை. இந்தியத் தேசியம் குறித்து பெரியார் சொன்னதைக் கூட தியாகு உள்ளிட்ட தோழர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது சரியல்ல

இந்திய அரசமைப்புச்சட்டம் கூட இந்தியாவை ஒரு தேசம் என்று கூறிக்கொள்ளவில்லை: ஒன்றியம் என்றே கூறுகிறது. அதன் முகப்புரையில் மட்டுமே புகழ்ச்சிச் சொல்லாகஇந்திய தேசம்என்பது கூறப்பட்டுள்ளது. ஆனால், தோழர் தியாகுஇந்தியத் தேசியம்மெய்யானது என்கிறார். தேசம் இல்லாத தேசியமா இந்தியத் தேசியம்? ஒரே மக்களுக்கு இந்தியத் தேசியம், தமிழ்த் தேசியம் என்ற இரட்டைத் தேசியம் இருக்கிறதா?

எதிர்வகைத்தேசியம் என்பதற்கு, பொது எதிரியை எதிர்த்துப் பல்வேறு தேசிய இனங்களின் மக்கள் பெருந்திரளாக ஒருங்கிணைந்து போராடினார்கள் என்பதைத் தவிர, வேறு எந்த சமூகவியல் கூறு களையும் தியாகு முன்வைக்க வில்லை. பல்வேறு தேசிய இனங்கள் ஒருங்கிணைந்து போராடினால் அது எதிர்வகைத் தேசியம் ஆகும் என்று உலகில் யாருமே சொல்ல வில்லை.

இரண்டாவது உலகப் போரில், இட்லரின் ஆக்கிரமிப்புப் படையெடுப்பை எதிர்த்து சோவியத் ஒன்றியத்தில் பல்வேறு இனமக்கள் போராடினர். உக்கிரேனியர், ரசியர், பைலோரசியர், ஜார்ஜியர் என பல்வேறு இனமக்களின் குருதி ஒன்றுகலந்து சோவியத் நாட்டில் ஓடியது. இரண்டு கோடியே அறுபத்து ஆறு இலட்சம் பேர் _ சோவியத் ஒன்றியக் குடிமக்கள். தங்கள் நாட்டைக் காக்கும் போரில் உயிர் ஈகம் செய்தனர். வேறுபட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த கோடான கோடி மக்கள், பாசிசப் பகைவனுக்கு எதிராக ஒருங்கிணைந்து போர்க் களத்தில் நின்றனர். இவ்வளவு பெரிய அளவில் பல இன மக்களின் ஈகத்துக்கும் ஒற்றுமைக்கும் பிறகும் கூட சோவியத் தேசியம் என்ற பெயரிலோ அல்லது வேறு ஒரு பெயரிலோ ஒற்றைத்தேசியம் ஒன்று புதிதாக உருவாகியுள்ளதாக அந்நாட்டு அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் கூறவில்லை.

தேசியம்குறித்து ஆய்வு செய்த சமூக அறிவியலார் எதிர்வகைத் தேசியம் என்ற ஒன்று இருப்பதா கவும் கூறவில்லை.

காங்கிரசுத் தலைமையும், ஆரியப் பார்ப்பனிய _ பெருமுதலாளிய ஆற்றல்களும் முன்வைத்த இந்தியத் தேசியம் அவர்களைப் பொறுத்தவரை நேர்வகைத் தேசியமே! எதிர்வகைத் தேசியம் அல்ல! ஆரியப் பார்ப்பனிய புராணக் கதைகளின் பொதுமை - மதப் பண்பாட்டுப் பொதுமை ஆகியவற்றை முதன்மைப்படுத்தி நேர்வகை இந்தியத் தேசியத்தையே அவர்கள் முன்வைத்தார்கள். இதனை, பொய்யான - புனைவுத் தேசியம் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் வரையறுக்கிறது. மதவழிப்பட்டப் பண்பாட்டுத் தேசியம், தேசிய இன உருவாக்கத்தில் பங்களிப்பதில்லை என்று லெனின் சுட்டிக்காட்டியுள்ளார். அப்பண் பாட்டுத் தேசியத்தை ஏற்க முடியாதென்றும் லெனின் கூறினார்.

பண்பாடு என்ற பெயரில் ஆரிய இனவாதத்தையும், பார்ப்பன வர்ணாசிரம தர்மத்தையும் மேற்படிஇந்தியத் தேசியவாதிகள்’’ திணித்தார்கள்.

தியாகு குறிப்பிடும் இந்த எதிர் வகை இந்தியத் தேசியம் எள்ளளவும் தமிழ்த் தேசிய இனம் போன்ற பல்வேறு தேசிய இனங்களின் விடுதலைக்கும், உரிய வளர்ச்சிக்கும்  துணை செய்யவில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்க்களத்தின் வழி வளர வேண்டிய தமிழ்த் தேசிய இன வளர்ச்சியை  - தமிழ் மொழி வளர்ச்சியை - தமிழ் இன ஒற்றுமையை சீர்குலைத்தத் திருப்பணி யைத்தான் தியாகு கூறும் எதிர்வகை இந்தியத் தேசியம் செய்தது.
1920களின் தொடக்கத்திலிருந்தே காங்கிரசுக் கட்சி, இந்தியத் தேசியத்தின் பெயரால் இந்தியைத் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுமைக்கும் பொது மொழியாகத் திணித்தது. சென்னையில் தென் னிந்திய இந்திப் பிரச்சார சபையைத் தொடங்கியது. சென்னை மாகாணத்தில் 1937இல் ஆட்சிக்கு வந்த காங்கிரசு, அதன் முதலமைச்சர் இராசாசி வழியாக கட்டாய இந்தியை பள்ளிக் கல்வியில் திணித்தது. அதை எதிர்த்துப் போராடிய தமிழர்கள் ஆண்களும் பெண்களுமாக சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையிலேயே இரண்டு தமிழர்கள் இறந்தார்கள்.

இதற்கு முன்பாக காங்கிரசு நிதியில் சேரன்மாதேவியில் நடந்த குருகுலத்தில் மாணவர்கள் வர்ணா சிரம தர்மப்படி தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டனர். இதெல் லாம்தான் தியாகு குறிப்பிடும் எதிர்வகை இந்தியத்தேசியம் தமிழர்களுக்கு செய்தமுற்போக்கான’’ பங்களிப்பு!

தியாகு குறிப்பிடும் எதிர்வகை இந்தியத் தேசியம், தமிழ்த் தேசிய இனத்திற்கு அரசியல் விடுதலையைப் பெற்றுத் தந்ததா எனில், இல்லை என்பதே விடை! 1947 ஆகத்து 15இல் இந்தியாவுக்குக் கிடைத்த சுதந்திரம், தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவில்லை என்பதே தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைபாடு! எனவேதான், தமிழ்த் தேச விடுதலையை முன்வைத்து இப்பொழுது தமிழ் மக்கள் போராட வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

பெரியார் அவர்கள் 1947 ஆகத்து 15-இல் அரசியல் சுதந்திரம் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை என்று அறிவித்தார். கொதிக்கின்ற எண்ணெய்ச் சட்டியிலிருந்து தப்பிக்க எகிறிக் குதித்த வடை, கொள்ளிக் கட்டையில் விழுந்தது போல் ஆயிற்று தமிழர்களின் நிலை என்றார். அதாவது, வெள்ளை ஏகாதிபத்தியக் கொடுமையிலிருந்து தப்பி, இந்தியப் பார்ப்பன - பனியா கொடுமையில் சிக்கிக்கொண்டோம் என்றார் பெரியார். பெரியாரின் இந்த வரையறுப்பை தோழர் தியாகு ஏற்கிறாரா? மறுக்கிறாரா? தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஏற்கிறது. தோழர் தியாகு ஏற்கிறார் என்றால், எதிர்வகை இந்தியத் தேசியம் தமிழ்த் தேசியத்திற்கும் நன்மை அளித்தது அல்லது அதன் வளர்ச்சிக்கும் பங்களித்தது என்று கூறக் கூடாது.

1947 ஆகத்து 15, அரசியல் விடுதலை தமிழ்த்தேசிய இனத்திற்கும் சேர்த்துக் கிடைத்ததுதான் என்று தியாகு கருதினால், அவர் தமிழ்த் தேசிய இனத்திற்கு அரசியல் விடுதலை தேவையில்லை என்று கருதுகிறார் எனப் பொருள்படும்.
எனவே, தியாகு குறிப்பிடும் எதிர்வகை இந்தியத் தேசியம் என்பது ஆரியப் பார்ப்பனிய _ பெரு முதலாளியப் புனைவுத் தேசியம்; பொய்த் தேசியம். அந்தப் பொய்த் தேசியம், தமிழ்த் தேசியம் போன்ற இயற்கையான தேசியங்களை வளர வளர வெட்டிச்சாய்த்தது. இயற்கையாக வளர்ந்திருக்க வேண்டிய பல்வேறுபட்ட இனங்களின் வளர்ச் சியை இந்தியத் தேசியம் என்ற புனைவுத் தேசியம் முடக்கிப் போட்டது.

தமிழர்களைப் பொறுத்தவரை இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திலும் இந்தியத் தேசியத்தை எதிர்த்துள்ளனர். 1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்திய போது, “தமிழ்நாடு தமிழருக்கேஎன்று முழங்கினர்; இந்தியப் புனைவுத் தேசியத்தை எதிர்த்தனர். பின்னர்திராவிடநாடு திராவிடருக்கே என்று பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பிழையான முழக்கத் தைக் கூறிய போதிலும் நடை முறையில் அதனைத் தமிழின முழக்கமாகவே ஏற்றுத் தமிழ் மக்கள் முழங்கினர்.

இன்று நாம் பல்வேறு அமைப் புகள் வழி தமிழ்நாட்டு விடுதலை முழக்கத்தை எழுப்பி வருகிறோம். அதன் பெயரில் ஈகங்கள் நடந்துள்ளன. இவை அனைத்தும் 1947க்கு முன்னும் பின்னும் தமிழர்கள் இந்தியப் புனைவுத் தேசியத்தை எதிர்த்து வரும் வரலாறும் வடிவங்களும் ஆகும். எனவே தமிழ்நாட் டில் இந்தியப் புனைவுத் தேசியத் துக்கு எதிராகவும் மாபெரும் மக்கள் எழுச்சி நடந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும். எதிர்ப்பில்லாமல் இராசபாட்டையில் இந்தியப் புனைவுத் தேசியம் தமிழ் நாட்டில் இயங்கிடவில்லை.

(தொடரும்)

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2015, அக்டோபர் 16 - 31 வெளியான கட்டுரை)

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.