ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உழைப்புச் சுரண்டல் - சமூக ஒடுக்குமுறை போர்க்கோலம் பூண்டனர் மூணாறு பெண் தொழிலாளர்கள்! - வழக்கறிஞர் ம. பிரிட்டோ



கடந்த இரண்டு மாதங்களாக கேரள மாநிலத்தின் ஒட்டுமொத்த கவனமும் மூணாறு தேயிலைத் தோட்டங்களை நோக்கியே இருந்தது. மூணாறு மலைப் பகுதிகளில் அமைந்துள்ள  தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தமிழ்ப் பெண் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நடத்திய போராட்டம் மொத்த கேரளாவையும் இன்னும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்திலோ இது குறித்த எந்த சிந்தனையும் இல்லாமல், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் செய்திகளை சுடச்சுட தமிழக மக்களுக்கு ஒவ்வொரு நாளும் வழங்கி தங்களது  வரலாற்றுக் கடமையை நமது ஊடகங்கள் ஆற்றிக் கொண்டிருந்தன. 

மூணாறு தேயிலைத் தோட்டங்களில் தங்களது  உயிரைப் பணயம் வைத்து கூலி உயர்வு, போனஸ் தொகை கேட்டுப்  போராடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான அன்றாடங்காய்ச்சி தமிழ்ப்பெண் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் நமது   ஊடகங்களுக்கு முக்கியமான செய்தியாக இருந்திருக்க வாய்ப்பில்லைதான்.  சரத்குமார் - ராதாரவி அணியினரின் பேட்டிகளையும், விஷால் - நாசர் அணியினரின்  நேர்காணல்களையும் அச்சுப்பிசகாமல் வெளியிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்த இந்த ஊடகங்களுக்கு - மூணாறு தேயிலைத் தோட்டத் தமிழ்ப்பெண் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உலகுக்கு எடுத்துச் செல்ல நேரமிருந்திருக்குமர் போராடியவர்கள் - தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்யும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தானே! கூடுதலாக அலசினால் போராடியவர்களில் பெரும்பாலானோர் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட தமிழர்கள்! இவர்களது போராட்டம் நமது ஊடகங்களில் இடம்பிடிப்பது சாதாரண விடயமல்லவே! 

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஜான் டேனியல் மன்றோ என்ற ஆங்கிலேயர் மூணாறு மலைப்பகுதியில் 588 ஏக்கர் நிலங்களை வாங்கி அவற்றைப் பண்படுத்தி தேயிலைத் தோட்டங்களை உருவாக்க தென் மாவட்டங்களிலிருந்து கூலித் தொழிலாளர்களை அடிமைகளாகக் கொண்டு சென்றார்.  அவ்வாறு சென்றவர்களது மூன்றாவது, நான்காவது தலைமுறையினரே இன்றும் மூணாறு தோட்டத் தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் 17,000த்திற்கும் அதிகமான குடும்பங்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தென் தமிழகத்திலிருந்து அங்கு வேலைக்காகச் சென்ற ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த தமிழர்களே.                        
                   
அப்பகுதிகளில் ஒன்பது தேயிலைத் தோட்டங்களையும் தனது கட்டுக்குள் வைத்துள்ள டாட்டா நிறுவனம் 1964 - ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பின்லே நிறுவனத்தோடு இணைந்து இத்தொழிலில் ஈடுபட்டது. பின்னர் கண்ணன் தேவன் ஹில் பிளாண்டேசன் நிறுவனம் உருவாக்கப்பட்டு 2005-இல் டாட்டா தேயிலை (உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேயிலை நிறுவனம்) தேயிலைத் தோட்ட நிர்வாகத்தில் இத்தொழிலாளர்களின் பங்கேற்பையும் இணைக்கும் விதமாக ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. இப்புதிய திட்டத்தின் கீழ் ஏறக்குறைய 13,000 தொழிலாளர்கள் சிறுசிறு பங்குதாரர்களாக இணைந்தாலும் டாட்டா நிறுவனமே இன்றும் 28.52 விழுக்காட்டு பங்குகளை இதில் வைத்துள்ளது.  எனவே உள்ளூர் சந்தைகளில் தேயிலை விலையை நிர்ணயிப்பது உள்பட பல்வேறு நிர்வாக முடிவுகளை எடுப்பது டாட்டா தேயிலைத் தோட்ட நிர்வாகமே!

வறட்சியான, வளமற்ற தென் மாவட்டங்களிலிருந்து பிழைப்புக்காக இலங்கை, பர்மா, மலேசியா, பிஜி போன்ற பல நாடுகளுக்கு தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய அழைத்துச் செல்லப்பட்ட பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த கூலித் தமிழ்த் தொழிலாளர்களே!

மூணாறு தேயிலைத் தோட்டங்களில் மட்டுமல்ல, மாஞ்சோலை, வால்பாறை போன்ற மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பல பகுதிகளிலும் இன்றும் தேயிலைத் தோட்டங்களில் அடிப்படை வசதிகளின்றி அடிமைகளாக வேலை செய்யும் ஆயிரக்கணக்கான இக்குடும்பங்களின் வாழ்நிலை இன்னும் படுமோசமாகி உள்ளது.  வசிப்பதற்கு  நல்ல வீடுகளோ, சுத்தமான குடிநீரோஅவர்களது  குழந்தைகளுக்கு தரமான கல்வியோ, தேவையான மருத்துவ வசதிகளோ இல்லாமல் தங்கள் உடலை வருத்தி நாள் முழுவதும் வேலை பார்த்து பெரிய பெரிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் இலாபமீட்டிக் கொடுக்கும் இந்தத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்நிலையோ மிகவும் பரிதாபகரமானது.

உறைய வைக்கும் குளிர் பிரதேசத்தில் தங்கள் உடலை மூடுவதற்கு போதிய கம்பிளிகள் இல்லாமல், சத்தான உணவு உண்ண வழியில்லாமல் குடும்ப வறுமை காரணமாக வாழ்க்கை முழுவதையும் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள், இந்தத் தொழிலாளிகள். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படாமல், தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட இந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று இந்திய தொழிற்சங்க வரலாற்றில் தங்களது எழுச்சிமிக்கப் போராட்டத்தால் புதிய வரலாறு படைத்துள்ளனர்.
 
கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் வழங்கப்பட்ட ஊதிய உயர்வுக்குப் பின்னர், எந்த ஊதிய உயர்வும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. ஒரு நாளைக்கு 21 கிலோ தேயிலைத் தூளைப் பறித்தால் ரூபாய் 232 ஊதியம் என்ற கணக்கில், நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வே இவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஊதிய உயர்வும், தகுந்த போனஸ் எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். வேறு வழியின்றி போராட்டத்தில் குதித்தனர், பெண் தொழிலாளர்கள். இவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டிய தொழிற்சங்கங்கள் தேயிலைத் தோட்ட நிர்வாகத்திற்கு சார்பாகவே நின்றன. 

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என ஓங்கிக் குரல் கொடுக்கும் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி. போன்ற அகில இந்திய தொழிற்சங்கங்கள்   தங்களது குறைந்தபட்சக் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கவே இல்லை. இனியும் தொழிற்சங்கங்களை நம்பிப் பயனில்லை என்று பெண்கள் ஒற்றுமைஎன்ற பதாகையின் கீழ் 9000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து, அகில இந்திய தொழிற்சங்கங்களுக்கு சவால்விடும் அளவிற்கு தங்கள் போராட்டத்தை சமரசமின்றி முன்னெடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து தங்களுக்கு துரோகம் செய்யும் இந்தத் தொழிற்சங்கங்களுக்கு சரியான படிப்பினை கொடுக்கவும் துணிந்தனர். இனி எந்தப் போராட்டத்திலும் இந்தத் தொழிற்சங்கங்களோடு இணைந்து போராடப் போவதில்லை என்று தெளிவாக முடிவெடுத்து அறிவித்து விட்டனர். மேற்கண்ட தொழிற்சங்கங்களைப் புறந்தள்ளி விட்டு பெண்கள் ஒற்றுமை என்ற பெயரில் இப்பெண் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட சமரசமில்லாதப் போராட்டத்தால் கணிசமான கூலி உயர்வும் போனசும் பெற முடிந்தது. ஒரு நாளைக்கு ரூ 500 என்று இவர்கள் வைத்த கோரிக்கையை எட்ட முடியவில்லை என்றாலும், இதுவரை பெற்ற கூலி உயர்வுகளில் இம்முறை இப்பெண்களது போராட்டத்தால் கிடைக்கப் பெற்ற உயர்வே அதிகமானது.

பெண்கள் ஒற்றுமை தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளிகளின் இப்போராட்டத்தை அங்கீகரித்து பெருமைப்படுத்தும் விதமாக கேரளாவின் பிரபலமான 60 எழுத்தாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் இப்பெண்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கி இந்த பெண்கள் இயக்கம் வலுப்பெற வாழ்த்தியது குறிப்பிடத்தக்க நிகழ்வு.
பெண்கள் ஒற்றுமை இயக்கத்தின் போராட்டம் கொடுத்த எழுச்சியால் கேரளாவின் பிற பகுதிகளில் இருக்கும் 3.20 இலட்சம் தோட்டத் தொழிலாளர்களும் கூலி உயர்வு கேட்டு போராடத் தொடங்கியுள்ளனர். உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் அடுத்து வர விருப்பதால் கேரள அரசும் இப்பிரச்சனையில் ஏதாவது முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மூணாறு தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்கள் (பெண்கள் ஒற்றுமை) தங்களது கோரிக்கையை முன்வைத்து சமரசமின்றி போராடியது, இந்திய வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுவதோடு மட்டுமின்றி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மிக மோசமான வாழ்க்கைச் சூழலை வெளியுலகிற்குக் கொண்டு வந்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அகில இந்திய தொழிற் சங்கங்களின் ஆணாதிக்கப் போக்கை - அவற்றின் சந்தர்ப்பவாதப் போக்கை - மிக எளிதில் சமரசம் செய்யும்  - போர்க்குணமற்ற தன்மையை - உலகமயமாக்கல் சூழலில் புதிய வியூகங்களை - வகுத்துப் போராட மறுக்கும் தொழிற்சங்கத் தலைமைகளின் அசமந்த நிலையை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டது.

இதனை ஜீரணிக்க மறுக்கும் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. மற்றும் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் போராடும் இப் பெண் தொழிலாளர்களுக்கு எதிராகத் திரும்பியதையும், இப்பெண் தொழிலாளர்களைத் தாக்க முனைந்ததையும் காண முடிந்தது.

தொடக்கத்தில் ஊடகங்கள் இப்போராட்டத்தைக் கண்டுகொள்ள மறுத்தாலும், போராட்டத்தின் வீச்சால் ஊடகங்களின் பார்வைபடாமல் இருக்க முடியவில்லை.  கண்ணன் தேவன் தேயிலைத் தோட்ட நிர்வாக இயக்குநரை பெண் தொழிலாளர்கள் முற்றுகையிட்ட போதும், சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் போராடும் பெண்களைப் பார்க்க வந்தபோது அவர் உள்ளே நுழைய விடாமல் திருப்பி அனுப்பப்பட்டபோதும் ஊடகங்களின் பார்வை போராட்டத்தின் மீது விழத் தொடங்கியது.

முதல்கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தபோது, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்கள் மேலும் தாக்குப்பிடிக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  இருப்பினும் தொடர்ச்சியான எழுச்சிமிக்கப் போராட்டம் மூணாறு பகுதியோடும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களோடும் நிற்கவில்லை.  கேரளாவின் பல பகுதிகளுக்கும் போராட்டம் பரவ ஆரம்பிக்க, வேறு வழியில்லாமல் ஊதிய உயர்வு கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நிர்வாகம் தள்ளப்பட்டது. தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ 301 ஊதியமும் பிற சட்டப்பூர்வ பலன்களும் வழங்கிட ஒப்புக்கொள்ளப்பட்டது. 2013ஆம் ஆண்டு பிற தொழிற்சங்கங்கள் போராடிப்பெற்ற பலன்களைவிட இந்த ஊதிய உயர்வு கூடுதலானது.

நவம்பரில் வரவிருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மூணாறு பகுதிகளில் பெண்கள் ஒற்றுமை இயக்கத்தின் சார்பாக தங்களது வேட்பாளர்களையும் நிறுத்தத் தயாராகி வருகிறது. ஏற்கெனவே மலையாளி அரசியல்வாதிகள் ஆதிக்கமும், ஆணாதிக்கப் போக்கும் கொண்ட இந்தச் சூழலில் மூணாறு தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்களின் இந்த அறிவிப்பு அங்குள்ள அரசியல் கட்சிகளிடையே மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி, மருத்துவம், சமூக மேம்பாடு போன்ற பல அம்சங்களில் முன்னணியில் நிற்கும் கேரள மாநிலத்தில், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஆடு மாடுகளைப் போல குதிரை லாயங்களில் தலைமுறைகளாக வசித்துவரும் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களைப் பற்றி அக்கறை இல்லாத பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பேசும் கம்யூனிஸ்டு கட்சிகளின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்குடும்பங்களின் வாழ்க்கைச் சூழல் குறித்தோ, இத்தொழிலாளிகளின் உரிமைகள் குறித்தோ இக்கட்சிகளுக்கு எந்தக் கவலையும் இல்லை.


தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் இப்பெண் தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்திற்கு மனமுவந்து வெளிப்படையான ஆதரவோ, பாராட்டுதல்களோ தெரிவிக்க முன்வரவில்லை.  தியாகமும் அர்ப்பணிப்பும் நிறைந்த பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை தமிழக ஊடகங்களும் கண்டு கொள்ளவே இல்லை என்பது வேதனையாக உள்ளது.

( இக்கட்டுரை தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2015 இதழில் வெளியான கட்டுரை, கட்டுரையாளர் - வழக்கறிஞர் ம. பிரிட்டோ )

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.